இபுராஹிம் நபியவர்கள்
சில காலம் அங்கிருந்து - பின்
சிரியா நாடேகி
சிறிய தந்தை மகள் சாராவை - ஊர்
அறிய மணம் புரிந்து கொண்டார்.
ஞாலம் சுழன்றிட
காலம் கடந்தது - தாய்
மண்ணை மிதித்திட - ஓர்
வேளை வந்தது.
அகத்தினில் யாவரும் - இறை
மகத்துவம் உணர்வீர்.
ஜெகத்தினில் உய்வு - ஏகத்
துவத்தினில் உளது - என
உருவச் சிலை வணக்கம் ஒழிக்க
தெருவெங்கும் இறை முழக்கம் செய்தார்.
நல்லதை எதிர்க்க
நாலு பேர் உலகில்
என்றும் உளரன்றோ?!
விளம்பிய உடனே
கிளம்பியது எதிர்ப்பு!
அளவிலா சினத்துடன்
மூண்டது நெருப்பு!!
அவரை
நெருப்பு குண்டத்தினுள் தள்ள - தன்
துருப்புகளை ஏவினான் நம்ரூது.
ஊர் அறிய
சுவாலை தெரிய
நெருப்பினுள் எறிய
நிகழ்ந்தது அதிசயம்.
வானை முட்டும் புகையெல்லாம் - இறை
ஆணைப்படியே அமிழ்ந்ததுவே!
தானைத் தலைவர் விழுந்தவுடன் - அது
பானை நீர் போல் குளிர்ந்ததுவே!!
உள்ளத்தில் கவலையோடு
இல்லத்தரசி சாராவுடன்
நொந்த மனத்தோடு
சொந்த நாட்டை விட்டு
எகிப்துக்கு ஏகினார் நபியவர்கள்.
அரசன் ரக்கியூன்
அடைக்கலம் தந்தான்.
பரிசாய் பலப்பல
பொருள்வளம் ஈந்தான்.
வயதாகி வந்தாலும்,
வாரிசு பிறக்கவில்லை.
தனதென்று சொல்லவொரு
மகவொன்று இல்லையில்லை.
அதனால்,
வெகுமதியாய் வந்த ஹாஜராவை - தன்
திருமதியாய் ஆக்கிக் கொண்டார் இப்ராஹிம்.
எண்பத்தாறு வயதினிலே
பேர் சொல்ல பிள்ளையொன்று
ஹாஜராவின் மகனாக
இஸ்மாயில் அவதரிக்க,
தொன்னூற்றி ஒன்பதிலே
சாராவின் மணிவயிற்றில்
இஸ்ஹாக்கு நபியவர்கள்
இவ்வுலகில் பிறந்தார்கள்.
சோதிக்க நினைத்தான்
இறைவன் - அதன்மூலம்
போதிக்க நினைத்தான்
நல்லறிவை!
ஊரார் யாருமில்லாத
‘பாரான்’ என்னும் வனாந்திரம்
அரேபியாவின் மக்காவில்
ஒரே மகனை தன் தாரத்துடன்
விட்டு வந்தார் இப்ராஹிம்.
அச்சம் தரும் தனிமையிலே!
பச்சிளங்குழந்தை தாயுடனே!!
(வளரும்)
Tweet | ||||
3 comments:
நல்லா இருக்கு! எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தி விட்டீர்கள். வாழ்த்துக்கள்! தொடருங்கள்!
தமிழ் பிரியரே, என் எழுத்தில் குற்றம் கண்டால் தாராளமாக சுட்டிக் காட்டலாம். திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறேன். நன்றி!
கவிதையிலும் கதை சொல்வது அழகு.பாராட்டுக்கள்.
Post a Comment