Thursday, August 20, 2009

சிலேடை பேச்சு

காலை நொண்டியவாறு ஒரு கிழவர், நடந்து போய் கொண்டிருக்கிறார்.

அவர் நண்பர், “ஏன் இவ்வாறு நொண்டி நொண்டி நடக்கிறீர்கள்?”

“முக்காலை கையிலெடுத்து மூவிரண்டு போகையிலே, இக்காலில் ஐந்து தலை நாகம் கடித்தது காண்!” கிழவர்.

“பத்துரதன் புத்திரனின், மித்திரனின் சத்துருவில் பத்தினியின் கால் வாங்கி தேய்!”நண்பர்.

இப்போ கிழவர் சந்தோஷமாக போகிறார்.

என்ன புரியவில்லையா?

(முக்காலை) மூன்றாவது காலாகிய கைத்தடியை எடுத்துக் கொண்டு, (மூவிரண்டு) ஆற்றுக்கு போகையிலே (இக்காலில்) இடது காலில், (ஐந்து தலை நாகம் கடித்தது காண்) ஐந்து முட்களை கொண்ட நெருஞ்சி செடி குத்திவிட்டது பாருங்கள்!

(பத்துரதன்) தசரதன் (புத்திரனின்) மகனாகிய ராமனின் (மித்திரனின்) நண்பனாகிய சுக்ரீவனின் (சத்துருவின்) எதிரியாகிய வாலியின் (பத்தினியின்) மனைவியாகிய தாரையின் (கால் வாங்கி தேய்) சொல்லில் இருக்கும் துணைக்காலை எடுத்து விட்டு, அதாவது, தரையில் தேய், சரியாகி விடும் என்கிறார்.

எங்கோ எப்போ எதிலோ படித்தது!

அதே போல சிலப்பதிகாரம் பற்றி ஒரு சிலேடை தொடர். எழுதியது கவிக்கோ அப்துர்ரஹ்மான்! உறுதிப்படுத்திய நர்சிம்முக்கு நன்றி!

பால் நகையாள்
வெண்முத்து
பல் நகையாள்,
கண்ணகி - தன்
கால் நகையால்,
வாய் நகை போய்
கழுத்து நகை
இழந்த கதை!

அதாவது, பால் போன்ற வெள்ளை முத்துப் பற்கள் கொண்ட கண்ணகி, தன்னுடைய கால் சிலம்பால், புன்னகை போய், கழுத்து நகையாகிய தாலியை இழந்த கதை!

இன்னிக்கு எங்களை அறுக்கணும்னு முடிவே பண்ணிட்டிங்களானு முணங்கறது கேட்குது! அடிக்க வர்ரதுக்குள்ள விடு ஜூட்!

-சுமஜ்லா.
.
.

23 comments:

  1. ///என்ன புரியவில்லையா?///

    இதற்கு பிறகு தான் தெரிந்தது என்ன எழுதுகிறீர்கள் என்பது.....

    அருமையாக இருந்தது ......... வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  2. தமிழ் தாகமும் விடவில்லையா தாங்கள்

    கலுக்குங்க

    இன்னும் சொல்லிகுடுங்க கற்றுகொள்ள நான் ரெடி ...

    ReplyDelete
  3. //இன்னிக்கு எங்களை அறுக்கணும்னு முடிவே பண்ணிட்டிங்களானு முணங்கறது கேட்குது! அடிக்க வர்ரதுக்குள்ள விடு ஜூட்!//

    என்னங்க நீங்க ... தமிழ் மொழி சிறப்ப சொல்லிருகீங்க..
    உங்கள போய் அடிக்க வரதாவது... !!
    இன்னும் இந்த மாதிரி சிலேடை வாக்கியங்கள் எதாச்சும் போடுங்க....

    ReplyDelete
  4. நன்றாகயிருக்கு சுகைனா!!

    ReplyDelete
  5. //சிலப்பதிகாரம் பற்றி ஒரு சிலேடை தொடர். எழுதியது யார் என்று தெரியவில்லை!//

    பேராசிரியர் அப்துல் ரகுமான்
    ---

    நல்ல பதிவு

    ReplyDelete
  6. பாராட்டிய எல்லாருக்கும் நன்றிங்க!

    நர்சிம் நானும் கவிக்கோ என்று தான் நினைத்தேன். உறுதியாக தெரியாமல் பெயர் போடக் கூடாது என்று விட்டு விட்டேன். உறுதிப்படுத்தியமைக்கு நன்றி!

    ReplyDelete
  7. அருமையான பதிவு.எப்படி விளையாடுகிறார்கள் சொல்லில்!.
    இது ஒருவகையில் சிறப்புதான். ஆனால் எல்லோரும் புரியும் வண்ணம் இல்லாமல், கோனார் தமிழ் உரை தேட வேண்டி இருக்கிறது('தரை'-அப்பிடின்னு சொல்லவா இத்தனை வார்த்தை சந்த நயத்தோடு)

    கவிக்கோ அப்துல் ரகுமான் - சொல்ல நினைத்தேன்.நர்சிம் சொல்லிவிட்டார்.

    ReplyDelete
  8. கண்ணகி காலத்தில் தாலி என்னும் கழுத்து நகை அணியும் வழக்கம் இருந்ததா? கண்ணகி தாலி அணிந்திருந்தால், மதுரையை எரிக்க அதைதான் பயன் படுத்தியிருப்பாள்.
    என்ன என் யூகம் சரிதானே?
    S.S. Alauddeen

    ReplyDelete
  9. சுவையான சிலேடைகள்!

    கவிக்கோ அவர்களைச் சந்தித்த
    அனுபவம் இருக்குமே,
    அதைப் பதியுங்களேன்.

    ReplyDelete
  10. நானும் நினைத்தேன். அவரிடம், எனது சில கவிதைகளை பிரிண்ட் அவுட் எடுத்து கொடுத்திருக்கிறேன். எதாவது ரெஸ்பான்ஸ் வருகிறதா என்று இன்னும் ஒரு வாரம் பார்த்து விட்டு போடலாம் என்று உள்ளேன்.

    ReplyDelete
  11. நன்றாகயிருந்தது..

    இதுபோல, இன்னொரு சிலேடை நகைச்சுவை..உங்களுக்கும் தெரிந்ததாகத்தானிருக்கும்..

    ”அந்த மடத்தில் ஒரு சொற்புரை நடந்தது..

    தலைமை விருந்தினராக கடைமடை என்னும் ஊரிலிருந்து, வந்திருப்பவரை மடத்தின் தலைவருக்கு அறவே பிடிக்காது...

    மடத்தின் தலைவர் வரவேற்புரையாற்றும்போது,’ வருக வருக கடைமடையரே...’ என்றார் குத்தலாக..

    அடுத்து, விருந்தினர் பேசவேண்டிய நேரம்.. இவர் போய்சொன்னார்.. ‘அன்போடு அழைத்தமைக்கு நன்றி மடத்தலைவரே..!’

    அந்தப்பக்கம் கப்சிப் !!!”

    படித்தது நினைவுக்கு வந்தது..

    நன்றி.. :)

    காரணம் ஆயிரம்™

    ReplyDelete
  12. ப்ச் .......எங்கயோ போய்டிக....
    அக்கா....இது சிலேடை இல்லை :p

    ReplyDelete
  13. இந்த கடைமடையரே, மடத்தலைவரே, நானும் கேட்டிருக்கிறேன். அதோடு இன்னொன்றும்,

    மோர் ரொம்ப தண்ணீராக இருந்ததாம் ஒரு விருந்தில், ஆனால், நிறைய ஊற்றினார்களாம்,

    அதற்கு ஒருவர் சிலேடையா சொன்னாராம்,

    “மோரில் நீர் தாராளம்”!

    இது எப்படி இருக்கு?

    சீமான்கனி, இதையாவது சிலேடைனு ஒத்துக்கிறீங்களா?

    ReplyDelete
  14. //“மோரில் நீர் தாராளம்”!

    இது எப்படி இருக்கு?

    சீமான்கனி, இதையாவது சிலேடைனு ஒத்துக்கிறீங்களா?//


    அக்கா...
    //எங்கயோ போய்டிக....//
    இதைதான்
    சிலேடை இல்லை னு சொன்னேன்...

    ReplyDelete
  15. /*கண்ணகி காலத்தில் தாலி என்னும் கழுத்து நகை அணியும் வழக்கம் இருந்ததா? கண்ணகி தாலி அணிந்திருந்தால், மதுரையை எரிக்க அதைதான் பயன் படுத்தியிருப்பாள்.
    என்ன என் யூகம் சரிதானே?
    S.S. Alauddeen*/

    இருந்தது அதைத்தான் அண்ணன் கோவலன் அடகு வச்சி சரக்கு அடி...... சாரி, சாரி., மாதவி வீட்டுக்கு கொடுத்துட்டாரே....

    ReplyDelete
  16. //அக்கா...
    //எங்கயோ போய்டிக....//
    இதைதான்
    சிலேடை இல்லை னு சொன்னேன்...//

    ஓ! மரமண்டைக்கு இப்பத்தான் புரிஞ்சது!

    ReplyDelete
  17. //இருந்தது அதைத்தான் அண்ணன் கோவலன் அடகு வச்சி சரக்கு அடி...... சாரி, சாரி., மாதவி வீட்டுக்கு கொடுத்துட்டாரே....//

    என்னடா இது, ‘சரக்கு’ங்கற வார்த்தைக்கு நம்ம ப்ளாக் மட்டும் ரொம்ப நாளா தப்பிச்சிட்டு வருதேனு நினைத்தேன்!

    ReplyDelete
  18. சகோதரி..நானும் ஆட்டத்துக்கு வரலை

    (இதுல ஒரு சிலேடை இருக்கு)

    ReplyDelete
  19. "சரக்கு அடிக்கும்போது ஊறுகாய்தான்
    ஸ்பெஷல் சைட் டிஷ்" - என்று ஏற்கெனவே
    ஒரு பின்னூட்டம் வந்துள்ளதே,
    ஞாபகம் வந்துவிட்டதா?

    ReplyDelete

ரசித்ததையும் ருசித்ததையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்.