மனதோடு மனம் சேரும் நேரம்
மழைச்சாரல் இனிதாகத் தூறும்
மலர்ந்திட்ட மலர்மொட்டு பேசும்
மனம் ஏனோ துணை காண கூசும்.
கவிவெள்ளம் கரையின்றி ஊறும்,
கற்பனையும் கனவோடு சேரும்
காற்றோடு பூவாசம் கூடும்...
காதோடு தெம்மாங்கு பாடும்.
மனதோடு மனம் சேரும் நேரம்
மலர்மஞ்சம் தனைக்காணும் காலம்,
மைவிழியும் காத்திருந்து நோகும்
மதியாவும் மயங்கித்தான் போகும்.
குழலலங்கு புதுநாதம் ஊதும்,
குயில்பாட்டின் இசையோடு மோதும்
கலைமேவும் எழில் பாதை சேரும்
குலமாதர் தம் வாழ்வைக்கூறும்.
-சுமஜ்லா.
மனதோடு மனம் மோதும் நேரம்
மணமிழந்த மலர் போல வாடும்,
மடைவெள்ள மாய்கண்ணீர் ஓடும்
மனமிப்போ நிம்மதியைத் தேடும்.
உள்ளத்தில் உருவான சோகம்
உச்சத்தில் உள்மனது நோகும்,
உதயத்தைக் காணாமல் தேகம்
உருக்குலைந்து உருகித்தான் போகும்.
மனதோடு மனம் மோதும் நேரம்
மதுதேனும் கசப்பாக மாறும்!
மண்ணோடு விஷவித்தை ஊன்றும்,
மலரெல்லாம் சருகாகத் தோன்றும்.
உற்சாகம் வடிந்தோடிப் போகும்
உலைக்கலமாய் மனம்யாவும் வேகும்
உயிரோடு உடல் சோகம் தாங்கும்,
உறக்கத்தை தொலைத்திட்டு ஏங்கும்.
-சுமஜ்லா
Tweet | ||||
5 comments:
இலங்கையில் இருந்து யாதவன்
அருமையான வரிகள்
அழகான வரிகள்
யாதவன் சார், உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி!
மிகவும் ரசித்..தேனுங்க, பல முறை படித்தேன், ஒவ்வொரு முறை படிக்கும்போதும் வரிகளின் ஆழம் புரிகிறது. மனமார்ந்த பாராட்டுக்கள்.
மனம், மனத்தோடு, மனத்தின் - என்பனவே சரியான வடிவங்கள்.
மனசு, மனது - கொச்சை வடிவங்கள்.
மன்னிக்க வேண்டும். உங்கள் எழுத்தை இகழவில்லை. மொழியின் அமைப்பையே கூறினேன்.
மற்றபடி, உங்கள் பாடல் ஒலிநயத்தோடு உள்ளது.
குற்றம் கண்டுபிடித்து பரிசில் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்.
மன்னிக்க வேண்டும். தங்களைச் சொல்ல வில்லை. தங்கள் பேரான சவுக்கடி என்பதைப் பார்த்தவுடன் தோன்றிவிட்டது.
“காதோடு தான் நான் பாடுவேன்;
மனதோடு தான் நான் பேசுவேன்” பாடலை தாங்கள் கேட்டதில்லையா? கவிதையில், இச்சிறு பிழை வடிவங்கள் மிக இயற்கை! சந்த நயம் பெற ஒரு சில திரிபுகள், தமிழ் இலக்கணத்திலேயே அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
மற்றபடி, உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி!
Post a Comment