Monday, August 24, 2009

அரபு சீமையிலே... - 9

அப்துல்லாஹ்,
சொத்தாய் விட்டு சென்றது,
ஐந்து ஒட்டகையும்,
சில ஆடுகளும்,
உம்மு ஐமன் என்ற அடிமையுமே!
வித்தாய் விதைத்துப் போனதோ,
வியனுலக நாயகரை!

அப்துல்லாஹ் மறையும் போது,
ஆமினா எட்டு மாதம்.
இரண்டு மாதங்கள் ஆன பின்னே
உதித்ததொரு இனிய நாதம்.

யானை ஆண்டு
ரபியுல் அவ்வல்
12ம் நாள் திங்களன்று
கி.பி.571 ஏப்ரல் 20,
சேனைக்கெல்லாம்
தானைத் தலைவர்,
வானை கிழித்து
வெள்ளி முளைத்தாற்போல்,
அரபு சீமையிலே...
அழகாய் பிறந்தார்!

பெருமானாரின் பிறப்பு,
ஈஸா நபிக்கு
571 வருடம் பின்னர்,
தாவூது நபிக்கு
1800 ஆண்டு பின்னர்,
மூஸா நபிக்கு,
2300 வருடம் பின்னர்,
இப்ராஹிம் நபிக்கு
3070 ஆண்டுக்கு பின்னர்,
நூஹ் நபியவர்கள் கால
பெரு வெள்ளத்திற்கு,
4490 ஆண்டுக்கு பின்னர்,
ஆதம் நபிக்கு
6750 ஆண்டுகள் பின்னர்,
என்று சொல்லுது வரலாறு!
இவர் போல் உலகில் பெரும்பேறு!
பெறுபவர் இங்கே இனி யாரு?!

யானைப்படைக்கு சேணம்பூட்டி,
வானைப் பிளக்கும் முழக்கம் கூட்டி,
கோபாவேசத்தோடு
காபாவை அழிக்க நினைத்தான்
அப்ரஹா!

அபாபீலெனும் சிறிய குருவி,
சிஜ்ஜீல் என்ற கற்கள் வீச,
கரிபடையெல்லாம் கரியாய் போனது!
தரிபட பாடம் இதுவாய் ஆனது!!

பெரிய காரியம் நிகழ்த்திட
இறைக்கு
உரிய உபகரணம்
தேவையில்லை!
சிறிய கல்லால்
பெரும்படை அழிக்கும்
அவனின் கிருபைக்கு
எதுதான் எல்லை?!

துரிதமாக எதிரியை அழிக்க
துண்டுக்கல்லால் தூளானதுவே!
அரிய இந்த செயலால்தானே
அஹமது நபிகள் பிறந்திட்ட ஆண்டை
யானை ஆண்டென்று பெயரிட்டனரே!

பேரன் மீது பேரன்பு கொண்ட
சேரப்பாட்டன் அப்துல்முத்தலிப்
தந்தையில்லா இந்தப் பிள்ளை
தரணியிலே புகழ்பெற வேண்டி,
புகழப் பெற்றவர்
என்ற பதத்தில்
முஹமது என்று பெயரிட்டாரே!

அன்னை ஆமினாதன்
கண்ணின் மணியை
பெரும் புகழ் பெற்று
அருஞ்செயல் புரிய
அஹமது என்று
அழைத்திட்டாரே!

(வளரும்)

-சுமஜ்லா.

8 comments:

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

கவிதை நடையில் இறைத்தூதர் முஹம்மது (ஸல்)அவர்களின் பிறப்பை அழகாய் விவரித்திருக்கிறீர்கள் மாஷா அல்லாஹ்.

துபாய் ராஜா said...

அருமை.அருமை.

SUMAZLA/சுமஜ்லா said...

இதன் முதல் எட்டு பாகங்கள், சைடு பாரில் அரபு சீமையிலே என்ற லின்க்கின் கீழ் இருக்கிறது வாசித்து பாருங்கள்!

இது, நர்கீஸ் இதழில் தொடராக வெளிவருவதால், இது காறும் வெளியிடாமல் நிறுத்தி வைத்திருந்தேன். இனி, மாதமிரு முறையாக வெளியிடலாம் என்றிருக்கிறேன்.

seemangani said...

//அன்னை ஆமினாதன்
கண்ணின் மணியை
பெரும் புகழ் பெற்று
அருஞ்செயல் புரிய
அஹமது என்று
அழைத்திட்டாரே!//

மாஷா அல்லாஹ்......
நபி வரலாறு....தொடரட்டும்.....
தொடர்ந்து வருவேன்...

NIZAMUDEEN said...

நபிகள் நாயகம் அவர்களின் சீர்மிகுந்த
பிறப்புடன் தொடர்புடைய ஆண்டு-காலம்-யானை
ஆண்டின் காரணம்-பெயர் சூட்டல் விளக்கம்,
இவ்வாறாக இதமாய் அமைந்தது
இந்த ஒன்பதாம் பாகம்.

திருச்சிகாரன் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரி அவர்களுக்கு,
கவிதை மிகவும் அருமை இன்று தான் படித்து பாத்தேன்.....இவ்ளோ நாள் மிஸ் பண்ணிட்டேன் நேரம் கிடைக்கும் பொது எல்லாம் சைடு பாரில் உள்ள மிட்ச கவிதைகளும் படிக்கிறேன்,

நன்றி

PEACE TRAIN said...

//துரிதமாக எதிரியை அழிக்க
துண்டுக்கல்லால் தூளானதுவே!
அரிய இந்த செயலால்தானே
அஹமது நபிகள் பிறந்திட்ட ஆண்டை
யானை ஆண்டென்று பெயரிட்டனரே!//

(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (105:1)அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா? (105:2)


மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான். (105:3)சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. (105:4)
ٍ

அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். (105:5)

the QURAN

அ.மு.செய்யது said...

வரலாற்று தகவல்களையும்,செய்திகளையும் எளிதில் புரியும் வண்ணம் கவிதையாக வடித்திருக்கிறீர்கள்.

முயற்சிக்கு வாழ்த்துக்கள் !!!

Masha Allah !!!!