சொல்லவொணா துயரங்களும்
நல்ல நபியைத் தொடர்ந்ததுவே!
புல்லர் மனம் மகிழ்ந்ததுவே!!
விண்ணவரும் மண்ணவரும்
வியந்து போற்றும் நபியவரை,
கண்ணின் மணியாய் கலங்கரையாய்
தீனைத் தந்த தூயவரை,
புனித மேனிப் புண்ணாக,
குருதி வெள்ளம் வழிந்தோட,
மலர் பாதம் செந்நிறமாய்,
கலர் மாறிப் போனதம்மா….!
சொல்மாரியுடன் சேர்ந்து
கல்மாரி பொழிந்ததம்மா!!
சோர்வுற்று தரிக்க நின்றாலும்,
சீர் கொடுமை நிறுத்தவில்லை!
பார்வை மங்கி, மயங்கினாலும்,
ஊர் துரத்தல் நிற்கவில்லை!!
வாட்டம் கொண்ட நபியவர்கள்
தோட்டமொன்றில் புகுந்திட்டார்கள்.
அத்தோட்டம்,
உத்பா பின் ரபீ ஆ மற்றும்
அவர் சோதரர் ஷைபாவுக்கு
சொந்தமானது!
பெருங்காயம் கண்டவர்கள்
அனுதாபம் மிகக் கொண்டு,
திராட்சைக் குலையொன்று,
திருத்துவ அடிமை அத்தாஸிடம்
கொடுத்தனுப்பினர்.
திருவதனம், மலர்ப்பாதம்
வழிந்த உதிரத்துளிகளையே,
ஜைதவர்கள் துணிகொண்டு,
துடைத்திட்ட நிலைகண்டு,
குலைத் தட்டை
தாம் நீட்டி
நபியவர்க்கு
அளித்திட்டார்!!
நன்றி சொன்ன நபியவர்கள்,
பிஸ்மி சொல்லி உணவுண்ண,
யாதென்று அவ்வடிமை,
சொன்ன சொல்லை விளம்பி நிற்க,
விளக்கத்தை நபிபெருமான்,
துலங்கும்படி எடுத்துச்சொல்ல,
திருத்துவத்தை ஒட்டி இது,
இருப்பதுதான் எங்ஙனமோ?
என்றவரும் வியந்து சொல்ல,
ஏந்தலிடம், விளக்கம் கேட்க,
”நினோவா நாட்டு யூனூஸ் போல,
நானும் ஒரு நபியாவேன்,
இறையொருவன், துணையில்லை,
பெறப்படவுமில்லையில்லை!
யாரையுமவன் பெறவில்லை,
இணைத்துணையும் இங்கில்லை!!
அருளாலன் ஆண்டவனும்
அவதாரம் எடுக்கவில்லை!
பெருந்தேவன் குமாரனென்று
பூமிதனில் பிறக்கவில்லை!!
என்று சொல்ல வந்துள்ளேன்….
நன்று எல்லாம் எடுத்துரைப்பேன்
உமக்கும் எமக்கும் வித்தியாசம்
இத்துணைதான் அறிந்திடுவீர்,”
நாயகத்தின் சொல்லைக் கேட்டு,
நல்வழியில் அவரிணைந்தார்!!
கருணை நபி காயத்தைக்
கண்டு மனம் கசிந்து நின்றார்!!
(தொடரும்)
-சுமஜ்லா.
Tweet | ||||
2 comments:
மிகவும் அருமையாக சொலலிருககிங்க அக்கா..
ஸீறாவை இப்படி படிப்பது புதித் எனக்கு. அல்ஹ்மதுலில்லாஹ், அழகாக எழுதியிருக்கிறீர்கள். அல்லாஹூ ரப்புல் ஆலமீன் தங்களின் இச்சேவையை பொருந்திக் கொள்வானாக. ஆமீன்.
Post a Comment