அடுத்து வருவது போன்சாய் ட்ரைனிங். முதலில் வடிவமைத்தல். அதாவது அதை அதன் வடிவத்துக்கு கொண்டு வரும் டெக்னிக். ஒரு போன்சாய் மரத்தை அதன் வாழ்நாள் முழுவதும், வடிவமைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
மரத்தின் வளர்ச்சி அதன் நுனியில் தான் இருக்கும். அதனால் நுனியில் இலைகள் அடர்த்தியாகவும், இடையில் குறைவாகவும் இருக்கும். நான் நுனியில் இரு விரல்களால் பிடித்து லேசாக இழுத்தால் அதன் பலகீனமாக இடத்தில் கட்டாகி கையோடு வந்து விடும். இவ்வாறு கிள்ளி விடும் போது இலைகள் எல்லா இடங்களிலும் சமச்சீராக வளரும். என்ன இப்படி இலைகளை பிடுங்குகிறோமே என்று பயப்படக் கூடாது.
படத்தில் இருப்பது போன்சாய் கருவிகள். அது மட்டுமல்ல, வெய்யில் காலத்தில் அதன் இலைகளை உருவி விட வேண்டும். இவ்வாறு செய்தால் அடுத்து வளரும் இலைகள் அளவில் சிறியதாக வளரும். கிளைகளை கட் பண்ணும் போது, பெரிய கிளைகளை ஒடிக்கக்கூடாது. இல்லாவிட்டால், ஒடித்த இடத்தில் தழும்பு அசிங்கமாகத் தெரியும். அதோடு, அதன் வேர்களையும் ட்ரிம் செய்ய வேண்டும். இலை கிளைகள் மற்றும் வேர்களை மூன்றில் ஒரு பங்கு, குறைக்க வேண்டும். அதற்கென இருக்கும் கருவிகளை பயன்படுத்தினால், அதிக சேதம் இருக்காது.
படத்தில் தொட்டி மாற்றுகிறார்கள்.
வேர்களை குறைக்காவிட்டால், அடுத்த வளர்ச்சி வேகமாக இருக்கும். குறைக்கப்பட்ட கிளைகளுக்கு சமமாக, வேர்கள் குறைக்கப்பட்டால் தான் ஒரு ஒழுங்கான வளர்ச்சி இருக்கும். வேர்கள் குறைக்கப்படும் போது, அதன் தொட்டியை மாற்றி விட வேண்டும்.
அதாவது, முதலில் ஒரு போன்சாய் மரத்தை சற்று பெரிய தொட்டியில் வைத்து வளர்க்க வேண்டும். ஓரிரு வருடங்கள் வளர்ந்த பின், இலை கிளைகளைக் கிள்ளி, வடிவமைத்து, பின் தொட்டியிலிருந்து பிடுங்கி, வேர்களையும் குறைத்து, சற்று சிறிய தொட்டிக்கு மாற்றிவிட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு வசந்த காலத்திலும் செய்ய வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக சிறிய தொட்டிக்கு பழக்கப் படுத்தும் போது, அதன் வேர்கள் சிக்குப் போட்ட சிறு ஒயர் பந்து போல நன்றாக சுருண்டு விடும்.
தொட்டி மாற்றுவது, மரம் முற்ற முற்ற அதிகம் செய்ய வேண்டியது இல்லை. அதுவே பழக்கப் படுத்திக் கொள்ளும்.
Tweet | ||||
No comments:
Post a Comment