Sunday, June 7, 2009

&&& தாய்மை &&&


இது என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்டது.


“உயிரைத் தாங்கும் உயிருக்குள்ளே, ஆயிரம் போராட்டம்;
உருவம் தந்திட, உள்மனதுள்ளே, பூத்திடும் பூந்தோட்டம்!
வயிர மகனும் வயிற்றினில் துடிக்க, மனதில் நீரூற்றும்;
வண்ணக் கனவுகள் வடிவம் பெற்றிட, போகும் தேரோட்டம்!!”
லேசாக மேடிட்டிருந்த வயிற்றைப் பாசமாக வருடிக் கொடுத்தாள் ரமிலா. “என் குட்டி மகன்” தனக்குள் மெல்ல முனகினாள்.

“என்ன! இந்த ராத்திரி நேரத்துல, நீ பாட்டுக்கும் தானா பேசிக்கிறே?!” புரண்டு படித்தபடியே கேட்டான், பாபு.

“ஏங்க நமக்கு பையன் பொறக்குமா? பொண்ணு பொறக்குமா?”

“எதுவா இருந்தாலும் ஓக்கே தான். ஆனா நமக்கு தான் ஏற்கனவே பொண்ணு இருக்காளே?! அது சரி, அஞ்சு மாசம் தான் ஆச்சு அதுக்குள்ள தினமும் நூறு தடவை இந்த கேள்வியை நீ கேட்டுடறே, நானும் நூறு முறை இதே பதிலை சொல்லிட்டு இருக்கிறேன்”

செல்லமாக, தன் கணவனின் மூக்கைப் பிடித்துத் திருகினாள்.

“ஆ! வலிக்குது! விடு, விடு!”

“கேட்ட கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லலைனா இதான் தண்டனை”

“சரி! சரி! விடு! நீ பாட்டுக்கும் கேட்டுக்கிட்டே இரு, நான் பாட்டுக்கும், தூக்கத்துலயே பதில் சொல்லிட்டு இருக்கேன்”

கேலி செய்த கணவனை, காதலோடு பார்த்த ரமிலா, மெல்ல கேட்டாள்,

“ஏங்க! நம்ம, குழந்தை கறுப்பா பிறக்குமா? சிவப்பா பிறக்குமா?”

“நாம ரெண்டு பேரும் மாநிறம்; இதுல மூத்தவ சரிகா, நல்ல கலரா வந்ததே பெரிசு. இது நிச்சயமா என்னாட்டம் தான் வரும்!”

“போங்க, இந்த பாப்பா, சரிகாவை விட கலரா வரும். கொஞ்சம் கம்மியா இருந்தா கூட, பேபி ஆயிலெல்லாம் தேச்சு, கலர் பண்ணிடுவேனாக்கும். நா சொல்லட்டா, குட்டி எப்படி இருப்பான்னு?”

“என்ன புதுசா சொல்லட்டானு கேள்வி! இந்நேரம் வரைக்கும் சொல்லிட்டு தான இருந்த!”

“அதில்லைங்க! நம்ம ராஜகுமாரன் அப்படியே ரோஜாப் பூ மாதிரி, வட்ட முகமா, குண்டு கன்னமும், கோழி குண்டாட்டம் பளபளனு பெரிய கண்ணும், சுருட்டை முடியுமா.... ம்.... நம்ம நினைப்பு தான செயலா மாறுது; நல்லதையே நினைப்போம்!”

“ஏய்! ரொம்ப கற்பனை பண்ணாத! அப்புறம் ஏமாந்திடுவ!”

“ஆமா, சரிகா வயித்துல இருக்கப்பவும் இப்படித் தான் சொன்னிங்க. ஆனா, பொண்ணு எப்படி, கற்பனைய விட பல மடங்கு மேலா....! ஏங்க இன்னிக்கு சரிகாகுட்டி என்ன செஞ்சா தெரியுமா?”

“என்ன செஞ்சா? வழக்கம் போல, ஸ்கூல் போறதுக்கு முன்னாடி, தம்பி பாப்பாவுக்குனு சொல்லி வயித்துல முத்தம் கொடுத்துருப்பா!”

“இல்லைங்க! அதான் தினந்தினம் நடக்குதே! இன்னிக்கு, பாப்பா சாப்பிட்டுருச்சானு கேட்டா! ம்... நான் சாப்பிட்டா பாப்பா சாப்பிட்ட மாதிரினு சொன்னேன். ஸ்கூல் விட்டு வந்தொன்ன, அவ ஃபிரண்டுக்கு பர்த்டேவாம்; அவ கொடுத்த சாக்லேட்ட இவ சாப்பிடாம, கொண்டு வந்து என் வாயில போட்டு, உனக்கில்லமா இது, தம்பிக்குனு சொல்லறா! நா அப்படியே உருகிப் போயி, அவளை சேர்த்து அணைச்சுக்கிட்டேங்க!”

“சரிகாவ மட்டுந்தானவா?”

“என்ன சொன்னிங்க?” கணவன் சொன்னதன் அர்த்தம் தாமதமாக புரிய, பொய்க் கோபத்தோடு முறைத்தாள். ஆயிரமாயிரம் கனவுகளோடும் கற்பனைகளோடும் உறவாடி, தனக்குள்ளே, அரும்பியிருந்த குட்டி உயிரோடு கதைபேசியபடியே உறங்கிப் போனாள், ரமிலா.

“ஏங்க... நம்ம குட்டிப் பயல் எப்படிங்க இருப்பான்? உங்களை மாதிரியே உயரமா?”

“ஆரம்பிச்சுட்டியா?”

“வாய்ல சொல்லக் கூட வலிக்குதாங்க?! அப்படியே ரோஜாப் பூ மாதிரி, வட்ட முகமா, குண்டு கன்னமும், கோழி குண்டாட்டம் பளபளனு பெரிய கண்ணும், சுருட்டை முடியுமா...”

“என்ன மனப்பாடமே பண்ணியாச்சா? எப்பப் பாரு இதே பாட்டு தான்”

“நேத்து வந்த எந்தம்பி கூட எப்படி பாடினான் தெரியுமா? ஜூன் ஜூலை மாதத்தில், ரோஜாப்பூவின் சுவாசத்தில்... ரமிலாக்கா குட்டிப் பையன் கையில் கிடைப்பான்...பால் வண்ண மேனியோடு துள்ளிவருவான்னு ஒரிஜினல் பாட்டை அப்படியே மாற்றிப் பாடினாங்க!”

“சரி! சரி! எனக்கு ஆபீஸுக்கு நேரமாயிருச்சு. சாயங்காலம் ரெடியா இரு! செக்கப்புக்குப் போகணும். இந்த வாட்டி ஸ்கேன் பண்ணனும்னு சொல்லியிருக்காங்கல்ல; நான் கொஞ்சம் நேரமே வந்திடறேன்”

மாலை, டாக்டர், ஸ்கேன் பார்த்தார். மீண்டும் பார்த்தார். மீண்டும் மீண்டும்.... கையைத் துடைத்தபடியே வந்து அமர்ந்தார்.

“சாரி டு சே திஸ் மிஸ்டர் பாபு! பேபி குரோத் கம்மியா இருக்கு! கர்ப்பப்பையில தண்ணீர் சுத்தமா இல்லை. நாலு நாள் பெட்ல வெச்சு, ட்ரிப்ஸ் போட்டுப் பார்க்கலாம். ஒரு பதினைஞ்சு நாளைக்கு நிறைய தண்ணீர் குடிங்க! அப்புறம் மறுபடியும் ஸ்கேன் பார்த்துட்டுத் தான் எதுவும் சொல்ல முடியும்.”

ரமிலாவுக்கு பாதி தான் புரிந்தது. மீதி புரியவேயில்லை, அல்லது புரிய கூடாது என்றே ஆயாசமாக பாபுவின் மேல் சரிந்து விட்டாள்.

அடுத்து நான்கு நாட்கள், பெட்டில் சேர்த்து, காஸ்ட்லியான மருந்துகள், ட்ரிப்ஸ் மூலம் ஏற்றப்பட்டன. இளநீர், மோர், ஜூஸ் எல்லாம், அவள் தாய் வற்புறுத்தி வற்புறுத்திக் கொடுக்க, எல்லாவற்றையும் ரமிலா குடிக்க முடியாமல் குடித்தாள். நாலு நாள் ட்ரிப்ஸ் முடிந்து வீட்டுக்கு வந்த பின், தினமும் நாலு இளநீர் வாங்கி வந்து கட்டாயப்படுத்தி குடிக்க வைத்தான் பாபு.

“ரமி! எப்பப்பாரு, இப்படியே உம்முனு இருந்தா எப்படி? டாக்டர் என்ன சொன்னாரு? தண்ணீர் கூடிருச்சுனா ஓக்கேனு சொல்லியிருக்காருல! சியர் அப் டா!”

“ஏங்க நம்ம பையனுக்கு அப்படி என்னங்க குறை இருக்கப் போவுது?”

“எந்த குறையும் இருக்காது பாரேன். நீ பாட்டுக்கும் வீணா மனசைப் போட்டு குழப்பிக்காத! நம்ம பையன் அப்படியே, ரோஜாப் பூ மாதிரி, வட்ட முகமா, குண்டு கன்னமும், கோழி குண்டாட்டம் பளபளனு பெரிய கண்ணும், சுருட்டை முடியுமா பிறக்க போறான்; நீ வேணா பாரு!”

மலர்ச்சி இல்லாம சிரித்தாள் ரமிலா. குழந்தை உள்ளே உதைத்தது.

பதினைந்து நாட்கள் கழித்து ஆயிரம் வேண்டுதல்களோடு, மீண்டும் ஸ்கேன் பார்த்தார்கள்.

“ப்ச்! பிரயோஜனம் இல்லைங்க! மனசை தேத்திக்குங்க! கொஞ்சம் கொஞ்சமா குழந்தையோடு துடிப்பு, குறைஞ்சிட்டு இருக்குது. எந்த நேரமும் துடிப்பு நின்று போகலாம். டெலிவரி பண்ணித் தான் ஆகணும்” டாக்டர் கைவிரித்துவிட,

“ஏன்! டாக்டர் இந்த மாதிரி?” பாபு கவலையோடு கேட்டான்.

“இதுக்கு ஸ்பெசிக்ஃபிக்கா எந்த காரணமும் சொல்ல முடியாது மிஸ்டர் பாபு! குழந்தையோடு உடலுக்குள்ள, மெயினா கிட்னியில எதாவது குறைபாடு இருந்தா இந்த மாதிரி ஆகும்! கவலைப் படாதிங்க. ஒரு முறை இந்த மாதிரி ஆனதுனால, அடுத்த முறை இப்படியெல்லாம் ஆகாது!”

“டெலிவரி, எப்படிங்க டாக்டர்?”

“ஆறாவது மாச தொடக்கம்ங்கறதால, ஆர்ட்டிஃபீஷியலா வலி எடுக்க வைத்துத் தான் டெலிவரி பண்ணனும். டி அண்ட் சி யெல்லாம் பண்ண முடியாது! முதல் பிரசவம் சிசேரியன். ஆனா, இத எப்படியாவது, பவர்ஃபுல் மெடிசன்ஸ் கொடுத்து, நார்மல் டெலிவரி பண்ணிடலாம். நாளைக்கு வந்து அட்மிட் ஆகிக்குங்க!”

வேறு சில மருத்துவர்களிடமும் செகண்டு ஒப்பினியன் கேட்டார்கள். எல்லாரும் இதே பதிலை சொல்ல, ரமிலா ஊமையாகிப் போனாள். நூறு முறை நச்சரிக்கும் சரிகாக்குட்டிக்கு என்ன பதில் சொல்வதென்று புரியாமல் திகைத்தான் பாபு!

ரமிலாவிடம் இருந்த கலகலப்பு காணாம போயிடுச்சு. ஏம்மா, ஒரு மாதிரி இருக்கேனு சரிகா குட்டி கேட்க, பாப்பாவுக்குக் காய்ச்சல்னு சொல்லி சமாளித்தாள்.

ரமிலாவுக்கு, தான் என்பது யார் என்பதே புரியவில்லை. தான் என்பது தான் மட்டும் தானா?! இல்லை தன் வயிற்றில் துடிக்கும் குழந்தையும் சேர்த்தா? அப்படியானால், இன்னும் எத்தணை நாட்கள்? இதோ, இன்று உள்ளே உயிருடன் உருளும் சின்ன ஜீவன், இன்னும் ஓரிரு நாளில் இல்லாமல் போய்விடும். அந்த நினைவே, கசப்பாக உள்ளே இறங்க மறுக்கிறதே?!

‘இவ்வளவு சீக்கிரம், என் கண்மணியை இழந்து விடுவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லையே?! சுகமான சுமைகூட இன்று சோகமாகி விட்டதே? என் கண்ணே! உயிர் கொடுத்து, கற்பனையில் உருவமும் கொடுத்திருந்தேனே? உன் முதல் குரம் கேட்க, நான் தவமிருப்பது உனக்குத் தெரியாதா? தினம் தினம் வெளியில் இருந்தே உனக்கு முத்தம் கொடுக்கும் உன் அக்காவுக்கு நான் என்ன பதில் சொல்வேன் கண்ணா? அந்த முத்தத்தின் ஈரம் கூட இன்னும் காயவில்லையே?’

‘கண்ணே! உனக்கு என்ன துன்பம் நேர்ந்தது? வலிக்கிறதா? உயிர் போகும் வேதனையா? மணியே! உன் வேதனையெல்லாம், எனக்குத் தந்து விடு! நான் தாங்கிக் கொள்கிறேன். நீ மரிக்கும் நேரத்தில், வேதனை இல்லாமல் சந்தோஷமாக மறைந்து விடு! மறு உலகில் நான் உன்னை மீண்டும் சந்திக்கிறேன்.’

‘உள்ளிருந்து பிஞ்சுக்காலால், குத்துகிறாயே? கோபமாடா என் மேல்? ஏன் என்னை இவ்வாறு உருவாக்கினீர்கள் என்று வருத்தமா? அழாதேடா கண்ணா! நீ அழுதா அப்புறம் அம்மாவும் அழுவேன்.’

வெகுநேரம் வயிற்றைத் தடவியபடி, அரற்றிக் கொண்டிருந்தும் ஆறுதல் படாமல், தன் டைரியை எடுத்து, தன் உணர்வுகளை
கவிதையாக எழுத ஆரம்பித்தாள்.

எழுதியதை கையில் வைத்தபடி, மீண்டும் மீண்டும் அழுது கொண்டே இருக்க, அதைப் பார்த்த அவள் தாய், அந்த டைரியை தான் வாங்கி வைத்துக் கொண்டாள், பிறகு தருவதாக.

“ஏம்மா? தம்பிக்கு காய்ச்சல் வந்தா உனக்கும் காய்ச்சல் வருமா?” சோர்ந்திருக்கும் தன்னைப் பார்த்து சரிகா கேட்க, அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டாள்.

அட்மிட் ஆயாச்சு. அடுத்தடுத்து, ஊசி போட்டார்கள் வலி பிடிக்க. ட்ரிப்ஸும் ஏற்றினார்கள். விட்டு விட்டு வலி வந்தது. மதியத்துக்கு மேல் குழந்தையிடம் துடிப்பு இல்லை. இரவு லேபர் வார்டுக்கு அழைத்துச் சென்றார்கள்.

வலி கூடிக்கொண்டே இருந்தது. பிள்ளை படும் வேதனையை எல்லாம் தான் வாங்கிக் கொள்வதாக எண்ணி பொறுத்துக் கொண்டாள் ரமிலா. வலி இன்னமும் இன்னமும் அதிகமாகியது.

“அம்மா! ஆ... அம்மா!” வேதனையில் கதறி துடித்தாள். உச்ச கட்ட வேதனை. இதற்கு மேல தாங்க முடியாது என்று தோன்றியது.

“கால் முதலில் வெளியே வந்திருச்சு! அதுமில்லாம, போன பிரசவம் சிசேரியன். அதான் இந்த கஷ்டம்!” டாக்டர் யாரிடமோ சொன்னது காதில் விழுந்தது.

“கொஞ்சம் பொறுத்துக்குங்க ரமிலா. இதோ ஆயிருச்சு” அனத்தியவளிடம், ஆறுதல் சொன்னாள் நர்ஸ்.

“அம்மா முடியலையே! அம்ஆஆஆஆஆ” அப்படியே அரை மயக்கத்துக்குப் போய்விட்டாள்.

‘என்னது இது! மேலுலகமா? நாமும் பிள்ளையைப் பார்க்க, வானுலகம் போய் விட்டோமா? யார் இது? தேவதைகளா? நம்மை சுற்றி யார் யாரோ தெரிகிறார்களே? கலர் கலராய் என்னென்னமோ தெரிகிறதே? வானத்தில் பறப்பது போல இருக்கிறது, எப்படி இப்படி இறக்கைகள் இல்லாமல்....ஒரு வேளை தண்ணீரில் மிதக்கிறோமா? இல்லை காற்று வெளியில்... காற்றோடு காற்றாய் கலந்து விட்டோமா?’

“சிஸ்டர்! மிக்ஸோஜென் போட்டாச்சா?”

“இன்னும் இல்லைங்க!”

“மில்க்க உடனே சப்ரஸ் பண்ணியாகணும். லேட் பண்ணாம இப்பவே வெயின் வழியா கொடுத்திருங்க!

“ரமிலா...ரமிலா கேர்ள் பேபி பொறந்திருக்கு” நர்ஸ் தட்டி விட்டு, சொல்லவும் தான் பிரதிக்ஞை வந்தது, அதுவும் கொஞ்சமாய். பையன் தான் என்று சத்தியமாய் முடிவு செய்திருந்தவளுக்கு கொஞ்சம் கூட உரைக்கவில்லை நர்ஸ் சொன்னது.

மீண்டும் கேட்டாள், “என்ன பேபி?”

“ஃபீமேல் பேபி”

திரும்பவும் கேட்டாள், “ என்ன குழந்தை?”

“பொண்ணு பொறந்திருக்கு!”

நம்பிக்கை இல்லாமல், மறுபடியும் சொன்னாள், “சரியா பார்த்துச் சொல்லுங்க! என்ன குழந்தைனு!”

“போர்ட்டீன் ஃபின்னர் போட்டிருக்குல்ல, அதான் நினைவு மாறி மாறி வருது” நர்ஸ் இன்னொரு நர்ஸிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“ரமிலா பாரு குழந்தையை!” அருகில், கொண்டு வந்து நர்ஸ் காட்ட, ஒரு கணம் கண்விழித்தவள், உரித்த கோழி போன்ற நிறத்தில், ரத்தத் திட்டுக்களோடு, அந்தத் தோற்றம் மனதில் பதிவதற்கு முன் அவசர அவசரமாக கண்ணை மூடிக் கொண்டாள்

“இல்ல நான் பார்க்க விரும்பல. குறையுடைய குழந்தை என்னோடதல்ல. என் குழந்தைக்கு எந்த குறையும் இல்ல. என் மனசுல இருக்கிறத அழிச்சுராதிங்க! எடுத்துட்டுப் போயிடுங்க, ப்ளீஸ்! இத நான் பார்க்க மாட்டேன். என்னோட மகன், அப்படியே, ரோஜாப் பூ மாதிரி, வட்ட முகமா, குண்டு கன்னமும், கோழி குண்டாட்டம் பளபளனு பெரிய கண்ணும், சுருட்டை முடியுமா.... கண்டிப்பா ஒரு நாளைக்குப் பிறப்பான்” வீரிட்டு அலறியபடி மீண்டும் மயக்கமானாள்.

“அப்பா! தம்பிப் பாப்பாவுக்கு காய்ச்சல் நல்லாயிருச்சா?” வெளியே அப்பாவியாகக் கேட்டுக்கொண்டிருந்தாள் சரிகாகுட்டி.

-சுமஜ்லா.

32 comments:

Unknown said...

நல்லா இருக்குங்க.இன்னும் கூட மெருகு ஏத்தலாம்.

//அந்தத் தோற்றம் மனதில் பதிவதற்கு முன் அவசர அவசரமாக கண்ணை மூடிக் கொண்டாள்//

சூப்பர் வரிகள்.

//இவ்வளவு சீக்கிரம், கல்லறைக்குப் போகத் துடிக்கிறாயே? கருவறையில் நீ இருப்பது பாரமாக இருக்கிறது நான் உன்னிடம் சொன்னேனா? கண்ணா? நான் கண்ட கனவுகள் எத்துணை? கற்பனைகள் எத்துணை? மாணிக்கத்தில் உனக்குத் தொட்டில் கட்ட நினைத்திருந்தேனே! நீ ஏனடா, மண்ணறையை நாடிப் போகிறாய்?//

பழைய கால(மனோகரா) கண்ணாம்பா வசனம் தவிர்த்து கொஞ்சம் யதார்த்தமா வேறு எழுதலாமே.

பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்.

SUMAZLA/சுமஜ்லா said...

முதல் கமெண்ட்டுக்கு ரொம்ப தேங்க்ஸ் ரவி சார்.

எனக்கு தெரிந்த அளவில் மாற்றியிருக்கிறேன்.

ஆனால், கடைசிவரை, எதாவது ஒன்றை மாற்றிக் கொண்டே தான் இருப்பேன் என்று நினைக்கிறேன்.

Karthik said...

ரொம்ப நல்ல இருக்குங்க...... எதோ நேர்ல பார்ப்பது போல் இருந்தது...மிகவும் அருமை.

SUFFIX said...

காட்சிகளை வர்னித்த விதம் அருமை, இயற்கையாக இருக்கு, மிகவும் நெகிழ்ச்சியான கதை!!

Jaleela Kamal said...

சுஹைனா ரொம்ப அருமையா பக்கத்தில் உட்கார்ந்து சொல்வது போல் உள்ளது

SUMAZLA/சுமஜ்லா said...

///ரொம்ப நல்ல இருக்குங்க...... எதோ நேர்ல பார்ப்பது போல் இருந்தது...மிகவும் அருமை.///

ரொம்ப நன்றிங்க! உங்களுக்கு நேரில் பார்ப்பது போல இருந்ததில் தவறில்லை. காரணம் நான் 100% சொந்த அனுபவத்தில் எழுதிய கதை இது.

SUMAZLA/சுமஜ்லா said...

///காட்சிகளை வர்னித்த விதம் அருமை, இயற்கையாக இருக்கு, மிகவும் நெகிழ்ச்சியான கதை!!

தேங்க்ஸ், சஃபி சார்! நீங்க போட்டிக்கு கதை எழுதியாச்சா?

SUMAZLA/சுமஜ்லா said...

///சுஹைனா ரொம்ப அருமையா பக்கத்தில் உட்கார்ந்து சொல்வது போல் உள்ளது///

ஜலீலாக்கா, தேங்க்ஸ். உங்களுக்கு என் சொந்த கதை தெரியும் தானே?!

அபி அப்பா said...

இதை வெளியிட வேண்டாம்!

நான் நேத்து என் பழைய ரூம்க்கு போயிருந்தேன்.எல்லோருமே இஸ்லாமிய நண்பர்கள் தான். நான் மட்டுமே இந்து அங்கே. அப்படி 5 வருடம் ஓடிச்சு. ஆனால் என் மேல் எல்லோருக்கும் முகுந்த அன்பு. எல்லோரும் ஐடி புலிகள்.

நான் போன உடனே "அண்ணா சமஜ்லா ஆச்சி உங்களூக்கு பழக்கமா? நல்லா எழுதறாங்க" அப்படின்னு கேட்டவுடன் எனக்கு ஆச்சர்யம்.

பின்னரூம்க்கு வந்து ராத்திரிபார்த்தா உங்க பின்னூட்டம்! ஆச்சர்யம்!

நல்லா டெக்னிக்கலா எழுதறீங்க!

அனேகமா துபாய்ல உங்க ர்ரசிகர் 1000 இருக்க வாய்ப்பு உண்டு!

எல்லாருக்கும் நீங்க சமஜாச்சி!(அப்படித்தான் எல்லாரூம் என் கிட்ட சொன்னாங்க)

SUMAZLA/சுமஜ்லா said...

///visible after owners approval///

நான் கொடுக்கவே இல்லையே?! நீங்க பாட்டுக்கும் வெளியிட வேண்டாம் என்றால்?
வலது புறம் இருக்கும், எனக்கு மின்னஞ்சல் செய்ய லின்க் அதுக்கு தான் கொடுத்திருக்கேன்.

பலியாடு என்ற என் சிறுகதை, துபாயில் இந்த மாத தமிழ் தேர் மாத இதழில் வெளியிடுவதாக சொல்லியிருக்கிறார்கள்.

///நல்லா டெக்னிக்கலா எழுதறீங்க!/// பாராட்டுக்கு நன்றிங்க!

எழுதுவது போரடிக்கும் நேரத்தில், பொதுவா, நான் ஃபாலோ பண்ணும் லிஸ்ட்டில் இருக்கும் எல்லா ப்ளாகிலும், மேய்வேன். அப்போ தான் உங்களுடைய 32 கண்ணில் பட்டது. சுவையாக இருந்த பதிவை யாரோ சொன்னதுக்காக எடுத்தது எனக்கு வருத்தம் தான்.

எனக்கு கொடுக்கப்பட்ட புதுப்பேரை நானும், என் கணவரும் படித்து வாய் விட்டு சிரித்தோம்.

அப்துல்மாலிக் said...

இப்போதான் முதல் முறையாக உங்க தளத்திற்கு வருகிறேன்

உங்க எழுத்தோட்டம் அருமை, ஒவ்வொரு வரியிலும் உயிரோட்டம் இருந்தது

தொடருங்கள்

வாழ்த்துக்கள்

"உழவன்" "Uzhavan" said...

மேடம்.. சூப்பர். நல்ல நடை. கதையின் கடைசி வரிதான் கதையின் பலமே!
கதை கொஞ்சம் பெரிதாக உள்ளது போல் உள்ளது.
வெற்றிபெற மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!

SUMAZLA/சுமஜ்லா said...

முதன்முறையா வருகை தரும் அபுஅஃப்ஸர் அவர்களை, வருக வருக என்று அன்போடு வரவேற்கிறேன்.

///உங்க எழுத்தோட்டம் அருமை, ஒவ்வொரு வரியிலும் உயிரோட்டம் இருந்தது///

தேங்க்ஸ்ங்க!

உழவன் சார்! நீங்க சொன்னது போல நானே நினைத்து, மெனக்கெட்டு, கதையின் வார்த்தைகளை உட்கார்ந்து எண்ணினேன். சரியாகத் தான் வந்தது. என்னுது, 4 column டெம்ப்ளேட் என்பதால், அகலம் கம்மியா, நீளமாகி விட்டது.

///வெற்றிபெற மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!///

உங்கள் வாழ்த்துக்கு மனப்பூர்வமான நன்றிகள், சார்!

"உழவன்" "Uzhavan" said...

//உழவன் சார்! // உங்கள் வாழ்த்துக்கு மனப்பூர்வமான நன்றிகள், சார்! //

அய்யோ.. சார் எல்லாம் வேண்டாங்க.. நான் சின்ன பையன். சும்மா உழவன்னே கூப்பிடுங்க. அது போதும் :-)

SUFFIX said...

//தேங்க்ஸ், சஃபி சார்! நீங்க போட்டிக்கு கதை எழுதியாச்சா?//

என்னது...போட்டியா.. நானா...எஸ்கே........ப், இப்பொத்தானே மொக்கை போட ஆரம்பிச்சிருக்கேன், கொஞசம் டைம் கொடுங்க அம்மனி.

SUFFIX said...

என்னயும் தான்...எஸ் க்யூஸ் மி...சார் கீர் லாம் சேர்த்து அழைக்கவேன்டாம் ப்ளீஸ்..ஷ‌ஃபின்னு மட்டும் அழைத்தால் போதுமம்மா.(என்ன ஒரு தன்னடக்கம்!!)

SUMAZLA/சுமஜ்லா said...

எத்துணை பேர் இப்படி கிளம்பி இருக்கீங்க?

ஒருத்தர்... இல்லை இல்லை ஒரு பட்டாளமே என்னை, ‘ஆச்சி’ ஆக்கி விட்டது.சிலர் அம்மணி ஆக்கிட்டாங்க. சிலர் அம்மானு கூப்பிடறாங்க.

ப்ரொஃபைலில், என்னோட உண்மை வயசை, போட்டது தப்போ?!

ஷஃபி அண்ணாச்சி, தன்னடக்கமா? இல்லை உங்களை சின்னப் பையன்னு காட்டி, ஃபிகருங்களை உங்க ப்ளாக் பக்கம் வரவழைக்க தந்திரமா?(சும்மா வெள்ளாட்டுக்கு)

ம்...உழவன், கூப்பிட கொஞ்சம் கஷ்டம் தான். உழவா...னா ஓக்கே, ஆனா மரியாதைக் குறைவு. பரவாயில்லை ட்ரை பண்ணி, உழவன்னே கூப்பிடுறேன்.

ஒரு சேஃப்ட்டிக்காக ப்ரொஃபைலில் போட்டு வெச்சிருக்க வயச தூக்கிடலாமா? அனுபவமுள்ளவங்க ஆலோசனை சொல்லுங்க!

ஷஃபி, உழவன் நீங்களும் தான்!(இப்ப திருப்தியா?)

அபி அப்பா said...

இல்லை ஆச்சி என்பது எங்க பக்கம் அதாவது தஞ்சை பக்கம் இஸ்லாமியர் மட்டும் இல்ல இந்து, கிருத்துவர் கூட அழைக்கு ஒரு பண்பு.

அம்மா, சகோதரி, மகள் இந்த மூன்று மட்டுமே இந்த ஆச்சிக்கு சொந்தம்.

அந்த ரூம்ல நான் வந்தேன் என்பதால் வந்த நண்பர்கள் எல்லாரும் நான் ஒரு பிளாக்கர் என்பதால் சமஜாச்சி எப்படி இருக்காக அப்படின்னு அன்பா குசலம் விசாரிச்ச போது சந்தோஷமா ஆகிடுச்சு!

SUMAZLA/சுமஜ்லா said...

அபி அப்பா,

ஆச்சினு சொன்னதுக்காக நான் கவலையெல்லாம் படல. எனக்கு தெரிஞ்ச ஒரே ஆச்சி, மனோரமா ஆச்சி தான். அதோட அர்த்தம் சொன்னதுக்கு நன்றிங்க!

///அனேகமா துபாய்ல உங்க ர்ரசிகர் 1000 இருக்க வாய்ப்பு உண்டு!

எல்லாருக்கும் நீங்க சமஜாச்சி!(அப்படித்தான் எல்லாரூம் என் கிட்ட சொன்னாங்க)///

இந்த விஷயம் எனக்கு மிகப் பெரிய விருதைப் பெற்றுத் தந்ததைப் போன்ற மகிழ்ச்சியைத் தந்ததுனு உங்க நண்பர்களைப் பார்த்தா சொல்லுங்க!

SUFFIX said...

//ஷஃபி அண்ணாச்சி, தன்னடக்கமா? இல்லை உங்களை சின்னப் பையன்னு காட்டி, ஃபிகருங்களை உங்க ப்ளாக் பக்கம் வரவழைக்க தந்திரமா?(சும்மா வெள்ளாட்டுக்கு)//

உங்களுக்கும் தெரிஞ்சுருச்சா...எல்லோரும் விவரமாத்தேன் திரியுதுங்கோ (அது ஒரு நிலாக்காலம் அம்மனி...அப்பொ இப்போ..குடும்பமும் கோத்திரமுமா விழாக்கோலமா இருக்கோம்ல) நக்கலு!!

SUMAZLA/சுமஜ்லா said...

சுமஜாச்சியாவது ஏதோ சகிச்சுக்கலாம்.இந்த ’அம்மணி’ தொடர்ந்தால், அண்ணாச்சி தொடரும்.(சும்மா ஒரு மிரட்டல் தான்)

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப நெகிழ்ச்சியான கதைங்க. படிச்சு முடிச்சதும் ரொம்ப நேரம் அதோட பாதிப்பு இருந்தது. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

சுகைனா நீங்க இநத பதிவை போட்டதும் கண்டுபிடித்து விட்டேன் ஆனால் என்ன சொல்வது என்று தெரியவில்லை, இந்த மாதிரி நிறைய பெண்கள், கதிரி கொண்டு இருக்கீறார்கள், நானே நேரிலும் பார்த்து இருக்கிறேன்.
அதனால் தான் பொதுவாக பதில் போட்டேன்.

ஆண்டவன் எல்லோருக்கும் நல் கிருபை புரியட்டும்.

Jaleela Kamal said...

அதென்னபா அபி அப்பா உங்களை மனோரமா ஆச்சி யாட்டம் சுமஜலாச்சியாக்கிட்டாங்க,, ம்ம் இனி உலகம் புல்லா உங்கள் மனோரம்மா ஆச்சி போல் ஆக போகுது வாழ்த்துக்கள்.

SUMAZLA/சுமஜ்லா said...

ஆமாம் அக்கா,

சற்று உடல் நிலை சரியில்லாத காரணத்தால், உடனே பதில் தர முடியவில்லை. யாராவது மனோரமா வயதில் என்னைக் கற்பனை செய்தால் அதற்கு நான் பொறுப்பல்லப்பா!

Jaleela Kamal said...

//ஆகா யாரும் சுகைனாவை மனோராமா ரேஞ்சுக்கு கற்பனை செய்தீங்க பா/

சுகைனா நான் சொல்லவந்தது நாலு தலைமுறையா மனோரம்மா ஆச்சி சரித்திரம் படப்பது போல் இந்த சுமஜ்லாச்சியும் அடுத்து வர முன்று தலைமுறைக்கு பிறகும் உங்கள் கவிதை சரித்திரம் படைக்க போகுது என்று சொல்லவந்தேன்.

SUMAZLA/சுமஜ்லா said...

நான் உங்களை விட சின்னவன்; நானும் உங்களை விட சின்னவன்னு ஆளாளுக்கு போட்டி போட்டுக்கிட்டு, ஸ்டேட்மெண்ட் கொடுத்துட்டு இருக்கறதுனால தான் கொஞ்சம் முன்னெச்சரிக்கையா சொல்ல வேண்டியதாயிருச்சு.

நான் வேற ப்ரொஃபைலில் என் உண்மை வயதை(உண்மை தான் நம்புங்க!) போட்டது தப்போனு ஃபீல் பண்ணிக்கிட்டு இருக்கேன்.

asiya omar said...

கதைதானா? நிஜமா?சிறு காவியம் போல் உள்ளது.கற்பனை என்றாலும் நிஜம் என்றாலும் இவ்வளவு அருமையாக வடிக்க தெரியனுமே !பாராட்டுக்கள்.

SUMAZLA/சுமஜ்லா said...

அக்கா,
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி! நீங்க பாராட்டும் விதமே தனி! நிஜ சம்பவத்தை வைத்துப் புனையப்பட்ட கதை இது!

malar said...

கதை படிக்கும் போது நிஜமாக கண்முன்னே ஓடியது .நல்ல நடை

Biruntha said...

முதலில் எதிர்பார்ப்பு, கற்பனை, ஏக்கம். பின் ஏமாற்றம், வேதனை. அதன்பின் பிரசவவலி என நான் அனுபவித்த அனைத்து கொடுமைகளையும் அப்படியே ஒரு வரி விடாமல் எழுதியுள்ளீர்கள். அருமையான வசன நடை.
இறைவா இந்தக் கொடுமையை இனி எந்த ஒரு பெண்ணும் அனுபவிக்காமல் காத்தருள்வாயாக...

அன்புடன் பிருந்தா

Unknown said...

மனதைத் தொடுவது போல அழகாகச் சொல்லி இருக்கின்றீர்கள். வெற்றி பெற வாழ்த்துகள்.