Saturday, February 27, 2010

அரபு சீமையிலே... - 16

துன்மார்க்கம் தோற்க
சன்மார்க்கம் தழைத்தது!
கண்ணான நபிதந்த
பொன்மார்க்கம் அழைத்தது!!

முஸ்லிம்கள் எண்ணிக்கை
பெருத்தது கண்டு
வருத்தமிகக் கொண்டனர் குறைஷிகள்!
முஹம்மதை(ஸல்)
திருத்தவேண்டும் என்று நாடினர்!
உத்பாவின்
கருத்தை யாவரும் வேண்டினர்!!

ஆசை காட்டலாம் – என்ற
யோசனை சொன்னார் அவர்!
அதன்படி,
ஓசையின்றி மெல்ல சென்றார்- இறை
தாசனவர் சந்நிதிக்கு!!

“உயர்குடி பிறப்பே! – நமது
பெயர்கெட நீரும்,
புதுமார்க்கம் தரவே – யாம்
துயர்மிகக் கொள்கிறோம் - இதை
அயர்வுடன் சொல்கிறோம்!!

பொருள் வேண்டுமா? – சீமான் என்னும்
பெயர் வேண்டுமா???
அருளோடு பதவி வேண்டுமா?
இல்லை
வேறேதேனும் உதவி வேண்டுமா???
அழகழகாய் பெண் வேண்டுமா?
இல்லை
மலையளவு பொன் வேண்டுமா???

உமக்கு மூளை பிசகலா? – அல்லது,
பூத கணங்களின் சதியா??
வீண்பூசல் வேண்டாம்!
உம்மாசை சொல்வீர் – அதை
நிறைவேற்றச் செய்வோம்!!!

கண்மணியாம் நபியும்
புன்முறுவல் பூத்தார்!
தண்மறையின் போதனையை
தானோதச் செய்தார்!!
தன்வழியில் அவர்சேர
அன்பாக அழைத்தார்!!!
இன்னதென புரியாமல்
உத்பாவும் விழித்தார்!!!

திரும்பி வந்த உத்பா,
மொழிந்தார் தம் மக்களிடம்,
“மாயமில்லை மந்திரமில்லை,
செப்படி வித்தை ஏதுமில்லை!
தூயதான சொற்களாலே
துயர்தனையே துடைக்கின்றார்!!
அவருடை நட்பு குறையாது!
தடுத்திடல் அவரை முடியாது!!!”

இச்சொல் கேட்ட குறைஷிகள்
இன்னல் அதிகமாய் புரிந்தனர்!
அச்சத்துடனே முஸ்லிம்கள்
அண்ணலை தஞ்சம் அடைந்தனர்!!

வன்கொடுமை சகிக்கவில்லை
வேதனையும் தாங்கவில்லை
எங்கேனும் சென்றுவிட – அண்ணல்.
அனுமதி வேண்டினர்!!

தாங்கொணா துயரம்
வாட்டியது கண்டு
அண்ணலாரும் வாட்டமிகக் கொண்டு
அபீசீனியா செல்லப் பணித்தார்!
அதற்கான அனுமதியும் அளித்தார்!!

திருமகனார் உத்தரவு பெற்று
சிறுகோஷ்டியொன்று புறப்பட்டது!
வருத்தத்துடன் விடைபெற்றது!!

பொறுக்கவில்லை குறைஷிகளுக்கு!
துரத்திச் சென்றனர் அபிசீனியாவுக்கு!!

மன்னர்தமக்கு
லஞ்சம் தந்தனர்!
தாம் வந்த நோக்கத்தை
கொஞ்சம் சொன்னனர்!
நெஞ்சமுரைத்த உண்மைகளை
வஞ்சகமாய் மறைத்தனர்!

தூதர்சொல்லை ஏற்கவில்லை
நீதிக்கரசர் நஜ்ஜாஷி!
யாதென்று அறிந்தபின்பு
சூதென்று உணர்ந்து கொண்டார்!!

துடைத்திட்டார் துயர்தம்மை!
விடைகண்டார் புதிருக்கு!!
அடைக்கலமாய் வந்தவரை
அனுப்பவில்லை அவர்களிடம்!

நஜ்ஜாஷியின் நல்லுள்ளம் கண்டு
மேலும் பலர் வந்தனர் யாண்டு!!
(வளரும்)

-சுமஜ்லா.

4 comments:

ஜெய்லானி said...

////மன்னர்தமக்கு
லஞ்சம் தந்தனர்!
தாம் வந்த நோக்கத்தை
கொஞ்சம் சொன்னனர்!
நெஞ்சமுரைத்த உண்மைகளை
வஞ்சகமாய் மறைத்தனர்!///

மாஷா அல்லாஹ்! கவிதை நடை அருமையாக இருக்கிறது.

பாத்திமா ஜொஹ்ரா said...

நல்லா இருக்கு அக்கா

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி ஜெய்லானி & பாத்திமா ஜொஹ்ரா!

சீமான்கனி said...

வளர... வளர... பறிபோகிறது மனது....
நலமா அக்கா???