Wednesday, April 15, 2009

சாயபு வீட்டு சரித்திரம் - 1


(உலவும் மனிதர்களின் உண்மைக்கதை)

"ஆழமான நினைவிங்கு பின்னோக்கி செல்லுதம்மா
தோழியுடன் ஆடுங்காலம் நினைவலையை பின்னுதம்மா.
நாளும் இங்கே நல்ல சேதி கேட்க மனம் நாடுதம்மா,
வாழும் வாழ்வில் வழியெங்கே வனப்பெங்கே தேடுதம்மா…."

வாயில் கிடைத்த வரிகளைப் பாடலாய் பாடியபடி, தூளியை ஆட்டிக் கொண்டிருந்த கச்சாமாவின் நினைவுகள் பின்னோக்கி போனது. காலத்தின் கோலத்தை எண்ணி எண்ணி மருகினாள்.

அது ஆயிரத்தி தொள்ளாயிரத்தி அறுபத்தி இரண்டாம் வருடம். பெரிய புதூர் கிராமம். வாய்க்கால் பாசனத்தில் முப்போகமாக நெல் விளைந்தது. ஊரில் ஒரே ஒரு தார் சாலை. மெயின் ரோடு. ஆம்பிள்ளைகள் எல்லாரும் சாயந்திர நேரம், ’ரோட்டுக்குப் போறேன்’, என்று சொன்னால், அது அந்த ரோடு தானு புரிஞ்சிக்கணும். மற்றபடி எல்லாமே சந்து தான். அதிலும் மெயினான சந்து ஒண்ணு இருக்குது. அதில் தான் வசதியான வீடுங்க எல்லாம் இருக்கு. அந்த சந்தில் குடியிருந்தா, அந்தஸ்துள்ள குடும்பம்னு அர்த்தம். எல்லாமே சாயபு வீடுங்க தான். அதிலும், தீனா கானா சாயபுனா ஊருக்கே பெரிய மனுஷர். அவர் வீட்டுல ஒரு விஷேசம்னா, ஊருக்கே விருந்து தான் அன்னிக்கு. அதனால தான், ‘தீனா கானா ஊட்டுல கந்துரி, மீசைய முறுக்கிட்டு எந்திரி’ நு ஊர்ல ஒரு சொல்லவாந்திரமே சொல்லுவாங்க.

ஊர்ல பாதி நிலம் அவருடையது தான். அவரோட மகள் வயிற்று பேரன் தான், நம்ம மீரான் சாயபு. பக்கத்து சந்துல தான் அவர் வீடு. பழைய காலத்து ஓட்டு வீடுன்னாலும், நல்ல பெரிய வீடு. ரெண்டு லைனா வீடுங்க. அதுல ஒரு லைன வாடகைக்கு விட்டுட்டு, இன்னொரு லைன்ல, முதல் வீட்டுல இவுங்க குடும்பத்தோட இருக்காங்க. குடும்பம் என்ன பெரிய குடும்பம், புருஷன், பொஞ்சாதி ஒரே மக, அதுவும் எடுத்து வளர்க்கற மக.

அந்த ஓட்டு வீட்டுல, பெரிய வாசல்; அந்த வாசல்ல ஒரு மூலைல எடுப்பு கக்கூஸு. வாசல்ல இருந்து நாலு படி ஏறுனா திண்ணை. அதுல தாயக்கரம் ஆட, சிமிட்டி தரைலயே கரம் போட்டு, வெச்சிருக்காங்க. எப்பபார்த்தாலும் அக்கம் பக்கத்து, கிழம் கட்டைங்க ஆடிட்டே இருப்பாங்க. வெட்டறது, அப்புறம் வெட்டாட்டம் ஆடுறதுன்னு, பொக்கைக் கிழவிங்களோட கெக்கே பிக்கே சிரிப்பு எந்நேரமும் கேட்டுட்டு இருக்கும் அங்க.

அந்த திண்ணை ஓரத்துல ஒரு சின்ன கொட்டரை. கொட்டரைல தான் பழைய ஆகாவலி சாமானெல்லாம் போட்டு வெச்சிருப்பாங்க. எப்ப உள்ள போனாலும் ஒரு நெடி அடிக்கும். அங்கங்க ஒட்டடையும் இருக்கும். ஒரு மூலைல உரி தொங்கிட்டு இருக்கும். அங்க இருக்க ஒரு பெரிய மர டிரங்கு பெட்டியை திறந்து பார்க்கணும்னு, உள்ள வந்து ஒளிஞ்சு விளையாடற பிள்ளைங்க ஆசப்படுவாங்க. ஆனா, அதுல தான் பெரிசா ஒரு பூட்டு தொங்குமே எப்பவும்.

வெளித்திண்ணைல இருக்க வாசப்படிய தாண்டுனா, உள் திண்ணை. வெளித்திண்ணைல ரெண்டு உள் அறை. அதுல முதல் அறைய ஆஜாரம்னு சொல்லுவாங்க. அடுத்தத ரேடியா ரூமுன்னு சொல்லுவாங்க. ஏனா, அதுல பழைய கால மர்பி முன்னா ரேடியோ ஒண்ணு தூங்குது. அதுமில்லாம, ஒரு ஓரத்துல பழைய கிராம போனும் கிடக்கும். கிராம போனோட வட்ட தட்ட, அப்பப்போ பிள்ளைங்க எடுத்து உருட்டி விளையாடுவாங்க. அப்புறம், மீரான் சாயபு பொஞ்சாதி, பாத்திமா ஒரு கொட்டுக்கா கொடுத்தா, அழுதுகிட்டே ஓடுவாங்க. கிராம போன் ஸ்டாண்டுல மூலைல, ஒரு குட்டி கொட்ரா மாதிரி இருக்கும். அதுல தான் ஊசிய போட்டு வைப்பாங்க. அதை மூடி திறக்கறது ஒரு விதமா இருக்கறதுனால, சின்னஞ்சிறிசுங்க, அதை விளையாட்டா நோண்டிக்கிட்டே இருப்பாங்க.

உள் திண்ணைல, குட்டியா சோறாக்கூடு. அதாவது, இந்தக் கடைசியில கொட்டரை. அந்தக் கடைசியில சோறாக்கூடு. சோறாக்கூட்டுக்கு பக்கத்துல, இன்னொறு அறை. அதுல, கவுத்துக் கட்டில் ரெண்டு கடக்கும். மேல பலகை அட்டாலி ஒன்னுல, பெரிய அண்டா குண்டாலாம் கவுத்து வெச்சிருப்பாங்க. சோறாக்கூட்டுல, ஒரே கரியாக் கிடக்கும். புகைக்கூண்டுல, பிசிக்கு எப்பவும் ஒட்டிட்டு இருக்கும். எந்த சுண்ணாம்பு போட்டு, எப்படி பூசுனாலும், அந்த பிசுக்கு மட்டும் மறையவே மறையாது.

நாலு படி இறங்கினா, மறுபடி ஒரு சின்ன வாசல். அது வழியா, லைனுக்குள்ள போய்விடலாம். அந்த சின்ன வாசல்ல தான், ஒரு பக்கமா பொடக்கானி இருக்கு. குளிக்கறது, துவைக்கிறது எல்லாம் இங்க தான். துவைக்கிறதுனா சும்மா சின்ன துணிங்க தான்; மற்றபடி, மாசம் ரெண்டு தடவை வண்ணான் அம்மாசை வருவான். அந்த வாசல்ல இன்னொரு வெறகடுப்பு இருக்கும். சோறு வடிக்கிறது, தண்ணீர் காய வெக்கிறது எல்லாம் இதுல செஞ்சுக்குவாங்க.
மீரான் சாயபு, சந்தைல இருந்து வந்து, ‘உஸ், அப்பா’னு துண்டை உதறி தோளில போட்டுட்டு வந்து திண்ணைல உட்கார்ந்தார். மாசங்கண்டா வீட்டு வாடகை வருகிறதத் தவிர, சொந்தத் தொழில் ஒன்னும் அவருக்கு அமைய மாட்டேங்குது. இருந்தாலும், அப்பப்போ வண்டி கட்டிக்கிட்டு, சந்தைக்குப் போயி எதாவது ஒரு வியாபாரம் பண்ணிக்கிட்டே இருப்பாரு. இப்பக் கூட, சணல் கித்தான்ல, வக்கிப்பில்லு ரெப்பி மாட்டு வண்டிக்கு மெத்த தெச்சு கொண்டுப் போயி வித்துக்கிட்டு இருக்காரு.

பாத்திமா கொண்டு வந்த மோரக் குடிச்ச சாயபு,”பாப்பு, கச்சாமா எங்க காணோம்?” னு கேட்டார்.

”கச்சாமா, கச்சாமா”, பாத்திமா உரக்கக் குரல் கொடுத்தும் அவளக் காணோம்.

“நா வந்தா, ஓடியாந்து மடில உட்கார்ந்து தீனிப்பொட்டலத்தை எடுத்து தின்பாளே, இன்னிக்கு எங்க போயிட்டா?”

அவளத் தேடிட்டு, பாத்திமா உள்ள போனா, ரேடியா ரூமில மூலைல உட்கார்ந்து அழுதுகிட்டு இருந்தா கதீஜா.

“ஏய், கச்சாமா, ஏண்டி அழுவற? தனியா இங்க என்னடி பண்ணிட்டு இருக்கற?”

“அம்மா வயித்து வலிக்குதும்மா, கறையாட்டம் இருக்குதுமா பாவாடைல”

“அட, எங்கண்ணே, நீ வயசுக்கு வந்திட்டமா, நான் பாக்கக் கூடாதும்மா, சித்த இரு உங்குப்பிய கூட்டிட்டு வர சொல்லரேன்”.

மனசுக்குள்ள படபடப்போட, வெளிய வந்தா கச்சாமா, “ஏங்க, மக பெரிய மனுஷி ஆயிட்டாங்க. சீக்கிரம் வண்டிய கட்டிட்டு கிளம்புங்க. உங்க தங்கச்சியக் கூட்டிட்டு வாங்க கையோட. ஆக வேண்டியது நிறைய இருக்கு இன்னும். சுருக்க போயிட்டு, சீக்கிரம் வாங்க.”

மீரான் சாயபு வந்த களைப்பு தீரரதுக்குள்ள, உடனே கிளம்பிட்டார் வெளிய. மனசுக்குள்ள சந்தோஷம், அதோடு கவலை. என்னன்னு சொல்றது?

வரப்போற ஜனங்களுக்காக, ஒலைய வெக்க, வேகவேகமாக சோறாக்கூட்டுக்குப் போனா, பாத்திமா.

(ஒவ்வொரு வியாழனன்றும்)

-சுமஜ்லா

11 comments:

கே.ரவிஷங்கர் said...

சுமஜ்லா,

அட்டகாசம்.வட்டார மொழியில் யதார்த்தமான வர்ணனை.அடுத்து எந்த சொல்லுக்கும் கோனார் நோட்ஸ் போட்டு அறுக்கவில்லை.இது flowவை கெடுக்கும்.அப்படியே வர்ணித்ததுதான் அழகு.

வாழ்த்துக்கள்.

RVC said...

வட்டார வழக்கில் நல்ல வாசிப்பனுபவம். தொடருங்கள்!

கவின் said...

நன்றாக உள்ளது சுஹைனா...இன்னும் கூட நல்லா எழுத உங்களால் முடியும்.

சுஹைனா said...

கவின் தேங்க்ஸ். உங்கள் கமெண்ட் என் எழுத்தை நிச்சயம் மெருகேற்றும்.

Biruntha said...

நல்ல வர்ணனையுடன் நன்றாக இருக்கின்றது உங்கள் எழுத்துக்கள்.
அன்புடன்
பிருந்தா

asiya omar said...

ஆரம்பமே அருமை.உங்க ப்ளாக்கிலும் உண்டு என்றால் இங்கேயே படித்துகொள்ளலாம்.மகிழ்ச்சி.

சுஹைனா said...

ஆஸியா அக்கா, நான் அந்த தளத்தில் எழுதும் போது, அனைத்து ஆக்கங்களையும் ஒரு தொகுப்பாக என் பிளாகில் பதிவேன், என்ற நிபந்தனையுடன் தான் எழுதுகிறேன்.

வாழ்த்திய உங்களுக்கும் பிருந்தாவுக்கும் நன்றி.

தமிழ் காதலன் said...

நல்ல வர்ணனையுடன், நன்றாக இருந்தது உங்கள் எழுத்துக்கள்,
valarka

PEACE TRAIN said...

ஆஹா,அருமை.கிராமத்து தமிழ் கேட்க ஆசையாக் உள்ளது.

PEACE TRAIN said...

ஆஹா,அருமை.கிராமத்து தமிழ் கேட்க ஆசையாக் உள்ளது.

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி பீஸ் ட்ரைன்,.கதையில் ஓட்டத்தில் காலங்கள் மாறும் போது, கொஞ்சம் கொஞ்சமாக இந்த பேச்சு வழக்கு மாறி நவீனத்துக்கு வருவதை உணரலாம்.