Tuesday, April 21, 2009

சாயபு வீட்டு சரித்திரம் - 2


(உலவும் மனிதர்களின் உண்மைக்கதை)

‘‘சடங்காகி சமைஞ்ச மக, அலங்காரம் பண்ணிக்கிட்டு,
தடம்பார்த்து நின்றாளே! அத்தை மகன் வருவானு-
எடுத்து வளர்த்த மக இவள எந்த மகன் கட்டுவானு,
அடுத்தவங்க சொல்லக்கேட்டு, அடங்கித்தான் போனாளே”

வண்டி கட்டிக் கொண்டு உள்ளூரிலிருந்த தங்கை வீட்டுக்கு போனார், மீரான் சாயபு.

“அய்சாமா, ஏ அய்சாமா!, எம்புள்ள , வயசுக்கு வந்திட்டா, சீக்கிரம் கிளம்பு, பாத்திமாவுக்கு நம்ம சாதிசனத்தோட பழக்கவழக்கமெல்லாம் தெரியாது. நீ தான் வந்து முன்ன நிக்கணும்”

“எப்பண்ணா? தோ வந்திர்ரன் நானு இப்பவே”

“மச்சான் எங்க போனாரு, அவருட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு, உன்ன கையோட கூட்டிட்டு போகலாம்னு வந்தேன்”

மீரான் சாயபு சொல்லிட்டு இருக்கப்பவே, துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு உள்ள வந்தாரு, அய்சாமா புருஷன் அப்துல்லா.

“அப்துலூ, கச்சாமா, பெரிய மனுஷி ஆகிட்டா, நா அய்சாமாவ கூட்டிட்டு கிளம்புறேன். நீ மத்தியானம் சாப்பாட்டுக்கு அங்க வந்துருப்பா”

“அதுக்கென்ன தாராளமா கூட்டிட்டு போங்க மச்சான், நா வந்திர்ரன்”

அய்சாமா, வேகமா சோறாக்கூட்டுக்குள்ள ஓடினா; அப்பதான் காய்ச்சி இறக்குன சுடுபாலில, கொஞ்சம் சர்க்கரை போட்டு, நெய் விட்டா. கம்பியில தொங்கிட்டிருந்த வாழைப்பழம் ரெண்ட எடுத்து நறுக்கி பாலில் போட்டு, பாலும் பழத்த கேத்தல்ல ஊத்துனா. துப்பட்டியை பொத்திக்கிட்டு, ரெண்டு வயசு கைக்கொழந்த சைதாவை எடுத்து இக்கத்துல இடுக்கிட்டு, ஏழு வயசு மகன், காதரைக் கையில பிடிச்சிக்கிட்டு, கிளம்பிட்டா.

“அண்ணா, அக்கமாவுக்கு சொல்லியாச்சா?”

“டவுனுக்கு போகணுமே! உன்ன ஊட்டுல உட்டுட்டுத் தான் போகணும். தோ, இப்ப அம்மாட்டயும் சொல்லி, கையோட கூட்டிட்டு போகணும்”

பக்கத்துல இருந்த அம்மா வீட்டுக்குப் போயி, அம்மாவையும் கூட்டிட்டு, அண்ணமாருக்கும் சொல்லிட்டு, வண்டியில அம்மா முத்தம்மாவையும் அய்சாமாவையும் கூட்டிட்டு கிளம்புனாரு, சாயபு.

வீட்டுல அவங்கள இறக்கி விட்டுட்டு, டவுனில இருக்க தங்கச்சி, சல்மாவுக்கும், ஒரு வருஷம் முன்னாடி மவுத்தாப்போன இன்னொரு தங்கச்சியோட புருஷன் ஜின்னாவுக்கும் சொல்லிட்டு வரப் போனாரு.


அய்சாமாவும், முத்தம்மாவும் வாசல்ல நுழைஞ்சாங்க; ஓடி வந்து வரவேத்தா பாத்திமா. பாவம் அவளும் சாதிவிட்டு சாதி, கல்யாணம் மூச்சுகிட்டா, இவங்கள விட்டா யாரிருக்கா அவளுக்கு?!

“வா அய்சாமா, வாங்கம்மா!”

“எங்க பாத்திமா கதீஜா?”

“தோ! பாருங்க ரேடியா ரூமில, வயித்து வலிக்குதுன்னு அழுதுகிட்டு உட்கார்ந்திருக்கா”

உள்ள போன அய்சாமா கச்சாமாவ பார்த்து சிரிச்சா; அவ பாவாடைய சோதனை போட்டா; தீட்டு துணி வைக்க சொல்லிக் கொடுத்தா; வெக்கத்தாலயும் வவுத்து வலியாலயும் அழுதுட்டு இருந்த கச்சாமாவ ஆறுதல் படுத்துனா.

“பாத்திமா, இப்ப கழட்டற துணியெல்லாம் வண்ணானுக்கு கொடுத்திரணும். அமாசைக்கு சொல்லியனுப்பு; அப்புறம் அஞ்சு பேரு, எண்ணெய் தொட்டு வெச்சு தண்ணி ஊத்தணும், தண்ணி காய வைய்யி, நாலு படி அரிசி போட்டு, பருப்பரிசிஞ்சோறு ஆக்கி, காய் சுண்ட வெச்சிரு” சொன்ன அய்சாமா, கேத்தல தொறந்து, பாலும் பழத்த எடுத்து, மூணு தடவ, கச்சாமாவுக்கு ஊடடி விட்டா.

அதுக்குள்ள, லைனுக்குள்ள குடியிருக்கவுங்களுக்கெல்லாம் சேதி தெரிஞ்சு, ஒரு கூட்டங்கூடிருச்சு. கச்சாமா செட்டுப்புள்ளைங்கல்லாம், வந்து சேர்ந்திட்டாங்க. டவுனில இருந்து, சல்மாவும் மக்களோட வந்திறங்கிட்டா. மவுத்தாப்போன தங்கச்சி, ஜமீலா புருஷன் ஜின்னா பொறவு வரேன்னு சொல்லிட்டாரு. காலேஜில போய் படிக்கற மவன் வந்தொன்னதான அவுரு வர முடியும்.

கச்சாமாவை, பொடக்கானிக்குக் கூட்டிட்டுப் போயி, அஞ்சு பேர் எண்ணெய் தொட்டு வெச்சு, தண்ணி ஊத்தி விட்டாங்க. திண்ணையில ஒரு முக்காலி போட்டு, அதுல உட்கார வெச்சு, மொறமக்காரங்க எல்லாரும் வரிசையா வந்து பாலும் பழம் கொடுத்தாங்க. அப்புறம், செட்டுப் புள்ளைங்க நாலு பேரை கச்சாமாவோட உட்கார வெச்சு, ஒரே தட்டுல பருப்பரிசிஞ்சோறு திங்க வெச்சாங்க.


மீரான் சாயபு, எல்லத்தையும் கண்ணுல ஆனந்தக் கண்ணீரோட வெச்ச கண்ணு எடுக்காம பாத்துக்கிட்டே இருந்தாரு. இருக்காதா பின்னே?, பெத்த பாசத்தோட, வளர்த்த பாசம் பெரிசல்லோ?! லைன்ல குடியிருக்கற, மும்மக்காவோட மகன், ஜாயிரு தான் அவருக்கு செல்லக்குட்டி. பெத்த மகனப் போல அவ்ளோ பாசம் அவன் மேல. அந்த எளந்தாரிப் பய தான், அக்கா விஷேசத்துக்கு ஓடி ஓடி வேல செஞ்சான்.

லொட லொடனு பேசற கச்சாமா, அப்படியே அடங்கி போயிட்டா. எப்பவுமே, கச்சாமாவுக்கு மனுசருன்னா உசிரு. பேச ஆள் கெடச்சா, அப்படியே பாசத்த பொழியுவா! இப்ப வெக்கத்துனால, ரொம்ப அமைதியா இருந்தா.

ஒரு பதினோரு நாளுங்க, சாதி சனம் அங்க டேரா போட்டுட்டாங்க; அதான் வழக்கமுங்கூட. தினமும், கச்சாமாவ, சீவி, சிங்காரிச்சு அழகு படுத்தினாங்க குப்பிமாருங்க. வயசுக்கு வந்தா வேணும்னு சேர்த்து வெச்சிருந்த, நைலக்ஸ் பாவாட, சீட்டி பாவாட, பட்டுப் பாவாடயெல்லாம் தினம் ஒன்னா போட்டு அழகு பார்த்தாங்க. குப்பிங்க, அவங்கவங்க சீலைய ஆளுக்கு ஒரு நாளா கட்டி நெட்டி முறிச்சாங்க!

வீடே ஜே ஜேனு இருந்திச்சி, திருவிழா மாதிரி. எந்நேரமும், வெறகடுப்போட பொக, நெறஞ்சிருந்துச்சு. பன்னாங்குழி, ஜில்லிக்கரம், தாயம்னு வயசுக்கு தகுந்த மாதிரி வெளையாடிட்டு கடந்தாங்க.

மகளப் பார்த்து, பூரிச்சுப் போனாரு, மீரான் சாயபு. மகள ஒரு போட்டா புடிக்கணும்னு ஆசைப்பட்டு, வண்டி கட்டிக்கிட்டு போயி, டவுன்ல இருக்க போட்டோகாரன, கையோட கூட்டிட்டு வந்தாரு.

“கச்சாமா, என்னடா கண்ணு பண்ணிட்டு இருக்க? இங்க வந்து பாரு, யாரு வந்திருக்கானு?!”

அப்பாவோட குரல் கேட்டதும், செட்டுப் புள்ளைங்களோட அஞ்சாங்கல்லு வெளையாடிட்டு இருந்த கச்சாமா அவசர அவசரமா எந்திருச்சு வந்தா.

மகளப் பார்த்ததும் அசந்து போனாரு சாயபு. மாநிறம்னாலும் களையான முகம். அவ பேசுனா உதடு மட்டுமில்ல, அவ கண்ணுஞ் சிரிக்கும். நாலே நாளுல, சீலையெல்லாம் கட்டிக்கிட்டு, பெரிய மனுசி கணக்கா, வந்து நின்னா, மலைக்காம என்ன செய்வாங்களாம்?

“கண்ணூ, உன்ன ஒரு போட்டா புடிக்கணும்னு, டவுன்ல இருந்து ஆள கூட்டியாந்திருக்கேன் பாரு, சீக்கிரமா வாடா! வந்து நில்லு”

அதுக்குள்ள குப்பி அவள, பவுடரு பூசிட்டுப் போக உள்ள கூப்பிட்டா!

“அட! சீக்கிரமா வாம்மா! வெய்யிலு போயிருச்சின்னா, அப்புறம் போட்டா புடிக்க முடியாது. ஜல்தியா வந்து நில்லு” அப்பாவோட குரல கேட்டதும், வேகமா வந்து வெய்யிலில நின்னா கச்சாமா.

அதுக்குள்ள அங்க வந்த பாத்திமா, “நல்லாருக்கு நீங்க பண்ணுறது! தலைக்குத் தண்ணி ஊத்தாம, மொட்ட வாசலுக்குக் கூட்டிட்டுப் போயிட்டீங்களே!” னு கூப்பாடு போட்டா.

“அடி, போடி, நீங்கல்லாம் எந்தக் காலத்துல இருக்கீங்க?! இப்பல்லாம் காலம் மாறிப் போச்சு! யாரு போட்டா புடிக்காம இருக்கா? நாளைக்கு மாப்பிள்ளை ஊட்டுக்காரங்க கேட்டா குடுக்கறக்கு ஆவும்ல”

“என்னமோ, அசலுல பொண்ணக் குடுக்கறாப்ல பேசறீங்களே? சரி, சரி, சீக்கிரம் அவள உள்ளாற அனுப்புங்க”

திருப்தியா நாலு போட்டோ எடுத்துட்டு, அவ முகத்த வழிச்சு, ஒரு முத்தங்குடுத்துட்டு, உள்ள அனுப்பிச்சாரு, சாயபு.

ஆச்சு, பதினோரு நாளு, எல்லாரும் சாயபு வீட்டுல தம்மா கும்மா போட்டாச்சு. பதினோராம் நாளு தலைக்கு தண்ணி ஊத்துனாங்க. குப்பிமாருங்க ஆளுக்கொரு பட்டுச்சீல எடுத்தாங்க. தேங்கா, பழம், வெத்தலைபாக்கு சந்தனம், மாலை, சீலைனு ஆளுக்கு அஞ்சு தட்டமுங் கொண்டுவந்தாங்க. கச்சாமாவ உக்காத்தி வெச்சு, சந்தனம் தடவி நலங்கெடுத்தாங்க. தேங்கா பழத்தப் போட்டு, மடி ரெப்புனாங்க. மொய்யெழுதுனாங்க. சாதிசனம் எல்லாரையும் கூப்பிட்டு, விருந்து வெச்சாங்க.

“ஏங்க! நம்ம வண்டி ஒன்னு பத்தாது! எல்லாரும் ஆத்தோரப் பள்ளிவாசல் தர்வாவுக்கு போகணும். கண்ணாசேரி வண்டிக்கும், காதர்பாட்சா வண்டிக்கும் சொல்லிருங்க” பாத்திமா சொன்னதும், ஜாயிர அனுப்பினாரு, வண்டியக் கட்ட சொல்ல.

எல்லாரும் தர்வாவுக்கு போயிட்டு வந்தாங்க. வந்த கூட்டமும் கொஞ்சங்கொஞ்சமா கலைய ஆரம்பிச்சது. அப்பத்தான் ஒருத்தி கேட்டா மும்மக்காட்ட, “ஏயக்கா! இனி கச்சாமாவுக்கு முடிச்சுப்புடுவாங்கல்ல?!”

அதுக்கு மும்மக்கா சொன்னா, “அதெப்படி, அவ்ளோ சீக்கிரம் முடியும், அசலுல தான மாப்பிள்ள பார்ப்பாங்க”

“ஏங்கா, அப்படி சொல்றீங்க, மொறமக்கார பசங்களே இருக்காங்கல்ல?”

“இருக்காங்கதான், குப்பியெல்லாம் நல்ல அந்தஸ்தா இருக்காங்க! சொந்த புள்ளையா இருந்தா கட்டுவாங்க, ஆனா எடுத்து வளத்த புள்ளைய கட்டுவாங்களா? யாரூட்டுப் புள்ளையோனுல்ல இருக்கும்?”

“என்னக்கா சொல்றீங்க? எடுத்து வளத்த புள்ளையா?”

“ஆமா! சபுரா, உனக்கு தெரியாதா?! அதுமில்லாம, இந்த பாத்திமாவும் எங்கிருந்தோ வந்தவ தான. சொல்றங்கேளு! மீரான் சாயபு, எளவட்ட பயலா இருந்தப்ப, மைனர் கணக்கா சுத்திட்டு இருந்தாரு....”

மும்மக்கா சொல்ல சொல்ல, சுவாரஸ்யமா கேக்க ஆரம்பிச்சா சபுரா.

(அடுத்த வாரம்)

-சுமஜ்லா.

9 comments:

Anonymous said...

seems watching a movie.gr8 job.

SUMAZLA said...

thank you. what is your name?

Biruntha said...

படிக்கப் படிக்க மிகவும் சுவாரஷ்யமாக இருக்கின்றது. மிகவும் நன்றாகத் தொடர்கின்றது.

அன்புடன்
பிருந்தா

தமிழ் பிரியன் said...

வட்டார மொழியில், இஸ்லாமிய கதை எழுதும் முயற்சி.. நிறைவாக இருக்கின்றது! வாழ்த்துக்கள்!

SUMAZLA said...

பிருந்தா & ஜின்னா சார், தேங்க்ஸ்! இது ஒரு உண்மைக் கதை! எங்கள் உறவுகளின் கதை!

கே.ரவிஷங்கர் said...

இதுவும் நல்லா இருக்கு.

asiya omar said...

ஹாய் சுஹைனா,
நீண்ட நாட்கள் கழித்து இப்ப தான் ஒவ்வொன்றாக படித்து வருகிறேன். இலக்கிய நடையில் அருமையாக இருக்கு.

PEACE TRAIN said...

இலக்கிய நடையில் அருமையாக இருக்கு.
அதோடு,தர்காவுக்கும் இஸ்லாத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதையும் கதையினூடே சொல்லலாம்.

SUMAZLA/சுமஜ்லா said...

உங்கள் கருத்துக்கு நன்றி, மண்ணின் மக்களின் எண்ணங்களை மண்ணின் வாசத்தோடு சொல்லும் கதை இது, அதுவும் நடந்தது நடந்தபடி, இது 1960ல் நடந்திருக்கக்கூடும்.