இந்த தலைப்பைப் பார்த்தவுடன், ‘குடிமகன்களின்’ அந்த தண்ணி என்று நினைத்துக் கொண்டு படித்தால், அதற்கு நான் பொறுப்பல்ல. இது உண்மையான தண்ணீர் சமாச்சாரம். அட! வாட்டர் மேட்டருங்க.
தண்ணீரில் ஆடாம அசையாம அப்படியே பிணம் மாதிரி, யார் வேணா மிதக்கலாம். இது ஒன்றும் ஞானப் பாதையில் கற்றுக் கொள்ளும் தவ சமாச்சாரமில்லை. அப்படித்தான் ஒரு நாள் நான் ஸ்விம்மிங் பூலில மிதந்து(!) கிட்டு இருந்தேன். அப்ப ஒரு பையன் கேட்டான், “அக்கா எப்படி இப்படி மிதக்கறீங்க? உங்களுக்கு யோகா தெரியுமா”னு. “நீச்சல் பழகறதைவிட, இது ரொம்ப ஈஸி தம்பி”னு நான் சொன்னேன்.
ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி, நாங்க சொந்தக்காரங்கல்லாம் ஒரு குரூப்பா மேட்டூர் போயிருந்தோம். அப்பத்தான் என் சொந்தக்கார பொண்ணுங்க தஹ்சினாவும் பஹ்மிதாவும் எனக்கு இதைக் கற்றுக் கொடுத்தாங்க.
எப்படி மிதக்கறது? முதல்ல அதை சொல்லுங்கறீங்களா? வெரி சிம்பிள்! முதல்ல யாரையாவது பிடித்துக் கொள்ள சொல்லுங்க. வயிற்றை உப்பிக்கணும். தலையை அண்ணாந்து அதாவது காதுகள் தண்ணிக்குள்ள இருக்கணும். கைகள் இரண்டையும் உடலோட ஒட்டி வெச்சிக்கணும். அதாவது வயிறு மேலாகவும், தலையும் காலும் கீழாகவும் வைத்து, நம் உடலை வில் போல வளைத்துக் கொள்ளணும். இப்ப பிடித்திருப்பவரை விட்டு விட சொல்லுங்கள். உங்களை அறியாமல் நீங்கள் தண்ணீரில் மிதந்து கொண்டு இருப்பீர்கள்.
கண்ணில் நீர் புகுந்து விடும் என்பதால் முதலில் கண்ணை மூடிக்கொண்டு பிராக்டிஸ் செய்யுங்கள். பிறகு கண்ணைத் திறந்து கொள்ளலாம். ஆனால், காதுகள் நீருக்குள் தான் இருக்க வேண்டும். அப்போ தான் சரியாக வரும். நன்றாக பழகி விட்டால், கைகளை ஆட்டலாம். எதையாவது தின்று கொண்டே மிதக்கலாம். ஆனால் ஜாக்கிரதை, ஸ்விம்மிங் பூல் என்றால் பரவாயில்லை. ஆற்று நீர் என்றால், நீரின் போக்கில் நீங்கள் பாட்டுக்கும் போய்க்கொண்டே இருப்பீர்கள். அதனால், யார் கையையாவது பிடித்துக் கொள்ளுங்கள். அல்லது, உங்கள் நண்பரிடம் சொல்லி, உங்கள் காலைப் பிடித்துக் கொள்ள சொல்லுங்கள். நண்பர் பழிதீர்க்க நினைத்து உங்க காலை விட்டுவிட்டால் நான் பொறுப்பல்ல.
நான் முதன் முதலில் மேட்டூரில் தான் பழகினேன். அங்கு காவேரியின் கால்வாய், அப்போது ஆழமும் அகலமும் குறைவாக இருந்தது. அதனால், நாங்க மூன்று பேரும், நீரை எதிர்த்துக் கொண்டு, மேலே சிறிது தூரம் நடந்து போவோம். பிறகு, மூவரும் கைகோர்த்துக் கொண்டே வரிசையாக மிதந்தபடி, ஆற்றின் போக்கிலேயே சிறிது தூரம் வந்து எழுந்து கொள்வோம். பிறகு, நீரை எதிர்த்து.... அங்கிருந்து படிக்கவும். அப்போதிருந்து, எனக்கு இது மிகவும் பிடித்தமான விளையாட்டாகி விட்டது.
எனக்கு நீச்சல் அரைகுறையாகத்தான் தெரியும். சிறிது நேரம் நீச்சல் அடிப்பேன்; களைப்பாக இருந்தால், நீரின் மேல் அப்படியே படுத்து (மிதந்து) ரெஸ்ட் எடுப்பேன்.
அந்த அனுபவம் எப்படி இருக்கும் தெரியுமா? ஆஹா! அப்படியே நாம் மெத்தையில் படுத்திருப்பது போல மிகவும் சுகமாக இருக்கும். மேலே பரந்து விரிந்திருக்கும் ஆகாயம். அதில் மிதக்கும் மேகக் கூட்டங்கள். கீழே தண்ணீர். உடலே எடை இல்லாமல் லேசானது போல, உயிர் அப்படியே அந்தரத்தில் தொங்குவது போல, உலகமே நமதானது போல, உள்ளம் அப்படியே வானத்தின் மேகக் கூட்டம் மாதிரி, பஞ்சு பஞ்சாய் பறப்பது போல, உருவம் இல்லாத அருவம் போல, உதிரம் இல்லாத உயிரினம் போல.....ம்..... அதை அனுபவித்தால் தான் தெரியும் அந்த சுகம்.
(ஆறும் இல்லாத, குளமும் இல்லாத ஊரில நாங்க இருக்கோம்; வந்திட்டா பாரு சொல்ல! விடு...ஜூட்!)
-சுமஜ்லா.
Tweet | ||||
13 comments:
\\வயிற்றை உப்பிக்கணும். தலையை அண்ணாந்து அதாவது காதுகள் தண்ணிக்குள்ள இருக்கணும். கைகள் இரண்டையும் உடலோட ஒட்டி வெச்சிக்கணும். அதாவது வயிறு மேலாகவும், தலையும் காலும் கீழாகவும் வைத்து, நம் உடலை வில் போல வளைத்துக் கொள்ளணும். இப்ப பிடித்திருப்பவரை விட்டு விட சொல்லுங்கள். உங்களை அறியாமல் நீங்கள் தண்ணீரில் மிதந்து கொண்டு இருப்பீர்கள்.\\\
மூச்சு பின்னர் சாதாரணமா விட வேண்டியதுதானே...?
ஆறு இருக்கும் ஊரில் வளர்ந்தே நீச்சல் கத்துக்கல.. இதுல தண்ணீரில் மிதக்க ஐடியாவா? ஒன்லி பார்க்கத் தான் முடியும்.. ;)
உங்களுக்கு நீச்சல் தெரியுமா .. அதுலயும் மிதக்கத் தெரியுமா? பொறாமையால்ல இருக்கு எனக்கு...:)
எனக்கும் நீச்சலை நன்றாகக் கத்துக்கணும் என்றுதான் ஆசை. ஏனோ அது இன்னமும் நிறைவேறவில்லை:-(
எனக்கு சாதாரணமாகவே நீரில் காதுப் பகுதி நனைந்தால் பயம். காதுக்குள் நீர் போனால் அவ்வளவுதான். காதுப் பகுதி நனையாமலே எப்போதும் குளிப்பேன், குளித்தபின் ஈரத்துணியால் காதுகளைத் துடைத்துத் துப்புரவு செய்வேன். அப்படியிருக்க, நீங்களோ ஆரம்பத்திலேயே காது நீருக்குள் இருக்க வேணும் என்டு சொல்லுறீங்க. ம் ம் ம்.. பாப்பம். கிடைச்சால் நீங்கள் சொன்னது போல் செய்து பார்க்கிறன். மற்றும் நீங்கள் கூறியதுபோல் பிடித்துக் கொண்டிருக்கும் நபர் நம்பிக்கையானவராக இருக்க வேண்டுமே. சிலவேளை வேணும் என்டு விட்டு விட்டால் என் நிலை அதோ நிலைதான்:-(( இதை எழுதிக்கிட்டிருக்கும்போதே என் கணவர் தன்னை நம்பி நீச்சல் பழக வரச் சொல்றார். என்ன கோபத்தை உள்ளுக்குள்ள வச்சுக்கிட்டுச் சொல்றாரோ தெரியல்ல-(
நீச்சலைப் பற்றிய விளக்கத்திற்கு மிக்க நன்றி. என்னை மாதிரி கத்துக் குட்டிகளுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.
அன்புடன்
பிருந்தா
///மூச்சு பின்னர் சாதாரணமா விட வேண்டியதுதானே...?///, இல்லைங்க! ஒரு ஒரு மணி நேரம் மூச்சே விடக் கூடாது. அப்புறம் பாருங்க, அவங்க யார் உதவியும் இல்லாமலே மிதந்து கிட்டு இருப்பாங்க (பிணமாக!) அட, நீங்க வேற சார். ஜஸ்ட் எப்பவும் போல ரிலாக்ஸ்டா இருக்க வேண்டியது தான்.
எனக்கு நீச்சல் கொஞ்சம் தெரியும் என்றாலும், வேகமாக நீந்த வராது. ஒரு ஐந்து நிமிடத்துக்கு மேல நீச்சலடிச்சா மூச்சு வாங்குது.
பிருந்தா, நீச்சல் கற்றுக் கொள்வதை விட, நீரில் மிதப்பது மிகவும் சுலபம். பிடித்துக் கொள்ள நம்பிக்கையான ஆள் கிடைக்காவிட்டால் என்ன, ஆழம் குறைவான பகுதி என்றால் பயமில்லை. முதலில், முழங்கால் அளவு நீரில் தான் நான் பழகினேன். மற்றபடி, நீருக்குள் பிடித்திருந்தால், வெயிட் தெரியாது.
நான்.. இதே போல் நல்லா மிதப்பேன். ஜாலியாக இருக்கும். காதுகளை தண்ணீர்க்குள்ளும் இடுப்பை கொஞ்சம் தூக்கியவாரும் வைத்துக் கொண்டு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் மிதக்கலாம்.
நண்பர்கள் இல்லாவிட்டால் தனியேயும் செய்யலாம். எப்படி எனில் முதலில் தலையை சாய்த்து காதுகளை தண்ணீரில் மூழ்கும் படி செய்து உடனே கால்களை நிலத்தில் இருந்து தூக்கினால் மிதக்க ஆரம்பித்துவிடுவோம். இந்த டெக்னிக்கை குப்பிற படுத்தும் செய்யலாம்...ஆனால் மூச்சை அடக்க வேண்டும்....அசல் பொணம் மாதிரி மிதக்கலாம்.
எங்கே கவின் போயிட்டீங்க? கொஞ்ச நாளா ஆளைக் காணோமே?!
//அப்படித்தான் ஒரு நாள் நான் ஸ்விம்மிங் பூலில மிதந்து(!) கிட்டு இருந்தேன்//
வாவ்.. குட் :-) எந்த ஊருங்க உங்களுக்கு? நீர் நிலைகள் நிறைந்த ஊரில் வசித்தால் கூட, நிறைய பெண்கள் நீச்சல் தெரியாதவர்களாகவே இருப்பார்கள். ஆனால் நீங்கள் அப்படியல்ல.
ஆனால் நீங்க சொல்ற இந்த டெக்னிக்கெல்லாம் அனக்குத் தெரியாதுங்க.. ஆனாலும் நானும் நீரில் மிதப்பேன். நான் நினைத்துக்கொண்டேன் நீச்சல் தெரிந்ததால்தால் மிதக்க முடிகிறதென்று.
எங்க ஊரு ஈரோடுங்க. வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவேரி, பாயும் வளநாடுங்க. ஆனாலும், நான் ஆற்றுக்குக் குளிக்கப் போறது சம்மரில் ஓரிரு முறை தான்.
ஸ்விம்மிங் பூல் என்று நான் குறிப்பிட்டது, பவானி பவிஷ் பார்க்கில் இருப்பது. நீச்சல் கஷ்டம்; மிதத்தல் ஈஸி.
சுஹைனா,
உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால்..எதுவும் செய்ய முடியாமல் படுக்கையிலேயே இருந்தேன். இப்போ பரவாயில்லை ஆனால் full cure ஆகலை. அதனால் தான் இங்கு வரவில்லை.
சுஹைனா,
உங்களது ஹஜ் விளக்க கட்டுரையைப் படித்த பிறகு உங்களின் ஆக்கங்களைப் படிப்பதில் என்றுமே எனக்கு ஒரு ஆவல்தான். எனது மனைவியைக் கூட உங்களது நியுஸ் லெட்டர் சைன்அப் ல் இணைத்துள்ளேன்.
என்னுடைய பள்ளி வாழ்க்கையில் ஊர் குளத்தில் குளிக்கும் பொழுது இப்படி மிதப்பது எனக்கு பிடித்தமான ஒன்று. ஆனால், அதற்கான சூட்சமம் எல்லாம் தெரியாது. உழவன் அவர்கள் சொன்னது போல்தான் இதுநாள் வரை நினைத்த இருந்தேன்.
உங்களின் இக்கட்டுரைக்கு பதில் அளிப்பதற்கான காரணம் என்னவென்றால், இப்படித்தான் மதியம் ஒருநாள் குளிக்கும்பொழுது மிதந்துக் கொண்டு இருந்தேன். அப்பொழுது யாரோ எனது வயிற்றுப் பகுதியல் வாழை மட்டையை எடுத்து உரசுவதுபோல் உணர்ந்தேன். என்னவென்று சிந்திப்பதற்குள் எனது நண்பர்கள் கத்தினார்கள் ஏய் உன் மேல் பாம்புடா என்று, அவ்வளவுதான் என்ன செய்தேன் எனத் தெரியாது. கரையில் வந்து நின்றேன். அதிலிருந்து மிதப்பதே மறந்துவிட்டேன்.
நன்றியுடன்,
அப்துல் குத்தூஸ்.
கவின், உங்க உடல் நலத்தை நன்றாக பேணிக் கொள்ளுங்கள். சுகமில்லை என்றதும் கவலையாக உள்ளது.
குத்தூஸ் சார்,
நன்றி! கருத்துக்களை பதியாவிட்டாலும் பல பேர், ப்ளாகை ஆர்வமாக படிக்கிறார்கள் என்பது என்னை உற்சாகப்படுத்துகிறது. அவ்வப்போது நான் அனுப்பும் நியூஸ் லெட்டர் வருகிறதா? வராவிட்டால், ஏற்கனவே வந்த லிங்க்கை க்ளிக் செய்து ஆக்டிவேட் செய்யணும்.
நீங்க எழுதியதை படித்தபோது எனக்கே வயிறு கூசுவது போல இருந்தது. நல்லவேளை! ஸ்விம்மிங் பூல் என்றால் பயமில்லை; ஆறு குளங்களில் சற்று கவனமாகத்தான் இருக்கவேண்டும்.
இன்று தான் என் மகனை ஸ்விம்மிங் க்ளாஸ் சேர்த்தேன். எப்படியாவது அவன் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆசை. ஆறு வயது தான் ஆவதால், சீக்கிரம் கற்றுக் கொள்வான் என்று நினைக்கிறேன்.
I GOT IT.......
I GOT IT.......
im finding this technic last 6 yaers. thnx.
Post a Comment