Tuesday, July 28, 2009

தாஜ்மஹால் ஓவிய காதல்

எங்க லைஃப்ல எல்லாமே திடீர் திடீர்னு நடக்கற மாதிரி, 2007 ஜூன் மாதம் போன நார்த் டூரும் திடீர்னு தான் கிளம்பினோம்.


தாஜ்மஹால் பார்க்க வேண்டும் என்பது எங்கள் இருவரின் நீண்ட நாள் கனவு. மாமனார் ஏற்கனவே சின்ன வயதில் போய் வந்திருந்ததால், அடிக்கடி அதைப் பற்றி அளந்து விடுவார். ஆனால், அதற்கான சந்தர்ப்பமே வரவில்லை.


ஒரு நாள், நடுராத்திரியில், நானும் மச்சானும் தூக்கம் வராமல், நெட்டில் மேய்ந்து கொண்டிருந்தோம். அப்போ திடீரென்று தாஜ்மஹால் போகலாமா என்று கேட்டார். நான் விளையாட்டுக்குத் தான் சொல்கிறார் என்று நினைத்தேன். ஆனா, நிஜமாகவே போகலாம், டிரைன் அவைலபிலிடி இருக்கா பார் என்றார். உடனே பார்த்தேன்.


ஓரிரு நாளில் புறப்படலாம் என்றார். ம்...ஹூம்... எங்கள் அவசரத்துக்கு எந்த ரயிலிலும் இடம் இல்லை. ஜூன் பத்தாம் தேதி, சென்னையிலிருந்து கிளம்பும் கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலில் மட்டும் இடம் இருந்தது. ஓக்கே சென்னை போய் போகலாம் என்றார் என்னவர். இன்னும் மூன்று நாட்கள் தான் இருந்தன.


காலையில் மாமனாரிடம், தாஜ் மஹால் போறோம் என்றவுடன், ‘என்ன நேற்று ராத்திரி வரை எந்த பேச்சும் இல்லை, இப்ப திடீர்னு சொல்றீங்க’ என்றார்.


பிள்ளைகளை எங்க அம்மாப்பாவிடம் விட்டு விட்டு செல்வது என்று திட்டம். எப்பவுமே நாங்க டூர் போனா, ஒரு முறை பிள்ளைகளோடு, மறு முறை தனியாக என்று ஒரு கொள்கை வைத்திருக்கிறோம். அதுவும் இது நீண்ட பிரயாணம் வேறு!


இடையில் நான் சிம்லா போகலாம் என்று சொல்ல, மாமனார் அஜ்மீர் போய் வாருங்கள் என்று சொல்ல, சின்னதாக ஒரு ப்ளான் போட்டுக் கொண்டேன்.


எங்கப்பாவுக்கு இஷ்டமே இல்லை, அவ்வளவு தூரம் இருவரும் தனியாகப் போவதற்கு! கூட யாராவது சேர்த்துக் கொள்ளுங்கள் என்றார். நாங்களோ, தெரிந்த முகம் யாருமில்லாத தனிமையை நாடித்தான் போக ஆசைப்பட்டோம். ஆக மொத்தம், இருவரும் தனியாக கிளம்புவது என்று எடுத்த முடிவில் உறுதியாக இருந்தோம். ஸ்கூலில் படித்த ஹிந்தியை நம்பித்தான் நான் துணிந்து இறங்கினேன்.


டிக்கட் புக் பண்ணியாச்சு. 10 நாள் கழித்து, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்ஸில் ரிடர்ன் டிக்கட்டும் புக் பண்ணியாச்சு. ஆனா அது வெயிட்டிங் லிஸ்ட் தான். ஆக, மொத்தம் 10 நாள் டூர் ப்ளான் செய்தோம்.


அதன்படி, ஜூன் 10, 2007 காலை வெஸ்ட் கோஸ்ட்டில் கிளம்பி, மதியம் 3.30க்கு சென்னை சென்றடைந்தோம். இரவு 7.15க்கு கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்ப்ரஸ்ஸில் ஏறினோம். ஆக்ராவில் இறங்கி விடுவதாக ப்ளான்.


நாங்கள் பயணம் செய்த கம்பார்ட்மெண்ட்டில், திபத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் ஒரு சிறுமியும் வந்தார்கள். அவர்கள் பெயர், சோனம், டோல்மா டென்சிங். இவர்கள் இருவரிடமும் அரைகுறை ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் பேசிக் கொண்டிருந்தேன். சில முக்கியமான வார்த்தைகளுக்கு ஹிந்தியில் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.


இன்னொரு ஆள் பெயர் ராஜூ. இவர் ஆக்ராவின் அருகில் ஒரு சிற்றூரை சேர்ந்தவர். சென்னையில் வேலை பார்க்கிறார். உள்நாட்டில் இருந்தும் வருடம் ஒரு முறை தான் சொந்த ஊருக்கு செல்வதாக கூறினார். இரண்டு நாள் பிரயாணத்துக்குத் தேவையான ரொட்டி, பார்சலாக கட்டி எடுத்து வந்திருந்தார்.


அவர் என் கணவரைப் பார்த்து, “நீங்க ரஜினிகாந்த் போலவே இருக்கிறீர்கள்” என்றார். கிண்டல் தான் பண்ணுகிறார் என்று நினைத்தேன். ஆனால் அவரோ, “ஆக்ரா போய், இவர் தான் ரஜினிகாந்த் என்று சொல்லுங்கள், எல்லாரும் நம்பி விடுவார்கள்” என்றார். நமக்கு வெளிநாட்டுக்காரர்களைப் பார்த்தால் ஒன்று போலவே தெரியுமே, அது போல இவருக்கு தெரிந்திருக்க வேண்டும்.


அடுத்த நாள் பகல் முழுக்க பிரயாணம். விஜயவாடா, போபால் எல்லாம் தாண்டி, பல மொழி பேசும் மக்களைக் கடந்து போய்க் கொண்டிருந்தோம். நடு இரவில், 2.30 மணிக்கு ஆக்ரா சென்றடையும் என்பதால், தூக்கமே வரவில்லை. ஆனால், 4 மணிக்குத்தான் ஆக்ரா கண்டோன்மெண்ட் வந்து சேர்ந்தது.


சிறிது நேரம், வெயிட்டிங் ரூமில் ரெஸ்ட் எடுத்துக் கொண்டோம். இனி, மாலை 5.30க்கு குவாலியர் எக்ஸ்பிரஸ் ரயிலில், ஜெய்ப்பூர் செல்வதாக முடிவு செய்து கொண்டு, லக்கேஜை அங்கேயே, க்ளோக் ரூமில் ஒப்படைத்து விட்டு, வெளியே வந்தோம்.


ஆக்ராவில் தாஜ்மஹால் தவிர, ஆக்ரா கோட்டை மற்றும், பதேபூர் சிக்ரி ஆகியவை பார்க்க வேண்டிய இடங்கள். நாங்கள் ஒரு கால் டேக்ஸி பேசிக்கொண்டோம். அங்கிருந்து 7 கி.மீ தூரத்தில் இருக்கும் தாஜ்மஹால், 9 கி.மீ தொலைவில் இருக்கும் ஆக்ரா ஃபோர்ட், 40 கி.மீ தொலைவில் இருக்கும் ஃபதேபூர் சிக்ரி ஆகியவை பார்க்க பேரம் பேசி ரூ.720க்கு முடித்தோம். மாலை 4.30 மணிக்கு திரும்ப ரயில்வே ஸ்டேஷன் கொண்டு வந்து விட வேண்டும் என்று பேச்சு.


முதலில் தாஜ்மஹால் போனோம். நாம் நினைப்பது போல், தாஜ்மஹால் என்பது தனிக் கட்டிடம் அல்ல. சுற்றிலும் கோட்டை போன்ற கட்டிடங்களுக்கு நடுவே பெரிய மைதானம். மைதானத்துக்கு நடுவே தாஜ் மஹால் நிற்கிறது, கன கம்பீரமாக.


ஒரு எண்ட்ரன்ஸ் அருகே இறங்கி நடக்க வேண்டும். நடக்க முடியாதவர்களுக்காக, ஜட்கா வண்டியும் உள்ளே இருக்கிறது; நாங்க, நடந்து செல்ல முடிவு செய்தோம். சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் போதே, தாஜ் மஹாலின் டூம் தெரிகிறது. அதைப் பார்த்தவுடன் புல்லரிக்கிறது நமக்கு, உலக அதிசயத்தைக் காணப்போகும் ஆசையில்...


ஆனால், நான் நினைத்தது வேறு, இருந்தது வேறு. நான் கிரானைட் போன்ற வழுவழுப்புடன் கூடிய ஷைனிங் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், இது ஷைனிங் இல்லாத மார்பிள். தாஜ்மஹாலைக் காணப் போகும் ஆவலில் வேகமாக நடந்தோம்.


வழியில் எல்லாரையும் செக் பண்ணி, சாமான்கள் இருந்தால், வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். தண்ணீர் பாட்டிலுக்கு மட்டுமே அனுமதி. கேமரா எடுத்துச் செல்லலாம். அத்தோடு, இந்தியர்களுக்கு தலைக்கு 20 ருபாய் கட்டணம். வெளிநாட்டவருக்கு டாலர்களில். வெள்ளிக் கிழமையென்றால், அங்கு தொழுகை நடப்பதால், உள்ளே செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லையாம். நல்ல வேளை நாங்கள் சென்றது, செவ்வாய் கிழமை.


உள்ளே போனால் ஒரு மணிமண்டபம். இதே போன்ற மண்டபம் மூன்று பக்கமும் இருக்கிறது; நாலாவது பக்கம் யமுனை ஆறு! மணிமண்டபத்தில், தாஜ்மஹாலின் பல வித போட்டோக்கள் பார்க்கலாம். அதையும் தாண்டி உள்ளே போனால், இமைக்க மறந்த விழிகளை ஒரு முறை மூடித் திறக்கிறேன்.


இது கனவா? இல்லை நனவா? இது ஒரிஜினலா, இல்லை கிரீட்டிங் கார்டில் பார்ப்பதா? ஆம் அதே மாதிரி தான் இருக்கிறது. காற்றில் வரைந்த ஓவியம் போல்...காலத்தால் அழியாத காவியமாய்...


அங்கிருந்து பார்த்தால் மட்டுமே முழு வியூவும் கேமராவில் சிக்கும் என்பதால், அந்த அற்புதத்தை என் கேமராவில் சிறை பிடித்தேன். இதோ, நீங்களும் ரசியுங்கள்.

அந்நாள் காதலர்கள், இந்நாள் காதலர்களுக்காகக் கட்டிவைத்த எந்நாளும் அழியாத பொக்கிஷம் இது. பார்த்தால் சிறிதாகத் தெரிந்தாலும், மிக பிரம்மண்டமானது இது. இது சச்சதுர வடிவத்தில், நான்கு புறமும் ஒருபோல் தோன்றும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நாற்புறமும் அமைந்திருக்கும் தூண்களே, நாலைந்து பேர் சேர்ந்தால் தான் கட்டிப் பிடிக்க முடியும் என்றால், தாஜ் மஹால் எவ்வளவு பெரிதாக இருக்கும்?


தாஜ்மஹால், ஒரு பெரிய பளிங்கு மேடையின் மேல் அமைக்கப்பட்டுள்ளது. ஆசையுடன், நடந்து அம்மேடையை நோக்கிச் சென்றோம். எங்கெங்கு பார்த்தாலும் ஃபாரீனர்ஸ் தான். நம்மவர்களை விட அவர்கள், உலக அதிசய பேரெழில் பெற்ற தாஜ்மஹாலைக் காண்பதில் அதிக ஆர்வமாக இருப்பது புரிந்தது.


நம் செருப்புகளைக் கழட்டி, ஒப்படைத்து விட்டு, மேடையில் ஏறினோம். அப்பப்பா, என்ன ஒரு கண்ணைக் கவரும் வேலைப்பாடு! எவ்வளவு நுணுக்கம், அழகு! அதுவும் என்னைப் போல ரசனைமிகக் கொண்டவருக்கு, அதையெல்லாம் மனதில் நிரப்பவே நேரம் போதாது. பளிங்கை செதுக்கி செதுக்கி செய்த கலையழகை, கண்களால் பருகியபடியே உள்ளே போனோம்.


உள்ளே, பல கோண வடிவத்தில் சுவர் முழுதும் பளிங்கியால்... அதில் முழு குர்ஆனும் பொறிக்கப்பட்டிருப்பதாக கைட் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். ஷாஜஹான் மும்தாஜ் சமாதி அண்டர் கிரவுண்டில் இருக்கிறது. அதற்கான வழியும் தெரிந்தது. ஆனால், உள்ளே செல்ல யாருக்கும் அனுமதி இல்லை.


ஒவ்வொன்றாக தடவிப் பார்த்தபடியே, பின் வாசல் வழியாக வெளியே வந்தோம். மேடையை விட்டு இறங்கி, சிறிது நடந்தால், கீழே காலத்தின் வேகத்தோடு போட்டியிட்டபடி, யமுனை சுழித்தோடிக் கொண்டிருந்தது.


அங்கே சிதிலமைந்த ஒரு கட்டிடம் தெரிந்தது. கறுப்பு நிற தாஜ்மஹால் ஒன்று கட்ட முயன்றதாகவும், அது வெற்றி பெற வில்லை என்றும் ஒரு சிலர் சொல்கிறார்கள். தூரத்தில் அடுத்து செல்ல இருக்கும் ஆக்ரா கோட்டை தெரிந்தது. அங்கே தான் ஷாஜஹான் சிறை வைக்கப்பட்டு, தன் இறுதி நாட்களைக் கழித்தார்.


தாஜ்மஹாலின் மேடையில் அமர்ந்தோம். திருமணம் முடிந்து ஒரு மாமாங்கம் முடிந்து விட்ட நிலையில், மீண்டும் காதலர்களாய் உணர்ந்தோம். நுணுக்கமான கலை வேலைப்பாட்டையும் அரபி எழுத்துக்களையும் கீழே காணும் படத்தில் பார்க்கலாம். இதில் கம்பி வலை போல் தெரியும் சிறு சிறு ஓட்டைகள் கூட, பளிங்கினால் செதுக்கப்பட்டவை தான். இந்த படம், தாஜ்மஹாலின் நேர் பின்புறம் எடுக்கப்பட்டதால், கூட்டமில்லை.

கல்லில் செதுக்கிய கனவு மாளிகை; பளிங்கியில் உருவான அற்புத ஓவியம்; காதலின் சுவையை கல்லில் பேசும் காவியம்; இன்னும் இன்னும் எப்படி வர்ணித்தாலும் தகும். அவ்வளவு நேர்த்தி! மன்னர் ஷாஜஹான், அர்ஜுமந்த் பேகம் பானு என்கிற மும்தாஜ் மஹலின் மேல் வைத்திருந்த காதல் நம்மையும் தொற்றிக் கொள்கிறது, அங்கே சென்றால்...


பக்கவாட்டு மணிமண்டபம் சென்றோம். அங்கிருந்து பார்த்தால், தாஜ்மஹாலின் நடுப்பகுதி மட்டும் செதுக்கப்பட்டது போலத் தெரிகிறது. யாருமற்ற தனிமையில் அங்கேயும் அந்த தோற்றத்தை ரசித்து க்ளிக்கிக் கொண்டோம். எல்லா இடத்திலும் போட்டோ எடுக்க, யாராவது ஒரு தேர்டு பர்ஸன் உதவுவார்.

செதுக்கப்பட்டிருப்பது தாஜ்மஹால் மட்டும் தானா, இல்லை எங்கள் உருவமுமா என்று ஐயுறும் வகையில், இந்த புகைப்படம் அமைந்து விட்டது. உள்ளிருந்த எடுத்த பின், வெளியே வந்து, அந்த மண்டபத்தில் முழுத் தோற்றமும் கவர் ஆகும் வகையில், இன்னொரு படம். இது போன்ற மண்டபம் தான் மூன்று புறமும் உள்ளது.

ஷாஜஹானின் காதலை எண்ணி எண்ணி வியப்புற்ற வேளையில், இந்த மணி மண்டபத்தில் ஷாஜஹானின் இன்னொரு மனைவி, புதைக்கப்பட்டிருப்பதாக செய்தி எழுதப்பட்டிருப்பதைப் பார்த்ததும், சப்பென்றாகி விட்டது.


சுமார் 3 மணி நேரம், அங்கே சுற்றி சுற்றி வந்தோம். ஆனா, எங்கேயும் நிழல் இல்லாதபடி ஜூன் மாத வெய்யில். பளிங்கு தரை மட்டும் எப்போதும் ஜில்லென்று இருந்தது.


பிரிய மனமே இல்லை. ஆஹா! உலக அதிசயத்தில் ஒன்றை கண்டு விட்டோம் என்ற பேரானந்தம் ஒரு புறம், இவ்வளவு கலையழகா என்று ஆனந்த கூத்தாடும் மனம் மறுபுறமாக, பிரியா மனதுடன் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே நடந்தோம், வெளிப்புறம் நோக்கி!


வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அழகு! வாசகத்தில் வடித்து விட முடியாத அற்புதம்! வானலாவ நின்று கொண்டிருக்கும் காதல் கோட்டை! வெள்ளைப் பளிங்கியில் ஒரு வெள்ளி மாளிகை! காலத்தை வென்று நிற்கும் காவியம்! காதலின் கதையைச் சொல்லும் ஓவியம்! ஆயிரமாயிரம் சிற்பிகளின் உழைப்பு! அழகியலுக்கு எடுத்துக்காட்டாய் வடிவமைப்பு! யமுனையின் கரையில் ஒரு தவம்! அருமையின் உவமையாய் ஒரு நிஜம்! இதற்கு மேல் என்னால் வர்ணிக்க முடியவில்லை என்றாலும், இந்த ஒரு பத்திக்குள் அதன் அழகை சிறை பிடிக்க முடியாது என்பது மட்டும் உண்மை.


இதன் தொடர்ச்சி இங்கே... ஆக்ரா கோட்டை


Related Links: Taj Mahal, Taj Mahal History


-சுமஜ்லா.

12 comments:

Unknown said...

தாஜ்மஹால் பற்றி பெரிதாக ஒன்றும் தோன்றுவதில்லை

என்றாலும்

தங்கள் பயணக்கட்டுரை சுவாரஸ்யம்.

அதிரை அபூபக்கர் said...

உங்கள் பயணக்கட்டுரை.... அதுவும் உலக அதிசியத்தில் ஒன்றை பயணத்தில் ரசித்துயுள்ளீர்கள்....அருமை...

S.A. நவாஸுதீன் said...

பயணக் கட்டுரை ரொம்ப நல்லா எழுதுறீங்க நீங்க.

SUMAZLA/சுமஜ்லா said...

என் கட்டுரையை ரசித்து வாசித்தவர்களுக்கு நன்றி! ஆனாலும், நான் சிம்லா போன அனுபவத்தைத் தான் எழுத நினைத்தேன். அதன் தொடக்கம் இதுவாக இருப்பதால், இதை முதலில் சொன்னேன். அடுத்த பாகம் ஓரிரு நாட்களில் எழுதுகிறேன்.

NIZAMUDEEN said...

சுவாரஸ்யமாக எழுதியிருந்தீர்கள்.
நான்கூட சென்று, பார்த்து வந்துள்ளேன்,
சுமார் 10 ஆண்டுகளுக்குமுன். அதன்
நினைவுகளைக் கிளறிவிட்டுவிட்டீர்கள்.
அடுத்த பகுதி நாளையா?

SUMAZLA/சுமஜ்லா said...

நிஜாம் அண்ணா, இறைவன் நாடினால், இன்னும் ஓரிரு நாட்களுக்குள் எழுதுகிறேன்.

Jaleela Kamal said...

சுஹைனா படங்கள் பார்க்கவே ரொம்ப அருமையாக இருக்கு.

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி ஜலீலாக்கா, அப்போது டிஜிட்டல் கேமும் இல்லை, எல்லாம் கைகேமராவில் எடுத்தது தான்.

kavi.s said...

சுமஜ்லா நல்லாயிருக்கு உங்க தாஜ் மஹால் பயணம்,எங்களுக்கு தெரியாத சில விசயங்களைப் பற்றி தெரிந்துகொண்டேன்.

இந்த ஊர்க்காரங்க,நம்ம ஊர்க்காரங்களை பார்த்தா... அதுவும் கொஞ்சம் கறுப்பா இருந்தா உடனே ரஜினிகாந்த் மாதிரியே இருக்கீங்கனு சொல்லிடுவாங்க. எங்க வீட்டுக்காரரையே ரஜினி மாறி இருக்கீங்கனு சொல்லியிருக்காங்கனா பார்த்துக்கோங்களேன்:)

SUMAZLA/சுமஜ்லா said...

கவி, நீங்க குவாலியரில் தானே இருக்கீங்க?! கரெக்ட் தான் போலிருக்கு நீங்க சொல்வது.

Anonymous said...

your writing is great

SUMAZLA/சுமஜ்லா said...

thank you saidasan.