Sunday, October 11, 2009

சாயபு வீட்டு சரித்திரம் - 24

மர்ஜியாவின் விருப்பப்படியே விட்டு விட்டார் பாத்திமா. விருப்பமில்லாத ஒருவனுக்கு கட்டி வைத்து இன்னொரு கச்சாமாவை உருவாக்க மனமில்லை. அடுத்து தோதாக எந்த வரனும் வரவில்லையாதலால், மேற்கொண்டு படித்தபடியே வேலை பார்த்து வந்தார்கள், மர்ஜியும் ஆப்பியும்.

மர்ஜியாவைவிட அதிகம் படித்த வரன் எதுவும் வராமல், சோர்ந்து போயிருந்த நேரத்தில் வந்த வரன் தான் ஃபரீத்! படிப்பில்லை, ஆள் அழகன், கெட்ட பழக்கமில்லை, கமிஷன் வியாபாரம் என்ற தகுதிகளோடு வந்தது. பாத்திமாவுக்கோ, ரொம்பவும் வயதாகிவிட்டது. எப்படியாவது ஒரு குமருக்காவது மணமுடித்து விட்டால், தனக்கு ஒரு மௌத் ஹயாத் என்றால், மற்ற இருவரையும் இவள் பார்த்துக் கொள்வாள் என்ற எண்ணம்.

ஆண்மகன் இல்லாத வீடு... ஆக, எடுத்து செய்ய ஓரிரு சொந்த பந்தத்தை விட்டால் யாருமில்லை என்பதால், இந்த வரனுக்கு நிச்சயத்தார்கள். மர்ஜியாவுக்கு, இதுக்கும் மறுப்பு சொல்லி, தன்னை தாயாய் வளர்த்த பாட்டிக்கு நோவினை தர மனது வரவில்லை. தன் தங்கச்சிகளை எண்ணி எது வந்தாலும் சரி என்று முழு மனதோடு ஏற்றுக் கொண்டாள்.

நல்லபடியாக திருமணம் முடிந்தது. மணப்பெண் தோழியாக பதினேழு வயது சுஹைனா கூடவே இருந்தாள். கேலியும் கிண்டலுமாக மண்டபம் சிரித்து கிடந்ததில், தன் மனதின் ஓரத்தில் ஒட்டியிருந்த துளி கீற்றளவு ஒட்டடையும் பறந்து போயிருந்தது மர்ஜியாவுக்கு!

திருமணம் முடிந்து மறுவீடு திரும்பியிருந்தாள்...

“அம்மா, இந்தா பணம், எனக்கு ஒரு ஹாட் பாக்ஸ் வாங்கி தாம்மா...” ஐநூறு ருவாயை கொடுத்தாள், பாத்திமாவிடம்...

ஆச்சு ஒரு பதினைந்து நாள் கழித்து மீண்டும் தாய் வீடு வந்தவள்,

“அம்மா... என்ன ஹாட் பாக்ஸ் வாங்கிட்டு வந்திட்டியா?”

“இல்லம்மா”

“கொண்டா அந்த பணத்தை!”

எப்பவும் சிரித்து கொண்டே இருப்பவளுக்கு அன்று என்ன கோபமோ, ருவாயை வேகமாக வாங்கியவள், இரண்டாக கிழித்தே விட்டாள்.

“என்னடி பணத்தை போய் கிழிக்கறே!”

“ஆமா..., நீ தான் வாங்கித் தர சொன்னா தரவே இல்லை.... சரி போவுது விடு, நான் மச்சான்கிட்ட கொடுத்திட்டு வேறு பணம் வாங்கிக்குவேன்”

”ஏய்..., இப்படியெல்லாம் செய்தால், வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்படுவேடீ!”

அவள் சிரித்து கொண்டே அதை ஃபரீதிடம் கொடுக்க, அவனும் சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டான்.

ஆனால், அப்போது அவளுக்கு தெரியவில்லை, பின்னால் வரப்போவது!

அவள் கர்ப்பமானதும், வீடே கொண்டாடியது. ஆனா, கடைசி பெண் பாஜிலா மட்டும் மர்ஜியோடு எப்பவும் மல்லுக் கட்டுபவள், இப்போது சரியாக பேசுவது கூட இல்லை.

திருமணம் முடிந்து ரெண்டு மாதத்திலேயே, ஃபரீதின் வியாபாரத்தில் ஒரு அவசர தேவை என்று, ஒவ்வொரு நகைகளாக வாங்கி போனான் அடமானம் வைக்க..... இது பாத்திமாவுக்கே தெரியாமல், நடந்து கொண்டிருந்தது....

ஒரு நாள் ஒரு விசேஷத்துக்கு மர்ஜியா தன் நாத்தனாரின் நகைகளை போட்டு வர,

“மர்ஜியா... உன்னோட நகை எங்கே” பாத்திமா.

“இருக்கு!”

“இருக்குனா எதுக்கு இதை போட்டுட்டு வரே?”

“சும்மா தொண தொணக்காத அம்மா... எல்லாம் எனக்கு தெரியும்!”

மர்ஜியா அதோடு வெட்டி விட்டாள். அவளை கோபித்து கொள்ளவும் வழியில்லாத பாத்திமா, வெளியாரிடம் தன் மருமகனின் யோக்கியதையை சொல்லி சொல்லி பொழம்பி வந்தாள். தான் ஏமாந்து போய் விட்டோமோ என்று மனதில் தோன்றியது... கச்சாமாவைப் போல இவளுடைய வாழ்க்கையும் ஆகி விடக்கூடாது என்று மனம் இறைவனை வேண்டியது...

மனக்காயத்துக்கு மருந்து போடுவது போல, மர்ஜியாவுக்கு கவர்ன்மெண்ட் மேனேஜ்மெண்ட் ஸ்கூலில், லீவ் போஸ்ட் கிடைத்தது. அதாவது, யாராவது லீவ் என்றால் போனால் போதும். அவர்கள் வாங்கும் சம்பளம் இவளுக்கு!

கொஞ்சம் நாளில் அடமான நகைகள் மர்ஜியாவின் சம்பாத்தியத்தில் திரும்பி வந்தன. அதன் பின், அங்கேயே, ஃப்ரீ சர்வீஸ் கொஞ்சம் நாட்கள் செய்தால், வேலை போட்டுத் தருவதாக சொல்ல, ஃப்ரீ சர்வீஸ் செய்ய ஆரம்பித்தாள்.

மீண்டும் நகைகள் போய் விட்டன. இந்த முறை நிரந்தரமாக!

எதிர்பார்ப்புக்கு மாறாக, குழந்தை ஏழாம் மாதமே பிறந்து விட்டது...

அழகான ஆண்குழந்தையை பார்த்ததும், எல்லாருக்கும் மனமெங்கும் மகிழ்ச்சி!

வந்திருந்த சைதாவிடம் பாத்திமா பூரிப்புடன், குழந்தையை காட்டினாள்,

“எங்க குடும்பத்தில் முதல் ஆண் வாரிசு பாரு!”

”பையன் செவ செவனு ரொம்ப அழகா இருக்கான்!”

அவர்களின் மகிழ்ச்சி ரொம்பவும் நீடிக்கவில்லை... ஓரிரு நாளில், குழந்தையின் உடல் நீலநிறமாக மாறி, ரத்தம் செலுத்த வேண்டும் என்று சொல்லி விட்டார்கள்.

அதுவரை சரிவர பேசாமல் இருந்த பாஜிலா தான் ரத்தம் கொடுத்தாள்.

ஓரளவு பையன் தேறிவிட்டான். ஆனால், குறை மாதத்தில் பிறந்ததால், ரொம்பவும் கவனமாக வைத்திருக்க வேண்டும் என்றும், குளிக்கக் கூட வைக்கக்கூடாது, சும்மா உடலை துடைத்துத் தான் விட வேண்டும் என்றும்... மூன்று மாதம் முடியும் வரை ரொம்பவும் கவனம் தேவை என்றும் சொல்லி விட்டார்கள்.

ஃபரீத் வருமானத்தில் குறை இருந்தாலும், பாசத்தில் குறையில்லை. மனைவியையும் மகனை நன்றாகவே பார்த்துக் கொண்டான்.

மர்ஜியாவுக்கு குழந்தை சவலைப்பிள்ளையானதால், ஃப்ரீ சர்வீஸை தொடர முடியவில்லை.

அப்போதான் சுஹைனாவின் திருமணம் நிச்சயமானது.

சுஹைனாவின் திருமணத்தில், நாலு மாத கைக்குழந்தையும் வந்து கலந்து கொண்டாள்....!

திருமணத்துக்கு மருதாணி போட்டு விட்டு, கூடவே இருந்தாள், மர்ஜியா!

அடுத்து, ஒரு மாதத்தில், தான் மீண்டும் உண்டாகியிருப்பதை மர்ஜியா உணர்ந்த போது, கவலையாக இருந்தது...!

முதல் குழந்தை இன்னமும் சத்தில்லாமல் இருக்கும் போது, இப்போ அடுத்த குழந்தைக்கு என்ன அவசரம் என்று எல்லாரும் திட்டுவார்களோ என்று பயமாகவும் இருந்தது.

முதல் குழந்தை ஆரிப் மேல் எல்லாருக்கும் ரொம்ப பிரியம். அதிலும், ஆப்பிக்கு அவனைக் கண்டால், உயிர். தான் டீச்சர் வேலைக்குப் போய் சம்பாதிக்கும் பணத்தை அவனுக்கு தான் அதிகமாக செலவளிப்பாள்.

ஆரிபுக்கு நடக்கும் பருவம் வந்தும் நடக்காமல், இருக்க, நிற்க வைத்தால், கால்கள் பின்னிக் கொண்டன. உடனே டாக்டரின் தூக்கிப் போக, அவர் சொன்ன பதில் சற்று அதிர்ச்சியாக இருந்தது....

தொடரும்)

3 comments:

ஸ்ரீ.கிருஷ்ணா said...

ஹாய் அக்கா .. nice story ரெண்டு மூணு episode படிசிருக்கே good....

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வேகமாக்ச் சென்று கொண்டிருந்த
கதை (புகை)வண்டியை
திடீரென ஒரு ஸ்டேஷனில்
நிறுத்தி தொடரும் போட்டு விட்டீர்களே?

SUMAZLA/சுமஜ்லா said...

ஹா...ஹா...இந்த தொடரும் எப்போது தொடரும் என்று எனக்கே தெரியாது...