Friday, September 26, 2014

நீங்க இன்னும் நல்லா வருவீங்க....

"நீங்க உங்க வியாபாரத்துக்கு லோன் கூட அப்ளை பண்ணலாமே"

"நீங்க உங்க வியாபாரத்துக்கு லோன் கூட அப்ளை பண்ணலாமே"

"இல்லை சார், நாங்க முஸ்லிம்ஸ். நாங்க வட்டி கட்ட கூடிய லோன் வாங்க மாட்டோம். நிறைய வங்கிகள் எனக்கு போன் செய்து லோன் வேண்டுமான்னு நச்சரிக்கிறாங்க. நாங்க தான் வேண்டாம்னுட்டோம்"

"வட்டி வாங்க தான் கூடாது கொடுக்கவும் கூடாதா?"

"சார்... நாங்க வட்டி வாங்கவும் கூடாது கொடுக்கவும் கூடாது, வட்டிக்கு கணக்கெழுதவும் கூடாது"

இந்த உடையாடல் நடந்தது ஈரோடு ஹெல்த் இன்ஸ்பெக்டருடன். எங்க தாஜ் மஹால் மசாலா இஞ்சி பூண்டு சுத்தமான, சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறது என்ற தரச்சான்றன FSSAI முத்திரை பெறுவதற்காக ஹெல்த் டிபார்ட்மெண்ட்டுக்கு போயிருந்தேன்.
15 நாட்கள் கழித்து அவர் கேட்டபடி எல்லா டாகுமெண்ட்டும் தயார் செய்து கொடுத்த போது, காசு எதுவும் கொடுக்கணுமா என்றேன். அவர் உடனே மறுத்து,

"என்னம்மா நீங்க வட்டி ஆகாதுன்னு லோன் கூட வாங்க மாட்டேங்கிறீங்க, உங்க கிட்ட போய் காசு வாங்குவமா?" என்று கேட்டார். எனக்கு ஆச்சரியம் ஞாபகம் வெச்சு இதை சொல்கிறாரே என்று. பாருங்க, நான் எதார்த்தமாக அவரிடம் சொன்ன ஒரு விஷயம் அவருக்கு எவ்வளவு பிடித்து விட்டதென்று...!

நேரில் எங்க ஃபேக்டரிக்கு விசிட் செய்தார். எல்லாமே அவருக்கு ரொம்ப திருப்தி. அப்ளிகேஷனில் என் குவாலிஃபிகேஷன் எழுதி தர வேண்டும். அதை பார்த்துவிட்டு, "இவ்வளவு படிச்சிருக்கீங்களே, டெட் எக்ஸாம் எழுதலாமே?" என்றார்.

நான் சொன்னேன், "சார் நான் இவ்ளோ படிச்சும் எம்ப்ளாய்மெண்ட் ஆஃபீஸ்ல கூட பதியலை சார். நாம இன்னொருத்தர்கிட்ட வேலை பார்ப்பதை விட நாம நாலு பேருக்கு வேலை கொடுக்கணும் என்றே நான் ஆசைப்பட்டேன் சார்"

என் பதில் அவருக்கு ரொம்ப பிடித்து விட்டது. அதே போல வேலை செய்யும் பெண்கள் தலைக்கு ஹிஜாப் போட்டு மறைத்திருப்பது, கையுறை அணிந்து வேலை செய்வது, தூசி உள்ளே வராத அளவுக்கு பாதுகாப்பு நடவடிக்கை, R.O. தண்ணீர் உபயோகிப்பது எல்லாமே அவர் திருப்தியாக உணர்ந்ததால், அப்ளிகேஷனை ஓக்கே செய்து கையெழுத்து வாங்கி சென்றுவிட்டார்.

போகும் போது நீங்க இன்னும் நல்லா வருவீங்க என்று வாழ்த்தியதோடு, உங்க FSSAI சர்டிஃபிகேட் வரும் முன்னாலேயே உங்க எண்ணை ஆன்லைனில் பார்த்து உங்களுக்கு ஃபோன் மூலம் தெரிவிக்கிறேன் என்று சொல்லி சென்றார்.

இன்ஷா அல்லாஹ் இன்னும் ஒரு வாரத்தில் FSSAI நம்பர் வந்துவிடும். இது போல ஒரு கிலோ, அரை கிலோ என பெரிய பேக்கிங்கில் இஞ்சி பூண்டு பேஸ்ட் அரசாங்க சுகாதார சான்றிதழுடன் தமிழகத்தில் தயாரிக்கும் முதல் கம்பெனி என்ற பெருமை நமக்கே.

எல்லா புகழும் இறைவனுக்கே!!!

எம் தயாரிப்பு பற்றி அறிந்து கொள்ள, பார்க்க & லைக் செய்க:
http://facebook.com/tajmahalmasala டீலர், சப்டீலர் விபரங்களுக்கு: 9488560231 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Wednesday, September 4, 2013

மூளைச்சாவில் இருந்து ஒருவர் மீள முடியுமா?

நான் போன மாதம் என் வேலை விஷயமாக ஒருவரை சந்தித்தேன். அவர் ஒரு ஹிந்து. நன்கு படித்து ஈரோட்டில் சொந்தமாக ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியும் ஒரு ஸ்கூலும் நடத்தி வருபவர். என் கணவரின் உடல்நிலை பற்றியும், மூளையில் ஹெமரேஜ் ஆனது பற்றியும் வலது கை இயக்கம் சரியாக மருந்தே இல்லை என்றும் சொன்னேன். அதற்கு அவர் சொன்ன விஷயங்கள் அப்படியே அவரின் மொழியில் தருகிறேன்:

”உங்க பெற்றோர் வீடு இருப்பதாக சொல்லும் கந்தசாமி வீதியில் குடியிருக்கும் முஹமதலியை உங்களுக்கு தெரியுமா?”

“தெரியும் ஆனால் அவ்வளவாக பழக்கம் இல்லை”

“மேடம்... அவருடைய பேரன் 3 வயது குழந்தை. பிறந்ததில் இருந்து ஹார்ட்டில் சின்னதாக ஒரு பிரச்சினை இருந்து வந்தது. அவர்கள் குடும்பம் இருப்பது சவூதியில். அவர்கள் அக்குழந்தையை அழைத்துக் கொண்டு ஹஜ்ஜுக்கும் சென்று வந்தனர். அக்குழந்தை கிராஅத் ஓதும் அழகைக் கண்டு சவூதிகளே வியந்து பாராட்டி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அந்த குழந்தை இந்தியாவில் இருந்த போது திடீரென்று சுயநினைவை இழந்து விட்டது. அக்குழந்தையை ஒரு ஹாஸ்பிடலில் சேர்த்து சிகிச்சை அளித்தார்கள். 

Sunday, February 3, 2013

படிக்காமலே மதிப்பெண் பெற உதவும் கல்விமுறை

மகன் லாமின் முன்பு மெட்ரிக் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, பக்கம் பக்கமாக fair noteல் எழுத வேண்டும். பொதுவாகவே எழுதுவதென்றால் அவனுக்கு அவ்வளவு கஷ்டம். எழுதி முடிக்கவில்லை என்ற காரணத்துக்காக பள்ளி நேரம் முடிந்த பிறகும் பள்ளியில் இருத்திக் கொள்வார்கள். பல நேரங்களில் பசியோடு வாடிப் போய் கிடக்கும் பிள்ளையை நாங்கள் 7 மணிக்கு போய் அழைத்து வருவோம். அவனுடைய ஃபேர் நோட்டில் நானும் சில நேரம் எழுதிக் கொடுத்திருக்கிறேன். மார்க்கும் சுமாராகத் தான் வாங்குவான். முடிவில் இது ஒத்துவராது என்று வேறு பள்ளிக்கு மாற்றி விட்டோம்.

இப்போது படிக்கும் பள்ளியில் சிபிஎஸ்இ சிலபஸ் ஃபாலோ பண்ணுகிறார்கள். இந்த சிலபஸ் கஷ்டம், புரிந்து படித்தால் தான் முடியும் என்று எல்லாரும் பயமுறுத்தினார்கள். இருந்தாலும் பார்க்கலாமே என்று கட்டணத்தையும் பொருட்படுத்தாமல் சேர்த்தோம்.

இப்போது லாமின் 4த் படிக்கிறான். வகுப்பில் முதல் இரண்டு இடத்துக்குள் வருகிறான். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒரு நாளும் அவன் வீட்டில் படிப்பதே இல்லை, நானும் படி என்று சொல்வதில்லை. வீட்டுக்கு வந்ததும் சிறிது நேரம் டி.வி. பார்த்துவிட்டு ஹிந்தி டியூசனுக்கு போய் விடுவான். வந்ததும் கொஞ்சம் நேரம் ஹோம் வொர்க் செய்வான். அவ்வளவு தான். பரிட்சை அப்போ கூட படிக்க மாட்டான்.

ஹோம் வொர்க் எல்லாம் அறிவுக்கு வேலை தருவதாக இருக்கும். அதாவது ஒர்க் ஷீட் தான். பதிலை அவர்களாகத் தான் தேடி பாடத்தில் இருந்து கண்டுபிடிக்க வேண்டும். Rote memorization எல்லாம் கிடையாது. பல நேரங்களில் அவன் நெட்டில் தேடி கண்டுபிடித்துக் கொள்வான். சில நேரங்களில் மட்டும் நான் உதவி செய்வேன். விடையை எப்போதும் சொல்லித் தர மாட்டேன். ஆனால், எப்படி கண்டுபிடிப்பது என்று சில நேரம் க்ளூ மட்டும் கொடுத்து அவனையே கண்டுபிடிக்க வைப்பேன். நான் படித்த பி.எட் இதற்காகவாவது உதவுகிறது.

இப்போது மதிப்பெண் லட்டு மாதிரி வாங்குகிறான். கணக்கில், சயின்ஸில், கம்ப்யூட்டர் சயின்ஸில் மற்றும் சோஷியலில் எப்போதும் வகுப்பில் முதல் தான். பெரும்பாலும் செண்டம் வாங்கி விடுகிறான். ஆனால், தமிழும் ஆங்கிலமும் மட்டும் கொஞ்சம் உதைக்கும். ஸ்பெல்லிங் தகராறினால் மதிப்பெண் குறைந்து விடுகிறது. ஆனாலும், நான் அதையும் படி படி என்று சொல்வதில்லை, மாறாக தமிழ் நியூஸ் ஆன்லைனில் வாசிக்க சொல்வேன், ஆங்கில நியூஸ் பேப்பர் ஸ்டூடண்ட் எடிஷன் ஸ்கூலில் தினமும் கொடுக்கிறார்கள், அதை வாசிக்கச் சொல்வேன். ஒரு நல்ல கல்வி LSRW Skills வளர்ப்பதாக இருக்க வேண்டும். அதாவது, listening, speaking, reading and writing. நான் பெரும்பாலும் என் பிள்ளைகளிடம் ஆங்கிலத்திலேயே பேசுவதால் (அவர்கள் பழக வேண்டும் என்று) அவர்களுடைய ஸ்போக்கன் இங்கிலீஷ் மற்ற வகுப்பு தோழர்களுடையதை விட மேலாகவே இருக்கிறது.

வீட்டில் படிக்காமலே எப்படி மார்க் வாங்குகிறான் என்பது தான் எனக்கு ஆச்சரியம். டீச்சரிடம் ’வீட்டில் இவன் படிப்பதே இல்லை, எப்படி மார்க் வாங்குகிறான், வகுப்பில் மற்ற அனைவரும் சராசரியா?’ என்று கேட்டேன். இக்கேள்வி அவரை கோபப்படுத்தி இருக்க வேண்டும். அவர் என்னிடம் கேட்கிறார், ‘எதற்கு வீட்டில் படிக்க வேண்டும்? ஹோம் வொர்க் மட்டும் செய்தால் போதும், அதான் இங்கேயே எல்லாம் புரியவைத்து விடுகிறோமே என்று’. எனக்கு ஆச்சரியம் ஒரு புறம். இத்தகைய எஜுகேஷன் சிஸ்டம் என் மகனுக்கு வாய்த்திருக்கிறதே என்ற சந்தோஷம் ஒரு புறம். அவன் ஒரு போதும் மனப்பாடம் செய்வதில்லை, புரிந்து படிக்கிறான் என்று புரிந்தது.

மேலும் அவன் ஆசிரியை சொன்னது என்னவென்றால், ‘உங்கள் பிள்ளைக்கு கணக்கு மிக நன்றாக வருகிறது, நேரடியான கணக்கை எல்லாரும் போட்டுவிடுவார்கள், ஆனால் சுற்றி வளைத்துக் கேட்டால், இவன் ஒருவன் மட்டும் தான் வகுப்பில் போடுகிறான். நிறைய puzzlesம் மேல் வகுப்பு கணக்குகளையும் நெட்டில் இருந்து டவுன்லோடு செய்து கொடுங்கள்... மிகவும் திறமையாக வருவான்’ என்றார். கணக்கென்றால் நான் காததூரம் ஓடுவேன், நான் எங்கே இந்த ஆராய்ச்சியெல்லாம் செய்யப் போகிறேன் என்று விட்டுவிட்டேன். +2 படிக்கும் மகள் சில நேரம் அவள் பாடத்தில் வரும் கணக்குகளை அவனுக்கு சொல்லிக் கொடுப்பாள், அதையும் கூட புரிந்து கொள்கிறான்.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், ஒரு பிள்ளை படிப்பதற்கும் படிக்காததற்கும், Education System ல் இருக்கும் குறைபாடும் ஒரு காரணம். பிள்ளைகளின் திறமைகளை சரியாக எடை போடத் தெரிந்த ஆசிரியர்கள் வாய்த்தால் எல்லாப் பிள்ளைகளும் அறிவாளிகளே! 

Thursday, January 31, 2013

நான் ஒரு முஸ்லிம் ஆனால் விஸ்வரூபத்தை எதிர்க்கவில்லை ஏன்?

உண்மை என்ன, உரைப்பது என்ன, நம் தன்மை என்ன, தனித்துவம் என்ன...

(என் பேஸ்புக்கில் இருந்து...) விஸ்வரூபம் பற்றி இது வரை நான் இங்கே வாய் திறக்கவில்லை, காரணம் என் பேஸ்புக் பக்கத்துக்கு மதச்சாயம் பூசுவதை நான் எப்போதுமே விரும்புவதில்லை. இப்போது சொல்ல நினைப்பதும் நடுநிலையான கருத்து தான்.

நான் ஒரு முஸ்லிம். அதற்காக பெருமைப்படுகிறேன். என்னுடைய இஸ்லாம் ஒரு மதமல்ல, ஒரு மார்க்கம். அதாவது எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக்கூடாது என்று எனக்குக் கற்றுத் தரும் ஒரு ஆசான். அவ்வளவு தான். அது எனக்கு அமைதியைக் கற்றுத் தருகிறது. பொறுமையைக் கற்றுத் தருகிறது. அழகிய வாழ்வியலைக் கற்றுத் தருகிறது. உண்ணுவது முதல் உறங்குவது வரை, திருமணம், உறவு பேணல், கடன், பிள்ளை வளர்ப்பு என அனைத்திலும் எனக்கு அழகாக வழிகாட்டுகிறது. எனக்கு ஒரு போதும் அது தீவிரவாதத்தையும் மதவாதத்தையும் கற்றுத் தந்ததில்லை. அதனால் தான் நான் பேஸ்புக்கில் மதம் பிடித்து ஆடுவதில்லை, ஆடுபவர்களை நட்பு வட்டத்தில் அனுமதிப்பதுமில்லை. (பேஸ்புக்கில் இப்பதிவும் கமெண்ட்ஸும்: http://www.facebook.com/sumazla/posts/585331091482190)

உங்களுக்குப் பிடிக்காவிட்டால் படத்தைப் பார்க்காதீர்கள். புறக்கணித்துவிடுங்கள். அதைவிட்டு விட்டு எதற்காக இப்படி ஆர்ப்பாட்டம் செய்து அடுத்தவர் எதிர்பார்ப்பை எகிறச் செய்கிறீர்கள்? தண்ணீருக்குள் பந்தை வைத்து அழுத்தினால் தான் அது வேகமாக வெளியே வரும். இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்ற கருத்தை நீக்க நீங்கள் பாடுபடும் அதே நேரத்தில், இஸ்லாமியர்கள் போராட்டக்காரர்கள் என்ற சாயல் படிந்துகொண்டிருக்கிறது. என் மக்களை மதம்பிடித்த போராட்டக்காரர்களாக இந்த சமுதாயம் பார்ப்பதை சத்தியமாக நான் விரும்ப மாட்டேன்.

பல்லாயிரம் வருடங்களாகப் போற்றிப்பாதுகாக்கப்படும் இஸ்லாத்தின் கண்ணியம் ஒரு படத்தினால் பாழ்படும் என்றால்.... எம் மீது மிகுந்த பாசம் வைத்துள்ள என் பல கோடி இந்து, கிறுத்துவ நண்பர்கள் ஒரு படத்தினால் தம் இஸ்லாமிய சகோதரர்களைத் தீவிரவாதிகளாகப் பார்க்கத் துவங்குவார்கள் என்றால்... அது முழு முட்டாள்தனம்! குறுகிய மனப்பான்மை!! உன் மார்க்கம் புனிதமான மார்க்கம் என்று நம்பினால், ஒரு சாதாரண திரைப்படம் அதை கெடுத்துவிட முடியுமா? அது என்ன அவ்வளவு சக்தி வாய்ந்ததா?

என்னைப் பொறுத்தவரை, இந்த ஆர்ப்பாட்டங்களே போதும் விஸ்வரூபத்துக்கு விளம்பர செலவை மிச்சப்படுத்த என்பேன். அரசியல் ஆதாயத்துக்காக அதிமுக அரசு முஸ்லிம்களை பலிகடா ஆக்கிவிட்டது என்று தான் தோன்றுகிறது.

மதவெறி கொண்டவர்கள் எல்லா மதத்திலும் உண்டு... ஆனால் அவ்வாறு வெறி கொள்ள அவர்கள் மதம் சொல்கிறதா என்றால், இல்லை என்பேன். அப்படி சொல்லும் மதம் சரியான மதமாகவும் இருக்க முடியாது. மற்றபடி இந்துக்கள் என்றென்றும் இஸ்லாமியர்களின் உற்ற தோழர்கள் தான். அவர்கள் இப்படத்தைப் பார்த்தாலும் சரி, பார்க்காவிட்டாலும் சரி, எம்மை ஒரு போதும் தவறாகவோ, தீவிரவாதிகளாகவோ பார்க்க மாட்டார்கள் என்றே நான் நம்புகிறேன்!


என் கருத்துக்கள் சரி என்றால், இப்பதிவுக்கு தமிழ்மணத்தில் ஓட்டுப் போடுங்கள், முடிந்தவரை ஷேர் செய்து மதநல்லிணக்கத்தை உருவாக்குங்கள். நன்றி!

- சுமஜ்லா

Wednesday, August 15, 2012

டேப்லட் பிஸி வாங்கும் முன்பு…


”மம்மி உங்க டேப்லட் கொடுங்க மம்மி… நான் கேம்ஸ் விளையாடணும்”

“தர மாட்டேன் போடா…”

”டாடி எனக்கொரு டேப்லட் வேணும் டாடி……. ப்ளீஸ் டாடி”


என் மகன் என்னுடைய டேப்லெட்டில் கொஞ்சம் நாள் விளையாடிக் கொண்டிருந்தான். ஆனால் அதில் மெமரி போதாததால் எல்லா கேமையும் தூக்கிவிட்டேன். இன்னும் கொஞ்சம் மெமரி கூடுதலாக இருந்திருந்தால் நல்லா இருக்குமே என்று இப்போது நினைக்கிறேன். என்னுடையது ஸ்மார்ட் ஃபோன் டேப்லட். வாங்கியவுடன் தான் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். அதை இங்கே தருகிறேன்.


Friday, August 10, 2012

காதலென்னும் தனிசுகம்ஆசையெல்லாம் ஒன்றாகிப் பெண் வடிவம் எடுத்துவர
நேசமெல்லாம் நிறைவாகி கண் இமையில் கனவு தர
பாசவெள்ளம் கரைதொட்டு கண்மாயைத் தகர்த்துவிட
தாசனுந்தன் தாள்பணியப் பேரின்பப் பரவசமே!


கண்பார்க்கும் காட்சியெல்லாம் உன்னுருவாய் நான் பார்க்க
பெண் இங்கே பேதையென மதிமயங்கித் தள்ளாட
கன்னத்தின் செஞ்சிவப்பு நாணத்தின் மறு உருவாய்
அன்பன் உந்தன் கைசேர முகம் காட்டும் நவரசமே!


சாந்தி கொண்ட மனம் உந்தன் வருகைக்கு வழிபார்க்க
பாந்தமாக அலங்கரித்து பதி மனதை எதிர்நோக்க
ஏந்திழையாள் எண்ணம் போல என்னருகே நீயும்வர
காந்தமென ஒட்டிக் கொள்ள காதலென்றும் தனிசுகமே!


பார்த்த விழி பூத்திடாமல் பாதையில் நீ இணைந்திருக்க
சேர்த்து வெச்ச ஆசையெல்லாம் செங்கரும்பாய் இனிமை தர
ஆத்தங்கரை மேட்டினிலே ஆலமர நிழலினிலே
பூத்திருக்கும் பூவைப்போல பூவை மனம் விரிந்திடுமே!!!

- சுமஜ்லா

Thursday, March 3, 2011

உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமா? - 2

காப்பியடிப்பதால் என்ன தீங்குகள் விளையும் என்று தெரிந்து கொண்டால் இணையத்தில் யாரும் யாருடைய குறிப்புகளையும் காப்பியடிக்க மாட்டார்கள். ஏன் ஒவ்வொரு தளமும் தனக்கென் தனியான உள்ளடக்கத்தை எழுத வேண்டும்? உள்ளடக்கம் எழுத வேண்டும் என்றால் நிச்சயமாக பணம் செலவு செய்ய வேண்டும். உதாரணமாக ஒரு தளத்தில் இரவு உடைகள் விற்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் இரவு உடைகளைப் பற்றிய செய்திகளையும் நன்மைகளையும் அத்தளத்தில் பட்டியலிட்டிருப்பார்கள். அதை அவர்கள் இன்னொரு தளத்தில் இருந்தே எடுத்திருக்கலாமே? ஏன் தனக்கெனத் தனியாக ஒன்று நேரமும் பொருளும் செலவு செய்து உருவாக்க வேண்டும்? Uniqueness எனப்படும் தனித்தன்மை இருந்தால் மட்டுமே இணையத்தில் வெற்றி காண முடியும். உங்கள் தளத்தின் மதிப்பு இந்த தனித்தன்மையைக் கொண்டு தான் அளவிடப்படுகின்றது.

ஒரு தளத்தை நாம் பார்வையிட வேண்டுமென்றால் அதற்குரிய கீ வோர்ட்ஸ் எனப்படும் சாவிச்சொற்களை கூகுளில் உள்ளீடு செய்வோம். உதாரணமாக நாம் சமையல் குறிப்பில் ஒன்றான செட்டிநாட்டு மீன்குழம்பு என்பதைக் கண்டு பிடித்து செய்ய வேண்டும் என்றால், நாம் கூகுளில் ‘செட்டிநாட்டு மீன்குழம்பு’ என்றோ, ‘மீன்குழம்பு செட்டிநாடு’ என்றோ ’சுவையான மீன்குழம்பு செய்முறை’ என்றோ உள்ளீடு செய்வோம். இவை தான் சாவிச் சொற்கள். இது போல ஒவ்வொரு தளத்துக்கும் சில சாவிச் சொற்கள் இருக்கும்.

Tuesday, March 1, 2011

உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமா?

பலரும் தங்கள் தளத்தின் இடுகைகளை அடுத்தவர் காப்பியடிக்கிறார்கள் என்று என்னிடம் வருத்தத்துடன் கூறுவார்கள். அதைத் தடுக்க ஒரு சில வழிகளை ஒரு சில கையாண்டாலும் காப்பியடிப்பது என்னவோ தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போலத்தான் இதுவும்.

ஆனால், காப்பியடிக்கப்படும் தளத்துக்கு சில நன்மைகள் உண்டு. அதே போல காப்பியடித்ததை வெளியிடும் தளத்துக்கு சில தீங்குகளும் உண்டு. இதை உணர்ந்து கொண்டால், ‘ஐயோ என் சமையல் குறிப்பை காப்பியடிச்சிட்டாங்க’, ‘ஐயோ என் படத்தைக் காப்பியடிச்சிட்டாங்க’ என்று யாரும் வருத்தப்பட மாட்டார்கள். இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் வலையுலகம் எவ்வாரு இயங்குகிறது என்று சற்று அடிப்படையில் இருந்து பார்த்தால் தான் புரியும்.

Monday, November 1, 2010

அரபு சீமையிலே... - 25

பத்தாண்டு முடிந்தது நபித்துவம் பெற்று
புத்தாண்டுக்கு முந்தய துல்ஹஜ் வந்தது
ஹஜ்ஜுக்குக் கூடிய மக்களில்
பசுந்தானியம் விளையும்
பழத்தோட்டங்களும்
கனிந்த பேரிச்சையும்
தெளிந்த நீரோடையும் நிறைந்த
யத்ரிப் நகரத்து யாத்ரிகர்கள்
குழுமினர்.
மினாவுக்கு அருகில்
அவர்தம் கூடாரம் – சென்று
நபிகளார் செய்தார்
பிரச்சாரம்.

நல்லொழுக்க மக்கள் பலர்
முன்னொழுகி வந்ததனால்
மார்க்கமருகி போனது,
தீர்க்கதரிசி ஏற்றது!
பூசல் பிணக்கு ஒழிந்திட
வாசலாக அமைந்தது!
நாசவேலை குறைந்திட
நாளும் பொழுதும் பிறந்தது!!

அரபு சீமையிலே... - 24

அப்போது,
யமன் மாகாணத் தளபதி,
அறிவிலும் செல்வத்திலும்,
ஆற்றலுலும் சிறந்த
துபைல் பின் அம்ரு அலி தவ்ஸி
குறைஷிகளை சந்திக்க,
என்பார் மக்கா வந்தார்.

அவரிடம்,
முஹம்மதைப் பற்றி முழுக்குறைகூறி
மூடிமறைத்து, பொய்பல உரைத்து,
அஞ்சாமல் அவதூறு சொல்லி,
அவர் காதை
பஞ்சால் மூடச்செய்தனர்.
விஞ்சாத வித்தகையால்,
அவர் மனதில்,
நஞ்சதனை விதைத்திட்டனர்.