Tuesday, July 14, 2009

சாயபு வீட்டு சரித்திரம் - 14

(உலவும் மனிதர்களின் உண்மைக்கதை)


“உள்ள இருப்பது வெளிய தெரியுமா – அவ
உள்ளம் என்னானு உலகத்துக்கு புரியுமா?
எள்ளிநகையாடும் சொந்தமிருந்தாலும்,
கள்ளமில்லையே அவ கடிமனசுக்குள்ளாற… ”

மனுஷங்க மேல உள்ள பிரியத்துல, வாரவங்க போறவங்ககிட்ட உயிரா பழகுற கச்சாமானால, தன் புருஷனை எக்காரணத்துக்கும் நொண்டு நொடி சொல்ல முடியல. மச்சான் மச்சானு எந்நேரமும் அவனை சுத்தி சுத்தி வர்ரதுனால தான் தஸ்தீரு நல்லா தொக்கு பார்த்துக்கிட்டான். இது, பாத்திமாவுக்கும் மீரான் சாயபுக்கும் புரியுது. இவளுக்கு புரியலையே. இல்ல, புரிஞ்சாலும் புரியவே வேணாம்னு அழிச்சாட்டியமா தம்மனசத் தட்டி உக்கார வெச்சிக்கிட்டா.

இவ்ளோ சட்டுனு வயித்துல ரெண்டாம் புள்ள ஆனத, அவ்வளவா ரசிக்கல அம்மானு நல்லாவே புரிஞ்சது கச்சாமாவுக்கு. போனா சரியா முகங்குடுக்காம பேசறது, என்ன கஷ்டப்பட்டாலும் கண்டுக்காம இருக்கறதுன்னு அவங்க போக்கே இப்ப மாறித்தான போச்சு. பேசாம புருஷன உட்டுட்டு இங்கயே வந்துருன்னு அவங்க சொல்றதத்தான் கச்சாமானால எக்காரணத்துக்கும் ஏத்துக்க முடியல.

அப்போ, ஏழாம் மாசம் நடந்திட்டு இருந்திச்சி. மூத்தவ மர்ஜியா எப்பவுமே நன்னீமா செல்லம். எப்பவும் அங்கயே தான் விளையாட்டும் வேடிக்கையுமா இருப்பா. வழக்கமா ராவுல நேரங்கழிச்சு வர்ர மச்சான், நேரத்தோட வந்த அதிசயத்துல அவ மலைச்சுப் போயி நின்னப்பத்தான், மச்சான் சோர்ந்து படுக்கறதப் பார்த்தா.

“அட, இப்படி அனலாட்டம் கொதிக்குதே, உடம்பு!”

ஜாயிருகிட்ட சொல்லி, வண்டிய கூட்டிட்டு வந்து, ஆஸ்பத்திரிக்கு போனாங்க. மஞ்சக்காமாலை முத்திப் போச்சு. கடுமையா பத்தியம் இருக்கணும்னு சொல்லிட்டாரு டாக்டரு!

உப்பில்லாத கஞ்சி, உறைப்பில்லாத தொவையலுன்னு பத்து நாளும், தஸ்தகீருக்கு கஞ்சியில கால வாங்குனாப்புல ஆயிருச்சு. மகராசி, பக்கத்துல இருந்து அப்படி பணிவிட செஞ்சா, மச்சானுக்கு.

“கச்சாமா, கொஞ்சமா ஊறுகா கொடு”

“ஊறுகாயெல்லாம் சேராதுங்க. சொன்னா என்ன இது கைப்புள்ளயாட்டம் அடமா நிக்கறிங்க?”

உப்புப்போடாம, கொஞ்சம் மச்சானுக்காக வடகம் பிழிஞ்சு காயவெச்சு வெச்சிருந்தா. அதப்பொரிச்சுக் கொடுத்தா. உப்புப் போடாத கஞ்சியில், ரெண்டு வெங்காயத்த பொடிசா நறுக்கிப் போட்டு அத கொடுத்தா. உப்புப் போடாத மாவுல தோசை சுட்டு, அதுல பாலும் சர்க்கரையும் போட்டு பிசைஞ்சு, அதக் கொடுத்தா.

இத்தினி செஞ்ச பத்தினி, தான் என்ன சாப்பிட்டானு தஸ்தீருக்குத் தெரியாது. மசக்கையில நாக்கு புளிப்பு கேக்கும், உப்பும் உறைப்பும் தூக்கலா கேக்கும். ஆனா, கச்சாமா, மச்சான் என்ன சாப்பிடறாரோ, அதே சாப்பாடு, அதே உப்பில்லா கஞ்சியும், உப்பில்லா வடகமும் அமிர்தமா நெனச்சிட்டு சாப்பிட்டா. அட, இவளுக்கு என்ன, கொஞ்சம் உப்பு போட்டு சாப்பிடலாமே?! ம்…ஹூம்… மச்சான் சாப்பிடாதது, நாமும் சாப்பிடக்கூடாதுன்னு ஒரு வைராக்கியம். கொண்டவன் மேல கண்மூடித்தனமான காதல்.

எது நிமிர்ந்தாலும் நாய் வாலு நிமிருமா? தஸ்தீரோட பிறவிக்கொணம் எங்க போயிரும். அலட்சியமும் அகம்பாவமும், அவ்ளோ சட்னு போயிருமா?! ஆனா, நீ எப்படி வேணா இரு. இது என் குணம். நான் இப்படித்தான் இருப்பேன்னு சொல்லாம சொன்னா கச்சாமா. இவளோட குணத்தால ஜல்தியாவே தேறிப்போனான் தஸ்தீரு. லீவெல்லாம் முடிஞ்சு, மறுக்க ஆப்பீஸ் போக ஆரம்பிச்சான்.

கச்சாமாவுக்கு காத்தால புடுச்சே வலியா இருந்திச்சு. யாருகிட்ட போய் சொல்லுறதுன்னு தயக்கம். இது ரெண்டாம் புள்ள பேறு. சாயந்தரம் ஆனதும் சடசடனு வலி புடிக்க, அம்மா வீட்டுப் படி ஏறினா. நிலைமை பாத்திமாவுக்குப் புரிய, அவசர அவசரமா முத்தம்மாவுக்கு ஆள் அனுப்பி விட்டா. அதுக்குள்ள, வீட்டிலேயே புள்ள பொறந்திருச்சு.

சரியா முத்தம்மா உள்ளாற வர,
“புள்ள எங்க?”

“தோ, பாருங்க!”

ஒரு ஓரமா துணியில சுருட்டி இருந்த புள்ளயத் தூக்கிப் பார்த்தா.

“ப்ச், இதுவும் பொட்டையா?”

புள்ளைய சுத்தம் பண்ணி, பக்கத்தால போட்டதும், ஆயாசமா பார்த்தா கச்சாமா. மூத்தவ, நல்ல களையா இருப்பா, அம்மாவாட்டமே, இது உருண்டை முகமா ஜாடை வேற மாதிரி இருந்தது.

புள்ள பொறந்ததே, தஸ்தீருக்குத் தெரியாது. அவன் வழக்கம் போல ரெண்டு நாளு வீட்டுக்கே வரல. மூணாம் நாளு வந்து தான் தெரியும், புள்ள பொறந்திருக்கற சேதி. ஆபீஸுக்கு தனக்கு ஆள் அனுப்பி சொல்லலைனு அவனுக்கு மாமனாரு மேல கோவம். தொரைக்கு வீடு வந்து சேரத்தெரியாதா, ஆள் அனுப்பணுமாக்கும்னு, மாமனாருக்கு நெனப்பு. ரெண்டுக்கும் நடுவில கச்சாமா தான் பாவம்.

நாப்பதாம்நாளு புள்ளைக்கு ஆபிதா பர்வீன்னு பேர் வெச்சாங்க. கச்சாமாவுக்கு இந்த புள்ள மேல தான் கொள்ள பிரியம். மூத்தவ பண்ணுற சேட்டைய அவ்வளவா ரசிக்க மாட்டா. ஆபிதாங்கற பேரை சுருக்கி, கச்சாமா ‘ஆப்பி’ ‘ஆப்பி’ நு கூப்பிட, அந்தப்பேரே நெலச்சுப் போச்சு.

“ந்தா, ரெண்டு புள்ள, அதுவும் பொட்டைங்க. வளர்ந்து நின்னா ரெட்டப் புள்ளையாட்டம், அடுத்தடுத்து சமஞ்சு நிக்கும்க. இனியாவது வவுத்துல வாங்கிக்காம உஷாரா இருக்க வழியப்பாரும்மா” அக்கரையோடவும் பாசத்தோடவும் சொல்லிட்டுப் போன தாதிமா முத்தம்மாவோட பேச்சு அவளுக்கு புரியாம இல்ல. ஆனா, வழியப்பாருன்னு சொன்னது தான் என்ன வழினு அவளுக்கு புரியவே இல்ல.

எந்நேரமும் ஆப்பிக்கண்ணு ஆப்பிமானு புள்ளைய வெச்சிக்கிட்டு கொஞ்சிக்கிட்டே, அவ காலமும் போச்சு. அது என்னமோ, மூத்தவ மேல மனசு ஒட்டவே இல்லை. அது எப்பவும், நன்னி வீட்டுல தான். அதக்கண்டாலே, மர்ஜி, மர்ஜி சனியன்னு கச்சாமா எரிஞ்சி எரிஞ்சு விழுவா. ஆப்பிய மட்டும் ஒரு சொல்லு சொல்ல மாட்டா. ரெண்டும் ரெட்டப்புள்ளையாட்டம் வளர்ந்தாலும், எவ்வளவு வித்தியாசம் தெரியுமா?

சைதா பெரிசான சேதி தெரிஞ்சு, விசேஷத்துக்கு புறப்பட்டாங்க, கச்சாமா ஆப்பியத்தூக்கிக்கிட்டு, பாத்திமா மர்ஜிய தூக்கிக்கிட்டு.

ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டைங்கற மாதிரி, கச்சாமா, அப்பிக்கு எப்பவுமே சீவி சிங்காரிச்சு, புருவத்துக்கு மைப்போட்டு, கீக்கண்ணுக்கும் மை போட்டு, கண்ணத்துல ஒரு பொட்டு, தாவக்கட்டைல ஒரு பொட்டும் வெச்சு விடுவா. அதுல பரம சந்தோஷம் ஆப்பிக்கு.

மர்ஜி, ராஜா வீட்டுப் பிள்ளை மாதிரி, மீரான் நன்னா வாங்கித்தந்த லேஸு வெச்ச நைலக்ஸ் கவுன் போட்டுக்கிட்டு, ஒத்தச்சிண்டுல தங்க நகாசுக் கொப்பி குத்திக்கிட்டு, காதுல கழுத்துல தங்க நகைங்களும் காலுல வெள்ளிக்கொலுசும், புத்தம் புதுசா பளபளனு செருப்பும் போட்டுக்கிட்டு வீர நடை போட்டுச்சு. ஆப்பியோ, கச்சாமாவோட இல்லாமைய சொல்லாம சொல்லற மாதிரி, வாயில் கவுனும், தலையில பட்டு ரோசாவும், கழுத்துல பாசிமணியுமா ரொம்ப எளிமையா!!!

பக்கிரி வீட்டுப் பிள்ளையாட்டம் ஒன்னு, பங்களா வீட்டுப் பிள்ளையாட்டம் ஒன்னு!!!

(வளரும்)

-சுமஜ்லா.

5 comments:

asiya omar. said...

ஆப்பியை எனக்கும் பிடிச்சிருக்கு கச்சாமா,(கச்சாமாவின் தோழியாய் இருக்க முடிவு பண்ணிட்டேன்,அவளிடம் இனி பேசுவேன்.)

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

கதை சூப்பர்

கவிக்கிழவன் said...

கதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் இலங்கையில் இருந்து yathavan

SUMAZLA/சுமஜ்லா said...

தேன்க்யூ அக்கா, ஸ்டார்ஜன் & யாதவன்.

யாதவன், உங்க சைட்ல வைரஸ் இருக்கும் போல. உள்ளயே போக முடியல. அதான் நான் கமெண்ட்ஸ் எதுவும் கொடுக்க முடியல.

mohd. said...

"பக்கிரி வீட்டுப் பிள்ளையாட்டம் ஒன்னு;
பங்களா வீட்டுப் பிள்ளையாட்டம் ஒன்னு"
-கவித்துவமான உவமானம்.
-நிஜாமுத்தீன்.