Monday, November 1, 2010

அரபு சீமையிலே... - 24

அப்போது,
யமன் மாகாணத் தளபதி,
அறிவிலும் செல்வத்திலும்,
ஆற்றலுலும் சிறந்த
துபைல் பின் அம்ரு அலி தவ்ஸி
குறைஷிகளை சந்திக்க,
என்பார் மக்கா வந்தார்.

அவரிடம்,
முஹம்மதைப் பற்றி முழுக்குறைகூறி
மூடிமறைத்து, பொய்பல உரைத்து,
அஞ்சாமல் அவதூறு சொல்லி,
அவர் காதை
பஞ்சால் மூடச்செய்தனர்.
விஞ்சாத வித்தகையால்,
அவர் மனதில்,
நஞ்சதனை விதைத்திட்டனர்.


தினம் மூன்று கழிந்த போது,
திருக்காபா ஓரத்திலே
தீன்குலத்தில் இனிய நாதம்
திருக்குர்ஆன் தந்த போதம்
காதுகளில் தானாக,
குரலினிமைத் தேனாக,
சொல்லோடும் சொல்தந்த சுவையோடும்,
கல்லூறும் கவியூறும் கலையோடும்,
காதினிலே பாயக் கண்டு,
மனமாற்றம் மாயம் கொண்டு
பஞ்சு வேலையற்று விழுந்தது!
நஞ்சர் கொடியங்கு வீழ்ந்தது!!

பதிலொன்று தேடியவர்,
அதிகாலை நேரத்திலே,
சதிவலையில் விடுபட்டு,
கதிமோட்சம் காணவென்று,
பெருமகனார் சந்நிதியில்,
பெருங்குரலில் அழலானார்.
திருக்கலிமா தனையோதி,
இறையவனைத் தொழலானார்.
ஊர்திரும்பிய துபைல் அவர்கள்,
தீன் எனும் மாலை அணியச்செய்தார்.
இஸ்லாத்தில் தாம் இணைந்ததோடு,
தம் மக்களையும் இணையச்செய்தார்.

நாளும் பொழுதும் கழிய
ஊரும் உறவும் பிரிய,
தனிமையிலே வாடி நின்றார்
தாஹா நபி ரசூல் அவர்கள்.

இல்லத்து சுடர் விளக்கு,
கதீஜாவை இழந்ததனால்,
உள்ளத்து உணர்வுகளை,
உரைக்க ஒரு துணை வேண்டி,
அருந்தோழர் அபூபக்கர்,
அருமை மகள் ஆயிஷாவை,
ஐநூறு திர்ஹம் மஹருக்கு,
அண்ணலார்க்கு மணமுடித்தார்.

சின்னஞ்சிறு சிறுமியவர்
சிறிதுகாலம் சென்றபின்னே,
அன்னவரின் துணையாக,
அழகாகப் பொருந்திக் கொண்டார்.

ஆயினும்,
இடைப்பட்ட காலத்திலே,
இல்லத்தேவை நிறைவேற்ற,
பொறுப்புமிக்க பெண்ணொருவர்
தேவையென்று தேடி வந்தார்.

உயர் குலத்து சீமாட்டிகள்
அவருக்காக தவங்கிடந்தும்,
சீமான் வீட்டுப் பிள்ளையெல்லாம்,
கோமான் நபியை ஈர்க்கவில்லை!

அது சமயம்,
சவ்தா என்பார்,
விதியால் வந்த உறவை இழந்து,
தீனால் சொந்த உறவைத் துறந்து,
பெற்றோரும் உற்றோரும்
உடன்பிறந்த மற்றோரும்,
ஆதரிக்க மறுத்ததனால்,
வேதனையில் துடித்தார்.
சின்னஞ்சிறு குழந்தையோடு
அநாதரவாய்த் தவித்தார்.
அவர்தம் நிலை கண்டு,
தத்தமது தேவை கொண்டு,
நானூறு திர்ஹம் மஹருக்கு,
நாயகியை மணம் கொண்டார்.

இல்லத்துப் பொறுப்பை அவர் ஏற்க
உள்ளத்துக் கவலை நீங்கியது!
மெல்ல மெல்ல தீன் பணியில்
முன்னேற்றமும் வந்தது!!
தாஹா நபியின் தூதுவத்தில்
தனியழகு மிலிர்ந்தது!
தரணியிலே பரணி பாட
புதுப்பாதைத் திறந்தது!!

(தொடரும்)

-சுமஜ்லா.

3 comments:

அன்புடன் மலிக்கா said...

நிரைய அறியமுடிகிறது அக்கா உங்கள் அரபுசீமையின்மூலம்..

வாழ்த்துக்கள் சுமஜ்லாக்கா..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கவிநடையில் நபியவர்களின் வாழ்வைப்
படிப்பது சுவையாய் உள்ளது.

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி மலிக்கா, ஜஹ்ரா & நிஜாம் அண்ணா