Friday, November 20, 2009

அரபு சீமையிலே... - 11

பிஞ்சு பருவத்திலே
பெற்றோரை இழந்து விட – தன்
நெஞ்சில் தாங்கி வளர்த்தார்,
பாட்டன் அப்துல் முத்தலிப்!

தாயற்ற பிள்ளையை
தான் வளர்த்து வந்தாலும் – தான்
நோயுற்ற காரணத்தால்
அபூதாலிபிடம் ஒப்படைத்தார்!

சிறப்பாய் தன் பேரரை
உவப்பாய் ஒப்படைக்க,
இறப்பென்னும் இயற்கை
இதமாகத் தழுவியது!

பெற்ற பிள்ளையினும் மேலாய்
பேணி வளர்த்தார்!
உற்ற துணையாம் பாத்திமாவும்
கணவர் வழியில் நடந்தார்!!

ஆயிற்று அகவை பன்னிரெண்டு!
பெரிய தந்தைக்கு துணையாய் நின்று,
வணிகம் புரிந்திட்டார் சிரியா சென்று!!

சென்றடைந்த நகரம் புஸ்ரா,
அங்கிருந்த திரித்துவர் பஹீரா,
பாதிரியாரும் சொன்னார்,
ஏதறியா இளவலுக்கு
எதிர்காலச் சிறப்புண்டு!
சூதரியா சிறுவரை நீர்,
சூதனமாய் அழைத்துச் செல்வீர்!
தூதரிவர் என்ற உண்மை,
தெள்ளியதாய் தெரிகிறது,
யூதர்களும் கண்டு கொண்டால்,
உயிருக்கு ஆபத்து!
ஆதரவாய் அழைத்துக் கொண்டு
இக்கணமே ஊர் செல்வீர்!!

சொன்ன மொழி கேட்டவுடன்,
சுருக்காக திரும்பி விட்டார்.
இன்னதென அளவிலாத
அபரிமித லாபம் பெற்றார்!!

ஏந்தல் நபி தன் வாலிபத்தில்,
பாந்தமாய் விளங்கினார், வாணிபத்தில்!!

பணமில்லாதிருப்பினும், நல்ல
குணமிருந்தது!
தனமில்லாதிருப்பினும், சிறந்த
மனமிருந்தது!!

பாடுகள் பார்த்தார் –
பெரிய தந்தையின்
ஆடுகள் மேய்த்தார்!
காடுகள் தன்னில்,
ஆடுகள் மேய - நபியோ
தேடுதல் செய்தார் – உண்மையை
நாடியே நின்றார்!!

வீண் விளையாட்டை
நாடவில்லை மனம் – எனினும்
வீர விளையாட்டில்
ஈடுபட்டார் தினம்!

நேர்மை கொண்டார் – மனதில்
ஓர்மை கொண்டார் – மதியில்,
கூர்மை கொண்டார்!!

அமானிதத்தில் அக்கறை
வாழ்வினிலே சத்தியம்
வாக்கினிலே வாய்மை
ஒழுக்கத்திலே தூய்மை!

நாளும் கொண்டார் – இறை
நாட்டம் கொண்டார் – உயர்
தேட்டம் கொண்டார்!!

கல்லாதவராயினும் – அவர்தன்
நேர்மைக்குப் பரிசாய்
அல்-அமீன் – ‘நேர்மையாளர்’
என்றழைக்கப்பட்டார்!

சொல்லெதுவோ செயலதுவாய்
வாழ்ந்து நின்றார்!
நல்லவிதமாய் அமானிதத்தை
பேணிக் காத்தார்!!

சத்தியம் அழிந்து
அக்கிரமம் தழைத்த,
அன்றைய மக்கா நகரினிலே…

பத்தரை மாற்றுப்
பசும் பொன்னாக,
எத்தகை தீதும்
இத்துணை சூதும்,
அண்டிட தன்னை
வழி தரவில்லை!
மண்டிய கெடுதலில்
மதி செல்லவில்லை!!

வாழ்க்கையிலே தூய்மை
வாக்கினிலே வாய்மை – என
வாழ்ந்து காட்டி வழியமைத்தார்,
வையம் போற்றும் எங்கள் நபி!!

(வளரும்)

பி.கு.:நபிகள்(ஸல்) அவர்கள் பெயர் வரும் இடங்களில் ஸலவாத் ஓதிக் கொள்ளுங்கள்.

-சுமஜ்லா.

8 comments:

கவி அழகன் said...

நன்றாக உள்ளது

நட்புடன் ஜமால் said...

மிக எளிமையாக இனிமையாகவும்

பூங்குன்றன்.வே said...

தெரியாத பல சங்கதிகளை தெரிந்து கொண்டேன் உங்கள் கவிதை வாயிலாக...நல்ல கவி தோழி!!!

தேவன் said...

நல்லா இருக்குங்க !!
நீங்க எழுதுனீங்களா (தப்பா நினைக்காதீங்க)

எளிய நடை விரிந்த உரை!!

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி! இது தொடர் கவிதை...சைடில் லின்க் இருக்கும் பாருங்கள்.

//நீங்க எழுதுனீங்களா (தப்பா நினைக்காதீங்க)//

நர்கிஸ் என்னும் இஸ்லாமிய மாத இதழில், இது தொடராக வந்து கொண்டிருக்கிறது. மாதாமாதம் நான் எழுதி அவர்களுக்கு அனுப்பி வருகிறேன். (மண்டபத்தில் யாராவது எழுதித் தந்து அதை நான் வாங்கி வரலாம் என்று பார்த்தால், அப்படி யாரும் இல்லைங்க...)

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல கவிதை.தொடருங்கள்.

சீமான்கனி said...

வழக்கம் போலவே அருமை அக்கா..
உங்கள் எளியநடை, கவிதைநயம் கலக்கல்....

இப்னு அப்துல் ரஜாக் said...

இஸ்லாம்
எனும்
இனிய மார்க்கத்தை கவிதை மூலம் இயம்பும் அன்பு அக்கா,உங்கள் பனி இன்னும் தொடரட்டும் இன்ஷா அல்லாஹ்