போற்றத் தகுந்த சால்மைக்கு
சாற்றும் உதாரணம் கேளீர்!
நில்லென்று நிற்க சொல்லி,
சென்ற நண்பர் மறந்துவிட,
கல்லென நின்றார் அவ்விடத்தில்
கடிதினங்கள் மூன்று!
மறந்த நண்பர் திடுக்கூறாய் வர
உறைந்து போனார் - வெட்கத்தால்
குறைந்து போனார்!
விரைந்து வராமையால் மனதால்
மறைந்து போனார்!!
சொன்ன சொல்லை காப்பாற்றும்
அன்னவரின் நற்குணந்தான்
இன்னதென செல்வம் பெற்ற
வண்ணமகள் கதீஜாவின்
கண்ணில்பட்டு, கருத்தில் பட்டு
எண்ணத்திலே வளர்ந்ததன்று!!
வர்த்தகத்தில் சிறந்திருந்தும்,
வாழ்வின்
அர்த்தம் தொலைத்த
விதவையவர்!
குன்றிலிட்ட விளக்காக
ஒழுக்கத்திலே
சிறந்த மலர்!!
குன்றாத வாணிபத்தை
நன்றாக நடத்திவர
மன்றோர்கள் வியக்கும்வண்ணம்
பெருஞ்செல்வம்தன்னையெல்லாம்
ஒன்றாக கட்டிகாத்து
வென்றுலக புகழ்சேர்க்க,
இட்டபணி செய்துவர
கட்டழகர் முஹமதுவை
நிர்வாகப் பொறுப்பிலேற்றி,
சர்வாங்கமும் ஒப்படைத்தார்.
சரக்குடனே ஒட்டகத்தை,
சிரியாவுக்கு கொண்டெடுத்து,
தரத்தாலும் தளராத சொல்
வளத்தாலும்,
பெரும் பொருள் ஈட்டு
பெருமை சேர்த்தார்,
பெருமானார் அவர்கள்.
ஆங்கு,
நண்பகல் கோடையின்
வெங்கதிரோன் வெப்பமது
கண்ணியரை தாக்கிடாமல்,
விண்ணவர்கள் இருவருமே
தன்னுடைய சிறகதனால்,
தண்ணிழலை பரப்பியதை
தன் பணியாள் மைசராவும்,
கண்டு மனம் வியப்புற்று,
கதீஜாவிடம் ஒப்புவித்தார்!!
நுணுக்கமான வியாபாரம்,
கணக்கு தவறா நாணயம்,
பிணக்கில்லாத பேச்சுவண்மை,
சுணங்கிடாத சுறுசுறுப்பு!!
மேவும் நற்குணம்
யாவும் கண்டு,
கதீஜா நாச்சியார்
மயங்கினார்!
தன் காதலை சொல்ல
தயங்கினார்!!
பெருஞ்செல்வர் பலபேரும்
பெருமாட்டியை மணம்கொள்ள,
பெரும் செல்வத்துடன் காத்திருக்க,
பெண்ணரசி கதிஜாவோ,
அண்ணலாரிடம் ஆசை வைத்தார்.
கவர்ச்சி கண்டார்
காதல் கொண்டார்!
இவரின் அன்பில்,
பாசம் கண்டார்!
நீக்கமில்லா
ஏக்கம் கொண்டார்!
வாக்குதன்னில்
வாய்மை கண்டார்!
தாக்கத்துடன்
காத்திருந்தார்!
ஏக்கத்துடன்
ஏங்கி நின்றார்!!
(வளரும்)
-சுமஜ்லா.
Tweet | ||||
4 comments:
உங்கள் தேன் தமிழை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை !
வாழ்த்துகிறேன் உங்கள் கவியை !
வணங்குகிறேன் உங்கள் தமிழை !!
//கவர்ச்சி கண்டார்
காதல் கொண்டார்!
இவரின் அன்பில்,
பாசம் கண்டார்!
நீக்கமில்லா
ஏக்கம் கொண்டார்!
வாக்குதன்னில்
வாய்மை கண்டார்!
தாக்கத்துடன்
காத்திருந்தார்!
ஏக்கத்துடன்
ஏங்கி நின்றார்!!//
ரசித்தேன்....மிகவும் அருமை
வழக்கம் போல் முத்து முத்தாய் அழகிய தமிழில் ....அருமை அக்கா...
அய்யோ கேசவன்! என்னை ரொம்பவும் பெருமை படுத்துகிறீர்கள்! நன்றி!!!
சீமான் தம்பிக்கும் மிக்க நன்றி!!!
நீக்கமில்லா
ஏக்கம் கொண்டேன் ...
தாக்கத்துடன்
காத்திருந்தேன் மறு இடுகை எப்போ என்று .....
Post a Comment