ராசிதா கசிந்துருகி அழுதது காணமுடியவில்லை. கேன்சர் முற்றிய நிலையில் இருந்த தஸ்தகீர் ஆஸ்பத்திரியில் நாலு நாள் இருப்பதும், வீட்டுக்கு வருவதுமாக அல்லாடிய பின், நிரந்தரமாக ஓய்வு கொள்ள, தந்தை வழி சொந்தம் யாரும் ராசிதாவை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை!
கடைசி நேரத்தில் தஸ்தகீர் என்ன நினைத்திருப்பாரோ? கச்சாமாவை தான் தவிக்க விட்டதற்கு பிணையாக, இன்று ராசிதா தனிமரமாக நிற்கிறாளே என்று மனதார வருந்தியிருப்பாரா?! பொறுமையின் சிகரமான கச்சாமாவை தனது சொல்லாலும் செயலாலும் நோவினை செய்ததற்கு, இன்று உடலாலும் மனதாலும் தாங்க முடியாத வேதனையை இறைவன் தந்துவிட்டான் என்று உணர்ந்திருப்பாரா?? கச்சாமாவின் மூன்று பெண்மக்களும் இன்று குடியும் குடித்தனமுமாக இருக்க, சின்னம்மா மக ராசிதா மட்டும் அநாதையாக நிற்கிறாள்.
“ராசிதா...நீ எங்கூட எங்க வீட்டுக்கு வா... மற்றதை அப்புறம் பார்க்கலாம்!”
தகப்பனின் காரியங்கள் முடிந்ததும், மர்ஜியா அவளை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். ஆப்பியும் பாஜியும் மாமியார் குடும்பத்தோடு இருக்கின்றனர். அதனால், ராசிதாவை அழைத்துச் சென்றால், பின்விளைவுகள் ஏதேனும் வருமோ என்று பயப்பட, மர்ஜியா தனியாக இருப்பதால், அழைத்துப் போய் விட்டாள்.
தஸ்தகீர் முனிசிபாலிடி உத்தியோகம் என்பதால், அவர் ரிட்டயர்டு ஆகும் போது கணிசமான தொகை வந்திருக்க வேண்டும். ஆனால், அவர் கணக்கு ஒப்படைத்ததில் ஏதோ குளறுபடி என்று அவருக்கு சேர வேண்டிய பணம் மற்றும் பென்ஷன் எல்லாம் நிறுத்தி வைத்திருந்தனர். அது சம்பந்தமாக கோர்ட்டில் கேஸ் நடந்து கொண்டு இருந்தது.
அன்று மர்ஜி வீட்டுக்கு கமாலும் பாஜியும் வந்திருந்தனர். ராசிதா பக்கத்து விட்டு போயிருந்தாள். அவள் இல்லாதது தெரிந்ததும், அவளுடைய எதிர்காலம் குறித்து பேச ஆரம்பித்தனர். அதற்குள், ஆப்பியும் வந்து விட்டாள்.
“அக்கா...கேஸ் நடந்துட்டு இருக்குல்ல, நான் அது சம்பந்தமா மெட்ராஸ் போயிட்டு வந்தேன்...கூடிய சீக்கிரம் நல்ல தீர்ப்பு வரும்க்கா” கமால்
“சரி தீர்ப்பு எப்பவோ வரட்டும்...ராசிதாவ என்ன செய்யறது?” மர்ஜி
“அக்கா...அவளுக்கு இப்ப தான பத்தொன்பதாகுது...இப்ப கல்யாணம் பண்ண வேணாம்...இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்...கேஸ் முடிஞ்சிருச்சின்னா, பேலன்ஸ் பென்ஷன் வரும்...அப்ப, கல்யாணமாகாத பெண்பிள்ளைங்க இருந்தா, மாதாமாதம் அவங்க பேருக்கு வரும்...அதனால தான் கொஞ்சம் வெயிட் பண்ணலாம்!”
“ஏங்க...அது வரைக்கு ராசிதாவை யாருங்க பார்த்துப்பாங்க? அதிலயும் முன்னாடி ஸ்கூலுக்கு போயிட்டிருந்தப்ப, யாரோ பையன்கூட இவ நெருங்கி பழகறானு புகார் வந்துச்சு...இப்படி இருக்கப்ப, ஒன்னு கிடக்க ஒன்னு ஆயிருச்சுன்னா?????” பாஜி
“எங்க வீட்டிலயே ராசிதா இருந்திட்டு போறா பாஜி...நாம ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணிவெச்சிரலாம்” மர்ஜி இப்படி சொல்ல இன்னொரு காரணமும் இருந்தது. அது நடக்க முடியாமல் வீட்டில் இருக்கும் பையன் ஆரிஃப். தான் வேலைக்கு போய் வந்து கொண்டிருக்கும் போது, அவனுக்கும் ஒரு துணையாக இருக்கும் என்று நினைத்தாள்.
திருமணம் என்றால், பணத்துக்கும் நகைக்கும் எங்கே போவது என்று எல்லாரும் மலைக்கும் போது, ஆப்பி ஒரு நல்ல யோசனை சொன்னாள்.
“ராசிதாவோட அம்மாவோட வீடு இருக்குல்ல, அதை வித்து அவளுக்கு சிம்பிளா கல்யாணம் பண்ணி வெச்சிரலாம்”
பேசிக் கொண்டிருக்கும் போது, ராசிதாவும் வந்து விட்டாள். வீட்டை விற்கும் யோசனைக்கு அவளும் தலையாட்ட, ஏற்பாடுகள் செய்தார்கள். மிகவும் சிறிய வீடு என்பதால், சொற்ப தொகை தான் கிடைத்தது. மாப்பிள்ளையும் கிடைத்து விட்டது. வசதியில்லை, ஆனால் நல்ல பையன். பாட்டாளி. ஏதோ கூலி வேலைக்கு போகிறான் என்றாலும் ஓரளவுக்கு சம்பாதித்தான்.
துரிதமாக ஏற்பாடுகள் செய்து, ஒரே மாதத்தில் திருமணம் முடித்து விட்டார்கள். மூவரும் ஆளுக்கு ஒரு சாமான் என்று வாங்கித்தர, உறவுகளும் தம்மால் முடிந்ததை செய்தார்கள். ராசிதா எந்த வித பிரச்சினையும் இல்லாமல், அழகாக குடும்பம் நடத்தி வந்தாள்.
எல்லாரிலும் மர்ஜி தான் ரொம்பவும் கஷ்டப்பட்டாள். ஆப்பி அவ்வப்போது கொடுத்து உதவினாலும், நிரந்தரமாக யாரால் தான் செய்ய முடியும். மர்ஜியின் கணவனோ, இன்னமும் அதே மாதிரி தான் கமிஷன் வியாபாரத்தில் எதுவும் கட்டுப்படி ஆகாமல், எதற்கும் லாயக்கில்லாமல், ஏமாளியாக இருந்தான்.
ஆரிஃப் வேறு உரிய வயதையும் தாண்டி பள்ளி செல்ல முடியாமல் வீட்டில் முடங்கிக் கிடந்தான். அவனைப் படிக்க வைக்க வேண்டுமென்றால், ஊனமுற்றோர் பள்ளியில் ஹாஸ்டலில் தான் சேர்க்க வேண்டும். அதற்கு மர்ஜியின் கையில் பணமில்லை. ஆனாலும், மர்ஜியிடமும், ஆப்பியிடமும் கேட்டு கேட்டு, ஓரளவுக்கு எழுதப்படிக்கக் கற்றுக் கொண்டான். மர்ஜியின் அடுத்த இரண்டு பையன்களும் கவர்மெண்ட் ஸ்கூலில் படிக்க, ஆப்பியின் மகளும், பாஜியின் மகனும் கான்வெண்ட்டில் படித்தார்கள்.
ராசிதாவுக்கு தலைச்சன் பெண்குழந்தையும், அடுத்து ஆண்குழந்தையும் ஒரு வருட இடைவெளியில் பிறந்தன. அக்கா தங்கைகள் நால்வரும் சேர்ந்து வேனில் டூர் போய் வந்தார்கள். ஆப்பி தான் எல்லாருக்கும் தாராளமாக செலவு செய்தாள். மர்ஜியின் வீட்டில் வறுமை குடிகொள்ள ஆரம்பித்தது.
மர்ஜியால் சமாளிக்க முடியவில்லை. கவர்ன்மெண்ட் எய்டட் பள்ளியில், ஃப்ரீ சர்விஸ் செய்து கொண்டிருந்தாள், என்றாவது ஒரு நாள் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.... அங்கு முன்பு லீவ் வேகன்ஸியில் வேலை செய்யும் போது தான் ஊனமுற்ற குழந்தையாக ஆரிஃப் பிறந்தான். அதை கருத்தில் கொண்டு பள்ளி நிர்வாகம், மர்ஜிக்கு சீக்கிரமே போஸ்டிங் போட்டுத் தருவதாக சொல்லியிருந்தது.
ஆனாலும், வீட்டு வாடகை, தினப்படி செலவுகள் எல்லாம் செய்ய முடியாமல் திண்டாடி வந்தாள். சுஹைனாவும் அவள் தாயார் சைதாவும் அவ்வப்போது உதவி வந்தனர். அவள் பணியாற்றிய பள்ளியில், அவளுடைய நிலை உணர்ந்து, அவளுக்கு சிறிய தொகையை பி.டி.ஏ. சேலரியாக தர ஆரம்பித்தது. மர்ஜியும் மேல் வருமானம் தேடி, மாலை நேரத்தில் துணி தைக்க ஆரம்பித்தாள்.
மூவருக்கும் சொந்தமான லைன்வீட்டில், ஒரு பகுதியை ஒத்திக்கு வைத்துத் தான் ஆப்பி மற்றும் பாஜியின் திருமணத்தை நடத்தி இருந்தார்கள். மீதி லைன் வீட்டு வாடகையை மூவரும் தமக்குள் பங்கிட்டு வந்தார்கள். இப்போது மர்ஜியின் கணவன், ஏதோ கடன் பிரச்சினையில் சிக்கி பணம் தேவைப்பட்டது. ஆக, இப்போது, மேலும் ஒரு வீட்டை மர்ஜி, தன்னுடைய பங்குக்கு ஒத்திக்கு வைத்து பணம் வாங்கிக் கொண்டாள்.
கிட்டத்தட்ட மூன்று வீடுகள் அடமானத்தில் வைத்துவிட, மொத்தத்தொகை ஒரு லட்சத்துக்கும் அதிகம். அதைத் திருப்புவது எப்படி என்று யாருக்கும் தெரியாமல், மனம் கலங்கினர். கமால் மட்டும் தன் கட்சி செல்வாக்கைப் பயன்படுத்து, மனம் தளராமல், தஸ்தகீரின் பென்ஷன் கேஸை நடத்தி வந்தான்.
அன்று, கமால், மர்ஜியின் வீட்டுக்கு வந்தான்,
“அக்கா... ஒரு சந்தோஷமான செய்தி! மாமாவுடைய கேஸில் தீர்ப்பு வந்திருச்சுக்கா! இப்பத்தான் வக்கீல் போன் செய்தார்! பென்ஷன் பாக்கி, கிட்டத்தட்ட இரண்டரை லட்ச ருபாயைத் தர சொல்லி ஆர்டர் ஆகி இருக்காம்!”
(வளரும்)
-சுமஜ்லா.
Tweet | ||||
5 comments:
me the 1 st...
தீர்ப்பு நல்லவிதமாக வந்ததில் சந்தோசம்...தொடரட்டும் அக்கா..
பணம் வருகிறதே, கூடவே பிரச்னையும் வருமோ?
//ராசிதாவோட அம்மாவோட வீடு இருக்குல்ல, அதை வித்து அவளுக்கு சிம்பிளா கல்யாணம் பண்ணி வெச்சிரலாம்”//
வீட வித்து சிம்பிளா கல்யாணமா?
லாஜிக் உதைக்குது அக்கா?
//வீட வித்து சிம்பிளா கல்யாணமா?
லாஜிக் உதைக்குது அக்கா?//
வீடுன்னா, பெரிய பங்களா வீடு இல்லைங்க...சின்னஞ்சிறு ஓட்டு வீடு! அது விலை போனது ஐம்பதாயிரத்துக்கு! அதில், நகை, பாத்திர பண்டமென்ல்லாம் வாங்கினது போக மீதியில் திருமணம் முடிக்க வேண்டுமே!
Post a Comment