Sunday, March 14, 2010

அரபு சீமையிலே... - 17

அருமைத் தோழர்கள் அண்ணலார் மேல்
பெருமதிப்பு கொண்டிருந்தனர்.
அவர்பொருட்டு, தம்முயிரையும்
ஆசையுடன் தரத்துடித்தனர்.

அத்தகைய தோழரொருவர் அர்க்கம்;
என்றும் நாடினார் சொர்க்கம்!
சபா குன்றின் மேலிருந்த
தம் மாளிகையை
நபிகளுக்கு செய்தார் தத்தம்!

அவர்
பதினெட்டு வயது
மக்ஜூமி கோத்திரத்தாரே!
அதே கோத்திரத்து
அபூஜஹலும்
தறிகெட்டு மதிகெட்டு
ஆத்திரத்தால்
கொக்கரித்தானே!!

அர்க்கமின் மாளிகையில்
சொர்க்கத்தைத் தேடி
சர்க்குண மார்க்கத்தின்
தொழுகை நடந்தது;
இறையை நோக்கி,
அழுகை புரிந்தது!

தாருஸ்ஸலாம் என்று அது
பேரும் பெற்றது!
சாந்தி மாளிகையில்,
சாந்தம் தவழ்ந்தது!!

கொக்கரித்த அபூஜஹல்,
தாருல் நத்வாவில் கூடினான்!
கட்டிளங்காளையர் பலரைக்
கூட்டினான்!
நபிகளுக்கு எதிராக
ஒரு வேள்வியை
மூட்டினான்!!

விலை வைத்தான்
நபிகள் தலைக்கு!
உலை வைத்தான்
முஸ்லிம்கள் நிம்மதிக்கு!!

நூறு ஒட்டகை தருவேனென்று
தத்தம் செய்தான்.
பேரும் புகழும் தமக்கே என்று
சத்தம் செய்தான்.

உமர் இப்னு கத்தாப் என்னும்
முப்பத்திமூன்று வயது
இளவல் ஒருவர்
அப்பக்கம் வந்தார்;
காட்டிய ஆசையில் தம்
கருத்தை இழந்தார் - தாம்
அக்காரியத்தை செய்து முடிப்பதாக
திருவாய் மலர்ந்தார்!

பளபளக்கும் வாளுடன்
கனல்தெறிக்கும் கண்ணுடன்
மனம் முழுக்க வெறியுடன்
மதிகெட்ட மனத்துடன்
தீரத்துடன் நடக்கிறார்
ஈர இதயர் இல்லம் நோக்கி!!

மக்களின் உள்ளங்கள்
மறைந்திருப்பதை அறியாது!
சொற்களின் வேகங்கள்
இறையாணையைத் தெரியாது!!

வழியில் ஸஅத் பின் அபீவக்காஸ்
என்னும் வாலிபர் அவரை
வழிமறித்தார்!
கோபத்தைத் தூண்டும் சில
மொழியுரைத்தார்!!

“கையில் வாளேந்தி,
கடுகி நடக்கும் காரணமென்ன
காளையரே?”

“முஹமதை ஒழித்துக் கட்டி
சகமதில் புகழைப்பெற
சபதம் பூண்டிருக்கிறேன்
நண்பரே!”

“சொல்வது சரிதான்
நான் புகல்வதை
சற்றுக் கேளும்!
உள்வீடு பூசித்தான்
வெளிவீடு பூச வேண்டும்!
உம் தங்கையும் மைத்துனரும்
புதுமார்க்கத்தில் இணைந்துள்ளனர்!
அவர்களையன்றோ முதலில்
திருத்த வேண்டும்???
பிறகல்லவா உம்பார்வை
முஹமதை நோக்கித்
திரும்ப வேண்டும்???”

உமரவரை வழிமறித்தார்,
நயம்படவே இடித்துரைத்தார்!

-சுமஜ்லா.
(வளரும்)

7 comments:

அன்புடன் மலிக்கா said...

நல்ல விளகத்ததுடன் எழுதியிருக்கீங்கக்கா.. அருமை தொடருங்கள்..வாழ்த்துக்கள்...

கிளியனூர் இஸ்மத் said...

அன்பு சகோதரிக்கு நாயகம் ஒரு காவியம் மேத்தா அவர்கள் எழுதிய கவிதைக்குப் பின் தங்களின் அரபு சீமையிலே மிக அற்புதமாக இருக்கிறது.
கண்மணி நாயகம் (ஸல் அலை) அவர்களைப்பற்றி வாழ்நாள் முழுவதும் எழுதிக்கொண்டும் பேசிக் கொண்டும் இருந்தாலும் கூட அவர்களுக்கு நிகர் எதுவுமே இல்லை.
இந்த கவிதை தொடரை நூலாக வெளியீடுங்கள்.
எல்லாம் வல்ல ஏக இறைவன் உங்களின் செயல்ளை பொருந்திக் கொண்டு உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வத்தையும் நோயற்ற வாழ்வையும் சந்தோசமான வாழ்க்கையும் அளிப்பானாக...துவாச் செய்கிறேன்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

'அரபுச் சீமையிலே' 17-ஆவது பகுதியும்
கவிநடையில் வெகு அருமை. நபிகள் நாயகம்
அவர்களின் வாழ்க்கையை பாடிக் கொண்டே
இருக்கலாம். பாடி முடியாது அல்லவா?
அடுத்த பகுதியையும் விரைவில் எதிர்பார்க்கி-
றேன்.

SUMAZLA/சுமஜ்லா said...

வாழ்த்துக்களுக்கு நன்றி! இது நர்கிஸ் மாத இதழில் தொடராக வெளிவந்து கொண்டு உள்ளது!

சீமான்கனி said...

//பளபளக்கும் வாளுடன்
கனல்தெறிக்கும் கண்ணுடன்
மனம் முழுக்க வெறியுடன்
மதிகெட்ட மனத்துடன்
தீரத்துடன் நடக்கிறார்
ஈர இதயர் இல்லம் நோக்கி!!//

ரசித்தேன் வழக்கம் போல அழகு வரிகளில் வரலாறு...தொடருங்கள் வாழ்த்துகள்...

Unknown said...

அரபுச்சீமையிலே,
கொஞ்சும் தமிழில் நம் அனைவரின் நெஞ்சம் நிறைந்த அற்புதக்காவியம். தொடரட்டும் உங்களின் சேவை. புத்தகமாக வெளியிடுங்கள். நம் சாந்த நபிகளாரின் வாழ்க்கை வழிமுறைதனை அறிந்து எல்லோரும் பயன் பெற வல்லோனைப்பிராத்திக்கிறேன்.

எஸ்.ஏ.இபுறாஹிம்.

இப்னு அப்துல் ரஜாக் said...

//அருமைத் தோழர்கள் அண்ணலார் மேல்
பெருமதிப்பு கொண்டிருந்தனர்.
அவர்பொருட்டு, தம்முயிரையும்
ஆசையுடன் தரத்துடித்தனர்.//

மாஷா அல்லாஹ்,
உண்மை.அந்த மாமனிதருக்காக தங்கள் உயிரை ஈய ஆவல் கொண்டனர் அத்தோழர்கள்.
ஒருமுறை உமர் ரலி சொன்னார்கள்,"அண்ணலே,எனக்கு பின்பு உங்களை மிகவும் நேசிக்கிறேன் என்று.
அண்ணல் நபிகள் சொன்னார்கள்,"இல்லை உமரே,உன்னைவிட என்னை முதலாக நேசிக்காதவரை நீ உண்மை முஸ்லிமாக முடியாதென்று.