Thursday, June 11, 2009

சாயபு வீட்டு சரித்திரம் - 9


(உலவும் மனிதர்களின் உண்மை கதை)
“பூ மலர்ந்து மணம் வீசும், புன்னகைத்து கதை பேசும்,
தேன்சொறிய மனம்நிறையும், பகலெல்லாம் இரவாகும்!
ஏன் கொண்டாய் என் மனமே, இவ்வாசை பூராவும்?!
தேள் தீண்டி விஷமான உளமெப்போ சீராகும்?!

தோழிப் பொண்ணுங்க சுத்தீலும் நின்னுக்கிட்டு ஆளு மாத்தி ஆளு கேள்விங்க கேட்க, யாருக்கு என்ன ஜவாபு சொல்லறதுன்னு புரியாம உட்கார்ந்திருந்தா கச்சாமா. அவ வாயத் தொறக்காம இருந்தத கூச்சம்னு மத்தவங்க எடுத்துக்கிட்டாலும், சச்சுரூபம் என்னன்னு அவளுக்குத் தான தெரியும்.

உள்ள மல்லிப்பூ வாசத்தோட பீடி நாத்தமுங் கலந்திருந்தத சொல்லுவாளா? ராஜகுமாரன எதிர்பார்த்த மனசு ரணமாகிப் போனத சொல்லுவாளா? படிச்சிருந்தும் பண்பு தெரியாத கல்லுமனசப் பத்தின கதையச் சொல்லுவாளா? எதச் சொல்லுவா கச்சாமா? ஆயிரந்தான் இருந்தாலும், மொத ராத்திரி முடிஞ்சொன்ன, கட்டின புருஷன உட்டுக் குடுக்க முடியுமா? மெம்மையா நாலு வார்த்த, தம்மையா சின்ன சொல்லு... இது போதுமே கச்சாமாவோட பூமனசு கரைய! அதுக்கு கூட பஞ்சமா? அவ என்னத்த எதிர்பாத்தா... என்ன கெடச்சுது... அவ வெச்சிருந்த அன்பெங்கே? அவ புருஷனோட அவசரமெங்கே? அங்க மல்லிக மட்டுந்தான மலர்ந்து மணம் வீசுச்சு.. அவ மனசு?

ஆயிரங்கதைகள் பேச நெனைச்ச மனசு, ஊமையாகிப் போன காரணம் யாரரிவார்? ஆச ஆசயா வெக்கத்த விட்டு பேச போக..., என் ஜோலில நீ தலய குடுத்துக்காதேன்னு கத்திரிச்சு உட்டவர்ட்ட என்னத்த சொல்ல ஏலும்? ‘இப்பவே சொல்லுப்புடரேன் புள்ள..., நா பீடி குடிப்பேன், சீட்டாடுவேன், ரேஸுக்குப் போவேன்... நீ உண்டு, உன் வேலை உண்டுனு வாயத் தொறக்கக் கூடாது’ என்ன படச்சவனே... வீச்சரிவா வெச்சு வெட்டி சாச்சுப்புட்டு, வலிக்கக் கூடாதுன்னா எப்படி? தொடங்குன அன்னிக்கே இப்டீன்னா இனி போகப் போக? நாணத்தால் செவக்க வேண்டிய மொகம் அவமானத்தால் செவந்தத வெளீல சொல்ல முடியுமா? எல்லாம் ஊம கண்ட கனா தானே?

எத்தினி தான் அம்பு வீசினாலும், தன் நெஞ்சுல தாங்கிக்கனும்னு முடிவு பண்ணினா அந்த பத்தினி. என்ன ஆனாலும், தன் மச்சானை கொறை சொல்ல மனம் கொள்ளுல அந்த உத்தமி. அவர் எப்படி இருந்தாலுஞ்சரிதேன், தான் இனி இந்தபடிக்கு தான் இருக்க வேண்டும் என்று எப்போதோ முடிவு செய்தவள் தானே. கணவனுடைய வெளிப்பார்வ மனசுக்கு புடிக்காத மாரி தோணினாலும், அவனையே மம்மதனாக நெனச்சா. அந்த நெனப்ப மாத்தி நெனைக்கிறது கூட தன் கற்புக்கு உண்டான களங்கமா எண்ணி பதறிப் போனா.

தோழிப் பொண்ணுங்க கேலி செய்ய தனக்குள்ளே சிரிச்சு வெச்சா. வண்டுக்காக தேன் சுமந்து காத்திருந்த மலர்ல தேன குடிக்காம ஒவ்வொரு இதழா பிச்சு பிச்சு எறிந்தால் எப்படியிருக்குமோ அப்டி ஒரு மனகிலேசத்துல அவ இருந்தா... ஆனாலும் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக சமாளிச்சு, எதார்த்தத்தோட பொருந்திக்கிட்டு போக ரொம்ப பிரயாசை எடுத்துக்கிட்டா.

மறு அழப்புக்காக, கச்சாமாவ தயார் படுத்தினாங்க. மத்தியானம் கொஞ்ச நேரம் கண்ணசந்தக்காட்டி களப்பு கொஞ்சம் காணாம போயி மனசு லேசானது மாரி இருந்துச்சு. ரெண்டாவது உடுப்பு சேலைய உடுத்தி விட்டாங்க. தலை நெறைய பூ வெச்சு அழகா ஜடமட்ட தெச்சு விட, மீரான் சாயபு மகள வெச்ச கண்ணு வாங்காம பெருமயா பார்த்தாரு.., ஓடிப் போயி, தகப்பன் மார்ல சாஞ்சுக்கிட்டு ஓன்னு அழுதா. மக தன்ன விட்டுட்டு, மாமியா ஊட்டுக்குப் போற துக்கத்துல தான் அழுவுறானு நெனச்சு, அவள சமாதானம் பண்ணிக்கிட்டே இவரு கண்ண தொடச்சிக்கிட்டாரு.

காலையிலயே தாய் வீட்டுக்குப் போயிருந்த தஸ்தீரை, மாப்பிள்ளை மருவாதையோட அழைச்சிட்டு வர, வண்டி கட்டிக்கிட்டு, ஆள் அனுப்பியிருந்தாங்க. அழகா சீவி சிங்காரிச்சதும் மனசு ஏனோ மச்சானப் பார்க்கணும் போல... மச்சான்கிட்ட புதுப் பட்டு சீலைய காட்டணும் போல துடிச்சது. ராத்திரி நடந்தது எதுவுமே, அவளுக்கு இப்ப தோணல. ஆசையாசையா மச்சான தேடுனாலும், அவுரு கண்ணுக்கு தெம்படவே இல்லை. அவுரு பாட்டுக்கும் ரூமுக்குள்ளாற போயி உட்கார்ந்துகிட்டாரு. தான் அங்க போனா பொண்டுங்க கேலி பேசு ரவுசு பண்ணுவாங்கனு கம்முனு இருந்துக்கிட்டா.

சாயங்காலம, மாப்பிள்ளை வீட்டுக்கு அழைச்சிட்டுப் போயிட்டாங்க. சைதா கூட தோழிப்பொண்ணா வந்தா. தார்சு வீடு தான். மெத்த வீட்டைப் பார்த்தொன்ன, கச்சாமாவுக்கு சந்தோஷமா இருந்திச்சு. நாத்தனாமாருங்க ரெண்டு பேரும் வந்து ஆரத்தி எடுத்தாங்க. கூள ருகைமா ஒரு பக்கம் உக்கார்ந்துகிட்டு, எல்லாரையும் அதகளம் பண்ணிக்கிட்டு இருந்தா.

எப்படி எப்படியோ நாளு ஓடிருச்சு. என்னத்த சொல்ல, என்னத்த சொல்லாம விட. இவ என்ன சொன்னாலும், மச்சாங்கிட்ட அப்படியே சொல்லிவைக்கும் நாத்திமாருங்களப் பத்தி சொல்லுறதா? இல்ல, அம்மா ஆடுன்னா ஆடற பாடுன்னா பாடுற மச்சானப் பத்தி சொல்லுறதா?

கச்சாமா அவளுண்டு அவ வேலை உண்டுனு, கம்முனு இருந்துகிட்டா. அவ கலகலப்பான வெகுளிப் பேச்ச அங்க யாரும் ரசிக்கல. அதனால, வழக்கத்துக்கு மாத்தமா இருந்தாலும் மௌனத்தையே துணையாக்கிக்கிட்டா. சைதா கூட மட்டும், அதுவும் யாரும் இல்லாதப்ப பேசுவா.

ஏழாம்நாளு, வண்டி வண்டியா சீரக் கொண்டாந்து எறக்குனாரு மீரான் சாயபு. கட்டிலு, மெத்தை, சாமானஞ்சட்டு, அத்தினி அத்தினி வகையறா. சும்மா சொல்லக்கூடாது; ருகைமாவே இத எதிர்பார்க்கல. இருந்தாலும், அவ வாயி சும்மா இருக்குமா,

“தன் பொண்ணுக்கு மட்டும் கணக்கா கொடுத்திருக்கறதப் பாரு! மாப்பிள்ளை சைக்கிள்ள போறது, உங்க அப்பாவுக்கு தெரியாதா?” நீட்டி மொளக்கியத இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விட்டுட்டா.

சீரு வந்த பின்னால, அவ சாதி சனமெல்லாம் வந்துச்சு. எல்லாரும் சாப்பிட்டானவுடனே, நடு கூடத்துல, ஒரு ஜமுக்காளத்தப் போட்டு, விளையாட்டுக்கு களத்த தயாரிச்சாங்க.

மொதல்ல பன்னாங்குழி வெளையாட்டு. குழிக்கு ஒரு ருவா கணக்குக்கு சில்லரையா போட்டு, கூட தொணைக்குக் கொஞ்சம் கொட்டப்பாக்கும் போட்டு, எதிரும் புதிருமா மாப்பிள்ளையும் பொண்ணும் உக்கார்ந்து வெள்ளாண்டாங்க. இது ஒரு மாதிரியான விளையாட்டு. யார் முதலில் ஆரம்பிக்கிறாங்களோ அவங்க தான் ஜெயிப்பாங்க. மாப்பிள்ளை ரெண்டுவாட்டியும் பொண்ணு ஒரு வாட்டியும் ஆரம்பிச்சு, மொத்தம் மூணு வாட்டி விளையாடுவாங்க. எல்லா விளையாட்டும் மூணு வாட்டி தான்.

அடுத்ததா, மஞ்சத்தண்ணியில, சங்கையும் மோதிரத்தையும் போட்டு யார் எடுக்கிறாங்கன்னு விளையாட்டு. அப்புறம், மல்லிப்பூ தழைக்குவியிலுலயும் அதைப் போட்டு, அதையும் யார் எடுக்குறாங்கன்னு விளையாட்டு. இப்படி எல்லா விளையாட்டுலயும், தஸ்தீரு தான் ஜெயிச்சான். எல்லாரும், தஸ்தீரோடு சாமார்த்தியத்த மெச்சிக்கிட்டு இருக்க, கச்சாமாவே எல்லாத்துலயும் விட்டுக் கொடுத்தது, அவங்க ரெண்டு பேருக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியம்.

மாப்பிள்ளையோட அக்காமாருங்க, கடை வெச்சாங்க. அதைத் துணியால மறச்சு வெச்சுக்கிட்டாங்க.

“பாருங்க ரெண்டு பேரும்! இதுல, பொன்னு மணி வைரம் முத்தெல்லாம் இருக்குது!. நீங்க பொண்ணு குடுக்கறேனு சொன்னாத்தான் காட்டுவோம்”

தஸ்தீரு வாயவே திறக்கல. இவள சீண்டி உட, நாந்தரேனு கச்சாமா தலைய ஆட்ட, எல்லாரும், கொல்லுனு சிரிச்சிக்கிட்டே, அதைத் திறந்து காட்டினாங்க. உள்ள, குப்பைக் காகிதம், தேங்கா நாறு எல்லாம் கடந்துச்சு.

“அட! கச்சாமா! இதுக்கா உன் பொண்ண தரப் போற?!” உறவுகள் கேட்க, முகம் செவந்து போனா கச்சாமா.

அடுத்தாப்புல, மாப்பிள்ளை தட்டி தட்டி கொடுக்க, கச்சாமா அதை வாங்கி, நெய் பணியாரம் சுட்டா. அத அப்படியே வெச்சு, பாத்தியா ஓதி, எல்லாருக்கும் பங்கினாங்க.

அன்னிக்கு பூராவும் கலாட்டாவுல, மனசு லேசானாப்புல இருந்தது. அப்புறம் ஒரு வாரம் அம்மா ஊட்டுல இருந்தா. அதுல அவுங்க இவுங்க எல்லாரும், கூப்பிட்டு, சோறாக்கிப் போட்டு, மடியில தேங்கா பழம் போட்டு அனுப்ப, கச்சாமாவுக்கு எதையும் நெனைக்கக் கூட நேரமில்லை. ஆனா, மச்சான் மனசு விட்டு பாசமா பேச மாட்டானாங்கற ஏக்கம் மட்டும், ஒரு ஓரத்துல இருந்துக்கிட்டே இருந்தது.

ஒரு வாரஞ்சிண்டு, மாமியா வீட்டுக்கு போயிட்டா. மெத்த வீடுன்னு நெனச்சு, சந்தோஷமா போனவளுக்கு, அது சொத்த வீடுன்னு அப்புறந் தான் தெரிஞ்சது.
(வளரும்)

-சுமஜ்லா.

3 comments:

Jaleela Kamal said...

சுகைனா சரித்திரம் சூப்பரா போய் கொண்டு இருக்கு, ஒரு கல்யாணவீட்டு கலகலப்பில் கலந்து கொண்ட மாதிரி இருக்கு, அதுவும் அந்த காலத்து கல்யாணம் சூப்பராவே இருக்கு.(க‌ச்சாமாவின் த‌விப்பு தான் க‌ழ்ட‌மாக‌ இருக்கு)

எப்பவோ கேள்வி பட்ட பல்லாங்குழி எல்லாம் நினைவிற்கு கொண்டு வந்து இருக்கீங்க.ரொம்ப நல்ல இருக்கு

Biruntha said...

பாவம் கச்சாமா.. படித்ததும் மனசுக்கு கஸ்டமாப் போச்சு. பெண்ணாகப் பிறந்தால் இப்படியெல்லாம் அனுபவித்தே தீர வேண்டும். இன்னும் இப்படிப் பட்ட கொடுமைகள் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனையளிக்கின்றது. யாரிடமும் சொல்லவும் முடியாது. என்ன இருந்தாலும் கட்டின புருஷனாச்சே..

அன்புடன்
பிருந்தா

asiya omar said...

சுஹைனா,இது கதையாயிருந்தாலும் கச்சாமா கஷ்டப்படுவாளோ என்று நினைக்கவே மனசு பொறுக்கலை,பாவம் மீரான் சாயபு எவ்வளவு ஆசையாக வளர்த்து கட்டி கொடுத்து இருக்கார்.எல்லாம் படைப்பாளியான உங்கள் கையில் அல்லவோ உள்ளது.