Saturday, April 11, 2009

அரபு சீமையிலே... - 3


கண்ணீர் விட்டு
தண்ணீருக்கு தவித்தது
குழந்தை!
செந்நீர் வற்ற
தவிக்கிறார்
அம்மடந்தை!!

விதியோ பரிகாசமாய் சிரித்தது!
பிள்ளையோ பரிதாபமாய் அழுதது!!

தன்னை மறந்து
தண்ணீருக்கு ஓடுகிறார்
அன்னை ஹாஜரா.

சஃபா மர்வா குன்று
அதனிடையே சென்று
ஓடுகிறார்,
தேடுகிறார் - நீர் கிடைக்காமல்
வாடுகிறார் - ஆனால்
சாடுகிறார் இல்லை இறைவனை.

கல்லும் கரையும்
பிள்ளையின் கதறல்
உள்ளம் பிசைய
ஏந்துகிறார் கரங்களை - உலக
வேந்தனை நோக்கி, - மனதில்
வேதனை தேக்கி!

கதறிய பிள்ளை
உதறிய காலால்
உண்டானது பள்ளம் - அங்கு
பெருகியது வெள்ளம்.

குழியினின்று இனியநீர்
குமிழியிட்டு வழிந்தது.
இறையின் அருளும்
பாலை நிலத்தில்
மழையைப் போல பொழிந்தது.
‘நில், நில்’ என்ற பதத்தில்
- அவர் வாய்,
‘ஜம், ஜம்’ என்று மொழிந்தது.
சேயும் தாயும் தாகம் தீர்க்க
தண்ணீர் பஞ்சம் ஒழிந்தது.

மணலாலே அணை போட்டார்
பொங்கும் நீருக்கு,
மனதாலே நன்றி சொன்னார்
இறைவன் பேருக்கு.

பலநூறு வருடங்கள்
வற்றாத சமுத்திரம்.
பலகோடி தாகம் தீர்த்த
ஒப்பற்ற அதிசயம்.
செரிவூட்டும் தாதிருக்கும்
செம்மதுர பொக்கிஷம்.
அறிவார்கள் வியந்து நிற்கும்
ஜம் ஜம் என்னும் ஔடதம்.

நாளும் பொழுதும் ஓட,
வாழும் வயதும் ஏற
மேலும் சில காலம்
யாண்டும் உருண்டோட,

கண்ணிறைந்த மைந்தன்
இஸ்மாயில்தன்
பன்னிரண்டாம் அகவை அடைந்தார்.

இளவல் இஸ்மாயில்
இறையன்பு மிகக் கொண்டார்.
தலைவன் சொல்லைத் தன்
தலையால் ஏற்று செய்தார்.

தூக்கத்திலே கனவொன்று
மகனைப்பலி இடக்கண்டு
ஏக்கத்திலே ஏங்கி ஏங்கி
துடித்திட்டார் இப்ராஹிம் - அதன்
தாக்கம் ஒரு மூன்று நாட்கள்
தொடர் கனவு கண்டுவிட - இறை
நோக்க்மென, கட்டளைக்கு
அடிபணிய முடிவெடுத்தார்.

உயிரன்ன மைந்தரிடம்
தன் கனவை அவர்சொல்ல
வயிரமாக இறைசொல்லை
ஏற்று வாழும் புத்திரரோ,
‘தயக்கமென்ன தந்தையாரே
தயாராக நானுள்ளேன்,
மயங்கவேண்டாம், மறுக்கவேண்டாம்
புறப்படுங்கள்’ என்று சொன்னார்.

(வளரும்)

-சுமஜ்லா

2 comments:

ஆசியா உமர் said...

காவியம் போல் மெருகேறி வருகிறது.இக்கவிதை முன்பே படைத்ததுவா?இப்பொழுது தான் எழுதி வருகிறீர்களா?

சுஹைனா said...

முன்பே எழுதியது இல்லை. இப்ப தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். அவ்வப்போது, ஒவ்வொரு அத்தியாயமாக எழுதி தான் அப்லோட் செய்வேன்.

முழுவதுமாக முடிக்க இறைவன் தான் கிருபை செய்ய வேண்டும்.