Saturday, October 24, 2009

சாயபு வீட்டு சரித்திரம் - 25

விடிந்தும் விடியாத அதிகாலைப்பொழுது! கொட்டரை ரூமில் ஏதோ சத்தம் வர, சற்றே பயத்துடன் எழுந்து வந்தாள் பாத்திமா...அங்கே பாஜிலாவைப் பார்த்ததும் மறைந்து நின்று கவனித்தாள். டிரங்க் பெட்டியின் அருகே இருக்கும் சிறு மர பீரோவில் எதையோ வைத்தவள், அடி மேல் அடி வைத்து பூனை போல் பதுங்கி வந்து மீண்டும் தன் படுக்கையில் படுத்துக் கொண்டாள்.

அவளுடைய செய்கைகள் விசித்திரமாகப்பட்டது. அந்த மர பீர்வா, பாஜியின் சொத்து! அதில் அவளுடைய துணிமணிகளும் பொருட்களும் இருக்கும். அவள் அங்கே அப்படி என்ன ரகசியமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் என்று உறுத்தியது பாத்திமாவுக்கு!

சற்று நேரத்தில் மீண்டும் பாஜிலா உறங்கிப் போக, அந்த மர பீரோவைத்திறந்து பார்த்தாள் பாத்திமா! ஒரு சின்னஞ்சிறு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவில் ஒரு அழகிய ஆண்மகன் சிரித்துக் கொண்டிருந்தான். கவலைக்கு மேல் கவலையாக தாக்கியது பாத்திமாவை! நெஞ்சுக்குள் சுரீரென்றது!

திரும்பியவள், அங்கே மர்ஜியா நிற்பதைப் பார்த்து விட்டாள்...

“அம்மா...பாஜியைப் பற்றி உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்...சோத்தூட்டுக்கு வாம்மா”

இரண்டு பேரும் அங்கே போனார்கள்...

“அம்மா... நான் அன்னிக்கு பாஜியோட நோட்டுக்குள்ள ஒரு லட்டரைப் பார்த்தேன்மா...லட்டர் சிலோன்ல இருந்து வந்திருக்கு! யாரோ ரம்ஜின்னு பேர் போட்டிருந்துச்சு! லவ் லெட்டராட்டம் இருக்குதும்மா! நீ யார் எவர்னு அவ கிட்ட கேட்டுப் பாரு”

அடுத்த நாள் பாஜியை விசாரித்தார்கள். எல்லாக் கேள்விகளுக்கும் மௌனமே பதிலாகக் கிடைத்தது. ஓரிரு கேள்விகளுக்கு மட்டும் வற்புறுத்தி, சற்றே மிரட்டலாகக் கேட்டதால், பதில் கிடைத்தது...

விவரம் இது தான், பாஜிலா சிலோன் ரேடியோவுக்கு சமையல் குறிப்பு அனுப்ப, அதை இவர் முகவரியோடு ரேடியோவில் வெளியிட, ஸ்ரீலங்கா போர்ட்ஸ் அத்தாரிட்டியில் வேலை செய்யும் ரம்ஜின் என்பவர், இவளுக்கு பாராட்டுக் கடிதம் அனுப்பி இருக்கிறார். பேனா நட்பாகத் தொடர்ந்த வழக்கம் பிறகு காதலாய் மாறி இருக்கிறது...

நாடு விட்டு நாடெல்லாம் திருமணம் செய்து கொடுக்க முடியாதென்று பாத்திமா கண்டித்தார். இதையெல்லம் விட்டு விட்டு ஒழுங்காக படிப்பில் கவனம் செலுத்த நயமாக எடுத்துச் சொன்னார். ஆண்பிள்ளை இல்லாத வீட்டில் இதெல்லாம் சாத்தியமில்லை என்ற எதார்த்த உண்மையை புரிய வைக்க முயன்றார்.

அதன் பின், பாஜிலா மர்ஜியாவை இன்னமும் வெறுத்தாள். பேச்சு வார்த்தை கூட அதிகமாகக் கிடையாது...மர்ஜியா தானே தாயிடம் இந்த விஷயத்தை போட்டுக் கொடுத்து விட்டாள் என்ற வன்மம் மனதில் நீங்காமல் நிலைத்திருந்தது.

அதன் பிறகு, பாஜியின் காதல் பற்றி எந்த ஒரு விஷயமும் பாத்திமாவுக்குத் தெரியவில்லை. அவள் திருந்தி விட்டாளா இல்லையா என்றும் புரியவில்லை. ஆனால், மாதம் ஒரு முறை, சிலோனில் இருந்து தபால் மட்டும் வந்து கொண்டிருந்தது. அவள் பதில் போடுகிறாளா இல்லையா என்பதும் தெரியவில்லை. ஆனால், அடிமனதில், தான் ஏதோ செய்ய தவறி விட்ட ஒரு சிறு கீறல் மட்டும் இருந்தது.

ஆப்பிக்கும் மப்பிள்ளை பார்த்து வந்தாள்., ஆனால் ஒன்றும் தோதாக அமையவில்லை..., அவளுக்கு முடித்த கையோடு பாஜிக்கும் முடித்து விட வேண்டும் என்று உறுதியாக இருந்தாள்.

மர்ஜியின் மகன் ஆரிஃபுக்கு ‘செரிபரல் பால்ஸி’ என்று மருத்துவர் சொல்லி இருந்தது எல்லார் மனதுக்கும் கஷ்டமாக இருந்தது. அதாவது, குழந்தை வயிற்றில் இருக்கும் போதோ, அல்லது பிறக்கும் போதோ, மூளையில் அடிபட்டு அதனால் ஏற்பட்ட மூளை வாதம் இது. இதனால், ஆரிஃபுக்கு கால்கள் பின்னிக்கொண்டு நடக்க வேண்டிய பருவத்தில் நடக்கவில்லை. மற்றபடி நார்மலாகவே இருந்தான். பேசவும் ஆரம்பித்தான்.

ஆப்பிக்கு ஆரிஃப் தான் செல்லப் பிள்ளை. வீட்டில் முதல் ஆண்வாரிசு என்று எல்லாருமே அவனைக் கொண்டாடினாலும், ஆப்பிக்கு மட்டும் கொஞ்சம் ஸ்பெஷல் தான். வேலைக்கு போய் வந்த நேரம் போக மீதி நேரத்தில் அவனை எந்நேரமும் இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு தான் வேலைகள் செய்வாள்.

மர்ஜியின் புருஷன் ஃபரீதுக்கு நாளுக்கு நாள் வியாபாரம் தொய்வடைந்து, ஒவ்வொன்றாக மர்ஜியின் நகைகளை எல்லாம் அழித்து விட்டான். ஆனாலும், மர்ஜிக்கு தன் தாயைப் போலவே, புருஷன் மேல் குறையாத அன்பு!

முதல் மகன் இப்படி இருக்க, இவ்வளவு சீக்கிரத்தில், மர்ஜிக்கு அடுத்த குழந்தை வயிற்றில் உருவானது பாத்திமாவுக்கு சற்றும் பிடிக்க வில்லை. ஆனால், மக்கட் பேரும் மகேசன் பேரும் சொல்லிக் கொண்டா வருகிறது?

பத்தாம் மாதம், அழகான ஆண்மகனைப் பெற்றெடுத்தாள். இந்த குழந்தை சற்று கருப்பாக இருந்தாலும், மர்ஜியைப் போலவே நல்ல களையாக இருந்தது. முழு ஆரோக்கியமான குழந்தையாக இருந்தும், வேண்டா விருந்தாளியாய் அக்குழந்தை யாரையும் கவரவில்லை. ஆப்பி கூட, இதை ஆரிஃபுக்கு போட்டியாகத்தான் பாவித்தாள். இவனுக்கு ஆஷிக் என்று பெயரிட்டனர்.

ஆஷிக், மர்ஜியின் மாமியார் வீட்டில் அதிக ஒட்டுதலுடன் வளர்ந்தான். அதிகமாக மர்ஜியின் நாத்தனார் வீட்டில், அல்லது சின்ன மாமியார் வீட்டில் தான் இருப்பான்.

பாத்திமாவுக்கு வயதாகிக் கொண்டே இருந்தது. உடல் நிலை அடிக்கடி சீர் கெட ஆரம்பித்தது. ஆபிதாவுக்கு தக்க வரன் அமையவே இல்லை. படித்த மாப்பிள்ளையாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனாலும், அமையவில்லை.

ஒரு நாள் அதிகாலையில் மூச்சுத் திணறல் ஏற்பட, ஜாயிரிடம் சொல்லி அவசர அவசரமாக ஆட்டோ பிடித்து வந்து, கோஷா ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போக, எல்லாரையும் கவலை மேகம் சூழ்ந்து கொண்டது.

பாஜிலா மட்டும் வீட்டில், தன் தாய்க்காக குர்ஆன் ஓதியபடி, துவா செய்தபடி காத்திருக்க, பாத்திமா திரும்பி வந்தார், மய்யித்தாக – பிணமாக!

(வளரும்)

-சுமஜ்லா.
.
.

1 comment:

asiya omar said...

சுஹைனா இந்த வாரம் கதையில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திருப்பு முனை,திரும்பவும் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.ஆனால் மனசு தான் கனத்துவிட்டது.