Wednesday, July 22, 2009

சாயபு வீட்டு சரித்திரம் - 15

(உலவும் மனிதர்களின் உண்மை கதை)


“வட்டம் போட்டு எல்லாரும், உள்ள போயி நின்னாக்கா
கட்டம் அழிஞ்சு போகாதோ, காதல் மனமும் நோகாதோ?
எட்டி நின்னு ஏமாத்தத்த, கொடுத்து செல்ல, ரொம்பசூடா,
கிட்ட வந்தா முட்டிப் போக, கணவன் என்ன காளைமாடா??”


சைதா வீட்டுல, ஒரே கேலி கிண்டலுமா எல்லாப் பொண்ணுங்களும் கும்மாளம் போட்டுக்கிட்டு இருந்தாங்க. மர்ஜியும் ஆப்பியும் ஒரு நிமிஷம் கூட நிக்காம ஓடிக்கிட்டே இருந்துச்சுங்க குஷியில. சைதாவுக்கு தலைக்கு எண்ணெய் தொட்டு வெச்சு தண்ணி ஊத்தி கொண்டாந்து உட்கார வெச்சாங்க.

“சைதா, அஹமது தான உன்னோட ஆளு?!”

“போ கச்சக்கா, எல்லாரும் பார்க்கிறாங்க, இதல்லாம் சொல்லாத”

“அட, வெக்கத்தப்பாரு!”

அப்பத்தான் அங்க சாதிக்கலி வந்தான். கச்சாமாவப் பார்த்ததும் நின்னுட்டான்.

“கச்சாமா, நல்லாயிருக்கியா? மர்ஜியா உன்னாட்டமே இருக்கா!”

“நீங்களுந்தான் மச்சான் பெரியாளாயிட்டீங்க! கவர்ன்மெண்ட் வேலை கிடைச்சிருச்சாமா? எங்க ஊட்டுப் பக்கமே வர்ரதில்லை, வாங்களேன் ஒரு நாளைக்கு!”

கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்திட்டு, எல்லா சடங்கும் முடிஞ்சு ராத்திரி தான் வீட்டுக்கு வந்தா கச்சாமா.

மொதநாளு காத்தால போன புருஷன் இதுவரைக்கும் வீடு வந்து சேரலனு அவளுக்கு ஒரே கவலையா இருந்துது. வீட்டுல சாமானஞ்சட்டு கொஞ்சூண்டு தான் இருந்தது. கையில காசு வேற இல்ல.

மும்மக்கா வீட்டுக்குப் போனா.

“மும்மக்கா, நா இல்லாதப்ப, மச்சான் வந்தாரா?”

“இல்லையே கச்சாமா!”

“ஹூம்…இன்னிக்கு வருவாரா மாட்டாரான்னு தெரியல. இரு நா ஒத்தையா ரெட்டையா போட்டு பார்க்கிறேன்!”

வெளக்குமாத்துல, பின்பக்க குச்சிங்கல்ல, கொஞ்சம் குச்சிங்கள கையில பிடிச்சுக்கிட்டா.

“ஒத்தை வந்தா மச்சான் வரும். ரெட்டை வந்தா வராது…” சொல்லிக்கிட்டே, ஒன்னு ரெண்டு எண்ண ஆரம்பிச்சா.

“ஐ! முப்பத்தொரு குச்சிங்க. ஒத்தை தான், இன்னிக்கு கண்டிப்பா மச்சான் வருவாரு!”

ஆச்சு, மணி ராத்திரி பத்தாச்சு, பதினொன்னாச்சு… ஆளு வரல. கச்சாமா மனசுல ஏமாத்தந்தான் வந்திச்சு.

அடுத்த நாளு சாதிக்கலி வந்தான் கச்சாமாவப் பார்த்திட்டுப் போக. பிள்ளைங்களுக்கு ஒரு பொட்டலம் பிஸ்கோத்து வாங்கியாந்தான்.

“வாங்க, வாங்க! வராதவங்க வந்திருக்கீங்க…உட்காருங்க”

சாதிக்கலிக்கு கச்சாமாவோட நிலமை ஓரளவுக்குத் தெரியும். ஆப்பிய தூக்கி மடியில உட்கார்த்தி வெச்சுக்கிட்டான்.

“கலர் குடிக்கிறீங்களா?”

“எதா இருந்தாலும் சரி கச்சாமா..”

ஆனா, உண்மையில அவ கைய்யில தம்பிடி காசு இல்லை.

“ஒரு எட்டணா இருந்தா கொடுங்களேன்”

“எதுக்கு கேட்கற? நொடிக்கு நூறு மச்சான் போடுவ. இப்ப என்ன புது மனுஷண்ட்ட பேசற மாதிரி பேசற?”

“மச்சான்னு கூப்பிடணும் அவ்வளவு தானே?! வாங்க மச்சான்; போங்க மச்சான்; குடுங்க மச்சான்”

அவனிடமே காசு வாங்கி, ஆளனுப்பி, அவனுக்கே கலர் வாங்கி வெச்சா, அந்த வெகுளிப் பொண்ணு!

“மச்சான் எனக்கு ஒரு உதவி பண்ணனுமே”

“சொல்லு கச்சாமா”

“இல்ல, எங்க மச்சான் ரெண்டு நாளா வீட்டுக்கு வரல. நா அவரோட ஆபிஸ் போயி பார்த்து வர சொல்லணும். கொஞ்சம், வண்டிக்கார காதர் பாட்சாவ வரச் சொல்லுறீங்களா?”

“போறப்ப சொல்லிட்டுப் போறேன் கச்சாமா…”

வண்டி கட்டிக்கிட்டு, ஆபீஸுக்கு போறது இது மொதத் தடவ இல்ல. ஒவ்வொரு முறையும், போயி, தாங்கி தலப்புடிச்சா வீட்டுக்கு வருவான் தஸ்தீர். இல்லாட்டி இல்ல. கச்சாமா தாங்க தாங்க எச்சுல போய்கிட்டே இருந்தான். இதனால தான் மீரான் சாயபுக்கும் பாத்திமாவுக்கும் கச்சாமா மேல வெறுப்பு.

இங்க வயக்காட்டு அரிசி மூட்டை மூட்டையா இருக்கறப்ப, அங்க கச்சாமா பசியும் பட்டினியுமா… இங்க செல்வம் செல்வாக்கா இருக்கறப்ப, மக வீட்டுல வறுமையின் நிழல்!

வண்டிகட்டிக்கிட்டு போயி, வெத்தலபாக்கு வெக்காத குறையா அழைச்சதுனால, அன்னிக்கு வந்தான் தஸ்தீரு! தஸ்தீரு வந்திட்டா, கச்சாமா முகம் அப்படியே பிரகாசமா ஆயிரும். மூணு நாளா வரலையேங்கற கோபம் கொஞ்சம் கூட இருக்காது. சூடு சுரணை இல்லாதவ மாதிரி தான் இருப்பா. எதாவது சொன்னா மச்சான் மனசு கஷ்டப்படுமேங்கற ஆதங்கம். இந்த மாதிரி ஒரு பொம்பளைய எங்கயுமே பார்க்க முடியாது.

காத்தால, புருஷனுக்கு சாப்பாடு செஞ்சி ஆபீஸுக்கு அனுப்பிச்சிட்டு, நாலுவாய் சோத்தை அள்ளி வாயில போட்டவ, எந்திரிச்சு ஓடினா பொடக்கானிக்கு. அட, சே சனியன், மறுபடியும் வந்திருச்சே. என்ன செய்யறது? வவுத்துக்கே சோறில்ல, கேட்காம வர்ரது இது ஒன்னு தான். யார்ட்ட சொல்லுறது? எப்படி சொல்லுறது?

நேரா முத்தம்மா வீட்டுக்குப் போனா. தாதி மூஞ்சிய நிமிர்ந்து பார்க்கவும் கூச்சம். முத்தம்மா புள்ள பெக்குறது பத்தி பழங்கதை பேசி கேட்டிருக்கா.

‘ம்…எங்களுக்கெல்லாம் அந்தக்காலத்துல, வவுத்துல ஆவுறதே தெரியாது. புள்ளைக்கு பாலு கொடுத்திட்டு இருக்கவரைக்கும், தொழுகையும் விட்டுப் போகாது, அஞ்சாம் மாசம் வாழக்காயாட்டம் நெண்டுனாத்தான் புள்ளைனே கண்டுக்குவோம்’ இப்படி சொல்லும் முத்தம்மா, தனக்கும் ஒரு விதத்துல ஆறுதல் சொல்லி, ஏதாவது வழி சொல்லுவானு எதிர்பார்ப்பு கச்சாமாவுக்கு!

”தாதிமா, சனியன் ஆயி தொலைச்சிருச்சு. என்ன செய்யுறதுன்னு தெரியல. அதான் உங்கூட்டி மரத்துல ஒரு பப்பாளி பிச்சிட்டுப் போகலாம்னு வந்தேன்”

“ஏ, கச்சாமா, ஓரடி ஒந்தி படுக்க வேண்டியது தான், இப்ப வந்து இப்படி பொலம்பிக்கிட்டு நின்னாக்கா. போ, போயி பப்பாளி பிச்சுக்க. நாளைக்கு வா, நா நாட்டு வைத்தியர்கிட்ட சூரணம் வாங்கி வெக்கறேன்.”

புள்ளைய கலைச்சுப் போடணும்னு முழு பப்பாளிய ஒருத்தியா திங்க முடியாம தின்னா. அடுத்த நா முத்தம்மா தந்த சூரணத்தையும் சாப்பிட்டா. எப்படியாவது, அம்மா அப்பா காதுக்கு விசயம் போகிறதுக்குள்ள இத அழிச்சுப் போடணும்னு பார்த்தா.

(வளரும்)

3 comments:

நிஜாமுத்தீன். said...

ஆப்பி, மர்ஜியா,
அடுத்த பிள்ளைக்கி
என்ன பேருங்க?

நிஜாமுத்தீன். said...

ஆப்பி, மர்ஜியா,
அடுத்த பிள்ளைக்கி
என்ன பேருங்க?

SUMAZLA/சுமஜ்லா said...

சொல்றேன், ஆனா இது ரொம்ப சோகக்கதைங்க!