புத்தாண்டுக்கு முந்தய துல்ஹஜ் வந்தது
ஹஜ்ஜுக்குக் கூடிய மக்களில்
பசுந்தானியம் விளையும்
பழத்தோட்டங்களும்
கனிந்த பேரிச்சையும்
தெளிந்த நீரோடையும் நிறைந்த
யத்ரிப் நகரத்து யாத்ரிகர்கள்
குழுமினர்.
மினாவுக்கு அருகில்
அவர்தம் கூடாரம் – சென்று
நபிகளார் செய்தார்
பிரச்சாரம்.
நல்லொழுக்க மக்கள் பலர்
முன்னொழுகி வந்ததனால்
மார்க்கமருகி போனது,
தீர்க்கதரிசி ஏற்றது!
பூசல் பிணக்கு ஒழிந்திட
வாசலாக அமைந்தது!
நாசவேலை குறைந்திட
நாளும் பொழுதும் பிறந்தது!!
அவ்ஸ், கஸ்ரஜ் என்று
கோத்திரம் இரண்டு!
கோத்திரத்துக்குள்ளே
சாத்திரம் நூறு!! – அதனால்
ஆத்திரம் பலமடங்கு!
சாத்தியம் உணர்ந்து நபிகள்(ஸல்)
சாதகமாக்க,
வேற்றுமை மறந்து வெற்றியும் கிடைத்தது!
அஸ்அத், அவ்பு, ரபீஆ,
குத்பா, உத்பா, ஜாபிர்
என அறுவரும்
இஸ்லாத்தை பெறுவராய்,
எடுத்துவைத்த தூதுவத்தை
நபிகளாரின் மாதவத்தார்,
சிரமேற்றுக் கொண்டார்கள்;
பெருவாழ்வு கண்டார்கள்!
அடியொற்றி பலரும்
இறைவனது சந்நிதியில்
முடிதாழ்த்தி நின்றார்கள்!
பூமிதனில் இஸ்லாம்
கொடியேந்தி நின்றதுவே!
விடியலுக்குக் காத்திருந்த
வியனுலக நாயகரும்
படிப்படியாய் பாங்குடனே
இஸ்லாத்தை எத்தி வைத்தார்!
இணை வைத்தல் பெரும்பாவம்,
விபச்சாரம் கைசேதம்,
பாலகரைக் கொல்லுவதும்,
பழி சொல்லித் தள்ளுவதும்
களவாண்டு செல்லுவதும்
பொய்புறங்கள் சொல்லுவதும்,
விலக்குவது அவசியம்!
இவை
இஸ்லாத்தின் அடித்தளம்!!
என்று சொல்லி கற்பித்தார்,
பாடங்களைப் படிப்பித்தார்!!
இறை வணக்கம் வேண்டும் – அதோடு
மறை வழியும் வேண்டும்.
மறு உலக விருப்பம்
உருவாக வேண்டும்!
நீதி, அன்பு, வாய்மை
ஆதி மனத்தூய்மை
தியாகத்துடன் அனுதாபம்
கொள்வதுதான் அனுகூலம்!
சீரிய இவை வாழ்வினிலே
ஊறிட இஸ்லாம் செழித்திடுமே!
முஸ்அப் பின் உமைர் பின் ஹாஷிம்
என்ற போதகரை திருமதினா அனுப்பிவிட,
இடம்தந்தார் ஜுராரா தம் இல்லத்தில்,
நடமிட்டார் யத்ரிப் மக்கள் உள்ளத்தில்…
இதமான பேச்சு பதமாக ஈர்க்க
இஸ்லாத்தின் தூது இனிதாக பரவ,
சிலைவணக்கம் ஒதுக்கி விட்டு,
அலைகடலாய் இணைந்தனர் மக்கள்.
ஸஅத் இப்னு மஆத் அல் நுஃமான்
என்பவரின் கிணற்றடியில்
நடந்தது தினமும் போதம்!
முழங்கியது உண்மை நாதம்!!
அது பிடிக்காத ஸஅத்,
உஸைத் பின் ஹுளைரை அனுப்பி,
அவர்களை வெளியேற்றச் சொன்னார்.
மகுடிக்கு மயங்கிய பாம்பென,
மலருக்கு மயங்கிய தேனியாக,
உஸைத்தை இஸ்லாம் ஈர்க்க
திருவசனத்தின் கவர்ச்சியில் கட்டுண்டார்!
கலிமாவைத் தானோதி தீன்கொண்டார்!!
மனமாற்றம் அறிந்த ஸஅத்,
சினமேற்று மனதில்,
இறைத்தூதை தடுக்கவென
தாமே சென்றார்…..
முறையான மொழியாலே
உளமாற்றம் பெற்றார்!
அதன் பயனால்,
அப்து அஷ்ஹல் கூட்டமே,
தீனின் தூணைப் பற்றிப் பிடித்தது!
இஸ்லாத்தின் சக்தி அங்கு தடித்தது!!
மக்காவில் எதிர்ப்பாய்
குரலெழுந்த போது,
மதினாவின் மக்கள்
திரள் திரளாய் வந்து,
ஒப்பற்ற சக்தியினை
உவந்தேற்றுக் கொண்டனரே!
ஒற்றுமையாய் ஒழுகிநின்று
சன்மார்க்கம் கண்டனரே!!
(வளரும்)
-சுமஜ்லா.
Tweet | ||||
10 comments:
நலமா சுஹைனா?அரபுச்சீமையிலே தொடர ஆரம்பிச்சாச்சா?எழுத்து நடை எப்பவும் பாராட்டக் கூடியவகையில் இருக்கு.
நலமா சுஹைனா?அரபுச்சீமையிலே தொடர ஆரம்பிச்சாச்சா?எழுத்து நடை எப்பவும் பாராட்டக் கூடியவகையில் இருக்கு.
நலம் தான் அக்கா... முன்பு எழுதி வைத்த சில அத்தியாயங்கள் பதியப்படாமல் இருந்தன. அதான் அடுத்தடுத்துப் போட்டுவிட்டேன்.
இதுவரைஇதுவரை அரபுச் சீமையிலே 25 பகுதிகள் வெளிவந்துவிட்டன.
மேலும் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்(றோம்).
இன்னுமின்னும் மெருகேறிவருகிறது சுகயனா அக்கா
weldon
அக்கா
தாங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்.
http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_06.html
வாழ்த்துகள்!
சுஹைனா நலமா?எங்கும் பார்க்க முடியலை.
அடுத்த பதிவு எப்போ?
விரைவில் எதிர்பார்க்கிறோம்...
Post a Comment