Thursday, June 4, 2009

நானும் ஒரு பெண்ணும்...


நான் பணம் எடுப்பதற்காக கூட்டுறவு வங்கிக்குப் போயிருந்தேன். அங்கே சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. நேரம் போகணுமே, அதனால் அங்கே பேச்சுக்கு யார் கிடைப்பார்கள் என்று நோட்டமிட்டேன்.

யார் எவாரென்று பார்க்காமல், வலிய போய் பேச்சுக் கொடுப்பது என் சுவாபம்.

பார்த்தால், ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நகை அடகு வைக்க வந்திருந்தார்கள். கூட மூன்று வயது சிறுவனும். ஒருவரோடு ஒருவர் இழைந்தபடி, அவ்வளவு ஒரு அந்நியோன்யமாக நின்று கொண்டிருந்தார்கள். நான் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். கழுத்து செயினையும், காதுத் தோட்டையும் கழற்றிக் கொடுத்தாள் அந்தப் பெண்.

அவர்கள் அடகு வைத்த நகைக்கு, ருபாய் 18,900 மதிப்பு வந்தது. அந்த ஆண்,
“20,000 போட்டுக் கொடுங்க, அண்ணாச்சி!” என்றார்.

“அட! எங்க ரூல்ஸ்படி தாங்க கொடுக்க முடியும். 100 ருபாய் சேர்த்து 19,000 ஆகக் கூட கொடுக்க முடியாதுங்க! யார் பேரில அடகு வெச்சுக்கிறீங்க?”

“புள்ள உம்பேர சொல்லு!” அந்த ஆள் சொல்ல,

“அன்னலட்சுமி!”

“என்ன பேரு?” புரியாத காஷியர் மீண்டும் கேட்க,

“அட! உம்பேர்லயே வெச்சுக்க!” என்று அந்த பெண் சொல்ல, இவர்களுக்குள் என்ன ஒரு ஒற்றுமை பாரு என்று நான் வியந்து கொண்டிருந்தேன். என்ன கஷ்டமோ தெரியலையே இவங்களுக்கு பாவம் என்று பரிதாபப்பட்டேன்.

அவர் செந்தில் என்ற தன் பெயரில், அடகு வைத்துவிட்டு, காத்திருந்தார் கவுண்டரில்.

நான் அந்த பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தேன்.

“நீங்க எங்க குடியிருக்கிறீங்க?”

“பள்ளிபாளையத்துல, ஒம்பதாம் நம்பர் படிக்கட்டுகிட்ட இருக்கிறமுங்க!”

“என்ன தொழில் பார்க்குறாரு உங்க வீட்டுக் காரரு?”

“சலவை தொழில் தாங்க! நான் துணி துவைப்பேன். எங்க வீட்டுக்காரர் துணியும் துவைப்பாரு, இஸ்திரியும் போடுவாரு!”

“ஆத்துக்கு துவைக்க எந்நேரம் போவிங்க?”

“ஆத்துக்கெல்லாம் போறதில்லிங்க! வீட்டு வீட்டுக்கு போயி துவைச்சிட்டு வந்திருவேன்!”

“அவுரு?”

“அவுரு கன்றாத்தான் குளமுங்க! அங்க இந்த பேங்க்காரர் வீட்டுல துவைக்கிறாருங்க! அதான் இந்த பேங்க்குக்கு வந்தோம்!”

“எதுக்குங்க? நகைய அடமானம் வெக்கறீங்க?”

“எல்லாருக்கும் எடம் தர்ராங்க, சங்கத்துல. அதுக்கு 20,000 கட்ட சொன்னாங்க அதுக்கு தான் வெக்கரேங்க!”

“ஒரு நாளைக்கு துணி துவைச்சா 200 கிடைக்குமா?” ஆர்வமாக விசாரித்தேன்.

“அவ்வளவெல்லாம் கிடைக்காதுங்க!”

“அப்புறம் உங்க வீட்டுக்காரர் வேற சம்பாதிக்கிறாரல்ல!” எனக்கு சந்தேகம்.

“ஆமாங்க இருந்தாலும், விக்கற வெலைவாசியில எங்கங்க கட்டுப்படி ஆகுது?”

“அவுருக்கு எவ்வளவு கிடைக்கும் ஒரு நாளைக்கு?” அவரை பார்த்தபடி கேட்டேன்.

“தெரியலைங்க! அவுரும் நாலஞ்சு வீட்டுல துவைக்கிறாருங்க! அப்புறம் அவங்க சம்சாரமும் துவைக்குது!”

“என்னது சம்சாரமா? அப்ப நீங்க?”

“நான் அவுரு தம்பி பொஞ்சாதிங்க! பேங்க்காரர் வீட்டுல, இவுரு துவைக்கறதுனால, இவுர கூட்டிட்டு வந்தங்க!”

அடங் கொப்புரானே?!

-சுமஜ்லா.

9 comments:

கலையரசன் said...

கொப்புரான நல்லாருக்கு...!
ம்ம் நிறைய எழுதுங்க!

SUMAZLA/சுமஜ்லா said...

உங்க பாராட்டுக்கு நன்றி சார்!

renu said...

நல்ல நடை! சுவாரஸ்யமாக உள்ளது!

ஆனா, அடங்கொப்புரானேக்கு இதில் என்ன இருக்கு? யாரால் சிபாரிசு வேலையாகுமோ அவர்களை அழைத்துச்செல்வதுதானே இயல்பு! மிகப்பழக்கமான உறவுகளுடன் கூடிய அந்நியோன்யமும் இழையலும், அதுவும் பொது இடத்தில் என்ன பெரிதாய் நடந்திருக்கமுடியும்? இந்த ங்கொப்புரானே, சங்கத்தை நம்பி நகயை அடகு வைத்ததற்க்கு சொல்லியிருக்கலாம்! அல்லது இவ்வளவு கம்மியான வருமானத்தில் அவர்களால் மீண்டும் நகையை மீட்க முடியுமா என்பதற்காக சொல்லியிருக்கலாம்! ஒரு பெண்ணுடன் வங்கிக்கு உடன் வந்தது அவள் கணவனின் அண்ணன் என்பதற்க்கு என்னத்துக்கு அடங்கொப்புரானே???

SUMAZLA/சுமஜ்லா said...

அட நீங்க வேறங்க! ரெண்டு நாளைக்கு முந்தி, நான் பேங்க் போய் இருந்தப்போ, நடந்தது இது! கடைசி வரை அவர் அப்பெண்ணின் கணவர் என்று நான் நினைத்துக் கொண்டே கேள்விகள் கேட்க, அந்த பேதை பெண்ணும் பதில் சொல்லிக் கொண்டே வர, கடைசியாக தான் அவர் என்ன உறவென்று சொன்னார். என் மடத்தனத்துக்குத் தான் இந்த அடங்கொப்புரானே?!

"உழவன்" "Uzhavan" said...

:-))

கவிக்கிழவன் said...

வெற்றி பெற வாழ்த்துகள். மொழிநடை அருமை
இலங்கையில் இருந்து யாதவன்

SUMAZLA/சுமஜ்லா said...

யாதவன் சார்! இது நான் போட்டிக்காக எழுதியது அல்ல. இனி தான் எழுதணும்.

ஸாதிகா said...

வாவ்..அசத்தலான சிறு கதை.நிறைய எழுதுவீர்கள் என்று எதிர் பார்க்கின்றேன்.
நாச்சியார்

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி நாச்சியாரே!