Thursday, July 30, 2009

விளைவு (ஒரு பக்க கதை)

கண்ணீரும் கம்பலையுமாக ராதா அண்ணன் வீட்டுக்கு வந்தாள்,

“அண்ணா, அவரும் மாமியாரும் சேர்ந்துக்கிட்டு ரொம்ப பேசறாங்கண்ணா!”

“உன்னோட கல்யாணத்துக்கு வாங்கின கடனையே கட்ட முடியல! இன்னும் ரெண்டு மாசம் பொறுத்துக்கோ ராதா! எனக்கு பதவி உயர்வு வந்தா புதுசா ஏதாவது லோன் போட்டு சொன்னபடி செஞ்சிடுறேன்” வாக்கு கொடுத்தபடி, அஞ்சு பவுன் சங்கிலி போட முடியாத குற்ற உணர்வில் பேசினான் சுந்தர்.

“ரெண்டு மாசத்துக்கு முன்னாடியும் நீங்க இதே தான் சொன்னிங்க. மாமியார் குத்தி குத்தி காட்டறாங்கண்ணா! சோத்தத் திங்கறியா, வேற எதயாச்சும் திங்கறயா, சொன்னபடி போட துப்பில்லனா, எதுக்கு சொல்லணும், இதுல வேற கவரிங் சங்கிலி போட்டுட்டாங்க ஏமாத்த! சரியான ஏமாத்துக்கார குடும்பம்னு நாக்க புடிங்கிக்கிறாப்புல பேசுறாங்கண்ணா!

“இங்க பாரு ராதா! நான் என்ன வெச்சுக்கிட்டேவா இல்லைங்கறேன். தீயணைப்பு துறையில கடை நிலை ஊழியனா வேலை செய்யுற எனக்கு என்ன வருமானம் பெரிசா கிடைச்சிறப் போவுது சொல்லு பார்க்கலாம். சும்மா நச்சரிச்சா மட்டும் வந்திருமா?”

“நகையோட வந்தா வா,இல்லாட்டி, உங்கண்ணங்கூடவே போய் இருந்துக்கோனு திட்டி தீர்க்கறாரு எம்புருஷன், நான் என்னண்ணா பண்ணட்டும்?”

“அஞ்சு பவுனுனா சும்மாவா? அறுபதினாயிரம் முழுசா வேணுமுல்ல? நா மட்டும் என்ன பண்ணறது சொல்லு! முடிஞ்சா இரு! இல்லாட்டி, பொட்டி படுக்கையோட வந்து சேரு! அவ்ளோ தான் சொல்ல முடியும் இப்போதைக்கு!”

சுந்தரின் நினைவெல்லாம் காலையில் வந்து போன தங்கை ராதா சொன்ன சொற்களையே சுற்றி சுற்றி வந்தது. தான் அவளிடம் கொஞ்சம் கடுமையாக பேசியது போல தோன்றியது. யோசித்தபடியே நைட் டூட்டிக்கு கிளம்பினான்.

“சுந்தர்! நாச்சியாபுரத்துல ஃபைராம். உடனே ஸ்குவாடோட கிளம்பு!”

பெரிய மாளிகையாட்டம் வீடு. கொஞ்சம் கொஞ்சமா தீயை அணைத்தபடி முன்னேறினான் சுந்தர். உள்ளே கறிக்கட்டையாகிப் போயிருந்த அந்த வீட்டம்மாவின் கழுத்தில் கெட்டியாய் தங்க சங்கிலி மின்னியது. காலையில் நடந்தது, அவனுக்கு நினைவு வர சபலம் எட்டிப் பார்த்தது. சுற்றும் முற்றும் பார்த்தான். யாருமே இல்லை. கழுத்தில் ஒட்டிப் போயிருந்த சங்கிலியை, குற்ற உணர்வோடு, கழட்ட, செல்ஃபோன் ஒலித்தது.

‘அட, யாரு இன்னேரத்துல கூப்பிடுறது’ அவசர அவசரமாக ஆஃப் பண்ணியவன், ஒரு வழியாக பிணத்தில் கிடந்த சங்கிலியை கழட்டிக் கொண்டான். முகத்தில் துளிர்த்த வேர்வையைத் துடைத்தபடி வெளியேறினான்.

டூட்டி முடிந்து வந்தவனை எதிர்கொள்ள தயாராக காத்திருந்தான் நண்பன் முரளி,

“டேய்! சுந்தர் எங்கேடா போயிருந்த! உந்தங்கச்சி, மண்ணெண்ணெய் ஊற்றி பத்த வெச்சு, சீரியஸா இருக்காடா! உடனே போய் பாரு! உனக்கு அப்பவே போன் பண்ணினேன். ஃபோன் ஆஃப் ஆகி இருந்துதுடா!”

ஓடினான் மருத்துவமனைக்கு. கரிக்கட்டையான தங்கையின் கழுத்தில், அவன் போட்ட கவரிங் சங்கிலி ஒட்டிப் போயிருந்தது.

அடுத்த நாள் பேப்பரில் செய்தி வந்தது, ‘வரதட்சணை கொடுமை தாங்காமல், இளம்பெண் தீக்குளித்துத் தற்கொலை!’

-சுமஜ்லா.

13 comments:

நட்புடன் ஜமால் said...

:(


மிகந்த வருத்தமாக இருந்தது

ஆனாலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது

இன்னமும்

Vidhoosh said...

:( ஏதும் சொல்ல முடியல.

---வித்யா

S.A. நவாஸுதீன் said...

கதை - நிஜத்திலும் நடக்கிறது

முனைவர் இரா.குணசீலன் said...

கதை எதிர்பாராத திருப்பங்களுடன் வாழ்வியலைப் பிரதிபலிப்பதாக உள்ளது...

SUMAZLA/சுமஜ்லா said...

ஆண்மைக்கு நிகரான மதிப்பி பெண்மைக்குக் கிடைக்கும் போது தான் இக்கொடுமை ஒழியும்.

//கதை - நிஜத்திலும் நடக்கிறது//

//ஆனாலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது

இன்னமும்//

எல்லா கதைகளும் நிஜத்தை மையப்படுத்தி புனையப்படுபவை தானே?!

GEETHA ACHAL said...

படிக்கும் பொழுது மிகவும் கஷ்டமாக போச்சு....
இப்படி எல்லாம் கூட வீட்டுக்கு வந்த மனைவினை அம்மா பேச்சு கேட்டுக்கு கொடுமை படுத்திற மகன் இருக்கின்ற வரையில், இப்படி நடந்து கொண்டே தான் இருக்கும்...என்பது உண்மையான உண்மை...

NIZAMUDEEN said...

ஒரு புது மருமகளைக் கொடுமைப் படுத்துவது,
ஓர் ஆணை திருடனாக்குகிறது.
ஒரு பெண்ணைத் தற்கொலை செய்துகொள்ளவைக்கிறது.

SUMAZLA/சுமஜ்லா said...

பல பணக்கார குடும்பங்களிலும், படித்த குடும்பங்களிலும் கூட இன்னும் நடப்பதை நாம் பேப்பரில் அவ்வப்போது காண்கிறோமே?!

அரங்கப்பெருமாள் said...

இந்த கொடுமை ஒழிய வேண்டும்...

நிச்சயமாக, யார் அனாதைகளின் சொத்துக்களை அநியாமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான்....(4:10)

dharshini said...

ஒரு பக்க கவிதை அருமை...

SUMAZLA/சுமஜ்லா said...

அரங்க பெருமாள் சார், நாங்கள் குர் ஆனை அரபியில் ஓதினாலும், அதன் அர்த்தம் பெரும்பாலானோருக்குத் தெரியாது. அவ்வப்போது நீங்கள் எழுதும் ஆயத்தின் விளக்கம் அருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.

தர்ஷ் என்னப்பா, கதையை கவிதையாக்கிட்டிங்க?

அரங்கப்பெருமாள் said...

நன்றி சகோதரி... பொதுவாக கடவுளின் வார்த்தைகளை கூறி அதற்கு,தகுந்த,கதைகளை கூறுவர். அதன் விளைவுதான் இது போன்ற பின்னூட்டம். ஆகவேதான் வசனம், அத்தியாயம் போன்றவை கொடுக்கப்படுகிறது.

SUFFIX said...

சமுதாயத்தில் வேரூன்றி அனைவரும் வெறுத்து ஆனால் தவிர்க்க முடியாத கேவலமான் ஒரு செயல் இந்த வரதட்சனை. சோகமான நிகழ்வுகள். நன்றாக சொல்லி இருக்கின்றீர்கள்.