Wednesday, August 26, 2009

சாயபு வீட்டு சரித்திரம் - 20

(உலவும் மனிதர்களின் உண்மை கதை)“மேகத்துக்கு பின்னே நிலவிருக்கும்
சோகத்துக்கு பின்னே சிரிப்பிருக்கும்
ஏகனென்று ஒருவன் இருக்கின்றான்
ஆகமொத்தம் எல்லாம் அவன் கையில்…”


“எங்க அம்மா இருந்தா…எனக்கு இங்கெல்லாம் மை போட்டு விடுவாங்க; இங்கெல்லாம் பொட்டு வெச்சு விடுவாங்க…எங்க அம்மா இருந்தா….இப்படி சீவி ஒத்த கொம்பு போட்டு விடுவாங்க…”

கச்சாமாவின் பாத்திஹாவுக்கு வந்த உறவுகள் எல்லாம் ஆப்பியின் இந்த சோகம் கலந்த மழலைப் பேச்சை கேட்டு கண்கலங்கினார்கள். ஓரிருவர், அவள் சொன்னது போலவே அவளை சீவி சிங்காரித்து விட்டார்கள்.

மர்ஜியா எப்போதுமே நன்னீமா பிள்ளையானதால், அவளுக்கு பிரிவின் துயர் அவ்வளவாக தெரியவில்லை. கடைசி பிள்ளை பாஜிலாவுக்கு தாய் முகம் கூட சரியா நினைவிருக்காத அளவுக்கு பத்தே மாதம் தான். ஆனால், ஆபிதாவால் தான் மறக்க முடியவில்லை.

சில நேரம் அழுகையும், சில நேரம் அக்காவுடன் விளையாட்டுமாக அவள் பொழுது கழிந்தது. மர்ஜிக்கும் ஆப்பிக்கும் பத்தே மாதம் தான் இடைவெளி என்பதால், அவர்கள் இருவரும் இரட்டையர்கள் போலத்தான். ஒரு நாள் இருவரும் பேசி கொண்டிருந்ததை அவர்களுக்கே தெரியாமல் கேட்டாள் சைதா.

“ஆப்பி, அழாத ஆப்பி, அம்மா எங்க போயிருக்காங்க தெரியுமா?”

“தெரியும்…. அம்மா இனிமேட்டு வர மாட்டாங்களாம். மும்மக்கா சொல்லுச்சு…”

“இல்லடி அம்மா மேல வானத்துக்கு போயிருக்காங்க…..எனக்கு தெரியும்.”

“நீ பொய் சொல்ற, அம்மா மண்ணுக்குள்ள போட்டு பொதச்சிட்டாங்கன்னு எல்லாரும் சொல்லிக்கிட்டிருக்காங்க”

“நம்புனா நம்பு நம்பாட்டி போ….அன்னிக்கு நா அம்மாட்ட நிலா வேணும்மானு கேட்டேன்….அதான் அம்மா வானத்துக்கு போயிருக்காங்க நிலா வாங்கிட்டு வர்ரக்கு…”

“அப்ப எனக்கு?”

“கொண்டு வந்தொன்ன ஆளுக்கு பாதி வெச்சிக்கலாம்….நீ அழுவாத என்ன?”

“அப்ப நம்ம பாஜி பாப்பாவுக்கு”

“அதுக்கு வேணாம்டி, அது எப்பப்பாரு அழுக…”

இதை கேட்ட சைதாவுக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை!

பாத்திமா மூன்று பிள்ளைகளுக்கும் பெறாத அன்னையானாள். தன் கண்களை போல வளர்க்கலானாள். யாரோ பெற்ற பிள்ளை கச்சாமாவை தத்து பிள்ளையாய் எடுத்து வளர்த்து, அவளுக்கு எக்கசக்கமாக கஷ்டம் கொடுத்ததனாலோ என்னவோ, இப்போ, மூன்று பிள்ளைகளையும் இவளே வளர்க்கும்படி ஆயிற்று!

தஸ்தகீர், அவ்வப்போது பாத்திஹாவின் போது வந்து கொண்டிருந்தவன், பின்பு அறவே வருவதை நிறுத்தி விட்டான். அவன் தாய் பேச்சை கேட்டு இன்னமும் ஆடி கொண்டிருந்தான். எங்கே இந்த பிள்ளைகள் தனக்கு பாரமாகி விடுவார்களோ என்று உதறி விட்டான். ஆனால், பாத்திமாவும் இந்த பிள்ளைகளை தஸ்தீரோடு அனுப்ப தயாராக இல்லை. அவள் தன் பாவத்துக்கு ஒரு பிராயசித்தமாக, இவர்களை சீரும் சிறப்புமாக வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்தாள்.

மீரான் சாயபு, வாதத்தில் இருந்து மீண்டு ஓரளவுக்கு நன்றாகவே இருந்தார். அவருக்கும், பிள்ளைகள் மீது, அளவிலா பாசம். ஒரு நாள் வாசலில் உட்கார்ந்து இருந்தவரின் பக்கத்தில் பாத்திமா வந்து மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள்,

“ஏங்க, இனி, நமக்கு இந்த மூணு பிள்ளைங்களும் தான்….நமக்கு வாரிசு….ஆனா ரத்த பந்த சொந்தமில்ல….”

“என்ன பாத்திமா புரியறாப்புல சொல்லு….”

“இல்லங்க….நமக்கு இந்த வீடு வாசல்….லைன் வீடு….அதுல வாடகைனு எல்லாம் இருக்கு! நாளைக்கு உங்களுக்கொன்னுனா….இதெல்லாம் எடுத்து வளர்த்த பிள்ளைகளின் மகள்களை சட்டப்படி சேராது….அதான், இப்பவே முறைப்படி எழுதி வெச்சிட்டா….”

“இதே தான் பாத்திமா நானும் யோசிச்சிட்டே இருந்தேன்….கச்சாமாவுக்கு நாம எந்தவிதத்திலையும் அனுசரிச்சு ஆதரிக்கல…அவ கஷ்டப்பட்டப்ப கூட வேடிக்கை பார்த்திட்டு இருந்திட்டோம். எம்மனசு உறுத்திக்கிட்டே இருக்கு! நாளைக்கு அவ பெத்த புள்ளைங்க அனாதையாயிர கூடாது பாரு! சீக்கிரமா ஏற்பாடு செய்யறேன்”

சொன்னதோட நிற்காம, அவர் எல்லா ஏற்பாடும் செய்து, மூன்று பேரின் பேரிலும் பத்திரம் பதிந்து விட்டார். அதுக்கு கார்டியனா பாத்திமாவை போட்டுட்டார்.

மீரான் சாயபுனாலயும் முன்ன மாதிரி சந்தை யாவாரத்துக்கெல்லாம் போக முடியல. அதுனால, அவர் வாடகைய வாங்கி செலவளித்து கொண்டே இருந்திட்டார்.

மர்ஜியும் ஆப்பியும், கொஞ்சம் கொஞ்சமாக பாத்திமாவின் அன்பான பராமரிப்பில் தன் தாயை மறக்க துவங்கினார்கள். இருவரையும் பள்ளிக்கூடத்துல சேர்க்கற வயது வந்திருச்சு. இரண்டு பேரையும் ஒன்னாவே சேர்த்துரலாம்னு முடிவு செஞ்சாங்க.

அஹமதும் சாதிக்கலியும் ஆளுக்கொரு பிள்ளைங்கள கொண்டு போய் ஸ்கூலுல சேர்த்தாங்க. அப்பவெல்லாம் நாம சொல்றது தான் பிறந்த தேதி. ரெண்டு பேரும் ஒன்றாக ஒன்னாங்கிளாஸ் போக ஆரம்பிச்சாங்க.

ரெண்டு பேரும் படிப்பில் நல்ல சூட்டிகை என்றாலும், ஆப்பி ஒரு படி அதிகம் தான். பொறுப்பா பொறுமையா வீட்டு பாடம் எல்லாம் செய்திடுவா. மர்ஜிக்கு எப்பவும் ஆம்பிளபுள்ள மாதிரி துறுதுறுப்பு ஜாஸ்தி. இப்ப பாஜியும் இவங்க விளையாட்டுல சேர்ந்துக்கிச்சு. அப்பானு ஒருத்தர் இருக்கறதே இவங்களுக்கு மறந்து போகும் அளவுக்கு தஸ்தீர் வருவதே இல்லை.

அப்பதான் சாதிக்கலிக்கு திருமணம் பேசினார்கள்.

(வளரும்)

-சுமஜ்லா.

7 comments:

NIZAMUDEEN said...

//அப்பதான் சாதிக்கலிக்கு திருமணம் பேசினார்கள்.//
-அப்படின்னா சாதிக்கலி கதையும் இடை, இடையே
இணைந்து வருமா? பிள்ளைகள் வளர, வளர
சாதிக்கலி பற்றியும் தொடரில் சம்பவங்கள்
வரக்கூடும் என நினைக்கிறேன்.

seemangani said...

//எம்மனசு உறுத்திக்கிட்டே இருக்கு! நாளைக்கு அவ பெத்த புள்ளைங்க அனாதையாயிர கூடாது பாரு! சீக்கிரமா ஏற்பாடு செய்யறேன்”//
அருமை...

பிள்ளைகளின் உரையாடல் அருமை அக்கா நெஞ்சை தொடுகிறது....தொடரட்டும்....

தமிழினி said...

உங்க வலைப்பதிவுக்கு அதிக ஹிட்ஸ் வேண்டுமா அப்போ உங்க பதிவுகளை tamil10.com தளத்தில் இணையுங்கள் .பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கி தளத்திற்குச் செல்லுங்கள்

Jaleela said...

“எங்க அம்மா இருந்தா…எனக்கு இங்கெல்லாம் மை போட்டு விடுவாங்க; இங்கெல்லாம் பொட்டு வெச்சு விடுவாங்க…எங்க அம்மா இருந்தா….இப்படி சீவி ஒத்த கொம்பு போட்டு விடுவாங்க…”


“ஆப்பி, அழாத ஆப்பி, அம்மா எங்க போயிருக்காங்க தெரியுமா

இந்த வரிகள் படிக்க ரொம்ப கழ்டமா இருக்கு

SUMAZLA/சுமஜ்லா said...

தொட்டு கொள்ள ஊறுகாய் மாதிரி, சாதிக்கலி, சைதா எல்லாம் அவ்வப்போது வருவாங்க.

மை போட்டு விடுவாங்க, டயலாக் நிஜமான ஆப்பி, நிஜமாக பேசியது, மற்றதெல்லாம் கற்பனை!

Biruntha said...

தாயில்லாக் குழந்தைகளை நினைக்கும்போது மிகவும் கஷ்டமாக உள்ளது.

பிருந்தா

Anonymous said...

கதை நன்றாக போகிறது.தொடர்ந்து எழுதுங்கள். பாகம் 21 ஓப்பன் ஆகவில்லை ஏன்?