Sunday, August 22, 2010

மழை விட்டாலும் கருப்பு இடி விடவில்லை.

ஆள் அரவமற்ற சாலையில் டூவீலர் சீறிப் பறந்தது.

“என்னங்க”

“என்ன?”

“என்ன இவ்ளோ ஸ்பீடா போறீங்க.....90 கி.மீ. ஸ்பீடாமீட்டர் காட்டுது...கொஞ்சம் மெதுவா போங்களேன்”

“இல்ல கொஞ்சம் ஸ்பீடா போனா இருட்டறக்குள்ள போயரலாம்”

வேகமாகப் பறந்த வண்டி ஒரு வளைவில் ஒரு லாரியை ஓவர்டேக் செய்ய, படக் படக் இதயத்தோடு உட்கார்ந்திருந்தேன்.

உடலில் பயங்கர அசதி...அதிகாலையில் கிளம்பி 100 கி.மீ.தூரம் டூவீலரில் பயணித்து, மேட்டுப்பாளையம் ப்ளாக் தண்டர் போய் ஜஸ்ட் லைக் தட்! ஒரே ஆட்டம் தான்.



உள்ளே போனவுடன் ஒரு சின்ன வளைவுக்குள் நாம் நுழைந்தால், நாம் அப்படியே தான் நிற்கிறோம், ஆனால் நம்மைச் சுற்றி அப்படியே வானவில்லின் வர்ணங்கள் ஜாலம் செய்ய, கண்ணையும் கருத்தையும் கவர்வதோடு, உலகமே நம்மைச் சுற்றுவது போல உணரச்செய்யும் விளையாட்டு.

அடுத்து த்ரில்லேரியம். வானத்தில் நுழைந்து மேகத்தில் புகுந்து, அண்டசராசரியெல்லம் தாண்டி வெட்டவெளியில் வேற்று கிரங்களுக்கிடையே பயணித்து, கிரகங்களும் நட்சத்திரங்களும் மோதித் தெரிக்க, தாராளமாக பயந்து, தொண்டை வரளக் கத்தி, நம்மை சின்னாபின்னமாக்குவது போல உலுக்கி உலுக்கி எடுக்கும் உலகத்தில் இருந்து ஒரு வழியாக வெளியேறி, தண்ணீர் விளையாட்டுக்குப் போனோம்.

கொஞ்சம் நேரம், நீச்சல் குளத்தில் ஆட்டம். நீர் சறுக்கல் மேல் ஏறியவுடன் சின்னப்பிள்ளையாக மாறிப்போனேன்.

அம்மாம்பெரிய உயரத்தில் இருந்து சறுக்கி....சறுக்கி....பார்த்தாலே கண்ணைக் கட்டியது.

“போறதுனா போய்ப்பாரு ஒன்னும் பயமா எல்லாம் இருக்காது” அவர் சொல்ல, விளையாடிட்டு வந்த பொண்ணுங்கள்ட்டப் போய் நான் சர்வே எடுத்திட்டு இருந்தேன்.

பயமா இருக்குமா? தலை சுத்துமா? கண்ணை மூடிக்கிட்டிங்களா? இப்படி நூத்தியெட்டுக் கேள்வி கேட்டுட்டு, கொஞ்சம் தைரியப்படுத்திக்கிட்டு மேலே போனேன். ரப்பர் ஷீட்டைத் தூக்கிக்கிட்டு, கஷ்டப்பட்டு மேல ஏறி, ஏறி போனா, ஐய்யோ, தைரியம் மறுபடியும் காணாம போயிடிச்சு. ரப்பர் சீட்டை வேறொருத்தருக்கு தானம் பண்ணிட்டு, கீழே இறங்கி வந்திட்டேன். என்னவர் வெற்றி வீரராய் போய் சறுக்கி வந்தார்.

சாப்பாடு ஐஸ்க்கிரீம் எல்லாம் முடிச்சிட்டு, மறுபடியும் இதே போல இன்னொரு சறுக்கு. அதில் கை பிடிக்க இரண்டு கைபிடி. மறுபடியும் மேலே ஏறினேன். என் நேரம், ரப்பரை வைத்து விட்டு, மேலே படுத்து சறுக்குவதற்குள் அதே தனியா சல்லுனு வழுக்கிக்கிட்டு கீழே போயிருச்சு. பக்கத்திலே இன்னொரு ரப்பர் இருந்தது. அதை எடுத்து, வைப்பதும் எடுப்பதும் வைப்பதும் எடுப்பதுமாய் கொஞ்சம் நேரம் குழம்பி விட்டு ஆனது ஆகட்டும் என்று ஸ்டார்ட் பண்ணி, கண்ணை இறுக மூடிக் கொண்டேன். நல்லவேளை பயம் என்ற ஒன்று மனதில் கிளம்ப ஆரம்பிப்பதற்கும் முன்பாக நான் கீழே வந்து விட்டேன்.

அடுத்து, போட்டிங், கொஞ்சம் நேரம் ஸ்விம்மிங் பூல், கடலலை விளையாட்டு, பலூன் ரைட், லேஜி ரிவர் என முடித்து, உடை மாற்றும் அறையில் உடை மாற்றி, டிரை கேம்ஸ் பக்கம் போனோம். டேஷ் கார் மட்டும் இரண்டு மூன்று முறை விளையாடினேன். மற்றபடி, மகன் மட்டும் எல்லா விளையாட்டிலும் போய் வந்தான்.

மொத்தக் கட்டணம் பெரியவர் 380 ருபாய், சிறியவர் 320. வெளியே போர்டில், ‘எந்த ஒரு விளையாட்டை நிறுத்தி வைக்கவும் நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு” என்று எழுதியிருந்தது. அதே போல, உள்ளே கிட்டத்தட்ட பாதி விளையாட்டுகள் நிறுத்தி தான் வைக்கப்பட்டிருந்தன. கொடுத்த காசுக்கு எதுவும் சரியில்லை என்று தான் தோன்றியது.

எல்லாம் முடித்துக் களைத்துப் போய் வெளியே வரும் போது, மாலை மணி ஆறு.

“இருட்டறக்குள்ள போயிரலாம்...சீக்கிரம் வா”

“ஆமா...அதுக்காக இவ்ளோ ஸ்பீடா”

அன்னூர் நெருங்கிய போது தான் அது நடந்தது....இல்லை ஓடியது....இரண்டு நாய்கள்

கண்ணுக்கெட்டிய தூரம் வரை வாகனம் ஏதுமில்லாததால், வண்டியை முறுக்க,

சண்டையிட்ட இரண்டு நாய்கள் ஒன்றை ஒன்று துரத்தி எதிர்பாராமல் குறுக்கே வர, சட், கண்ணை மூடிக் கொண்டேன்.

ஒரே கூட்டம் கூடிவிட்டது. நான் ஒரு பக்கம், அவர் ஒரு பக்கம், வண்டி ஒரு பக்கமாக விழுந்து கிடக்க, மெல்ல சுதாரித்து எழுந்தால்....

வலது கையெல்லாம் ரத்தம்...அவருக்கு புறங்கை, நெஞ்சில், முகத்தில், மணிக்கட்டில், முழங்கையில் என ஏகத்துக்கும் ரத்தம். ஆம்புலன்ஸ், ஆஸ்பத்திரி என்று சத்தம். வண்டியில் மாட்டியிருந்த பையெல்லம் பீஸ் பீஸாகப் போயிருக்க,

"பையன் எங்கே? அவனுக்கு என்ன ஆச்சு?" என்று தேடினேன். நல்லவேளை அவனுக்கு ஒன்றுமில்லை. முட்டியில் லேசாகக் காயம் மட்டும் தான்.

கஷ்டத்தோடு கஷ்டமாய் அதே வண்டியில் ஒரு கி.மீ தூரத்தில் இருந்த ஆஸ்பிட்டல் வந்தோம். உடனே பர்ஸ்ட் எய்ட் செய்து, ரெண்டு இஞ்சக்ஷன் போட்டார்கள். அவருக்கு உதடு கிழிந்திருக்க, ஸ்டிச்சிங் போட்டு, அரை மணி நேரம் கழித்து கொஞ்சம் வழி குறைந்ததும் மீண்டும் கிளம்பினோம்.

ஊர் வந்து சேர்வதற்குள் அவர் முகமும் கையும் வீங்கிப் போய் விட, வந்தால்....டூவீலரில் அவ்வளவு தூரம் போனதற்கு ஒரே திட்டு.

இரண்டு பேருமே கையில் கட்டோடு....ப்ச்....படாதபாடு பட்டாச்சு....

இப்போது பரவாயில்லை...காயம் ஆறிவிட்டாலும் தழும்பும் அதில் சிறிது வலியும் மட்டும் தான் பாக்கி!

ப்ளாக் தண்டரில் சுற்றி சுற்றி எடுத்த போட்டோக்கள் எல்லாம், கீழே விழுந்ததில் மெமெரி கார்டு அவுட்! நல்ல வேளை கேமரா தப்பி விட்டது!

கையில் காயத்தால்....இவ்வளவு நாட்களாக....நோ பதிவு....! அடி பட்டதால், வேலையையும் ரிசைன் பண்ணி விட்டேன்.

ஒரு சந்தோஷமான விஷயம்....இன்று தான் பி.எட் ரிசல்ட்! காலேஜ் பர்ஸ்ட நான் தான்! காலேஜ் போய் சந்தோஷத்தைப் பகிர்ந்து வந்தேன். 80 பர்சென்ட்டேஜ் மார்க். அதில் சைக்காலஜி என்னும் சப்ஜெக்டில் 95. இன்னொரு சப்ஜெக்டில் 93. ஸ்டேட் மார்க்காக இருக்குமா என்று எல்லாரிடமும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. இன்னும் ரேங்க் பட்டியல் வெளியிடவில்லை. எக்ஸ்டர்னல் வந்து போடும் ப்ராக்டிகல்ஸ் மார்க் தான் காலேஜில் எல்லாருக்கும் குறைந்து விட்டது. என்ன செய்வது காசு தான் பேசுகிறது என்று சொல்கிறார்கள்.

(நிஜாம் அண்ணா, ஆசியா அக்கா, இன்னும் சில நண்பர்கள் அன்போடு என்னை பதிவிட அழைத்தமைக்கு மிக்க நன்றி!)

-சுமஜ்லா.

17 comments:

தூயவனின் அடிமை said...

நடந்த சம்பவத்தை படிக்கும் பொழுது ,மனத்திற்கு கஷ்டமாகி விட்டது. இந்த நேரத்தில் தேர்வு முடிவு
உங்களுக்கு பெரும் ஊக்கத்தை கொடுத்து இருக்கும். வாழ்த்துக்கள்.

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் சுஹைனா! தலைக்கு வந்ததோடு தலைப்பாகையோடு போச்சு. இறைவன் இந்தளவுக்கு காப்பாற்றி கொடுத்ததற்கு நன்றி செலுத்திக் கொள்ளுங்கள். முழுமையாக குணமானவுடன் உங்கள் பதிவுகளை தொடருங்கள். 'காலேஜ் ஃபர்ஸ்ட்'க்கு என் வாழ்த்துக்கள்.

என் ப்ளாக் பாருங்கள்.
http://payanikkumpaathai.blogspot.com/

ராஜவம்சம் said...

நலம்பெற துவா செய்தவனாக...
வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

சீமான்கனி said...

அல்லாஹ்வே ...நேரம் ஆனாலும் கொஞ்சம் பொறுமையாவே வந்திருக்கலாம்... நல்லவேளை அக்கா இறைவனுக்கு நன்றிகள்...பஸ்ட்டு மார்க்குக்கு வாழ்த்துகள்...மச்சானுக்கு இப்போ எப்படி இருக்கு...

ஜெய்லானி said...

எங்கே ஆளையே கானோமேன்னு நேரா கமெண்ட் போடலாமுன்னு வந்தேன் ..


படிக்கும் போதே மனசு கஸ்டமா இருக்கு. இப்ப சரியாச்சா ....

ஏதே பெரிசா வர வேண்டியது இதோடு முடிஞ்சுதுன்னு நெனச்சுக்கோங்க .

ஸ்டேட் மார்க் வர வாழ்த்துக்கள்..


முழுவதும் குணமானதும் எழுதுங்கள். இன்ஷா அல்லாஹ்..

நட்புடன் ஜமால் said...

குணமடைய பிரார்த்தனைகள்

ரிஸல்ட்டுக்கு வாழ்த்துகள்

ஹுஸைனம்மா said...

முதல் மதிப்பெண்களுக்கு வாழ்த்துகள்!!

நீண்ட தூரம் இரு சக்கர வாகனத்தில், அதுவும் இருவருக்கு மேற்பட்டவர்கள் செல்லக்கூடாது என்று தெரிந்தும் நீங்கள் - நன்கு விவரமறிந்த நீங்கள் - போனது மிக்க வருத்தம் தருகிறது.

சீக்கிரம் முழு நலம் பெற என் பிரார்த்தனைகள்.

Asiya Omar said...

B.ED தேர்வில் வெற்றி பெற்றமைக்கும்,கல்லூரியில் முதல் இடம் பெற்றமைக்கும்,மாநில அளவில் வரவும் வாழ்த்துக்கள் சுஹைனா.முழுகுணம் அடைந்தமைக்கு இறைவனுக்கு அனுதினமும் நன்றி செலுத்துங்கள்.

"உழவன்" "Uzhavan" said...

//இப்போது பரவாயில்லை...காயம் ஆறிவிட்டாலும் தழும்பும் அதில் சிறிது வலியும் மட்டும் தான் பாக்கி!//
 
டேக் கேர்
 
//காலேஜ் பர்ஸ்ட நான் தான்! //
 
வாழ்த்துகள்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

படிக்க, படிக்க மனம் கலங்கிவிட்டது.
எதிர்பாரா அதிர்ச்சியில் என்ன கூறுவது?
என்று புரியவில்லை.
அல்லாஹ் அருளால் தற்போது நன்கு
நீங்களும் மச்சானும் குணமடைந்தது
நிம்மதியாயிருக்கிறது.
(நேற்றே தங்கள் இடுகை படிக்க
வாய்ப்பில்லாம்ல் போயிற்று.)

ஸ்ரீ.கிருஷ்ணா said...

விரைவில் குணமடைந்து பதிவிடுங்கள் அக்கா ..

Jaleela Kamal said...

அஸ்ஸ்ஸலாமு அலைக்கும் சுஹைனா,
ரமலான் கரீம்,

காலேஜில் முதல் மாணவியாக வ்ந்தமைக்கு வாழ்த்துக்கள்

விபத்து பற்றி ஊரில் போனில் சொன்ன போது ரொம்ப கழ்டமா இருந்தது,

அல்லாவுடைய கிருபையில் இப்ப நல்ல இருக்கீரீர்கல்ள் என்று அறிட்ந்து சந்தோஷம்,

உங்கல் பதிவு பார்த்ததும்பிளாக் தண்டர் எனக்கும் போகனும் ஆசையா இருக்கு

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கவனம் வைங்க இனி.. என்ன அவசரம்.

மதிப்பெண்களுக்கு வாழ்த்துக்கள்.

SUMAZLA/சுமஜ்லா said...

அன்போடும் அக்கரையோடும் நலம் விசாரித்த,
இளம்தூயவன்
அஸ்மா
ராஜவம்சம்
ஜெய்லானி
சீமான்கனி
ஜமால்
ஹுசைனம்மா
ஆசியா அக்கா
உழவன்
ஸ்ரீகிருஷ்ணா
நிஜாம் அண்ணா
ஜலீலாக்கா
முத்துலெட்சுமி
ஆகிய உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!!!

ஸாதிகா said...

இறைவன் இந்தளவுக்கு காப்பற்றிதந்திருகின்றான்.அல்ஹம்துலில்லாஹ்.இறைவனின் என்றென்றும் கிடைக்க என் துஆக்கள்.

Sabarinathan Arthanari said...

வாழ்த்துகள் சகோதரி

Unknown said...

hello
we are one among your fellow bloggers from coimbatore and nearby districts. we have organized a blogger meet @ coimbatore this weekend, that is on 4th of september. sorry for the late invitation. we were not able to trace your email id and so we are inviting you through this.
details regarding the meet:
http://bloggersmeet-cbe.blogspot.com
for queries and other things mail us at bloggersmeet.coimbatore@gmail.com or itsme@vivekanandan.in

my weblog: http://blog.vivekanandan.in