Monday, April 13, 2009

ஏழையின் சிரிப்பில்….


வயிற்றை அழுத்திப் பிடித்துக் கொண்டாள், கருத்தம்மா கிழவி.

’அரிசி சோறு தின்னு மூணு நாளாயிருச்சு. அதுவும், வவுரார சாப்பிட்டு ஒரு மாசமிருக்கும்; பக்கத்தூட்டு கன்னியப்பங் கண்ணாலத்துல தின்னது. இப்ப ரொம்ப பசிக்குதே, வவுத்துக்கு எதாவது போட்டாகணுமே, என்ன செய்றது?’ யோசித்தாள் கிழவி.

தன் அழுக்கடைந்த சுருக்குப்பையைத் திறந்தாள்; அதை தலைகீழாக கொட்டினாள்; எண்ணிப் பார்த்தால்; கசங்கிப் போய் லேசாக கிழிந்திருந்த ஒத்தை ரூபாய் நோட்டு, ஒரு எட்டணா காசு. இவை மட்டுமே இருந்தன.

சிறிய மண்குடிசை அது. இரண்டு மண்கலயங்கள், ஒரு ஈயப்பாத்திரம், ஒரு வளைந்து நெளிந்து போன தட்டு, மூடியில்லாத தூக்கு, ஒரு பிளாஸ்டிக் குடம், அடுப்பாக உபயோகிக்கும் மூன்று சம அளவு கற்கள், ஒரு நைந்து போன பாய், இலவச வேஷ்டி சேலையில் தந்த சேலைகள் இரண்டு, இவை தான் அவளது ஆஸ்தி. மற்றபடி, போர்வை கூட, ‘கையது கொண்டு, மெய்யது பொத்தி’ தான்.

தட்டு தடுமாறி எழுந்தாள் கிழவி. நான்கு நாட்களாக அடித்த ஜுரத்தால், வேலைக்குப் போகவில்லை. அதான் கையில் காசு இல்லை. ஜுரத்தின் மிச்சமாக தலை இன்னும் வலித்தது. வெளியே வந்ததும், மார்கழிப் பனி முகத்தில் சிலீரென்று அறைந்து, தலைவலியை இன்னும் அதிகப்படுத்தியது. ரொம்ப நாளா, போர்வை ஒன்று வாங்க வேண்டும் என்று அவளுக்கு ஆசை. சைக்கிளில் போகும் போர்வைக்காரனிடம் விலை கேட்டவள், அந்த நினைப்பை அன்றே மறந்தாள். பின்னே, பொழுதுவரை ஆடு மேய்த்தால், அவளுக்குக் கிடைக்கும் ஒரு நாள் கூலியே இருவது ரூபா தான். போர்வைக்காரனோ ஒரு போர்வை எண்பது ரூவா என்றான். அந்த இருவது ருவாயிலியும் மிச்சம் பித்து குடிசைக்கு வாடகை மாசம் அறுவது ரூவா கொடுக்கணும். கொடுக்காட்டி வீட்டுக்காரன் வெளியே தள்ளிருவானே.

மெல்ல சாலையில் நடந்தாள் கருத்தம்மா. வயிற்றை நிரப்ப குடிச்ச தண்ணீர், ‘கட,முடா’, என்றது. ஒரு மளிகைக் கடையில் நின்றாள்,

“தம்பி, அரிசி கொடப்பா’, என்றாள் ஒத்தை ருபாயை நீட்டியபடி.

கடைக்காரன் அவளை எகத்தாளமாய்ப் பார்த்தான்.

“என்ன ஆயா, எந்த ஜென்மத்துல இருக்கற ? அரிச் வெல என்ன தெரியுமா ? ஒரு ருவாய்க்கெல்லாம் அரிசி குடுத்தா நாங்க போண்டிதான்”

“தம்பி, சாப்பிட்டு நாளாச்சு, ஒரு கைப்பிடியாச்சும் தாப்பா”

“ஓகோ, பிச்சையா. இந்தா இத வாங்கிட்டு இடத்த காலி பண்ணு”, நாலணாவை எடுத்து நீட்டினான்.

“அத வெச்சுகிட்டு, ஒரு தீப்பெட்டியாச்சும் தாப்பா”, கஞ்சி காய்ச்ச அடுப்பை பற்ற வைக்க வேண்டுமே?!

கடைக்காரன் வேண்டா வெறுப்பாய் எறிந்த தீப்பெட்டியை எடுத்துக் கொண்டு நடந்தாள். இனி என்ன செய்யறது? வயிற்றில் கையை வைத்தபடி நடந்தாள்.

சற்று தூரத்தில் ரேஷன் கடை தென்பட்டது.

‘ரேஷன் கடையில் அரிசி விலை கம்மி தான, கேட்டுப்பார்க்கலாம்’, நப்பாசையுடன் ரேசன் கடைக்கு சென்றாள் கருத்தம்மா.


“தம்பி, அரிசி கொடுப்பா”

“கார்டு இருக்கா கிழவி?”

“கார்டு இல்லையேப்பா”

“கார்டு இல்லாம, அரிசி தர முடியாது, போ, போ,”

கருத்தம்மா பார்த்தாள். தான் பிரித்து வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டையில் சாய்ந்தபடி நின்றிருப்பது தெரிந்தது. அரிசியைப் பார்த்ததும் அவள் வயிற்றில் ரசாயன மாற்றம் நிகழ்ந்தது. பசி கண்ணைக் கட்டியது. சுற்றும் முற்றும் பார்த்தாள். சட்டென்று ஒரு கைப்பிடி அரிசியை எடுத்து தன் மடியில் போட்டுக் கொண்டாள்.

தற்செயலாக திரும்பிய கடைக்காரன் அதைப் பார்த்து விட்டான்,
“ஏய், திருட்டுக் கிழவி, என்ன செய்யற?”

அவமானத்தால், கூனி குறுகி நின்றாள், கருத்தம்மா.

“இங்க வா, மடியில என்ன, அரிசி தான? கொண்டா அத”.

தள்ளாடியபடி, அவனருகில் சென்றாள். பக்கத்திலிருந்தவரும், “ஆமாம் சார், ஜவுளிக்கடையில திருடறது, மளிகைக் கடையில திருடறது, இதே பொழப்பாப் போச்சு, இந்த குப்பத்துப் பொம்பிளைங்களுக்கு. இவங்களாஇயெல்லாம் போலீஸுல புடுச்சுக் கொடுக்கணும்”, என்று அவன் கோபத்தை அதிகப்படுத்தினார்.

“சரி, சரி, பத்து ருவா ஃபைன் கட்டிட்டு போ. அப்பத்தான் உனக்கு புத்தி வரும்”

“பத்து ருவா இருந்தா, நான் ஏந்தம்பி அரிசிய எடுக்கப் போறேன். இந்தா இத வெச்சிட்டு என்ன விட்ருப்பா”,
தன்னிடம் இருந்த ஒன்னரை ருவாயை எடுத்து நீட்டினாள். அவனுடைய கோபக் கண்களைப் பார்த்ததும், பையிலிருந்த தீப்பெட்டியையும் எடுத்தாள்,
”இந்தா தம்பி, இதையும் வேணுனா வெச்சுக்கோ, இதைத் தவிர எங்கிட்ட எதுவுமே இல்ல”

“போலீஸக் கூப்பிட்டுத்தான் உன்னை மாதிரி திருடிங்க கொட்டத்த் அடக்கணும்”

‘சரி, அவன் செய்வதை செய்து கொள்ளட்டும். போலீஸ் ஸ்டேஷனிலாவது திங்க களி தருவாங்க’, என்று நினைத்தாள் கருத்தம்மா.

திடீரென்று, போலீஸ் வேன் வந்து நின்றது. அட, அதற்குள் எப்படி வந்தார்கள். கருத்தம்மாவுக்கு ஒரே ஆச்சரியம். இறங்கியவர்கள் கடைக்காரனிடம் ஏதோ பேசினார்கள். பிறகு கையோடு கொண்டு வந்த விலங்கை எடுத்து மாட்டினார்கள். விஷயம் இது தான். ரேஷன் கடைக்காரன் லாரியில் கடத்திய அறுவது மூட்டை அரிசியை கைப்பற்றி விட்டார்கள். லாரிக்காரன் தந்த தகவலின் பேரில் வந்து கைது செய்திருக்கிறார்கள்.

காரணத்தைக் கேள்விபட்ட கருத்தம்மா நடப்பவற்றை சுவாரஸ்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வேகமாக வெளியே வந்த ஒரு ஆபீஸர், கருத்தம்மாவின் மீது தெரியாத்தனமாய் மோத, அவள் கீழே விழுந்து விட்டாள். கைகொடுத்துத் தூக்கியவர், அருகிலிருந்தவரிடம் அவளைப் பற்றி விசாரித்தார். அவரது பதிலும், கிழவியின் பஞ்சடைந்த கண்களும் அவரை பாதித்திருக்க வேண்டும். பாக்கெட்டில் கைவிட்டார். நூறு ருபாய் நோட்டொன்று வந்தது. சிறிது நேரம் பாக்கெட்டில் துழாவியவர், சில்லறை நோட்டு கிடைக்காததால், அந்த நூறு ருவாயை கருத்தம்மா கையில் கொடுத்தார்.

“வயிறார சாப்பிடும்மா”, என்று கூறிவிட்டு, சென்று வேனில் ஏறிக் கொண்டார். வேன் கிளம்பியது.

கருத்தம்மாவுக்கு தன்னை விரட்டிய மளிகைக் கடைக்காரனின் ஞாபகமும், சைக்கிளில் செல்லும் போர்வைக்காரனின் ஞாபகமும் வந்தன. வேன் சென்ற திசையில், அவளையறியாமல் அவள் கரங்கள் கூப்பின.

-சுமஜ்லா.

4 comments:

shana said...

சுஹைனா,அற்புதமான கதை.அழகாக வடித்து இருக்கின்றீர்கள்.இது போன்ற சிறு கதைகளை அடிக்கடி எதிர் பார்க்கின்றேன்.
நாச்சியார்

சுஹைனா said...

ரொம்ப நன்றி ஷானா!

முரளிகுமார் பத்மநாபன் said...

வணக்கம் சுமஜ்லா, இன்றுதான் உங்களை படிக்கிறேன். அதுவும் என்னுடைய Follower ஆக இன்று உங்களை பார்த்தபின் உங்களுடைய பதிவை படிக்க ஆரம்பித்தேன். அருமை. முதல் முயற்சியா இது நம்பிக்கையே இல்லை அவ்வளவு தெளிவாக சொல்ல வந்ததை சொல்லியிருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். மற்ற பதிவுகளையும் படித்துவிட்டு சந்திக்கிறேன்.

கதிர் said...

உருக்கமான கதை...


போட்டோ என்ன பெரிய அக்ரஹாரம்
ரேசன் கடையிலே எடுத்தீங்களா!!!???