முதலில் நீர் ஊற்றுவது. நீர் ஊற்றுவது என்பது மரத்தில் வகையைப் பொறுத்து மாறுபடும். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் நீரூற்ற வேண்டியது இல்லை. நாம் விரலை மண்ணில் விட்டுப் பார்த்தால், ஒரு அரை இன்ச் ஆழம் வரை காய்ந்து போய் இருந்தால் நீர் ஊற்ற வேண்டும்.
நீரை அப்படியே சட சட வென்று ஊற்றாமல், தெளிப்பது போல சிறிது சிறிதாக ஊற்ற வேண்டும். இல்லாவிட்டால், நீரின் வேகத்தில் மண் அடித்து செல்லப்பட்டு விடும். மதிய நேரத்தில் ஊற்றாமல், காலை அல்லது மாலையில் ஊற்ற வேண்டும். அதே சமயம், நீரானது, எல்லா வேர்களும் நனையும் வகையில், அதிகப்படி நீர் வெளியேறும் ஓட்டை வழியாக வெளியேறும் வரை ஊற்ற வேண்டும். மழை நீரை சேகரித்து வைத்து ஊற்றினால் நல்லது.
அடுத்தது உரமிடுதல். நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் என மூவகை உரங்கள் மரத்துக்கு முக்கியம். மற்ற மரங்களில் வேர்கள் அதற்கான சத்து கிடைக்கும் இடம் நோக்கி வளர்ந்து கொள்ளும். ஆனால் போன்சாயானது, நாம் சிறு தொட்டியில் வளார்ப்பதால், உரமிடுவது மிக அவசியம். நைட்ரஜன் இலை, கிளை வளர்ச்சிக்கும், பாஸ்பரஸ் வேர்களின் ஆரோக்கியத்துக்கும், பொட்டாசியம் பூக்கள் காய்களின் காய்ப்புக்கும் மிக அவசியமானது.
நாம் வருடத்தின் எக்காலத்தில் உரமிடுகிறோமோ, அதைப் பொறுத்து, நாம் உரமிடும் கலவை மாறுபடும். இலையுதிர் காலத்தில் நைட்ரஜன் அளவு குறைவாகவும், வசந்த காலத்தில் நைட்ரஜன் அளவு கூடுதலாகவும் இட வேண்டும். வெயில் காலத்தில் சரிவிகிதமாக உரமிட வேண்டும். மரம் சற்று முதிர்ந்து விட்டால், வளர்ச்சிக்கான நைட்ரஜன் விகிதத்தை குறைத்துக் கொள்ளணும். அதே சமயம் பூப்பூக்கும் காலத்தில், பொட்டாசியம் அளவைக் கூட்டிக் கொள்ளணும்.
அடுத்த விஷயம் தொட்டி மாற்றுதல். தொட்டி மாற்றுவதால், நம் போன்சாய் மரம் சிறியதாகாது, மாறாக, அது புது சத்துக்கள் கிடைக்க உதவுகிறது. ஆரம்பத்தில் வேகமாக வளரும் மரமாக இருந்தால், இரு வருடம், இன்னும் சொல்லப்போனால் ஒரு வருடத்துக்கொரு முறை தொட்டி மாற்ற வேண்டும். கொஞ்சம் மரம் வயதாகி விட்டால் பின் 3 அல்லது 5 வருடத்துக்கொரு முறை மாற்றினால் போதும். வசந்த காலம் ஆரம்பிக்கும் முன் தொட்டி மாற்றிவிட வேண்டும். அப்போ தான் அதனால் ஏதும் சேதம் ஏற்பட்டால் கூட விரைவில் வளர்ந்து விடும்.
தொட்டி மாற்றும் போது, வேர்களில் இருக்கும் மண்ணை லேசாக உதிர்த்து விடணும். பிறகு வேறொரு தொட்டியில் மக்கிய உரம், மணல், மற்றும் செம்மண் கலவையில் அதை ஊன்ற வேண்டும். மண் கலவை நீரை நன்கு உறிஞ்சும் தன்மையதாக இருக்க வேண்டும். சிறிது மண்ணை தொட்டியில் போட்டு, பின் அதில் மரத்தை வைத்து, அதன் மேல் மீதி மண்ணைப் போட வேண்டும். மண்ணில் ஊன்றும் முன், அதன் வேர்களை வெட்டிவிட வேண்டும். மிக நீளமான வேர்கள் மற்றும் அழுகிப் போன வேர்களை லேசாக நறுக்கிவிட வேண்டும். தொட்டி மாற்றிய பிறகு, இரு மாதங்களுக்கு, அம்மரத்தை கடுமையான காற்று மற்றும் கடுமையான வெப்பத்திலிருந்து பாதுகாக்க வேண்டும்.
இம்முறைகளை பின்பற்றி நாம் பராமரித்தால், எவ்வகை மரத்தை வேண்டுமானால் போன்சாயாக வளர்க்கலாம்.
-சுமஜ்லா
Tweet | ||||
No comments:
Post a Comment