Tuesday, June 16, 2009

சாயபு வீட்டு சரித்திரம் - 10


(உலவும் மனிதர்களின் உண்மை கதை)

“வாழும் வாழ்க்கை எல்லாமே மலர்வாசம் வீசிடுமா?
நாளும் பொழுதும் பூராவும், நல்ல சொற்கள் பேசிடுமா?!
மேலும் மேலும் துன்பம் வந்தா பூமனசு தாங்கிடுமா?
பாழும் மனம் துடிச்சாலும், பாவை வாழ்வு ஓங்கிடுமா?!”

மனசுக்குள்ள அத்தியத்தினி கனாவும் இம்புட்டுன்னு அளக்க முடியாத அளவுக்கு ஆசைகளும் எளவயசுல எல்லாத்துக்குமே இருக்கிறது தான். ஆனா, அதுல எல்லாமே நடந்துறாது.., ஆனாலும் ஒரு சின்ன தம்பிடியாவது கட்டாயமா கெடைக்கும். கச்சாமாவைப் பொறுத்தவரைக்கும், எதுவுமே கெடைக்காட்டியும், வாழ்க்கையை சிரிச்சுக்கிட்டே அது போகும்போக்குல வாழ்ந்து பழகிக்கணும்னு முடிவு பண்ணிட்டா. அதுலயும் அவ மாமியா கூள ருகையாவோட அழிச்சாட்டியத்துக்கெல்லாம் வாய தொறக்காம பூட்டு போட்டாப்புல இருக்கிற மச்சான்... அந்த மச்சானோட சிறு மொக வாடலைக் கூட சகிச்சுக்காத அளவுக்கு அவம்மேல கம்மூடித்தனமா காதல் வெச்சிருக்கிற கச்சாமா - இந்த பொண்ணோட விசித்திர இயல்புகளை என்னனு சொல்லுறது?!

புதுப் பொண்டாட்டிங்கற நெனப்பு கடுகத்தனையும் இல்ல தஸ்தீருகிட்ட. அட, கொஞ்ச நாளைக்காவது எல்லாரும் பொண்டாட்டிகிட்ட நல்லதனமா நடந்துக்குவாங்களே, அது கூட இல்லியே. ஆபீஸ் முடிந்தவொன்ன வீடு வந்தான்னு ஒரு கெழமையுஞ் சொல்ல முடியாது. ராவுல பத்து மணிக்குக் கூட வருவான் சில நாளு.

மன்னவனுக்காவ காத்து காத்து கண்ணு பூத்துப் போயிரும் கச்சாமாவுக்கு. வாசப்படிக்கும் தன்னோட உள்ளூட்டுக்குமா குட்டி போட்ட பூனையா நடந்துகிட்டு இருப்பா சோறு கூட திங்காம. அதைப் பாத்து நொடிப்பா ருகையா,

“அவன் ஆம்பள! இஷ்டத்துக்கு வரத் தான் செய்வான். பொம்பளப் புள்ள இந்நேரத்துக்கு வாசப்படியில நின்னா ஆவுமா? ரொம்பத்தான் புருஷன் புருஷனிட்டு... ஆருமறியாத அதிசய புருஷன்... நாங்கள்ளாம் புருஷன் கட்டலயா? இப்படித்தான் முந்தானையிலயே முடிஞ்சுக்கணும்னு நெனச்சமா?”

முணுக்குனு கண்ணுல துளிக்கிற தண்ணிய ஆரும் பாக்காம தொடைச்சுக்கிட்டு உள்ளூட்டுக்குள்ள போனாலும், காது மட்டும் செருப்பு சத்தம் கேக்குதா கேக்குதான்னு வெளியவே தான் இருக்கும்.

ராத்திரி பதினோரு மணிக்கு தான் அன்னிக்கு வீட்டுக்கு வந்தான் தஸ்தீரு. போய் சாப்பாடு எடுத்து வைக்கலாம்னு அடுப்பங்கரைக்குப் போனா கச்சாமா. சோத்துல தண்ணி ஊத்தி வெச்சிருந்தா மாமியா. அவசர அவசரமா ஸ்டவ்வ பற்ற வெச்சு, ஒரு நொடியில உப்புமா கிண்டிட்டா புருஷனுக்காவ.

வந்து பார்த்தா தஸ்தீரோட மொசக்கொறட்டை... சாப்பிடாம தூங்கிட்டாரேனு கவலையோட மெதுவா காலைக் கையை அமுக்கி விட்டு, எழுப்பினா கச்சாமா. ‘எனக்கு சோறு வேணாம்’ னு சொல்லிவிட்டு, தூங்க ஆரம்பிச்சான் தஸ்தீர். கச்சாமாவுக்கு பாவமாக போயிருச்சு. தானும் அன்னிக்கு வெறும் வவுத்தோட படுத்துட்டா. புருஷனை உட்டுட்டு திங்க மனசு வர்ல அந்த நாயகிக்கு.

ராத்திரி வெறும் வயித்தோட படுத்திருந்தது வெள்ளென எந்திரிச்சதும் வயித்த பெரட்டுச்சு. உப்புமாவாவது சாப்பிடலாம்னு வெளியே வந்தவளை மாமியாவோட வசவு தான் வரவேத்துச்சு.

“அவங்கப்பமோட்டு சொத்து! ஆக்கி ஆக்கி கீழ கொட்டறதுக்கு... எம்பையன் என்னிக்கு பத்து மணிக்கு மேல திங்காம வந்திருக்கான். அதனால தான் சோத்துல தண்ணிய ஊத்தி வெச்சிட்டு படுக்கப் போனேன். இவளுக்கு என்ன, நேரமா காலமா கொட்டிக்க வேண்டியது தான?!”

“மாமி, வந்து... அவர் வந்தவாட்டி சாப்பிடலாம்னு தான்..”

“அப்டீனா கிண்டின உப்புமாவத் தின்னு தொலைய வேண்டியது தான?! வெட்டி பண்ண என்ன இங்க கொட்டியா கிடக்குது. உனக்கு இது ஒரு சாக்கு! ரசமும் அப்பளமும் உந்தொண்டையில மத்தியானமே எறங்கல. எனக்கு ஒன்னுமே தெரியாது பாரு!”

இதுக்கு மேல என்னத்த பேசறதுன்னு தெரியாம ஊமையாகிட்டா கச்சாமா.  தஸ்தீரு, பொண்டாட்டிக்கு ஆதரவா ஆறுதலா ஒரு சொல்லு சொல்லனுமே? ம்...ஹூம்....

சாப்பிடவே புடிக்கல கச்சாமாவுக்கு. ஊசிப் போன உப்புமாவ ரெண்டு வா சாப்புட்டு கை கழுவிக்கிட்டா. அன்னிக்கு பூராவும் வைஞ்சுக்கிட்டே இருந்தா ருகையா.

அப்ப பார்த்து மீரான் சாயபு, மகளப் பார்க்க வந்தாரு. வெளியவே, ருகையாவோட சத்தம் கேட்டுச்சு அவருக்கு. நிண்டு நிதானிச்சு, உள்ள போனாரு. வா னு கேட்டுட்டு உள்ளாற போயிட்டா ருகையா.

மக தன்னைப் பாத்ததும் அவசர அவசரமா கண்ணைத் தொடைச்சுக்கிட்டதை உன்னிச்சாரு. ஆனாலும் மகளே சொல்லுவானு எதுவுமே கேக்கல. கச்சாமா பொதுவா பேசினாளே தவிர, அவளும் ஒரு வார்த்த எதுவுமே சொல்லல. இந்தூட்டு சமாச்சாரத்த அந்தூட்டுல சொல்லக்கூடாது; அந்தூட்டு சமாச்சாரத்த இந்தூட்டுல சொல்லக்கூடாதுன்னு, ஒசந்த கொள்க வெச்சிருந்தா கச்சாமா.

தான் ஒன்னு சொல்லப் போய் அப்பா அதை மச்சாங்கிட்ட கேட்டு வெச்சா, மச்சான் மனசு கஷ்டமாயிருமேன்னு எதுவுமே சொல்லுல. மீரான் சாயபும், சரி, எந்த வீட்டுல தான் மனஸ்தாபம் வராம இருக்குதுனு அதை பெரிசா எடுத்துக்கல. மகளுக்கு வாங்கிட்டு வந்த பழம்பச்சடிகளையெல்லாம் கொடுத்துட்டு, ஒரு வாரம் அனுப்பிவைக்க சொல்லி, மாமியாகிட்ட சொல்லிட்டு கெளம்பிட்டாரு.

அவரு போன ஒடனே, அந்த பழங்களையெல்லாம், நாத்திமாருங்களும், அவங்களோட மகள்களும் பங்கு போட்டுக்கிட்டாங்க. கச்சாமா வாயவே தொறக்கல. அவளோட சீலை துணிமணிங்க பாதிய தூக்கிக்கிட்ட போதே ஒன்னுஞ் சொல்லல, இதுக்கு என்ன சொல்லப் போறா?!

அன்னிக்கு ஒரு நாள் அப்படித்தான், அதிகாலையில, குளிச்சிட்டு, இளவெய்யில்ல, வாசல்ல நின்னு, தலைய காய வெச்சுக்கிட்டு இருந்தா. நல்ல அழகான அடர்த்தியான கூந்தல் கச்சாமாவுக்கு. அவளோட நாத்தி ரைமாவுக்கு அது பொறுக்கல. போயி, அம்மா காதுல குசுகுசுன்னு என்னமோ சொல்ல, அங்கிருந்து வேங்காத்தாலாட்டம் வந்தா ருகையா.

“நல்லா இருக்குமா நீ பண்ணுறது! வயசுக்கு வந்த பிள்ளைங்க இருக்கற ஊட்டுல, இப்படியா காலங்காத்தால தலைய விரிச்சுப் போட்டுக்கிட்டு, வெளிய வந்து நிக்கறது?! நாங்கள்ளாம் அந்த காலத்துல, எப்ப எந்திரிச்சோம்? எப்ப குளிச்சோம்னு யாருக்கும் தெரியாத மாதிரி தான் நடந்துக்குவோம்! நீயானா கொஞ்சங்கூட கூச்சநாச்சமே இல்லாம....” இன்னும் வெளியே சொல்லவே வாய்கூசும், படுக்கையறை சமாச்சாரங்களையெல்லாம் இழுத்து வாய்க்கு வந்தபடி வாரிக் கொட்ட ஆரம்பிச்சா ருகையா.

நாத்தனாவோட வயசுக்கு வந்த மக சாயிதா இன்னும் எந்திரிக்கவே இல்லையே... அதுக்குள்ள இந்த பேச்சு பேசறாங்களேனு அசந்து போயி நின்னா கச்சாமா. அதில இருந்து, தலபாரம் புடுச்சாலும் பரவாயில்லைனு ஈரத்தோடவே தலைய பின்னிக்குவா.

ஒரு நா, “ஏங்க அப்பா கூப்பிட்டாருல்ல, நா அம்மோட்டுக்குப் போயி ஒரு பத்து நாளு இருந்திட்டு வரேங்க!”

“எனக்கு வேலை இருக்கு. கொண்டி எல்லாம் உட முடியாது. உங்கப்பா வந்தா வேணா போ நீயு” பட்டும் படாம சொல்லிட்டான் தஸ்தீரு.

அதே மாதிரி, ஒரு நாளு தன்னைப் பார்க்க வந்த தகப்பங்கூட அம்மா வீட்டுக்கு வந்திட்டா. ராத்திரி படுக்கைக்கு தஸ்தீரு வருவானு எதிர்பார்த்தா. வரவே இல்லை. அடுத்த நாள்... அடுத்த நாள்... ம்..ஹூம். வரவே இல்லை. கச்சாமாவுக்கு ஒரே தவிப்பு, மச்சானக் காணாம. அதுக்கு மேல அவளால அம்மா வீட்டுல இருக்க முடியும்னு தோணல. பத்து நாளைக்குன்னு வந்தவ, மூணே நாளுல, கிளம்பிட்டா புருஷமோட்டுக்கு!

இப்படி புருஷன் புருஷன்னு மாஞ்சு போறாளேனு சக தோழிகளுக்கு ஒரே ஆச்சரியமா இருந்திச்சு. புருஷன் பொஞ்சாதிக்குள்ள எம்புட்டு அன்பு பாருன்னு நெனச்சுக்கிட்டா பாத்திமா.

அவ, உடனே திரும்பி வந்தத அவ்வளவா புடிக்கல ருகையாவுக்கு. அப்பமோட்டுக்கு மிச்சம் பண்ணிக் குடுக்கறக்காக சட்டுனு வந்திட்டதா சொல்லி ஏசினா.

அன்னிக்கு ராத்திரி முச்சூடும் வரவே இல்ல தஸ்தீரு! பார்த்த விழி பூத்துப் போயி, எந்நேரம் தூங்கினானே தெரியாதபடி ஜாமம் வரைக்கும் அவனுக்காக முழிச்சிட்டு இருந்தா கச்சாமா.

காலைல எந்திரிச்சொன்ன, ஒரே குமட்டலா குமட்டுச்சு. தூக்கமில்லாம தான் இப்படினு நெனைச்சுக்கிட்டா. கட்டுலுல இருந்து எறங்குனா ஒரே தல சுத்து. கிறு கிறுனு மயக்கமா வந்துச்சு. அப்பத் தான் புரிஞ்சிது அந்த மாசம் தொழுக விட்டுப் போகவே இல்லைனு. என்னமோ புரிஞ்சாப்புல இருந்திச்சு.

மனசெல்லாம் ஒரு மகிழ்ச்சி நெறையறாப்புல இருந்திச்சு. தான் உண்டாகி இருக்கோம்னு மெல்ல புரிஞ்சுது அந்த பேதைப் பெண்ணுக்கு. புருஷங்கிட்ட தான் அத மொதோ சொல்லணும்னு துடியா துடிச்சா. தஸ்தீரு தான் வரவே இல்லையே. இன்னிக்கு எப்படியும் சாயங்காலம் வந்த ஒடனே சொல்லீறனும்னு இருந்தா.

வாய்க்கு எதுவுமே புடிக்கல. பழைய சோத்த கொஞ்சம் தயிரு ஊத்தி குடிச்சுக்கிட்டா. தோச இட்லிய கண்டாலே ஒமட்டலா வந்திச்சு. வேல செய்ய முடியாம அவ சோம்பினதுக்கு மாமியா திட்டினது கூட அவளுக்கு ஒறைக்கவே இல்லை. வயித்த லேசா, பாசமா தடவிப் பார்த்தா.

“எந்நேரம் வரைக்கும் நீஸ்தண்ணியில கைய அலைஞ்சுக்கிட்டே கடப்ப? அரிசிய ஒலையில போட்டுட்டு, பாத்திரத்த கழுவினாத்தான ஆவும்!”

மாமியாவின் குரல் கேட்டு பதறி எந்திரிச்சவ, கண்ணு இருட்ட, அப்படியே தூணில சாய்ஞ்சுக்கிட்டா.

(வளரும்)

-சுமஜ்லா.

4 comments:

நசரேயன் said...

ரெம்ப நல்லா இருக்கு

asiya omar said...

புது மருமகளின் பாடு திண்டாட்டம் தான்,மாமியாரின் பாடு கொண்டாட்டம்.இது யாருக்கும் விதிவிலக்கல்ல.

Jaleela said...

சரியா சொல்லி இருக்காங்க ஆசியா

Jaleela said...

சுகைனா இதுக்கு நாலு தடவை பதில் போட்டேன் போகவே இல்லை

உண்மை சரித்திரம் ரொம்ப அருமையா போய் கொண்டு இருக்கு விரு விருப்பாகவும் இருக்கு.

கால காலமாக இந்த மாமியார் நாத்தனார் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கு.

பாவம் கச்சாமாவின் நிலை, இது போல் எத்தனை கச்சாமாக்கள் உலகத்தில் இருக்கிறார்களோ?