Tuesday, October 13, 2009

குழந்தைகளின் மனநிலை

“கண்ணா...வெளியே போனால், எதுவும் கேட்கக் கூடாது. அப்படினா வா... இல்லாட்டி வேண்டாம்.. வீட்டிலேயே இருந்துக்கோ”

இப்படி நான் சொல்லிக் கொண்டிருந்த காலம் போய்,

“கண்ணா வெளியே போகலாம், வரியா?”

“எனக்கு எதாவது வாங்கித் தர்ரதுனா வரேன், இல்லாட்டி வரல”

இப்படி சொல்ல ஆரம்பித்தான் என் ஆறு வயது மகன் லாமின்.

பணத்தின் அருமை கொஞ்சமும் தெரியாமல், கண்ணில் கண்ட பொருளை எல்லாம் கேட்டு அடம் பிடிப்பான். அந்த பொருள் அவனுக்கு தேவையில்லை அல்லது உபயோகமில்லை என்று எடுத்து சொன்னாலும் கேட்பதில்லை. ஆனால்...

ஆனால்...எங்கள் வீட்டு முருங்கை மரம் காய்க்க ஆரம்பித்த போது, அக்கம் பக்கம், உறவுகளுக்கெல்லாம் கொடுத்தது போக நிறையவே இருந்தது. அதை என்னவர், பக்கத்து கடையில் கொடுத்து காசு வாங்கி வர என் மகனிடம் சொல்ல, ரொம்ப ஆர்வமாக முருங்கைக்காய் விற்ற பணத்தை உண்டியலில் சேமிக்க ஆரம்பித்தான்.

எங்களிடம் காசு வாங்கி போய், கடையில் பலூன் போன்ற பொருட்கள் வாங்குவானே தவிர, முருங்கைக்காய்காசை தொட மாட்டான். அது தன் பணம், அதனால், அதை செலவு செய்தால் குறைந்து விடும் என்று ரொம்பவே உஷாராக இருப்பான்.

போன ரம்ஜானில் அன்பளிப்பாக வந்த பணத்தை அத்துடன் சேர்த்து, என் மகனும் மகளும் ஆளுக்கு 10 என்ற எண்ணிக்கையில் ஐடியா செல்லுலார் கம்பெனியின் (வாங்கிய விலை 64 ஒரு ஷேர்) ஷேர்களை வாங்கி வைத்திருக்கிறார்கள். ‘ஆக நிறைய பணம் சேர்த்து மீண்டும் ஷேர் மார்க்கட்டில் போடுவேன்’ என்று அவ்வப்போது, எங்கள் குட்டி மகன் சொல்லுவான்.

நான்கு நாட்கள் முன்பாக, நாங்கள் ஈரோட்டில் எண்டர்டெயின்மெண்ட் ஃபேர்(எக்ஸிபிஷன்)க்கு கிளம்பினோம்.

“லாமின், லாஃபிரா, இங்க பாருங்க, நான் ஆளுக்கு 50 ருபாய் தான் தருவேன்; நீங்கள் அதுக்குள்ளாக தான் செலவு செய்து கொள்ள வேண்டும். பொருள் வாங்கினாலும் சரி, இல்லை விளையாட்டுக்கு செலவு செய்தாலும் சரி”

என்று சொல்லி, மகன், மகள் இருவருக்கும் ஆளுக்கு 50 ருபாயை 10 ருபாய் நோட்டுக்களாக கொடுத்து விட்டோம். எங்களுக்கு தெரியும், அந்த பணம் போதாது என்று! ஆனாலும், பணத்தின் அருமையை கற்று கொடுக்க, இது நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தோம்.

நுழைவு கட்டணம், ஆளுக்கு 10 ருபாய். அதை என் கணவர் கொடுத்து டிக்கட் வாங்கிக் கொண்டார்.

உள்ளே போனோம். ஒரிரு வரிசை கடைகள், பிறகு வகை வகையான ஊஞ்சல்கள், விளையாட்டுகள்.

என் மகன் அப்படியே பார்வையை ஓட்டிக் கொண்டே வந்தான். ஏதாவது வாங்கலாம் என்றான். உன் பணத்தில் தான் வாங்க வேண்டும் என்று நான் சொல்ல அமைதியாகி விட்டான்.

சிறிது தூரம் சென்றதும், கூலிங்கிளாஸ் வேண்டும் என்றான். ஏற்கனவே வீட்டில் இரண்டு மூன்று இருக்கிறது. அதுவும் பலூன்காரன் 10 ருபாய்க்கு விற்கும் பிளாஸ்டிக் கூலிங்கிளாஸ் தான். அங்கே 30 ருபாய்.

என்னவர் வாங்கித் தந்து விட்டு, அவன் பாக்கெட்டில் வைத்திருந்த 50 ருபாயில் இருந்து 30 ருபாய் எடுத்து கொடுத்தார்.

ஓரடி முன்னால் நகர்ந்தவனிடம், “கண்ணு, இங்க பார், உங்கிட்ட இன்னும் 20 ருபாய் தான் இருக்கு செலவு பண்ண...” என்றேன்.

உடனே அந்த கூலிங்கிளாஸ் வேண்டாம் என்று திருப்பிக் கொடுத்து விட்டான்.

கடைக்காரர் திட்டிக் கொண்டே பணத்தை திருப்பிக் கொடுத்தார்.

இப்போ, பையனுக்கு கூலிங்கிளாஸ் வாங்கியதை விட பணத்தை திருப்பி வாங்கியதில் அதிக சந்தோஷம்!

சிறிது தூரம் நடந்தவன், ஒரு கடையில் பெண்டன் வாட்ச் விற்பதை பார்த்து நின்று விட்டான். கடைக்காரர் ஒரு வாட்சை எடுத்து அவன் கையில் கொடுக்க,
“இது எவ்ளோ, டாடி?”

“நூறு ருபா...ஒன் ஹண்ட்ரட் ருபீஸ்”

“ஒன் ஹண்ட்ரடா...” என்று திருப்பி திருப்பி இரண்டு முறை கேட்டு விட்டு, பேசாமல் அந்த வாட்ச்சை கடைக்காரரிடம் கொடுத்து விட்டான். எங்களுக்கு கொஞ்சம் பாவமாக போய், வாங்கிக் கொடுத்து விடலாமா என்று தோன்றியது. இருந்தாலும், ஒரு முறையாவது இப்படி செய்ய வேண்டும் என்று விட்டு விட்டோம்.

கடைசிவரை எந்த கடையிலும் எந்த பொருளும் மகன் மகள் இருவரும் வாங்க வில்லை.

இப்போ விளையாட்டுகள் மற்றும் தின்பண்டங்கள் இருக்கும் பகுதிக்கு வந்து விட்டோம்.

“டாடி, அந்த டிக்கட் கொடுங்க” லாமின்.

“எதுக்குபா? அது உள்ள இருக்கு!”

“கொடுங்க டாடி வேணும்” அடம் பிடித்து வாங்கிக் கொண்டான். அந்த டிக்கட் இருந்தால் போதும் எந்த விளையாட்டு வேண்டுமானாலும் விளையாடலாம் என்று அவன் நினைத்து விட்டான்.

“கண்ணா...அந்த டிக்கட்டை வைத்து விளையாட முடியாது, எல்லாத்துக்கும் பணம் கட்டணும்!”

“என்னது பணமா?” கவலை வந்து விட்டது அவனுக்கு!

“டேய் வரியா ஜெயிண்ட் வீல்ல போகலாம்!” மகள் கூப்பிட,

“ஆப்க்கா நான் குதிரையில போறேன்!”

“இல்லடா, அதுல போனா தான் பூரா எக்ஸிபிஷனும் மேல இருந்து பார்க்கலாம் ஜாலியா இருக்கும்!”

சரி என்று இருவரும் அவரவர் பணத்தில் தலைக்கு 20 கொடுத்து ஜெயிண்ட் வீலில் போய் வந்தார்கள்.

அடுத்து, ரோலர் கோஸ்ட்டரில் போக ஆசைப்பட்டான்.

“20 ருபாய் கொடு”

“டாடி, ஜெயிண்ட் வீலில் போக ஆப்க்கா தான கூப்பிட்டுச்சு! அதனால ஆப்க்கா தான் பணம் தரணும்!”

“போடா நானெல்லாம் தர மாட்டேன்...நான் கூப்பிட்டா, நீ ஏன் வந்த?” மகள் சிணுங்க, என்னவர் தான் பணம் கொடுத்து ரோலர் கோஸ்ட்டருக்கு டிக்கட் எடுத்துக் கொடுத்தார்.

அதில் போய் வந்தார்கள்.

இப்போ இருவரிடமும் தலா 30 இருந்தது.

மகள், அவளுடைய ஃபேவரிட்டான மசால் பூரி கேட்க, 20 ருபாய் கொடுத்து வாங்கிக் கொண்டாள்.

இவன், கேட்ட கரும்புச்சாறுக்கு ருபாய் 10 கொடுத்து என்னவரே வாங்கிக் கொடுத்து விட்டார்.

அடுத்ததாக, அவன் ‘கப் சாசர்’ என்னும் இன்னொரு விளையாட்டுக்கு போக ஆசைப்பட, அவனுடைய பணம் ருபாய் 10 கொடுத்து விளையாடி வந்தான்.

மீண்டும் அப்பளம் கேட்க, என்னவரே வாங்கிக் கொடுத்தார்.

மகளிடம் ருபாய் 10 மட்டும் இருந்தது. நான் 30 ருபாய்க்கு ஒரு ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட, அவளும் கேட்டாள். அவளுடைய 10 ருபாய் கூட இன்னொரு 20 போட்டு வாங்கிக் கொடுத்தேன்.

ஆக, என் மகளிடம் இருந்த பணம் காலி! என் மகனிடம் மட்டும் 20 ருபாய் இருந்தது.

பொருட்காட்சியை விட்டு வெளியே வந்தோம். அங்கே ஒட்டகங்கள் சவாரிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

கேமரா கொண்டு போக மறந்து விட்டதால், இன்னொரு நாள் ஒட்டக சவாரிக்காக கூட்டி போகலாம் என்று நாங்கள் பேசிக் கொண்டோம்.

“இன்னொரு நாள் வேண்டாம் டாடி, இப்பவே போகலாம்...” லாமின்

“சரி ஒட்டக சவாரிக்கு 20 ருபாய்! உன் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை கொடு” என்னவர்.

“பணம் கொடுக்கணுமா...அப்படீனா வேண்டாம்”

பெரிய மனுஷன் மாதிரி, அவன் சொன்னதை கேட்டு எங்களுக்கு ஒரே சிரிப்பு!

நேராக போய், டோக்கன் கொடுத்து அவர் வண்டியை எடுத்து வந்தார். எல்லாரும் வண்டியில் ஏறி வெளியே வரும் போது, கலர் கலராக லைட் எறியும் வாட்ச்சை பார்த்து விட்டான்.

“மம்மி, எனக்கு அது வேணும்”

சரியென்று ஒன்று வாங்கிக் கொடுத்து, அவன் பாக்கெட்டில் கைவிட்டு மீதி இருந்த 20 ருபாய் பணத்தை எடுக்க, அவன் முகம் இத்துனூண்டாக ஆகி விட்டது.

எல்லா பணமும் தீர்ந்து விட்டதே என்று ரொம்பவும் கவலை பையனுக்கு! ஷேர் மார்க்கட்டில் போட பணம் ஏதும் மிச்சமாகவில்லை என்று நினைத்திருப்பான் போலும்.

என் மகளோ, “டாடி, அடுத்த தடவை 50 ருபாயெல்லாம் பத்தாது...அதிகமா தரணும்” என்றாள்.

வீட்டுக்கு வந்ததும், என் கணவர், மொத்தம் என் மகனுக்கு ஆன செலவுகளை வரிசையாக எழுதி அவனை கூட்ட சொன்னார். சரியாக 100 ருபாய் வந்தது...

“பார்த்தியா...உன் பணம் 50 ருபாய் போக மேற்கொண்டு என் பணம் 50 ருபாயை செலவு செய்திருக்கிற!” என்று அவர் சொல்ல, அப்பவும் அவனுக்கு பணம் மீதி ஆகாத கவலை தான்!

ஆக, வழக்கமாக இது போன்ற இடங்களுக்கு போனால், ஆயிரம் ருபாய்க்கு குறையாமல் ஆகும் செலவு, இந்த முறை மொத்தமே 250 ருபாய் தான் ஆகி இருந்தது! பணம் மிச்சப்பட்ட சந்தோஷத்தை விட, எங்கள் குழந்தைகளுக்கு நல்லதொரு வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொடுத்த சந்தோஷம் எங்களுக்கு!

நீங்களும் இது போல கற்றுக் கொடுக்கலாமே!

-சுமஜ்லா.

27 comments:

Menaga Sathia said...

நல்ல பதிவு,பின்னால் எனக்கும் உபயோகப்படும் சுகைனா.

எப்படியிருக்கிங்க?படிப்பெல்லாம் எப்படி போகுது?

ராஜவம்சம் said...

என் தாய் என்னை இவ்வாறு தான் வளர்த்தார் நான் என் பிள்ளைகளை இவ்வாறே வளர்க்க ஆசைப்படுகிறேன்

பீர் | Peer said...

ஷேர் பற்றிய அறிவு எனக்கே இல்லைங்க.. உங்க பிள்ளைங்க அதில வர்த்தகம் ஆரம்பிச்சிட்டாங்க.. (வாழ்த்துக்கள் குழந்தைகளே..)

அந்த 50 ரூபாய் மேட்டர், எனக்கும் உபயோகமாகும். நன்றி.

(என்னாச்சு, பதிவுகள் குறைந்துவிட்டது?)

S.A. நவாஸுதீன் said...

மாஷா அல்லாஹ். சரியான முறையில் பிள்ளைகளை வழிநடத்திச் செல்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.

SUFFIX said...

நல்ல பகிர்வு, இப்பொழுது உள்ள மால் மற்றும் சூப்பர் மார்க்கெட் கலாச்சாரத்தில் பணம் எப்படி கரைகிறதுன்னே தெரியவில்லை, இப்படி ஒரு கான்ஷியஸ் தேவையான ஒன்று.

நட்புடன் ஜமால் said...

நல்ல விதமாய் இருக்கு.

-------------------

படிப்பு எப்படிங்க போகுது ???

R.Gopi said...

சுமஜ்லா..

எங்களுடன் இணைந்து தீபாவளி கொண்டாட வாருங்கள்... வாழ்த்து இதோ இங்கே... கூடவே மெகா கிஃப்ட்.. வாருங்கள்... கொண்டாடுங்கள்.. கிஃப்ட் அள்ளுங்கள்...

ந‌ண்ப‌ர்க‌ள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்... http://edakumadaku.blogspot.com/2009/10/blog-post.html

R.Gopi said...

//பணத்தின் அருமை கொஞ்சமும் தெரியாமல், கண்ணில் கண்ட பொருளை எல்லாம் கேட்டு அடம் பிடிப்பான். அந்த பொருள் அவனுக்கு தேவையில்லை அல்லது உபயோகமில்லை என்று எடுத்து சொன்னாலும் கேட்பதில்லை.//

அதானே குழந்தை ........

//ரொம்ப ஆர்வமாக முருங்கைக்காய் விற்ற பணத்தை உண்டியலில் சேமிக்க ஆரம்பித்தான்.//

ப‌லே...

//எங்களிடம் காசு வாங்கி போய், கடையில் பலூன் போன்ற பொருட்கள் வாங்குவானே தவிர, முருங்கைக்காய்காசை தொட மாட்டான். அது தன் பணம், அதனால், அதை செலவு செய்தால் குறைந்து விடும் என்று ரொம்பவே உஷாராக இருப்பான்.//

ஹா...ஹா... சூப்ப‌ர்... இந்த‌ கால‌த்து ப‌ச‌ங்க‌ எவ்ளோ உஷார்....

//என் மகனும் மகளும் ஆளுக்கு 10 என்ற எண்ணிக்கையில் ஐடியா செல்லுலார் கம்பெனியின் (வாங்கிய விலை 64 ஒரு ஷேர்) ஷேர்களை வாங்கி வைத்திருக்கிறார்கள். ‘ஆக நிறைய பணம் சேர்த்து மீண்டும் ஷேர் மார்க்கட்டில் போடுவேன்//

அச‌த்த‌ல் "ஐடியா"வா இருக்கே... வாங்கினாலும் ந‌ல்ல‌ க‌ம்பெனி ஷேர்தான் வாங்கி இருக்காங்க‌...

//எங்களுக்கு தெரியும், அந்த பணம் போதாது என்று! ஆனாலும், பணத்தின் அருமையை கற்று கொடுக்க, இது நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தோம். //

இத‌ற்காக‌ உங்க‌ளுக்கு பாராட்டுக்க‌ள்... இதுபோல் அனைவ‌ரும் செய்ய‌லாம்...

//வழக்கமாக இது போன்ற இடங்களுக்கு போனால், ஆயிரம் ருபாய்க்கு குறையாமல் ஆகும் செலவு, இந்த முறை மொத்தமே 250 ருபாய் தான் ஆகி இருந்தது! பணம் மிச்சப்பட்ட சந்தோஷத்தை விட, எங்கள் குழந்தைகளுக்கு நல்லதொரு வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொடுத்த சந்தோஷம் எங்களுக்கு!//

ரொம்ப‌ அழ‌கா, கோர்வையா எழுதி இருக்கீங்க‌... ந‌ல்ல‌ விஷ‌ய‌ம்....

//நீங்களும் இது போல கற்றுக் கொடுக்கலாமே!//

க‌ண்டிப்பாக‌ அனைவ‌ரும் முய‌ற்சிக்க‌ வேண்டிய‌ ஒன்று...

கிரி said...

நல்ல ஐடியாவாக இருக்கு

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

வித்தியாசமான ஐடியாவா இருக்கே!

ISR Selvakumar said...

மிக அருமையான பயனுள்ள பதிவு

ஹுஸைனம்மா said...
This comment has been removed by the author.
Mrs. Hussain said...

நல்ல வழிகாட்டுதல் பிள்ளைகளுக்கு!! என் பெரிய மகனும் (12 வயது) இப்படி சேர்த்து சேர்த்து தற்போது சில ஆயிரம் திர்ஹம்கள் ஆயிருக்கிறது; 500 அல்லது 1000 ஆகும்போது பேங்கில் சேமிப்பு பத்திரம் வாங்கிவிடுவோம்!! (ஷேர்களில் நாட்டமில்லை). சின்னவன் (6 வயது) இப்பதான் தொடங்கியிருக்கிறான், பார்ப்போம்!!

அன்புடன் மலிக்கா said...

என் மகளும் சரி மகனும் சரி, எங்களின் மனநிலைகளை புரிந்து நடக்கூடியவர்கள்,

சிறுவயதிலிருந்தே அதேபோல் பலகிவிட்டார்கள், நாங்க ரொம்பவும் கொடுத்துவைத்தவர்கள்,இறைவன் கொடுத்த அரிய பொக்கிஷம் என் குழந்தைகள், அல்ஹம்துல்லில்லாஹ்..

"உழவன்" "Uzhavan" said...

மிக அருமை. எல்லாவற்றையும் விட குழந்தைகளுக்கு வாழ்க்கையைக் கற்றுத்தருவதுதான் ரொம்ப முக்கியம்.
இப்பவே ஷேர் மார்க்கெட்டா.. வாழ்த்துக்கள் குட்டீஸ். உலகப் பணக்காரன் வேரன் பப்பெட்தான் ஞாபகத்திற்கு வருகிறார். அவரும் உங்களைப் போன்று பள்ளிப் பருவத்திலேயே ஷேர் மார்க்கெட்டிற்குள் வந்தவர்.

தீபாவளி வாழ்த்துக்கள்!

SUMAZLA/சுமஜ்லா said...

//எப்படியிருக்கிங்க?படிப்பெல்லாம் எப்படி போகுது?//

நன்றி மேனகா!

பெருமைக்காக சொல்லவில்லை, இதுவரை வைத்த எல்லா பரிச்சைகளிலும் நான் தான் ஃபர்ஸ்ட் மார்க்! ஆனால் இணைய நட்பை இழக்கிறோமே என்ற கவலை தான் மனதை அரிக்கிறது.

SUMAZLA/சுமஜ்லா said...

//ஷேர் பற்றிய அறிவு எனக்கே இல்லைங்க.. உங்க பிள்ளைங்க அதில வர்த்தகம் ஆரம்பிச்சிட்டாங்க.. (வாழ்த்துக்கள் குழந்தைகளே..)

அந்த 50 ரூபாய் மேட்டர், எனக்கும் உபயோகமாகும். நன்றி.

//

நாங்கள் ஷேர் பற்றி பேசிக் கொள்வதை பார்த்து அவர்களுக்கும் ஆர்வம் வந்து விட்டது.


//(என்னாச்சு, பதிவுகள் குறைந்துவிட்டது?)//

கேட்காதிங்க...அழுதுருவேன்! 24 மணி நேரம் பற்றுவதில்லை...??????????? படிக்கவும் எழுதவும் நேரம் சரியாக இருக்கிறது!

SUMAZLA/சுமஜ்லா said...

//படிப்பு எப்படிங்க போகுது ???//

நன்றி ஜமால், மேலேயே பதில் இருக்கிறது...இப்ப ரெகார்ட்ஸ் எல்லாம் வந்து விட்டது...அந்த வேலை இனி தொடங்க வேண்டும்.

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி கோபி! நீண்ட விமர்சனத்துக்கு! உங்க ப்ளாகில் பதில் தந்திருக்கிறேன்.

SUMAZLA/சுமஜ்லா said...

//நல்ல வழிகாட்டுதல் பிள்ளைகளுக்கு!! என் பெரிய மகனும் (12 வயது) இப்படி சேர்த்து சேர்த்து தற்போது சில ஆயிரம் திர்ஹம்கள் ஆயிருக்கிறது; 500 அல்லது 1000 ஆகும்போது பேங்கில் சேமிப்பு பத்திரம் வாங்கிவிடுவோம்!! (ஷேர்களில் நாட்டமில்லை). சின்னவன் (6 வயது) இப்பதான் தொடங்கியிருக்கிறான், பார்ப்போம்!!//

கேட்க சந்தோஷமாக இருக்கிறது...

நாங்கள் வட்டி கூடாதென்று சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்வதில்லை... ஷேர் மார்க்கட்டில் போடுவதற்கு அது தான் காரணம்.

SUMAZLA/சுமஜ்லா said...

வாழ்த்துச் சொன்ன எல்லாருக்கும் நன்றி! அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

சந்தனமுல்லை said...

நல்ல பகிர்வு! பிற்காலத்தில் எனக்கு உபயோகமாகும்.

பாத்திமா ஜொஹ்ரா said...

என் பிள்ளைகளிடம் சேர்ந்த டாலர்களை ஒவ்வொரு மாதமும்,கொஞ்சம் கேட்டு வாங்கி,(சுமார் இருபத்து டாலர்)ஊருக்கு அனுப்பி,ஏழைகளுக்கு கொடுக்க சொல்லி அனுப்பி விடுவோம்.பிள்ளைகளிடம் பணம் வாங்கும்போதே,இதை ஏழைகளுக்கு கொடுக்க சொல்லி ஊருக்கு அனுப்புகிறேன்,இது மூலம் அல்லாஹ் நம்மை பொருந்திக்கொல்வான்,நம் பாவங்களை மன்னிப்பான்,அல்லாஹ் தன குரானில் மற்றும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இப்படி ஏழைகளுக்கு உதவ சொல்லி இருக்கிறார்கள் என்று சொல்லி வாங்குவோம்.இதனால் பிள்ளைகளே மாதம் பிறந்தவுடன் தந்துவிடுகிறார்கள்.ஏழைகளுக்கு உதவ வேண்டும் அவர்களுக்கு இப்போதே ஆர்வம் வந்துவிட்டது.பணத்தை அப்படி சேர்க்கலாம்,இப்படி சேர்க்கலாம் என்று வளர்க்க ஆரம்பித்தால்,பிறகு பணம்,பணம் என்று அலைய ஆரம்பித்துவிடுவார்கள்.

Jaleela Kamal said...

சுஹைனா சரியான பதிவு,

என் பெரிய பையனுக்கு இப்படி தான் ரொம்ப கரெக்டே சொன்ன படி செலவு செய்வான் ஆனால் சின்னவன் தான் இப்படி பத்தாது என்பான், ரொம்ப சூப்பரான பதிவு. எல்லோருக்கும் பயன் படும் வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

//நாங்கள் வட்டி கூடாதென்று சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்வதில்லை... ஷேர் மார்க்கட்டில் போடுவதற்கு அது தான் காரணம்.//

சரியே, சுஹைனா. இங்கே (அபுதாபி) உள்ள இஸ்லாமிய வங்கிகளில் சேமிப்பு செய்வதால் வட்டி இல்லை.

இப்னு அப்துல் ரஜாக் said...

//சரியே, சுஹைனா. இங்கே (அபுதாபி) உள்ள இஸ்லாமிய வங்கிகளில் சேமிப்பு செய்வதால் வட்டி இல்லை.//

well said.

இப்னு அப்துல் ரஜாக் said...

//நாங்கள் வட்டி கூடாதென்று சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்வதில்லை... ஷேர் மார்க்கட்டில் போடுவதற்கு அது தான் காரணம்.//

சரியே, சுஹைனா. இங்கே (அபுதாபி) உள்ள இஸ்லாமிய வங்கிகளில் சேமிப்பு செய்வதால் வட்டி இல்லை.