Friday, May 15, 2009

அரபு சீமையிலே... - 8


தகப்பனாரோ அப்துல்லாஹ்வை
மிகவும் நேசித்தார்!
அதனால் என்னசெய்வதென்று
யோசித்தார்!!

மகனைக் கொடுக்க
வேண்டுமா காணிக்கை?
ஏன் கூட்டக்கூடாது
ஒட்டகையின் எண்ணிக்கை?!

பத்து பத்தாய்
அதிகரித்தார்.
எனினும்
அப்துல்லாஹ்சீட்டே
வரக்கண்டு
அதிசயித்தார்.

நடப்பதை எண்ணி
மனம் உலுக்கியது.
நூறு ஒட்டகை ஒரு சீட்டில்
அப்துல்லாஹ்வின் பெயர்
மறுசீட்டில் - என
கரம் குலுக்கியது.

வந்தது நூறு
ஒட்டகை - இறையை
வணங்கியது,
வறியோர்கன்னம்
இட்ட கை!

கூடியிருந்தோர் - முடிவை
நாடியிருந்தோர் - தேடிவந்தது
கை கூடிவந்ததென
பாடிக் களித்தனர் - ஒன்றாய்
ஆடி மகிழ்ந்தனர்.

உயிர் காக்கப்பட்டது
துயர் நீக்கப்பட்டது
அப்துல்லாஹ்தம் குலமானம்
உயர்வாக்கப்பட்டது.
நூறு ஒட்டகையின்
உயிர் போக்கப்பட்டது.

நிறைந்தது
அப்துல் முத்தலிப்
மனம்.
குறைந்தது
அவர் மனதிலிருந்த
கனம்.

அன்று முதல்
வழக்கமாகக் கொண்டது
அந்நகரம்,
அதாவது நரபலிக்கு
நூறு ஒட்டகைதான்
பகரம் - என்ற
இந்த விவரம்!

இவ்வழகுசால் அப்துல்லாஹ்தான்
அண்ணல் நபிகளின்(ஸல்)
அருமை தந்தை!

இறைவனுக்காக
பலிகொள்ள சென்றவர்
இஸ்மாயில் - அவர்தம்
வழியில் தோன்றிய
இளவல் தானிந்த
அப்துல்லாஹ்!

இதைத்தான்,
“பலியிட அழைத்துச் செல்லப்பட்ட
இரு தந்தையரின்
புதல்வன் நான்”
என்று ஒருமுறை
கருத்தூன்றி சொன்னார்
திருத்தூதர்.

இளவல் அப்துல்லாஹ்வுக்கு
இருபத்தி நான்கு
அகவை!
அப்துல் முத்தலிப்,
மணக்கோலத்தில்
காண நினைத்தார்
தன் மகவை!!

முத்தலிபின் சிறிய தந்தை
உஹைப் தன் இல்லத்தில்
தங்கியிருந்தார் ஒரு புனிதர்!
அவர்தான்,
யத்ரீபில் இருந்து வந்த
மனிதர்!

வஹ்ப் இப்னு
அப்துமனாப் இப்னு
ஜஹ்ரா - உடைய
புதல்வி ஆமினா
அப்துல்லாஹ்வுக்கு
நிகரா -
இருப்பது கண்டு
பொறுப்பது கொண்டு,
அந்த நறுமலர் மங்கையை
தன்மகனுக்கு
திருமணம் முடித்தார்!

அதே சமயம்,
உஹைபின் புதல்வி
ஹாலாவை
தன்வாழ்வில்
இணைத்துக் கொண்டார்!
தன் மனையாளாக
பிணைத்துக் கொண்டார்!!
இவர் தம் மணிவயிற்றில்
அம்சமாய் உதித்தவர்தான்
ஹம்சாவும் சஃபிய்யாவும்!

அப்துல்லாஹ்,
சில மாதங்களில்
வியாபார நிமித்தம்
வெளியேறி வந்தார்!
வெளிநாடு செல்ல
பரியேறிச் சென்றார்!!

விரியா மலராய்
வாடிய மனையிடம்
விடைபெற்றி
சிரியா ஏகினார்!
பின் மக்கா திரும்புகையில்,
யத்ரீபு தேசத்தில்
மைத்துனர் இல்லத்தில்
புரியா நோயால்
புன்னகை இழந்தார்!

இல்லறத்தை சிலமாதம்
நல்லறமாய் நடத்திவிட்டு
இனியமனை வயிற்றினிலே
நன்முத்தைப் பதித்துவிட்டு
நல்லோரை அழவைத்து
கல்லறையை நாடிவிட்டார்!
யத்ரீபு தேசத்தில்
நல்லடக்கம் செய்யப்பட்டார்!!

(வளரும்)

-சுமஜ்லா.

No comments: