என் இரணம் தீர்ந்து விட்டது,
முஹம்மதிடம்(ஸல்) யாவரும்
அன்பு கொள்ளுங்கள்….
அவருடைய மார்க்கத்துக்கு
பண்பு காட்டுங்கள்…”
முதியவர் அபூ தாலிப்,
மதுர வாய் திறந்து,
மக்களிடம் உரைத்தார்,
கண்ணியமிக்க அண்ணலார்,
தீனின் தூதுவத்தைத்தம்
பெரிய தந்தைக்கு,
தீதின்றி எடுத்துச் சொல்ல,
குலப்பெருமை வேண்டி
அதையேற்க வில்லை!
தலைமகனின் சொல்லை
மனமேற்க வில்லை!!
அவர் மரணம் தந்த அதிர்ச்சி
மறையாதிருக்கும் போதே,
இமை கண்ணைக் காப்பதுபோல்,
இருபத்தாறு ஆண்டு,
இணையற்ற துணைவியாக,
இதமான மனைவியாக,
செல்வத்தைத் தத்தம்செய்து – நபி
சொல்வதை ஏற்று நடந்து,
மாந்தரெல்லாம் வெறுத்த போதும்,
வேந்தலுக்கு சேவை செய்து,
சோரும் போது ஆறுதலும், - மன
பாரத்துக்குத் தேறுதலும்,
தந்து வந்த கதீஜாவும்
ஏகனடி சேர்ந்து விட,
வருத்தம் கொண்டார் – மனச்
சுணக்கம் கொண்டார்!
வாடி நின்றார் – இறை
நாடி நின்றார்!!
இரு அரண்கள் இழந்ததனால்,
பெரு மகளும் இறந்ததனால்,
எதிர்ப்பு தந்த மக்கள் கூட்டம்
கும்மாளமிட்டது!
கூடி மகிழ்ந்தது!!
ஆதரவு தந்தால்,
பலம் கூடுமென்று,
ஆசை மனதில் கொண்டு,
தாகிப் கோத்திரத்துக்கு
இஸ்லாத்தை எடுத்துரைக்க,
வளர்ப்பு மகன் ஜைதோடு
தாயிப் நகரம் சென்றார்!
மும்மூர்த்திகளாம் தலைவர்களை
முகமன் கூறி சந்தித்தனர்!
மூவரும் மூன்று ஈட்டிகளை
முஹமதின் மேல் எறிந்தனர்!
முதலாமவன் கேட்டான்,
“தூதராக அனுப்பியவன்,
பாதத்திலே அனுப்பியதேன்???
ஏறிவர கேவேறுக் கழுதை,
தர அவனும் அறியானோ??”
இரண்டாமவன் கேட்டன்,
“உன்னைத் தவிர யாரையுமே,
தன்னின் தூதர் ஆக்கிக் கொள்ள,
தெரியாத ஒருவனை நான்,
இறையென்று கொள்ளணுமோ?”
மூன்றாமவன் சொன்னான்,
“உண்மையில் நீ தூதனென்றால்,
உன்னுடன் நான் உரையாட,
அருகதை எனக்கில்லையடா!
இல்லை,
நீயொரு பொய்யனென்றால்,
என்னுடன் நீ பேச
அருகதை உனக்கில்லையடா!!”
சாதுர்ய மொழிகேட்ட
சாத்வீக நபிமகனார்,
பொதுமக்கள் இடத்தினிலே
மெதுவாக எடுத்துரைத்தார்.
முடிவாகக் கண்ட பலன்,
முழுத்தோல்வியன்றி ஒன்றில்லை!!
ஆயினும் பெருமகனார்,
அம்மக்களைச் சபிக்கவில்லை!!
(தொடரும்)
-சுமஜ்லா.
Tweet | ||||
2 comments:
மறுபடியும் பதிவுகள் தரவந்து நபியவர்களின்
வரலாற்றுக் கவியின் மூன்று பகுதிகளை
ஒரே நாளில் வழங்கிய நீங்கள் தொடர்ந்தும்
அவ்வப்போது வ(த)ரவேண்டும்.
அழகான கவிதை - தொடருங்கள்.
நன்றி நிஜாம் அண்ணா,
நன்றி கிருஷ்ணா
Post a Comment