Friday, August 28, 2009

முட்டையிடும் பெட்டை

சின்ன வயதில் அம்மா என்னைத்தான் போய் முட்டை வாங்கி வர சொல்லுவாள். நான் வழக்கமாக போவது அபீபுல்லா கடைக்கு; அந்த கடைக்கு ரஹ்மத் மளிகை என்று அழகான பேர் இருந்தாலும், எல்லாரும் அபீபுல்லா கடை என்று தான் சொல்வார்கள். அண்ணன் தம்பிகள் நாலைந்து பேர், கடையில் இருப்பார்கள். ஆனால் எல்லாருக்கும் ஒரே பேர் அபீபுல்லா, அப்படித்தான் கூப்பிடுவார்கள். அதிலும், சிறு பிள்ளைகள் கூட அபீலா அது கொடு, அபீலா இது கொடு என்று சக நண்பர்களிடம் பேசுவது போல பேசுவார்கள். அவர்களும் முகம் சுளிக்காமல் கொடுப்பார்கள்.

முட்டையின் விலை 40 காசு முதல் 50 காசு வரை இருக்கும். விலை எவ்வளவு என்பதை விட, அதை ஒரு பேப்பரில் எழுதி ஒட்டி இருப்பது தான் வேடிக்கையாக இருக்கும். ஒரு ஐந்து பைசா விலை ஏறினால், மிக பெரிய முட்டையின் விலை மிக சிறிய உயர்வு என்று போட்டு விலை போட்டிருப்பார்கள். இதே ஒரு ஐந்து பைசா குறைந்தால், மிக பெரிய முட்டையின் விலை மிக மிக குறைவு என்று ஒட்டியிருப்பார்கள்.


நான் முட்டை வாங்க போனால், முதலில் அதைத்தான் படிப்பேன். தினப்படியாக இதை பார்க்கும் எனக்கு மிகவும் வேடிக்கையாக இருக்கும். அவர் முட்டையை பாக்ஸில் அடுக்கி தரும்வரைக்கும், ஒரு நோட்டம் விடுவேன், கண்ணாடி சீசாக்களில் இருக்கும் தின்பண்டங்கள், மேலே பாலிதீன் கவரில் தொங்கி கொண்டிருக்கும் முறுக்கு வகையறாக்கள் எல்லாம் பார்த்தால், எதாவது வாங்காமல் வர முடியாது. இதற்காகவே அம்மாவிடம் லஞ்சம் வாங்கி வருவேன்.


லஞ்சம் என்பதன் அர்த்தம் எனக்கு அப்போது தெரியாது, ஆனால், என் அம்மாவும் அப்பாவும் வெளியே போகும் போது, நானும் என் தம்பியும் தனியாக வீட்டில் சமர்த்தாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆளுக்கு பத்து பைசா கொடுத்து செல்வார்கள். இது குறித்து அம்மா அப்பாவிடம், சீக்கிரம் லஞ்சம் கொடுத்திட்டு வாங்க என்றோ, மொய்யெழுதிட்டு வாங்க என்றோ சொல்வார். அதைக் கேட்டு கேட்டு, நானும் அம்மா கடைக்கு போகச்சொன்னால், அம்மா லஞ்சம் என்று கேட்பேன். பத்து பைசா தருவார்.


பத்து பைசாவை அபீபுல்லா கடையில் செலுத்தினால், எக்கி எக்கி பார்த்து வாங்க வேண்டும். அதனால், சில சமயம், வரும் வழியில், ஒரு மரப்பெட்டியின் மீது கடை பரப்பி இருக்கும் அபீக்கா கடையில் வாங்குவேன். பெயர் ஒரே மாதிரி இருந்தாலும், அபீக்காவுக்கும் அபீபுல்லாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இங்கே அபீக்காவே காய்ச்சி ஒரு தாம்பாளத்தில் பரப்பி, பாலிதீன் கவரால் மூடியிருக்கும் ஜவ்வு முட்டாய் ரொம்பவே பிரசித்தம். அதோடு, எலந்தைவடையும், சிகரெட் முட்டாயும், பாக்கு முட்டாயும், தேன் முட்டாயும்...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.


அப்போ, நியூட்ரின் சாக்லேட் பத்து பைசா. ஆனால், நான் வாங்க மாட்டேன், ஏனென்றால், ஐந்து பைசாவுக்கு வாங்கினால் இரண்டு ஐட்டம் வாங்கலாமே! ஜாலி பாக்கு என்று ஒரு பாக்கு விற்கும். ரொம்ப இனிப்பாக வாசனையாக இருக்கும். ஆனால், பாக்கெல்லாம் வாங்கினால், அம்மாவிடம் உதை தான் கிடைக்கும்.


ஞாயிறன்று, மட்டும், பேப்பர் வாங்க மார்க்கட் போவேன். அப்போ அம்மா முட்டைகடையில் முட்டை வாங்கி வர சொல்வார். முட்டைகடையில் வாங்கினால், முட்டை ஐந்து பைசா கம்மியாக இருக்கும். அதே சமயம் முட்டையும் பெரிசு பெரிசா இருக்கும். ஞாயிறன்று காலையில் நேரமாக போவேன், பேப்பர் வாங்க. அம்மாவுக்கு இணைப்பு புத்தகத்தில் வரும் குறுக்கெழுத்து புதிர் என்றால் உயிர். தப்பி தவறி வேறு யாராவது நிரப்பி விட்டால், திட்டி தீர்த்து விடுவாள்.


நான் பேப்பர் வாங்கி வரும் வழியில், ஒருவர் அமர்ந்திருப்பார். ரெண்டே நிமிஷம் என்று சொல்லி என் கையில் இருக்கும் பேப்பரை வாங்கி, அரை மணி நேரத்துக்கும் மேல் படித்து விட்டு தான் தருவார். இதற்கு பயந்து நான் ரூட்டையே மாற்றி கொண்டேன். இது போன்றவர்களிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று சில சமயம் யோசிப்பேன்.


அப்போது, எம்ஜியார் எல்லாரையும் கத்தி வைத்துக் கொள்ள சொன்னதாக பரபரப்பான நியூஸ் வந்து எல்லாரும் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்கும் ஆசையாக இருந்தது. நான், வீட்டில் இருந்த ஒரு சின்ன மடக்கும் பேனா கத்தியை எடுத்து எப்போதும் என்னுடன் வைத்துக் கொண்டிருந்தேன்.


அப்போது ஒரு நாள், அம்மா என்னை முட்டை வாங்கி வர சொல்லி பத்து ருபா கொடுத்து விட்டார். என்னுடன் வீட்டு வேலைக்கார சிறுமி சீதாவும் வந்தாள். நான் அந்த சிறுகத்தியை எடுத்துக் கொண்டு வீரமாக புறப்பட்டேன். பத்து ருபாயை இடுப்பு ஸ்கர்ட்டில் சொருகி வைத்தேன். சீதாவோ, அங்கே வைக்கவேண்டாம், காணாமல் போய் விடும் என்றாள். நான் என் கத்தியை எடுத்து அவளிடம் காண்பித்து, பார் என்னிடம் கத்தி இருக்கிறது, யாரும் வந்து ருவாயை பிடுங்க முடியாது என்று வீர வசனம் பேசினேன்.

ஆனா, முட்டைகடைக்கு போய் பார்த்தால், ருவா இல்லை. வரும் வழியில் நழுவி கீழே விழுந்திருக்க வேண்டும். வெறுங்கையோடு திரும்பி வந்த போது, சீதா என்னை நன்றாக அம்மாவிடம் போட்டு கொடுத்து விட்டாள். என் கையில் இருந்த போர்வாள் பிடுங்கப்பட்டு, வீசிய வேகத்தில் அது பரணில் போய் உட்கார்ந்து கொண்டது.

விலைவாசி எல்லாம் ஏறிவிட்டது, இப்போ எனக்காக லஞ்சத்தையும் ஏற்றி கொடுங்கள் என்று அம்மாவிடம் கேட்டேன். அதுக்கு ஒத்து பாட என் தம்பியை ரெடி பண்ணி, முதல் நாளே ரிகர்சல் பார்த்து விட்டோம். சரி என்று அம்மா, ஆளுக்கு நாலணா தினமும் தர ஒத்துக் கொண்டாள். ஆனால், செலவளிக்காமல் மண் உண்டியலில் போட்டு சேர்த்த வேண்டும் என்று புது நிபந்தனையுடன்!

தினமும் அம்மாவே, உண்டியலை காட்டினால், காசை போட்டு விடுவாள். ஆனால், யாருமற்ற பொழுதில், கத்தியின் உதவியால் வெளி வரும் அந்த காசு, மிட்டாயாக மாறுவது அம்மாவுக்கு தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த தொகை ஏறி, வாரம் ஐந்து ருபாயாக வந்து நின்றது. ஐந்து ருபாயான போது, நான் சிறகொடிக்கப்பட்ட பறவை போல வெளியே போவதை நிறுத்தியிருந்தேன். தம்பியின் தயவால், அந்த பணம் சில சமயம் பஜ்ஜியாக மாறும், பல சமயம் அவனுக்கும் சேர்த்தே புரவலனாய்! அம்மா எனக்கு கொடுத்து கொண்டிருந்த லஞ்சம் இப்போ நான் தம்பிக்கு கொடுக்க வேண்டியதாகிவிட்டது.

முட்டையுடனான என் தொடர்பு அத்தோடு முடிந்துவிடவில்லை. திருமணத்துக்கு பின், வீட்டு வாசலில், சூனியை மறைக்க கட்டி இருந்த தட்டி அறையில், கோழி வளர்க்கலாம் என்றார் அவர். சொன்னபடியே, தவிட்டை கொண்டு வந்து நிலத்தில் பரப்பி, ஒரு கோழியும் சேவலும் வாங்கி வந்தார். இரண்டும் ஒரே ஈத்துல வந்தது. ரொம்ப சீக்கிரம் வளர்ந்து விட்டன.

தினமும் சாயங்காலம் கோழிகளை திறந்து விடுவோம், வாசலில் மேய்வதற்கு! நான் நாற்காலியில் அமர்ந்து அவற்றின் சேட்டை ரசித்து வேடிக்கை பார்த்து கொண்டிருப்பேன். கொக்கொக் என்று சேவல் சங்கேத குரல் கொடுக்க, கோழி உடனே அதனருகில் ஓடும். இரண்டும் சரியான ஜோடி! நிமிடத்துக்கொரு முறை சேவல் கோழியை அணைந்து கொண்டே இருக்கும். அதன் காதல் விளையாட்டை பார்த்தால் பொழுது நகர்வதே தெரியாது. நமக்கும் அந்த உணர்வு தொற்றி கொள்ளும்.

முதன் முதலாக அந்த கருப்பு கோழி முட்டை ஈன ஆரம்பித்தது. முதல் நாள் பார்த்தால், காலை ஒன்றும் மாலை ஒன்றுமாக இரண்டு முட்டைகள். ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகள் ஈனினால், குடும்பத்துக்கு ஆகாது என்று சிலர் சொன்னார்கள். ஆனாலும், முதல் மூன்று நாட்கள் இப்படித்தான் தினமும் இரண்டு முட்டை இட்டது. அதன் பின், நாளொன்றுக்கு ஒன்றாய், மொத்தம் முப்பத்திரெண்டு முட்டைகள் இட்டது.

நான் முட்டைகளில் தேதி குறித்து வைத்து கொள்வேன். ஏனோ, அதை பொரித்து தின்ன மனதே வராது. முட்டை ஈனி முடித்ததும், கோழிக்கு கிறுக்கு பிடித்து கொண்டது. மொத்தம் பதினைந்து முட்டைகளை அடை வைத்தோம். முதலில், அடை படுக்கவே இல்லை கோழி. அப்படியே படுத்தாலும், சேவலுக்கு அது பிடிக்கவில்லை. கொத்தி கொத்தி சீண்டியது. வேறு வழியில்லாமல், கொட்டறையின் ஒரு மூலையில், கோழியையும் முட்டையையும் வைத்து, ஒரு பஞ்சார கூடையினால், மேலே போர்த்தி விட்டோம்.

ஒரு இரண்டு நாட்களில் அது சமர்த்தாக படுத்து கொண்டது. இப்போ, தீனி சாப்பிடக்கூட எழுந்திருப்பதாக இல்லை. ஆனால், சேவலுக்கு தான் மதம் பிடித்தது போல, எல்லாரையும் கொத்த ஆரம்பித்தது. இப்போ சேவல், நன்றாக வளர்ந்து, கொண்டை எல்லாம் பெருத்து, இரண்டடி உயரம் ஆகி விட்டது. இதுக்கு இப்போ ஜோடி வேணும் என்று, அவர், ஒரு சிகப்பு கோழியும், வெள்ளை கோழியும் வாங்கி வந்தார்.

ஒரே நேரத்தில் இரண்டு கோழி வாங்கியதாலோ என்னவோ, இரண்டுக்கும் சக்களத்தி சண்டை தீருவதே இல்லை. எப்போதும் ஒன்றை ஒன்று கொத்தி ரணகளம் தான். சில சமயம் சேவல், சிகப்பு கோழியுடன் சேர்ந்து கொண்டு, வெள்ளை கோழியை மிரட்டும். சில சமயம் வெள்ளை கோழியுடன் சேர்ந்து கொண்டு சிகப்பு கோழியை விரட்டும். மொத்தத்தில் ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் போலத்தான் சேவலின் நிலமையும்.

ஆனா, கருப்பு கோழி போல, இதுக்கு இரண்டுமே சரியான ஜோடியாக அமையவில்லை. கொஞ்சம் நாளிலேயே, வெள்ளை கோழிக்கு சீக்கு வந்தது. தொண்டையில் பெரிதாக வீங்க ஆரம்பித்தது. இது ஏதடா தொல்லை என்று அறுத்து குழம்பு வைத்து விட்டோம். இப்போ, சிகப்பு கோழி, பட்டத்து ராணியாகி விட்டது.

சரியாக இருவத்தி ஒன்றாம் நாள், அழகழகான குஞ்சுகள். ஐந்து குஞ்சுகள் மட்டுமே பொரித்திருந்தது. மீதியெல்லாம் கூமுட்டையாகிப் போயிருந்தது. இரண்டு முட்டைகளை உடைத்து பார்த்த போது, பாதி உருவான கரு, உள்ளேயே குறை பிரசவமாய் இறந்து போயிருந்தது. இப்போ, கருப்பு கோழியையும் குஞ்சுகளையும், சேவலிடமிருந்து காக்க வேண்டும் என்று, நெல் வேவிக்கும் காலி தொட்டியில் விட்டோம். ஆனாலும், அவ்வப்போது வெளியே வாசலில் மேயும்.

இப்போதும், கருப்பு கோழி சேவலை கிட்டவே சேர்க்கவில்லை. கொஞ்சம் இடைவெளி நல்லதென்று அதுவாகவே ஃபேமிலி ப்ளானிங் செய்து கொண்டது போலும். ஆனால், குஞ்சுகள் ரொம்பவும் வீக்காக இருந்தன, ஒரு நாள் ஒரு குஞ்சு செத்தே விட்டது. மீதியையாவது காப்பாத்த வேண்டும் என்று என்னவர், போய், மிருக வைத்தியரிடம் என்னவோ, வயலட் நிறத்தில் ஒரு மருந்து வாங்கி வந்தார். அதை கரைத்து குடிப்பாட்டியும், பிரயோசனமில்லாமல், ஒவ்வொன்றாக எல்லாமே செத்து போய் விட்டன. கோழி வாசம் பட்டு, பாம்பு வந்திருக்கும், அதன் மூச்சு காற்று பட்டு எல்லாம் இறந்திருக்குமென்று சிலர் சொன்னார்கள்.

இப்போ, மீண்டும் கருப்பு கோழியை சேவல் துரத்த ஆரம்பித்தது. ஒரே மாதத்தில், மீண்டும் கருப்பு கோழி முட்டையிட ஆரம்பித்தது. இப்போ, சிகப்பு கோழியும் முட்டை விட, வீட்டில் நிறைய முட்டைகள். அடுத்து, சிகப்பு கோழியை அடை வைத்தோம். ஒன்பது முட்டைக்கு, ஒரே ஒரு குஞ்சு மட்டும். அதுவும், சொல்லி வைத்தது போல நாலே நாளில் இறந்து போனது. வீட்டில் கோழி வளர்க்கும் ஆசையும் அதோடு போனது.

சிகப்பு கோழிக்கும் சீக்கு வந்தது. அதனால், ஒரு நாள் அதையும் அறுத்து விட்டோம். என்னவோ சீக்கு மாறி மாறி ஒவ்வொன்றாய் வந்து கொண்டிருந்தது. சேவல் மட்டும் விதிவிலக்கு! அது கொண்டையை சிலுப்பி கொண்டு, கோழிக்கு சீக்கு இருந்தாலும் விட்டு வைக்கவில்லை. கருப்பு கோழியும் உடல் நலம் குன்ற ஆரம்பித்தது.

கருப்பு கோழி, எங்களுடன் ஒரு தோழி போல பழகி விட்டது. அவர், பிடிக்க போனால், பிடிக்கட்டுமே என்று ஓடாமல், அப்படியே நிற்கும். அதனால், அதன் மேல் ஒரு பாசம். அதுக்கு நோவு ஆரம்பித்ததும், அறுத்து விடலாம் என்றேன் நான். ஏனோ அவருக்கு மனமில்லை! சாவு நேரம் வந்து துடி துடித்த போது கூட, பக்கத்தில் அமர்ந்து, தடவி விட்டுக் கொண்டிருந்தாரே தவிர அறுக்க வில்லை. அது இறந்ததும், தோட்டத்திலேயே புதைத்து விட்டோம்.

இப்போ, சேவல் மட்டும் தனியாளாய்...ஜோடிக்காக கூவி கொண்டு! சே...என்ன ஜென்மம் இது என்று சில நேரம் தோன்றும். ஆறறிவு மனிதனே விதி விலக்கில்லாத போது இது எம்மாத்திரம்! இரண்டரையடி உயரத்தில், சண்டை சேவல் போலவே வளர்ந்து விட்டிருந்தது. இனி, இதுக்கொரு ஜோடி கோழி வாங்க எங்களுக்கு மனமில்லை. நோவுகளால், அடுத்தடுத்த கோழி சாவு, எங்கள் மனதை அந்தளவு பாதித்து விட்டது.

சேவல் ரொம்பவும், கொத்தி இம்சை படுத்தியதால், அதை ஒரு நாள் பிரியாணி ஆக்கிவிட்டோம். அதோடு, எங்கள் கோழிவளர் படலம் முடிந்தது. ஆனால், சின்ன வயசில், எனக்கும் முட்டைக்கும் இருந்த ராசி, இப்போ இல்லையோ என்று தோன்றும்.

பத்தாப்பு படிக்கும் போது, காலை தினமும் ஸ்பெஷல் க்ளாஸ். ஏழு மணிக்கெல்லாம் போகணும். தினமும், என் மதிய மெனு, தயிர்சாதமும் முட்டையும் தான். ஒரு நாள் கூட இதில் மாற்றமிருக்காது. அதோடு காலை உணவு, ஒரு கப் தயிர்.

முட்டை என்றவுடன் ஒரு சம்பவம் நினைவுக்கு வருது. என் தம்பி மார்க் குறைச்சலாக வாங்கி இருந்தான். அப்போ என் அப்பா, கேலியாக, ‘ஏண்டா முட்டைக்கும் பெட்டைக்கும் தானே சம்பந்தம். நீ ஆண்பிள்ளையாச்சே, பின் ஏண்டா முட்டை வாங்கினாய்’ என்றார். அதற்கு அவன், ‘அப்பா நான் ஆண்பிள்ளைதான், ஆனால், முட்டை போட்ட டீச்சர் பெண் தானே அப்பா’ என்றானே பார்க்கணும்.........

-சுமஜ்லா.

11 comments:

அரங்கப்பெருமாள் said...

ரொம்ப ரசிச்சு படித்தேன் சகோதரி. இதுக்கு இரண்டு முட்டை மார்க் தான் போடுவேன் ஆனாலும் முட்டைக்கு முன்னால் ஒன்று போடுவேன். சம்மதமா?

நட்புடன் ஜமால் said...

யம்மாம் பெருசு!

இருந்தாலும் படிச்சாச்சி

சுவாரஸ்யமாத்தான் இருக்கு

அந்த நாளில் துவங்கி இந்த நாள் வரை

கடைசியில் தங்கள் தம்பி கூறியது சூப்பர்

சந்தனமுல்லை said...

சுவாரசியமான இடுகை சுமஜ்லா! தங்கள் நினைவுகள் அருமை! :-)

இப்னு அப்துல் ரஜாக் said...

2:164
நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்;, மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்;, அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன
THE HOLY QURAN

சீமான்கனி said...

ரெம்ப நல்லா இருக்கு அக்கா.....முட்டை,கோழி,சேவல்....
ஜவ்வு முட்டாய்...பள்ளி பாளையம்,,கருங்கல் பாளையம் ,காவிரியாறு.....நானும் கொஞ்சம் ஏன் பாலிய வயதிர்ர்க்கு பயணம் போய் வந்தேன்...
நானும் ஏன் அக்காவும் சேர்ந்து உண்டியலை உடைத்த நினைவுகளும் வந்து போனது .....
நன்றி....அக்கா.....

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

முட்டைக் கடை(கதை)யும் கோழிக்
குழம்பும் என்ற வகையில் கதை,
ருசியாகவே இருந்தது.

தயிர் சாதமும் முட்டையும்
பத்தாப்பு படிக்கும் போதிலிருந்தே
உங்களுக்கு படிச்சிருக்கு என்பது
'உள்ளங்கை கோழி முட்டை'யென
தெள்ளத் தெளிவாக விளங்கிற்று.

SUMAZLA/சுமஜ்லா said...

பெருமாள் அண்ணா, உங்க மார்க்குக்கு ரொம்ப நன்றி!

//அந்த நாளில் துவங்கி இந்த நாள் வரை//

கருத்து பிழை...1985 டூ 1997 என்பது தான் சரி!

சந்தனமுல்லை, பீஸ் ட்ரைன் உங்க கருத்துக்கு நன்றி!

அந்த நாள் ஞாபகம் வந்ததோ, சீமான்கனிக்கு...கருங்கல் பாளையமா நீங்கள்????

நிஜாம் அண்ணா, நிஜமாவே, பத்தாப்பில், எப்படி தயிர் சாதத்துக்கு அந்த அரை வேக்காட்டு முட்டை சாப்பிட்டேன், என்று இப்போது நினைத்தாலும், வயிற்றை பிரட்டி கொண்டு வரும்:)

"உழவன்" "Uzhavan" said...

அனுபவத்தை நல்லா ரசிக்கும்படியா எழுதியிருந்த விதம் அருமை தோழி.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அப்பவே நீங்க "ல'ஞ்'சாதிபதி"
ஆகிட்டீங்களா!!!

எனக்கு இந்த 3 கேள்விகள் உங்களிடம்:

1. நீங்க எம்ஜிஆரின் இரசிகரா?

2. வீரம் செறிந்த சிறுமியா?

3. மினி தீவிரவாதியா?

கத்தி வைத்திருந்ததாக ஒப்புதல்
வாக்குமூலம் கொடுத்துள்ளீர்கள்.
பின்விளைவுகளுக்கு நீங்களே
பொறுப்பு.

SUMAZLA/சுமஜ்லா said...

//அப்பவே நீங்க "ல'ஞ்'சாதிபதி"
ஆகிட்டீங்களா!!!//

என்னங்க அப்படி சொல்லிட்டீங்க? அப்ப மட்டும் தான்...இப்ப, நான் லஞ்சத்தை எதிர்த்து போராடின கதை உங்களுக்கு தெரியாது. அதை ஒரு நாள் போஸ்டிங்காக போடுகிறேன்!

1.நான் எம்ஜியாரின் ரசிகை அல்ல.
2.வீரமா...அப்படீனா?
3.இது சரி! ஏனா, நான் எந்த காரியத்திலும் தீவிரமா இறங்கி விடுவேன்!

பின்விளைவுகளா? கத்திக்கு முன், ‘பின்’ எல்லாம் எம்மாத்திரம்?

SUMAZLA/சுமஜ்லா said...

அப்புறம், (என் அனுபவம் என்றாலும்) இதை நான் ஒரு கதையாக தான் எழுதினேன். பாருங்க, சிறுகதை லின்க்கில் தான் இதை போட்டுள்ளேன்.

நான் எது எழுதினாலும், அது சொந்தகதை என்ற முத்திரை விழுந்து விட்டது, நான் என்ன செய்ய??????????