Saturday, August 8, 2009

போனால் போகட்டும் போடா

என்னுடைய உணர்வுகளை எடிட் செய்யாமல், சொல்லணும்னா இப்படி சொல்லலாம். அதாவது, அந்த 32 கேள்விகளில், ஒரு கேள்வியான, ‘நீங்க கடைசியா அழுதது எப்போ?’ என்ற கேள்வி இப்ப கேட்டிருந்தா, நான் இப்படி சொல்லி இருப்பேன், ‘உரையாடல் சிறுகதை போட்டியில் எனக்கு பரிசு இல்லை என்று தெரிந்த போது!”

அது என்ன உணர்வோ எனக்கு தெரியவில்லை. ஒரு வேளை, பள்ளி நாட்களில் எப்போதும் இலக்கிய போட்டிகளில் பரிசு வாங்கி, கிலோ கணக்குல சர்ட்டிபிகேட் வைத்திருப்பதால், அதே மாதிரி இங்கேயும் எதிர்பார்த்ததன் விளைவோ?

போன மாதம் 15 தேதியே ரிசல்ட் என்று, ரொம்ப எதிர்பார்த்தேன். அப்போவே அந்த அவஸ்த்தையை உணர்ந்தேன். ரெண்டாவது முறையா அத உணர எனக்கு ரொம்பவே கஷ்டமா தான் இருந்தது. நான் மட்டுமல்ல, எல்லா பதிவர்களும் இப்படித்தான் என்று புரிந்த போது ஒரு ஆறுதல்! ‘யான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற கொடும் எண்ணம் காரணமாயிருக்குமோ?! சீச்சீ நிச்சயமா இல்லைப்பா.

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டிங்கற மாதிரி, நம்ம இம்சையரசர் வேற என் கதைக்கு http://imsai.blogspot.com/2009/06/4.html இந்த சுட்டியில் ( என் கதையின் சுட்டி &&& தாய்மை &&&)

கொஞ்சம் அழுத்தமான கதை..தேர்ந்த நடை..நல்ல கதைக்கரு...கண்டிப்பாக படிக்கவேண்டிய கதை...பரிசும் பெறவேண்டிய கதை...!!!என்னுடைய மதிப்பெண் 70 /100

இப்படி எழுதி நம்ம எதிர்பார்ப்பை அதிகமாக்கி விட்டாரா? அதான் ரொம்ப ஏமாற்றம். ஆனால், அதனால் ஒரு பயனும் இருக்குங்க. அட்லீஸ்ட் ஒரு ஒன்னரை மாதமாவது பரிசு கிடைத்த சந்தோஷத்தில் மிதந்தேன். தேங்க்ஸ் செந்தழல் ரவி!

அதற்குள் வீட்டில் எத்துணை கற்பனை கோட்டைகள். எல்லாமே சுகமானவை. அது பற்றி கூட ஒரு பதிவிட்டேன். பார்க்க பரிசு பணம். ஆனா, அந்த பரிசு பணத்துல என்ன செய்யறதுங்கற கற்பனை மட்டும் நாளுக்கு நாள் மாறிக்கிட்டே வந்தது; கடைசியா ஸ்கேனர் வித் லேசர் பிரிண்டர் ஒன்னு, அது கூட பணம் போட்டு வாங்கி தரணும்னு என்னவரிடம் கேட்டிருந்தேன். சிரிக்காதிங்க, அதோட விலை கிட்டத்தட்ட 9,000 ருபாய். ஏற்கனவே, 2 முறை இன்க்ஜெட் வாங்கி, ரிப்பேர். அதனால, இந்த முறை இது வாங்கணும்னு பெட்டிஷன்.

இதுக்கு ஒரு சாக்கு என்னன்னா, ‘பாருங்க என் கதைக்கு பரிசு கிடைச்சிருச்சு! இனி, நான் எல்லா புக்குக்கும் நிறைய எழுதி அனுப்பப்போறேன் (நல்ல வேளை வாசகர்கள் தப்பிச்சிட்டாங்க) அத எல்லாம் பிரிண்ட் எடுக்க வீட்டில ஒரு பிரிண்டர் வேணும்’

நேற்று இரவு தான் அம்மா வீட்டுல இருந்து எங்க வீட்டுக்கு போனேன். நைட் முழுக்க ஒரே புலம்பல்ஸ் தான். அட, பணம் ஒரு பக்கம் இருக்கட்டும்ங்க, சட்டை காலரை, சாரி சுடிதார் காலரை தூக்கி விட்டுக்கலாம்ல!

‘பரிசு மட்டும் கிடைக்காட்டி, நான் அழுவேன்’ ஏறக்குறைய இந்த வசனத்தை அச்சு பிசகாம நேத்துல இருந்து, ஒரு அம்பது வாட்டியாவது என்னவர்கிட்ட, என் மகள்கிட்ட சொல்லியிருப்பேன்.

காலைல ஆறு மணிக்கு நெட் போட்டா, ரிசல்ட் 9 மணிக்கு என்றிருந்தது. ஆனால், என்னோட துரதிஷ்டம் பாருங்க, இன்னிக்கு எங்க ஏரியாவுல டோட்டல் பவர் ஷட் ஆஃப். மராமத்து வேலை நடப்பதால், நைட் 8 மணிக்கு தான் வரும். ச்சே!

காலைலயே கிச்சன்ல எல்லா வேலையும் முடிச்சாச்சு. பவர் ஆஃப்னு தெரியும், அதனால, என்னவரிடம் சில்லியா ஒரு கேள்வி கேட்டேன்!

‘ஏங்க, பரிசு கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்னு, இப்பவே ஒரு அட்வான்ஸ் பதிவு போட்டு சேவ் பண்ணி வெச்சுக்கட்டுமா... நாளைக்கு யூ.பி.எஸ்ல போட முடியாதுல்ல?’

அவர், என்னை பரிதாபமாக பார்க்க, சரி என்று அந்த முடிவையும் கைவிட்டேன்.

சிஸ்டம் ஆன்லயே இருக்கு! சட்! சரியா ஒன்பது மணிக்கு பவர் ஆஃப். யூ.பி.எஸ் வேற பத்து நிமிஷம் தான் பேக் அப். பத்து மணிக்கு போட்டு பாருன்னாரு என்னவர். எனக்கு பொறுமை இல்லாமல், 9.20 க்கு போட்டேன். எல்லாம் லோட் ஆகி, போட்டி முடிவுகள் பக்கத்தை தேடி எடுத்து, ஸ்க்ரோல் பண்ண, பண்ண, பட்! யூ.பி. எஸ் ஆஃப். ஆண்டவா.....

போன் பண்ணி, ஸ்டெப் பை ஸ்டெப்பா, போனிலேயே சொல்லி, ஒரு வழியா, அம்மா பிடிச்சிட்டாங்க, அந்த சைட்ட! போனிலேயே எல்லாம் ஓவர். அம்மா வாசிக்க வாசிக்க, அங்க பல்ஸ் எகிறுது! கண்ல குளம் எந்நேரமும் உடைப்பெடுத்துக்கும் போல!

நான் அடுத்ததா, என்னவருக்கு போன் செய்தேன், ‘கிடைக்கல பரிசு’ இதுக்கும் மேல பேச முடியாம, போன வெச்சிட்டு அப்படியே படுத்தவ, காலங்காத்தாலயே நல்ல ஒரு தூக்கம்.

இன்னிக்கு ஸ்கூல் ஹாஃப் டே; என் மகள் ஸ்கூல் விட்டு வரவும், நான் எழும்பினேன். ‘என்ன மம்மி ஆச்சு’னு கேட்டுக்கிட்டே தான் உள்ள வந்தா.

‘ப்ச்! கிடைக்கல’ என்று நான் சொன்னதும், பெரிய மனுஷி மாதிரி, என் கை விரலை பிடித்து ஒரு அழுத்து அழுத்தினா, ஆறுதல் சொல்லும் விதமா.... ‘மம்மி, செல்ஃப் கான்ஃபிடன்ஸ் ஓக்கே, ஆனா, ஓவர் கான்ஃபிடன்ஸ் ரொம்ப டேஞ்சர்!’ பிள்ளைங்க, சில நேரம், நம்மை விட அறிவாளி ஆயிடறாங்க!

மனதில் ஆயிரம் கேள்விகள். என்னால் இனி பொறுக்க முடியாது என்ற நிலையில், ஸ்கூட்டி எடுத்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு வந்து விட்டேன்(4 கி.மீ தான்). இதோ அங்க இருந்து தான் இந்த புலம்பல்ஸ் பதிவு.

நிதானமா பார்த்தேன். பரிசு கதைகளை ஏற்கனவே படித்திருந்தாலும், மீண்டும் படித்தேன். பதிவுலகில் உள்ளவர்கள் தான் நடுவர்கள் என்று தெரிந்ததும், ஏனோ, பரிசு கிடைக்காததற்கான வருத்தம் குறைந்தது போல இருந்தது.

சில கதைகள் ரொம்ப பிடித்திருந்தது. சில கதைகளில் யதார்த்தம் இல்லை. சில கதையின் கருக்களை ஏற்கனவே எங்கோ வாசித்தது போல இருந்தது. ஆனால், மொத்தத்தில் பழுதில்லை. பரிசு கிடைத்த எல்லாருக்கும் இந்த பதிவின் மூலம் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.

மொத்தத்தில், இந்த அவஸ்த்தைக்கு கலந்துக்காமயே இருந்திருக்கலாம் போல! ஒரு வேளை என் வாழ்வில் நடந்த உண்மை கதை இதுன்னு பின்னூட்டத்தில் நான் சொன்னதால் தான் பரிசு கிடைக்கலையோனு தோணுது! ‘நான் ஒரு ராசி இல்லா ராஜா’ என்ற பழைய பாட்டில் வர்ர,
‘என் கதையை எழுதிவிட்டேன், முடிவினிலே சுபமில்லை’ என்ற வரிகள் தான் நினைவு வருது!

நடத்தியவர்கள் சொன்ன அந்த 37 கதைகள்ள என்னுதும் ஒன்னாயிருக்கலாம்னு ஒரு ஆறுதல் இப்போ! ஆனா, அந்த சந்தோஷம் எவ்வளவு நேரம் நீடிக்கும்னு தெரியல. அந்த பட்டியலையும் வெளியிடலாமானு அங்க டிஸ்கஷன் நடக்குது!

ஆக, மொத்தத்தில, திங்கள் வரை பதிவுக்கு லீவு விட்டிருந்த என்னை, சீக்கிரமே விரதம் முடிக்க வெச்சிருச்சு!

இப்ப, சந்தோஷமா இருக்கறது யாருனு கேட்டா, என் கணவர் தான். பின்ன, 1500 பணத்தோட, இன்னும் பணம் போட்டு 9000 ருபாய்க்கு பிரிண்டர் ப்ளான் பண்ணி வெச்சிருந்தேன்னு சொன்னன்ல. இப்போ, அவருக்கு, 7500 ருபாய் மிச்சம் பாருங்க!

-சுமஜ்லா.

22 comments:

நிலாரசிகன் said...

மிகுந்த வருத்தத்தையும் கண்ணீரையும் வரவழைக்கிறது உங்கள் பதிவு..
என்ன பின்னூட்டமிடுவது? :(

நாடோடி இலக்கியன் said...

உங்க ஃபீலிங்ஸ் புரியுது.20 கதைகளை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல்,தவிர உங்க கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. தேர்வான கதைகள் எல்லாமே தகுதியானவைதான்,குறை சொல்ல முடியாது,அதே மாதிரி தேர்வாகாமல் போன சில கதைகள் அடடா இந்த கதையையும் தேர்வு செய்திருக்கலாமேன்னு தோனிச்சு. ஒவ்வொருத்தருக்கும் ஒரு விருப்பம்,ஒரு பார்வை.

அப்புறம் செந்தழல் ரவி உங்க கதையை பாராட்டி இருந்த விதமே நீங்க ஜெயிச்ச மாதிரிதான் ,அடுத்த போட்டிக்கு டென்ஷன் இல்லாமல் தயாராகுங்க.என் கதைக்கு செந்தழலாரின் மதிப்பு 75/100, ஆனாலும் நான் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் என் கதையில் குறைகள் என் கண்ணிற்கே தெரிந்ததுதான்.

☀நான் ஆதவன்☀ said...

அட விடுங்க. அடுத்த போட்டியில ஜமாச்சரலாம். எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான். பதிவுலகத்தில் சற்றும் தொடர்பில்லாதவர்களே நடுவர்கள் என்று கடைசி வரை சொல்லி நம்மள ஏமாத்தியது தான்.

மற்றபடி அவர்கள் எடுத்த முயற்சியும், அடுத்தடுத்து நாம தொடர்ந்து எழுதவும் எடுக்குற முயற்சியும் பாராட்டதக்கது.

பீர் | Peer said...

ஆப்பா, அடுத்தடுத்த போட்டிகளில் வெற்ற பெற வாழ்த்துக்கள்.

உங்களின் அதே கதையை மீண்டும் இப்போது வாசித்து பாருங்கள். அதை இன்னும் அழகாக்க முடியும், இலக்கியப்படுத்த முடியும். அதே ரசனையோடு அடுத்த கதைகளை எழுதுங்கள், நிச்சயம் வெற்றி கிட்டும்.

Anonymous said...

பரிசு கிடைக்கலங்கிறத்க் கூட இவ்வளவு நல்லா எழுதியிருக்கீங்க. நீங்க பெரிய எழுத்தாளர்தான்.

உங்க கணவர்தான் உண்மையிலேயே மகிழ்வார். பின்ன சுண்டைக்காய் கால் பணம் சுமைக்கூலி முக்கால் பணம்னு நீங்க அவருக்குச் செலவு வைக்கப் பார்த்தீங்க. அவர் கடவுள் மீது வைத்த நம்பிக்கை பொய்க்கவில்லை.

கலந்துக்கிறதே ஒரு வெற்றிதானுங்களே.

Jaleela Kamal said...

வருத்த படாதீங்க, உங்கள் உண்மை கதைகளுக்கு நல்ல பரிசு கண்டிப்பாக கிடைக்கும்.

சென்ஷி said...

//வடகரை வேலன் said...
பரிசு கிடைக்கலங்கிறத்க் கூட இவ்வளவு நல்லா எழுதியிருக்கீங்க. நீங்க பெரிய எழுத்தாளர்தான். //

வேலன் அண்ணாச்சி சொன்னதை வழிமொழிகிறேன். சும்மா என்ன எழுதியிருப்பீங்கன்னு படிக்க வந்த என்னை என்ன பதிலெழுதறதுன்னு யோசிக்க வைச்சுடுச்சு உங்க எழுத்து.

நிறைய்ய எழுதுங்க. அடுத்தடுத்த மத்த கதைப்போட்டிகளிலும் கலந்துக்குங்க. உரையாடல் போட்டி மாத்திரம் யாருக்கும் இலக்கில்லையே!

உங்களின் வாழ்வைப் பற்றிய விடாமுயற்சி பதிவை முன்பே படித்திருப்பதால் உங்களிடமிருந்து இந்த பதிவை நான் எதிர்பார்க்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். தவறாயிருந்தால் மன்னிக்கவும்!

ஜமாலன் said...

நண்பருக்கு உங்கள் கதையை நான் படிக்கவில்லை. ஆனா இந்த கதை அதைவிட உண்மையாக இருக்கும் போலிருக்கிறது. நானும் நண்பர் சென்ஷிபோல என்ன எழதவார்கள் என ஒரு நோட்டம் விடத்தான் வந்தேன். வந்தால் உண்மையான உணர்வை எழுதி உள்ளீர்கள். இதற்கும் தைரியமும் கம்பீரமும் வேனும். உங்களால் நன்றாக கதை எழுதமுடியம். முயற்சி செய்யுங்கள். ஆனால் தருமி போல பரிசப்பணம் பற்றி கணக்கிட்டு செய்யாதீர்கள்? ஒரு வேடிக்கைக்காக சொன்னேன். ))

அடுத்தமுறை வெற்றிபெற வாழ்த்துக்கள். உங்கள் கதையை படித்துவிட்டு பிறகு...

அன்புடன்
ஜமாலன்.

Uma said...

"குறையுடைய குழந்தை என்னோடதல்ல. என் குழந்தைக்கு எந்த குறையும் இல்ல". இந்த வரிகள்,ஏனோ ஒட்டவில்லை. ஏத்தனை குறை இருந்தாலும் தாய்க்கு தன் குஞ்சு பொன் குஞ்சு அல்லவா?

SUFFIX said...

போனால் போகட்டும் போங்க!!இப்பொ இல்லைனா அடுத்த முறை!!
"There is no medicine like hope, no incentive so great, and no tonic so powerful as expectation of something better tomorrow” (Orison Swett Marden)

SUMAZLA/சுமஜ்லா said...

அப்பா, கொஞ்சம் நேரத்துல எத்துணை பின்னூட்டங்கள். அட, ஜஸ்ட் லைக் தட், யதார்த்தத்தை யதார்த்தமா எழுதினேன். அவ்வளவு தான்.

மனம் தளர்ந்து போனது உண்மை தான். ஆனா, அது அதிக எதிர்பார்ப்பினால் தானே தவிர, என் கதை சிறந்தது என்று நான் எண்ணியதால் அல்ல.

ஆனாலும், எல்லாரும் ஆறுதல் சொன்னத படிக்கும் போது மனசுக்கு தைலம் தடவினது மாதிரி.

தேங்க்யூ சோ மச் ஃபார் ஆல் ஆஃப் யூ!

SUMAZLA/சுமஜ்லா said...

//பரிசு கிடைக்கலங்கிறத்க் கூட இவ்வளவு நல்லா எழுதியிருக்கீங்க. நீங்க பெரிய எழுத்தாளர்தான்.//

ஹைய்யோ, ஐஸ் கட்டி மழையே பெய்த மாதிரி ஒரு குளிர்ச்சி, உங்க வரிகள்ள!


//உங்க கணவர்தான் உண்மையிலேயே மகிழ்வார். பின்ன சுண்டைக்காய் கால் பணம் சுமைக்கூலி முக்கால் பணம்னு நீங்க அவருக்குச் செலவு வைக்கப் பார்த்தீங்க. அவர் கடவுள் மீது வைத்த நம்பிக்கை பொய்க்கவில்லை.//

அட கடவுளே?!! ஹா... ஹா...

SUMAZLA/சுமஜ்லா said...

//உங்களின் வாழ்வைப் பற்றிய விடாமுயற்சி பதிவை முன்பே படித்திருப்பதால் உங்களிடமிருந்து இந்த பதிவை நான் எதிர்பார்க்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். தவறாயிருந்தால் மன்னிக்கவும்!//

மொத்தத்துல, நான் ரொம்பவும் செண்டிமெண்டான ஆளுங்க. என் மனசுல உள்ளத உள்ளபடி எழுதினேன். அவ்வளவு தான்.

SUMAZLA/சுமஜ்லா said...

//இதற்கும் தைரியமும் கம்பீரமும் வேனும். உங்களால் நன்றாக கதை எழுதமுடியம். முயற்சி செய்யுங்கள். ஆனால் தருமி போல பரிசப்பணம் பற்றி கணக்கிட்டு செய்யாதீர்கள்? ஒரு வேடிக்கைக்காக சொன்னேன்.//

நன்றி! தோல்வியை ஒப்புகறதுல ஒரு சுகம் இருக்குங்க! அதே தருமி கதை தான் இதை எழுதும் போது என் நினைவுக்கும் வந்தது.

SUMAZLA/சுமஜ்லா said...

//"குறையுடைய குழந்தை என்னோடதல்ல. என் குழந்தைக்கு எந்த குறையும் இல்ல". இந்த வரிகள்,ஏனோ ஒட்டவில்லை. ஏத்தனை குறை இருந்தாலும் தாய்க்கு தன் குஞ்சு பொன் குஞ்சு அல்லவா?//

ஆனால், உமா, நீங்க என்ன வேணாலும் நினைச்சுக்கோங்க! அந்த நேரத்துல என் ஃபீலிங் அப்படித்தான் இருந்தது.

நான் முன்னமே, என் தாயிடம் சொல்லி வைத்திருந்தேன், அந்த குழந்தையை நான் பார்த்தால், அடுத்த குழந்தையை வயிற்றில் சுமக்கும் போது, அந்த நினைவுகள், மீண்டும் மீண்டும் மனதில் எழுந்து பாதிக்கும், அதனால் என்னிடம் காட்ட வேண்டாம் என்று! ஆனால், அம்மா நர்ஸிடம் சொல்லாமல் விட்டு விட்டார்கள். அதே போல நர்ஸ் காட்ட, நான் எழுதியிருந்தது தான் நடந்தது, உண்மையில், சத்தியமாக!

Anonymous said...

உங்களோட எங்களுக்கு டென்ஷன் இதை படிக்க படிக்க ..கலந்துக் கொண்ட அனைவருக்கும் இருக்கும் உணர்வு தான் அழகா வெளிப்படுத்தி இருந்தீங்க...அடுத்தமுறை வெற்றி நிச்சயம்...

லதானந்த் said...

அன்புடையீர் வணக்கம்!
நீங்கள் மிக நன்றாக எழுதுகிறீர்கள். மனதைத் தளர விட வேண்டாம்.
இதைப் போல எனக்கும் ஒரு முறை நிகழ்ந்தது.
ஏற்கனவே கல்லூரி தொடர்பாக ஒரு போட்டி வைத்திருந்தார்கள். விளையாட்டாக நானும் கலந்து கொண்டேன்.
போன வருஷம் என்னிடம் “பத்திரிக்கைகளில் எழுதுவது எப்படி?” எனக் கேட்டவரும்
அடிக்கடி,”உங்கள் கணுக்கால் அளவுதான் நான்” எனத் “தன்னடக்கத்தோடு” சொல்லிக்கொண்டவருமான ஒருவர்தான் தேர்வு செய்தார். இன்றைய தேதியில் அனைத்துப் பத்திரிக்கைகளிலும் கேட்டு வாங்கி எனது படைப்பைப் வெளியிடுகிறார்கள்.
ஆனால் அதிசயம்.. எனது பதிவுலகப் போட்டிப் பதிவுப் படைப்பு வெற்றிக்கு மிக அருகில் கூட நெருங்கவிடாமல் ஓட்டளிப்பு மூலமும் கவனமாகப் பார்த்துக் கொண்டார்கள். முடிவுகளைப் பார்த்ததும் எனக்குச் சிரிப்புத் தாங்க முடியவில்லை. அந்தப் பக்குவத்தை நீங்களும் பெற வேண்டும்.
All in the game!
Be cheerful!
எழுதி வைத்துக் கொள்ளுங்கள்!
நீங்கள்மிகப் பெரிய எழுத்தாளராவது உறுதி.!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நீங்கள் எதிர்பார்த்ததில் தப்பில்லை.
கிடைக்காததனால் ஏற்படும் ஏமாற்றங்களும்
நியாயமானதுதான்.

கதையில் ஒரு வரி நீங்களே எழுதியிருந்தீர்கள்,
"“ஏய்! ரொம்ப கற்பனை பண்ணாத! அப்புறம் ஏமாந்திடுவ!”
என்று!

ஆகவே கிடைக்காததை விட்டுத் தள்ளுங்கள்!
எதிர்காலத்தில் நிச்சயம் சாதனை வெல்லுங்கள்!

SUMAZLA/சுமஜ்லா said...

தமிழரசி, லதானந்த், நிஜாம் அண்ணா, நன்றி, என் உணர்வுகளை புரிந்து கொண்டதற்கு...

//ஆனால் அதிசயம்.. எனது பதிவுலகப் போட்டிப் பதிவுப் படைப்பு வெற்றிக்கு மிக அருகில் கூட நெருங்கவிடாமல் ஓட்டளிப்பு மூலமும் கவனமாகப் பார்த்துக் கொண்டார்கள்.//

ஓட்டளிப்பு விஷயத்தில் சில சமயம் இது உண்மையோவென தான் தோன்றுகிறது (என் பதிவு விஷயத்தில் அல்ல)

//எழுதி வைத்துக் கொள்ளுங்கள்!
நீங்கள்மிகப் பெரிய எழுத்தாளராவது உறுதி.!//

தன்னம்பிக்கையூட்டும் வரிகள். மிக்க நன்றி!

//கதையில் ஒரு வரி நீங்களே எழுதியிருந்தீர்கள்,
"“ஏய்! ரொம்ப கற்பனை பண்ணாத! அப்புறம் ஏமாந்திடுவ!”
என்று!//

நேற்று நான் மீண்டும் என் கதையை படித்த போது, இதே தான் எனக்கு தோன்றியது. அப்புறம், இன்னும் கொஞ்சம் நல்லா எழுதியிருக்கலாமோ என்றும்...

இப்னு அப்துல் ரஜாக் said...

நபி அவர்கள் கூறினார்கள்: "தராசுத் தட்டில் வைக்கப்படுவதில் நற்குணத்தைவிட மிகக் கனமான அமல் வேறெதுவுமில்லை. நற்குணம் உடையவரை அவரது நற்குணம் தொழுகை, நோன்பால் கிடைக்கும் அந்தஸ்திற்கு உயர்த்திவிடுகிறது.'' (ஸுனனுத் திர்மிதி, முஸ்னதுல் பஸ்ஸார்)

Kripa said...

கவலை வேண்டாம்... நீங்கள் எழுதியது உங்களுக்கு திருப்தி அளித்தால் அதுவே போதும்... நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்...

நானும் என் முதல் சிறுகதையை (http://etamilbytes.blogspot.com/2009/06/blog-post.html) எழுதி ஆவலாக காத்து கிடந்தேன். முடிவு எனக்கு சாதகமாக இல்லை. ஆனால் நான் படிக்க சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் என் சிறுகதை பிடித்திருந்தது... பிறகேன் கவலை... மற்றவருக்கு பிடிக்கும் வரை எழுத வேண்டியது தானே...

இந்த அங்கீகாரம் கிடைத்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும், ஆனால் இது போல் மேலும் பல போட்டிகள் வருமே... அவற்றில் நாம் வெல்ல வாய்ப்பு இருக்கிறது அல்லவா...

அதலால் நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து எழுதுங்கள்...

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி கிருபா! என் மனதாங்கலை முன்வைத்துவிட்டால், மறைந்து விடுமல்லவா? இதோ இன்று, எந்த ஒரு கவலையுமில்லாமல், மீண்டும் ஆனந்த ஃபீனிக்ஸ் பறவையாய் நான்!