Wednesday, July 1, 2009

சாயபு வீட்டு சரித்திரம் - 12



(உலவும் மனிதர்களின் உண்மை கதை)


“பிள்ளை முகம் பார்த்துவிட்டால், நெருப்பும் அங்கு நீராகும்,
கிள்ளை மொழி கேட்டுவிட்டால், மங்கை வாழ்வு சீராகும்!
இல்லையொரு தொல்லையென, வளைந்த மனம் நேராகும்,
எல்லையென எண்ணிய மனம், கீழே விழுந்து சேறாகும்!! ”


வலி எடுத்ததால கச்சாமாவை கோஷா ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தாங்க. கண்ணுக்குள்ள வலியோ நோவு தெரிஞ்சாலும், கச்சாமாவோட மனசு, பழசை தான் நெனச்சுக்கிட்டு கடந்துச்சு.

பூவா இருந்தது முள்ளா மாறின மாதிரி, தன் தாய் தந்தையோட மனமாத்தம் எப்படி அவ்வளவு ஜல்தியா நடந்ததுச்சுன்னு அவ நெனைப்பு, பின்னோக்கித் திரும்பிச்சு.

‘தான் எடுத்து வளர்த்த மக என்னு ஊரார் சொல்லுறாங்களே? அப்படினா, எவ் தாய் தகப்பன் யாரு? ஆயிரந்தான் இருந்தாலும், பெத்தவங்கன்னா, ரத்தம் துடிச்சிருக்கும்ல. இதக் காரணமா காட்டி, மாமி அந்த மாதிரி பேசறாங்களே? புருஷன் புருஷன்னிட்டு பார்க்காதே, இதைத் தான தாயும் மாமியாவும் ஒரே மாதிரி சொல்லுறாங்க! நான் ஆசாரி வீட்டு பிள்ளைனு குத்திக் காட்டறாங்களே, மாமி? ஆசாரி வீட்டுப் பிள்ளைதானே?! அவுசாரி வீட்டுப் பிள்ளையல்லவே? ஆண்டவா....என் தாய் எங்கே இருக்காங்க? எனக்குக் காட்டித் தர மாட்டியா?’

அவ மாமியா வீட்டுக்கு திரும்புனத கூள ருகையா அவ்வளவா விரும்பல. புருஷனும் அனுசரணையா இல்ல. ஆனாலும், சிரிச்சுக்கிட்டே வாழப் பழகிக்கிட்டா கச்சாமா. ஏழாம் மாச தொடக்கத்துல, பேறு காலத்துக்கு அழைச்சிட்டுப் போவுறதப் பத்தி பேச்சு வந்துச்சு. அவளுக்கு அவ்வளவு சீக்கிரம் போகப் பிடிக்கல. நல்லவேளை எல்லாரும் சேர்ந்து ஒம்பதாம் மாசம்னு முடிவு பண்ணிட்டாங்க.

புள்ளப்பேரன்னிக்குக் கூட மச்சான் வீட்டுக்கு நேரமா வரலையேனு அவளுக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருந்திச்சு. என்ன செய்யுறது, புருஷன மொணமொணனு மனசுக்குள்ளயே திட்டிக்கிட்டு இருக்கற அம்மா வேற. தனியா கூட்டிட்டு வரக்கூடாதுனு சம்பிரதாயத்துக்காக காத்திருந்து ராத்திரி தான் கூட்டிட்டு வந்தாங்க. வெளக்கு வெச்சா ஆறு தாண்டக் கூடாதுன்னுட்டு மீரான் சாயபு வேற ஏசிக்கிட்டே இருந்தாரு.

“ஆ! அம்மா..... ஆஆஆ” தாங்க முடியாம கத்த, உள்ளாற கூப்பிட்டுப் போனாங்க. சித்த நேரத்துல, பொம்பள புள்ள பொறந்திருக்குன்னு புள்ளைய கொண்டாந்து கொடுத்தாங்க.

அப்படியே புள்ளைய வாரி அணைச்சுக்கிட்டா பாத்திமா. புள்ள மாநிறம் தான். ஆனா கச்சாமா மாதிரியே களையா இருந்திச்சு. புள்ள பொறக்கறப்ப, மாமியோட்டு சனம் ஒருத்தரும் கிட்டக்க இல்ல. தஸ்தீரு கூட இல்ல. விடியகாலம் பொறந்த புள்ளைய, அன்னிக்கு ராத்திரி தான் வந்து பார்த்தான்.

பழைய பால குடிச்சா, புள்ளைக்கு ஆவாதுன்னு, சீம்பால முத்தம்மா பீச்சிப் போட்டு, புள்ளைய பக்கத்துல போட்டா. கச்சாமாவுக்கு பட்ட கஷ்டமெல்லாம் வடிஞ்சாப்புல இருந்திச்சு. அவ கண்ணு சுத்தி சுத்தி மச்சான தேடுச்சு. அம்மாகிட்ட கேக்குறக்கும் பயம். தறுதலையின்னு திட்டுவாங்களே?! புள்ள சொப்பு வாயத் தொறந்து பாலமுதம் குடிக்கவும், மனசு அப்படியே வானத்துல பறக்கறா மாதிரி, எதையோ சாதிச்ச மாதிரி இருந்துச்சு.

அன்னிக்கு ராவு தான் ருகையாவும் தஸ்தீரும் வந்தாங்க.

“பொட்டையா” வரும் போதே, எளக்காரமா சொல்லிக்கிட்டு வந்தா ருகையா. தஸ்தீரு எதும் பேசல. புள்ளைய ஆசையா எடுத்து கையில வெச்சுக்கிட்டான். ஊரும் உறவும் நெறஞ்சு கெடந்துச்சு அங்க. கச்சாமாவுக்கு ஒரு கணமாவது, தம்புருஷனைத் தனியா பாக்கமாட்டமா, தனியா பேச மாட்டமானு இருந்துச்சு. பாருங்க, நம்ம புள்ள, உங்கள மாதிரியே இருக்குன்னு சொல்லணும்னு துடிச்சுது. ஆனா, அம்மாவும் அப்பாவும் ஏற்கனவே மருமகன் மேல, வெங்கடுப்புல இருக்காங்க. ஏதாவது வென வந்திருமோனு அவளே ஒவ்வொன்னும் பயந்து பயந்து செஞ்சிட்டிருக்கா!

தஸ்தீரு கொஞ்ச நேரம் பொண்டாட்டி தலமாட்டுல வந்து நின்னுக்கிட்டு இருந்தான்.

“மச்சான்! தெனம் நேரமா வாங்க மச்சான்” கச்சாமா மெதுவான குரலில் கேட்டாள்.

“சரி! சரி! இன்னும் ரெண்டொரு நாளுல ஊட்டுக்கே வந்திரலாம்”

சொன்ன மாதிரியே மூணாம் நாளு ஊட்டுக்கு அனுப்பிட்டாங்க. பாத்திமா பெக்காதவங்கறதுனால, குழந்தைக்கு தண்ணி ஊத்தி விட, முத்தம்மாவாவது, அய்சாமாவாவது வந்து போய்க்கிட்டிருந்தாங்க. சைதாவும் கூட வருவா.

“கச்சக்கா உன்னோட பாப்பா பொம்ம பாப்பா மாதிரி இருக்குது. இதுக்கு எதுக்கு இத்தினி மை போட்டு விட்ட?”

“ஏய்! பாத்து தூக்கு கழுத்து சுளுக்கிக்கப் போவுது!”

“ஏ, யக்கா இன்னிக்குத் தான் வசம்புத் தடம் போடறாங்களா?”

“ஆமாண்டி, பெரிய மனுஷி மாதிரி கேட்டுக்கிட்டு!”

அன்னிக்குத் தான், வசம்ப தண்ணியில ஊற வெச்சு, அழகா சீச்சு, ஊசி நூலுல கோத்து, புள்ள கைக்கு கட்டி விட்டாங்க. கச்சாமாவுக்கும் தலைக்கு தண்ணி ஊத்தினாங்க. மொதமொதோ புள்ளைய துணித்தொட்டில்ல போட்டாங்க. அதுக்கு, கச்சாமாவோட தாலி கட்டுன சுங்குடி சீலைல தொட்டி கட்டி, சாங்கியத்துக்கு சித்த நேரம் போட்டொன்ன, அப்புறம், புதுத் தொட்டில போட்டாங்க.

பாத்திமாவுக்கு கச்சாமா மேல, தஸ்தீரு மேல கோவம் இருந்தாலும், புள்ளைய நல்லாத்தான் பாத்துக்கிட்டா. அவ பெத்தெடுத்த புள்ள மாதிரி அவ்ளோ பாசம். அய்சாமா, சின்ன சின்னதா அண்ணன் பேத்திக்கு கவுன் தெச்சு கொண்டாந்தா. அதுல ஜோப்பு வெச்சு தெக்க சொல்லி, சைதா ஒரே அடமா பிடிக்க, அதே மாதிரி, குட்டியா ஜோப்பு வெச்சு தெச்சு குடுத்தா.

ஆச்சு நாப்பது நாளாவிருச்சு. வழக்கம் போல, தஸ்தீரு நெனச்சா வருவான். நெனச்சா போவான். ஆனா, கச்சாமாதான் அவனப் பாக்காம, துடியா துடிப்பா. டவுனுக்கு போறவங்க எல்லார்கிட்டயும், மச்சானப் பாத்தா வரச்சொல்லுங்கன்னு, சொல்லி அனுப்புவா அந்த வெகுளிப் பொண்ணு.

நாப்பதன்னிக்கு புள்ளைக்கு பொறந்த முடி எடுத்தாங்க. பால தொட்டு நாசவன் முடியில தேய்க்க, எல்லாரும் தலைய சுத்தி சுத்தி அந்தப் பாலுல காசு போட்டாங்க. கருகருனு அடத்தியான மசிர வழிச்செடுத்தொன்ன மொட்டப்பாப்பா கொஞ்சம் கலரான மாதிரி தெரிஞ்சது.

நாப்பது முடிஞ்சொன்ன நெல கொள்ளுல கச்சாமாவுக்கு. போறேன் போறேன்னு போயே போயிட்டா, புள்ளைய தூக்கிக்கிட்டு மாமியோட்டுக்கு.

பச்சப் புள்ளக்காரினு கொஞ்சம் கூட ரோசனையே இல்ல, கூளச்சிக்கு. போட்டு பாடா படுத்தி, மாடா வேல வாங்குனா.

“ஏ! கச்சாமா இங்க வா”

“கூப்பிட்டீங்களா மாமி...”

“ஆமா, எதுக்கு என்னிய கேக்காம புள்ளைக்கு மொட்டை அடிச்சிங்க. எங்க குடும்பத்துல யாருக்கும் பொறந்த முடியே எடுக்க மாட்டம். பண்ணாட்டு”

“பொறந்த முடி நஜீஸாச்சே மாமி!”

“நஜீஸுன்னா, நான் ஆவாதுங்கறன்ல. எதுத்தா பேசற. ஆமா எல்லா நகையும் உங்கப்பன்காரன் புடுங்கி வெச்சுக்கிட்டானாம்ல”

“வந்து... நீங்க காசு மாலைய வாங்குனாப்புல எல்லாத்தையும் வாங்கிக்கிட்டானு அவரு நெனச்சுக்கிட்டாரு. அது எனக்குத் தான மாமி, என்னைய தவிர யாரிருக்கா அவருக்கு?”

“கட்டிக் கொடுத்திட்டா, எதிலயும் தலையிடக் கூடாது, தெரியாதா? வாழுற புள்ளைய அவரே கெடுக்கிறாராக்கும்? என்னைய கேக்காம மொட்ட அடிச்சாங்கல்ல, நான் யாரையும் கூப்புடாம புள்ளைக்குப் பேரு வெக்கப் போறேன் பாரு!”

கச்சாமா எதுவுமே பேசல. இப்படி பேசாம பேசாம மௌனியா நிக்கறதுனால தான், ஆட்டம் போடறா ருகையா. இதே, புதுசா கல்யாணமான ஓரகத்தி, சகீலாவை ஒன்னும் சொல்லுறது இல்ல. எதாவது சொன்னா, அவ புருஷன் அம்மாவ வைஞ்சு விட்டுறானே? ஆனா, கச்சாமா பேசிட்டாளோ, தஸ்தீரு ரெண்டு நாளைக்கு வீட்டுக்கே வராம அழிச்சாட்டியம் பண்ணி சாதிப்பான். அதுக்கு பயந்தே இவ வாய தொறக்கறது இல்ல.

சொன்ன மாதிரியே புள்ளைக்கு யாரையும் கூப்புடாம, ஆஷா மர்ஜியா பானு அப்படீனு பேரு வெச்சாங்க. விஷயம் கேள்விப்பட்டு முத்தம்மா வீட்டுல எல்லாரும் கூடி ஆளாளுக்கு பேச ஆரம்பிச்சாங்க. சாதிக்கலி கூட அங்க தான் இருந்தான். இன்னும் அவனுக்கு படிப்பு முடிய ஒரு வருஷம் இருந்துச்சு. சைதா, சைதாவோட அண்ணன் காதர், மீரான் சாயபு எல்லாரும் கூடி இருந்தாங்க.

“பாருடா! நம்மளையெல்லாம் கூப்புடாம புள்ளைக்கு பேரு வெச்சிட்டாங்களாமா...”

“ஆமாமா கேள்விப்பட்டேன். கச்சாமாவ ரொம்ப கொடுமை பண்ணுறாங்கம்மா. சரியா சோறு தண்ணி கூட கொடுக்கறதில்ல”

“என்னா பேருமா வெச்சிருக்காங்க?” சைதா.

“ஆஷா மர்ஜியா பானுனு வெச்சிருக்காங்களாமா”

“என்னது ஆஷானு பழைய பேர வெச்சிருக்காங்க. அப்புறம் எல்லாரும் ஆஷாபீ அப்படீனு கூப்பிடுவாங்களே?”

சைதா, கையில் இருந்த ஏர்ப்பின்ன எடுத்து, செவுத்துல, ‘ஆஷா மர்ஜியா பானு’ அப்படீனு எழுதி வெக்கறா!

“அம்மா, வந்து கொடுமை தாங்காம, புள்ள எளச்சி ஈயுனு போயிருச்சு! புருஷங்காரனுக்கும் பொறுப்பில்ல. என்னதாம்மா செய்யுறது?”

“லைனூட்டுல, கடைசி ஊட்ட காலி பண்ணி, அவங்கள தனிக் குடித்தனம் வெச்சிருடா அங்க. அப்பத்தான் பொறுப்பு வரும் அவ புருஷனுக்கு!”

“சேரிமா, அது தான் நல்லது. நானும் அப்படித்தான் நெனச்சேன்! லைனுக்குள்ள இருந்திட்டா, எங்க கண்ணு பார்வையிலேயே இருப்பாங்க. இப்பவே குடியிருக்கவங்கள காலி பண்ண சொல்லறேன்!”

சொன்னபடியே காலி பண்ணிட்டார் சாயபு. சம்பந்தி வீட்டுக்குப் போயி, விஷயத்தை பக்குவமா எடுத்துச் சொல்லி, சம்மதிக்க வெச்சிட்டாரு. அடுத்தடுத்து இருக்கற ரெண்டு பசங்களுக்கு கல்யாணம் பண்ண வீடு பத்தாதுன்னு அவங்களும் சரின்னுட்டாங்க.

ஒரு நல்ல நாளா பார்த்து பாலக் காய்ச்சி, குடி வந்திட்டாங்க, கச்சாமாவும் தஸ்தீரும். இனியாவது அவளுக்கு விடியுமா?

(வளரும்)

-சுமஜ்லா.

4 comments:

Jaleela Kamal said...

//எவ்வளவு காலங்கள் மாறிவிட்டாலும் இந்த நாகரீக உலகில் இன்னும் மக்கள் என்னை கூப்பிடாம மொட்டை போட்டாங்க, என்னை கேட்காமல் பெயரை வைத்து விட்டார்கள் என்று சிலர் சொல்லி கொண்டு தான் இருக்கிறார்கள்.//

கச்சாமாவிற்கு இனியாவது விடிவு வருமா?


எல்லா பெண்களுக்கும் உண்டான எதிர்பார்ப்பு தான் கச்சாமாவிற்கு, இதில் சிலர் தான் புரிந்து மனைவியிடம் ஆறுதலாக பேசுகிறார்கள்.

முனைவர் இரா.குணசீலன் said...

நண்பரே நலமா?
தங்கள் வலைப்பதிவு டொமைன் பற்றி எழுதிய இடுகை வழியே எனது பதிவுக்கு டொமைன் முகவரியை உருவாக்கிக் கொண்டேன்...
மிக்க மகிழ்ச்சி.......
எனினும் சிறு சிக்கல் இருப்பது போல் தோன்றுகிறது.....
டொமைன் முகவரி வழியே வலைப்பக்கத்தைத் திறக்கும் போது ஓட்டளிப்புப் பட்டைகள் தவறான ஓட்டு எண்ணிக்கைகளைக் காட்டுகிறதே......
இச்சிக்கலைத் தீர்க்க வழி உண்டா?

SUMAZLA/சுமஜ்லா said...

முனைவரே, இது பற்றி எனக்குத் தெரியவில்லை. எனினும் நெட்டில் தேடிப்பார்க்கிறேன். ஏதேனும் தீர்வு இருக்கிறதா என்று!

நான் சென்று பார்த்தேன், சரியான ஓட்டு தான் கண்பித்தது. பிறகு, ‘ஈமத்தாழி’ என்ற இடுகைத் தலைப்பை சுட்டியதும், தவறாகக் காண்பிக்கிறது.

இப்போது, இரு பெயர்கள் இருக்கிறதல்லவா? பழைய பெயர், தாங்கள் தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்தில் பதிந்திருப்பீர்கள். அதனால், புது தளம் மூலம் சென்று ஓட்டளித்தால், ஒரு வேளை சரிவராதோ என்னமோ, சரி பாருங்கள்.

asiya omar said...

கச்சாமாவை தனிக்குடித்தனம் அனுப்ப இவ்வளவு சீக்கிரம் எப்படி ருகையா சம்மதிச்சா?என்ன திட்டம் வைத்து இருக்காளோ?தஸ்தீரின் சுய ரூபம் இனி தான் தெரியும் .முதல் கோணல் தான் முற்றும் கோணல் ஆச்சே.