Tuesday, May 5, 2009

சாயபு வீட்டு சரித்திரம் - 4


தச்சன் பெத்த பச்சபுள்ள, தாய்ப்பாலுக்கு தவித்தேங்க,
அச்சமயம் அங்க வந்த சாயபதன் பசிபோக்க
வெச்சகண்ணு எடுக்காம, பிள்ளையதன் முகம் நோக்கி,
மச்சக்கார பிள்ளையென்று, மனம்நிறைந்து சொன்னாரே!

அழுகாச்சி சத்தம் வந்த பொட்டியின் அந்தப்புறம் போய் எட்டிப்பார்த்தாரு சாயபு. ஒரு மவராசன், பச்சப்புள்ளைய மடியில போட்டு, சங்கடையில பால ஊத்தத்தெரியாம, உத்திக்கிட்டு இருந்தாரு. அந்தப்புள்ள, விடாம கத்திக்கிட்டே கிடந்துச்சு. பக்கத்துல போனாரு சாயபு,

“பாலு, நாஞ்சிக்கு ஏறிருச்சாட்டம் தெரியுது; கொண்டாங்க புள்ளைய இப்படி!”

தன் கையில எடுத்து, லேசா முதுகை நீவிக்கொடுத்தாரு. கொஞ்சம் ஆசுவாசமானதும், அப்படியே மொகத்த வருடிக்கொடுத்தாரு. புள்ள, பாலு கிடைக்குமானு, அவர் விரல் பட்டவுடனே, ஆ ஆனு வாய வாயக் கொண்டுபோவுது. அவருக்கும் சங்கடையில பாலு ஊத்தத்தெரியாது, இருந்தாலும் சின்ன கேத்தல்ல இருந்த பால விரலால தொட்டு, தொட்டு, சொட்டு சொட்டா, புள்ள வாயில விட்டாரு. குடிக்க, குடிக்க புள்ள வயிறு நெறஞ்சு தூங்க ஆரம்பிச்சிருச்சு. அதப் பார்த்த புள்ளையோட அப்பனுக்கும் மனசு நெறஞ்சி போச்சு. அப்ப, அந்த ஆளுட்ட பேச்சு கொடுத்தாரு சாயபு.

“நீங்க மட்டும் தனியா பச்சப்புள்ளைய தூக்கிட்டு வந்திருக்கீங்களே, உங்க பொஞ்சாதி வர்லீங்கலா?”

அதக் கேட்டதும், கண்ண தொடச்சுக்கிட்டே அந்த ஆளு சொன்னாரு,

“எம்பொஞ்சாதி, புள்ளைய பெத்தவுடனே ஜன்னி கண்டு போய் சேர்ந்துட்டாங்கைய்யா! எனக்கு இது நாலாவது புள்ள சாமி! மூத்தது மூணும் பொட்டைங்க. இதாவது ஆம்பளைப்புள்ளையா பொறக்கும்னு பார்த்தா, இதுவும் பொட்டையாப் போச்சுங்க”

மேத்துண்டுல கண்ண தொடச்சிக்கிட்டு மூக்கை சிந்தினாரு... பார்க்க ரொம்ப பாவமா இருந்துச்சு...

“நீங்க என்னா யாவாரம் பண்ணுறீங்க?”

“நான் தச்சு வேல செய்யுற ஆசாரிங்க. எரவானம் அடிச்சு ஓடு மேய்வனுங்க. பந்தக்காலு கடையறது, பலகை அட்டாலி செய்றதெல்லாம் செஞ்சு தருவேனுங்க. காத்தால போனா ராவுக்கு தான் திரும்புவன். மூத்த புள்ளைக்கு அஞ்சு வயசுங்க. அடுத்தடுத்து படிக்கட்டாட்டம் வரிசப் புள்ளைங்க”

“அட! ஆசாரியா? இப்ப எங்க போயிட்டு இருக்கீங்க ஆசாரியாரே?”

“புள்ள ஆத்தால முழுங்கிருச்சுன்னு, அப்பவே, கள்ளிப் பால ஊத்திக் கொல்லப் பார்த்தாங்க, எங்க ஊர் கிழங்கட்டைங்க! நாந்தான் மனசு கேக்காம தடுத்துட்டேன். பொட்டையாப்போச்சின்னு யாரும் வெச்சு வளக்க மாட்டீங்கறாங்க. அதான் சேலத்துக்கு பக்கத்துல கட்டிக் கொடுத்திருக்கற தங்கச்சிகிட்டயாச்சும் கேட்டுப் பாக்கலாம்னு போயிட்டிருக்கேன். அவளுக்கும் அஞ்சு கொழந்தைங்க இருக்குது. அதான் என்ன சொல்வாளோ தெரியல சாமி!”

சாயபு, தூங்கிக்கிட்டு இருக்கற கொழந்தைய ரசிச்சுப் பார்த்தாரு. மூக்கும் முழியுமா கொழந்த ரொம்ப அழகா இருந்திச்சு. மாநிறமா இருந்தாலும் களையான மொகம். கொடுத்தா நாமளே வளர்க்கலாம்னு கேட்டே போட்டாரு கடைசியில.

“ஆசாரியாரே! எனக்கு நாலஞ்சு வருஷமா புள்ளையில்லைங்க. இதக் கொடுத்தா, எங்கண்ணு மணியாட்டம் வளத்து வாலிபம் பண்ணீருவங்க. ஆண்டவங்கிருபையால, சொத்து பத்துக்கு கொறச்சலில்லாத குடும்பம், எங்க குடும்பம். நாங்க ராசாத்தியாட்டம் உங்க புள்ளைய வளப்பம்”

தச்சனுக்கு, கேட்டதும் கண்ணில கரகரன்னு கண்ணீர். கையெடுத்துக் கும்பிட்டான்.

“சாமி! இது உங்க புள்ள சாமி. அந்த சாமியா பார்த்து உங்கள அனுப்பியிருக்கான். நீங்க கொழந்த பசிய போக்குனது ஒன்னே போதுஞ் சாமி, நீங்க நல்லா பார்த்துக்குவீங்கன்னு, எனக்கு நம்பிக்கை இருக்குங்க”

தூங்குற கொழந்தைய எடுத்து, நெஞ்சோட அணச்சு ஒரு முத்தங்குடுத்துட்டு, அவர் கையில ஒப்படச்சான் தச்சன்.

“எந்தங்கச்சி மாமியா ஒரு சிடுக்குங்க. மாட்டேனிச்சுன்னா என்ன பண்ணறதுன்னு, ஒரே அங்கலாப்பா இருந்துச்சுங்க. இப்பத் தான் எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு”

ஜிப்பா பாக்கெட்டுல இருந்து முழுசா ஒரு நூறு ரூபா தாளை எடுத்து அவன்ட்ட கொடுத்தாரு சாயபு. பதறிப் போயிட்டான் தச்சன்,

“ஐயா மன்னிச்சுக்கங்கைய்யா! எம் புள்ளைய கொன்னு போட்டாலும் போடுவேனுங்க. விக்க மாட்டேனுங்க. அந்த காசு எனக்கு வேணாங்க”

காசு கொடுக்காட்டி, நாளைக்கு வந்து புள்ளைய திருப்பிக் கேட்டா என்னா பண்றதுன்னு சாயபுக்கு பயம்; இருந்தாலும் அவனோட நல்ல பண்பாடு புரிஞ்சுது. இந்த புள்ளையும் அப்ப நல்ல குணவதியாத்தான் வரும்னு நம்பிக்க வந்தது சாயபுக்கு.

“புள்ளைக்கல்லங்க, இது வெல. எங்க குடும்பத்துல, புள்ள பொறந்தா, அதுக்கு மொட்டையடுச்சு, முடியோட எடைக்கெடை தங்கம் தருவாங்க. அத, நாந்தாரதா, நெனச்சி வாங்கிக்கோங்க.”

ஒரு வழியா தச்சன சமாதானம் பண்ணி சம்மதிக்க வெச்சு, காச கையில திணிச்சாரு. நூறு ருபாய முழுசா ஆயுசுல பார்த்திருக்கவே மாட்டானாட்டம் இருக்குது. பயபக்தியா வாங்கிக் கண்ணுல ஒத்திக்கிட்டு, வேட்டியில முடிஞ்சுக்கிட்டான். பின்ன, அவனோட ஒரு நா சம்பளமே ரெண்டு ருவா தான?!

புள்ளைய நெஞ்சோட வாரியெடுத்த சாயபு, மனசு கொள்ளாத மகிழ்ச்சியோட, ஊட்டுக்குக் கொண்டு வந்தாரு.

“பாப்பு.... இங்க வந்து பாரு! புள்ள ஒன்ன எடுத்தாந்திருக்கேன், நாம வெச்சு வளக்கலாமின்னு”

பாத்திமா ஓடி வந்து, புள்ளைய ஆசையா தூக்கினா. நடந்த கதைய சொன்னாரு சாயபு. ஓடிப்போயி, மாமியா முத்தம்மா கிட்ட காமிச்சா. எல்லாரும் புள்ள நல்லா களையா இருக்குன்னு சொன்னாங்க. வாயல் சீல ஒன்ன முடிச்சுப் போட்டு, தொட்டி வேட்டியாக்குனா. சாயபோட வேட்டிங்க ரெண்ட, கிழிச்சு பீத்துணி கட்டுனா. நெஞ்சோட வாரியணச்சு, சங்கடையில பாலூட்டுனா. கொழந்தைய தொட்டியில போட்டு ஆசயா ஆட்டுனா.

மீரான் சாயபு, போயி, சந்தையில, புள்ளைக்கு கவுனுத் துணி வாங்கிட்டு வந்தாரு. அதுல அழகழகா கவுனு தெச்சுப் போட்டா பாத்திமா.

ஒரு நல்ல நாளா பார்த்து அஜரத்தக் கூட்டிட்டு வந்து புள்ளைக்கு கதீஜானு பேர் வெச்சாங்க. அய்யங்கிட்ட சொல்லி, லட்டு பிடிச்சு, பேர் வெக்கறன்னிக்கு எல்லாருக்கும் கொடுத்தாங்க. கதீஜாமானு எல்லாரும் கூப்பிட்டு கூப்பிட்டு, கடசியில அது கச்சாமானே மாறிப்போச்சு.

கச்சாமா செல்லக் கொழந்தையா வளந்தா; மீரான் சாயபுக்கு அவ மேல கொள்ள பிரியம். நெஞ்சுமேல போட்டு தான் தூங்க வெப்பாரு. கண்ணுக்கு கண்ணா வளத்தாங்க.

கச்சாமா துரு துருன்னு அலஞ்சாலும், நல்ல குணசாலியா இருந்தா. ஒரு வயசிலயே மணியாட்டம் பேசுவா. ஒல்லியா இருந்தாலும், நெடு நெடுன்னு இருந்தா. ஆறு வயசானதும், தலைய சுத்தி காதத் தொட்டு காமிச்சு, பால்வாடி பள்ளிக்கோடத்துல ஒன்னாங்கிளாஸ் சேர்ந்தா.

ஒரு நாள் பாத்திமா பாத்திரம் வெளக்கிக்கிட்டு இருந்தா; அப்போ, ஒல கொதிக்குதுன்னு, அரிசியப் போட்டுட்டு வரப் போயிட்டா. ஆறு வயசு கச்சாமா, உக்காந்து வெளக்கி வெச்சிருந்த ஏனத்தையெல்லாம் சுத்தமா, கழுவி அடுக்கிட்டா. வந்து பார்த்த பாத்திமா தெகச்சுப் போயிட்டா. கச்சாமாவுக்கு வேல செயுறதுன்னா அவ்ளோ இஷ்டம். பாத்திமா வேல செய்ய விடாட்டி, முன் வாசல்ல இருக்கற குப்பிக்கிட்ட ஓடுவா,

கொண்டா குப்பிமா. நாங்கூட்டித் தரேன்னு சொல்லி, வெளக்குமாத்த எடுத்து, சுத்தமா பெருக்கித் தள்ளிருவா. அவளுக்கு எப்பவுமே எதாவது செஞ்சுக்கிட்டே இருக்கணும்.

ஒரு நா, உக்காந்து எச்சி தொட்டு, சிலேட்ட அழிச்சுக்கிட்டிருந்தா; அத பார்த்த அவங்கம்மா, “என்ன கண்ணு எழுதற?” நு கேட்டா.

“அம்மா, எங்க டீச்சர், படம், பாடம் மடம், மாடம் பத்துவாட்டி, எழுதிட்டு வரச்சொன்னாங்கம்மா”

“அதான் அப்பவே எழுதிட்டயேமா?!”

“அதத்தாம்மா அழிச்சு அழிச்சு, மறுவ்டியும் எழுதிட்டு இருக்கன்.”

“எல்லாம் போதும் கொண்டா சிலேட்ட” பிடுங்கி எரவானத்துல சொருகி வெச்சா பாத்திமா.

“குடும்மா! குடும்மா”னு அழுதிட்டிருந்த புள்ளைய கொஞ்ச நேரமா காணோமின்னு வெளிய வந்து பார்த்தா, செவுரு பூராவும் கரித்துண்டால, படம் பாடம், மடம் மாடம் எழுதி வெச்சிருந்தா.

“ஐய்யோ, கச்சாமா! என்னம்மா இப்படி செஞ்சிட்ட, போன வாரந்தான பூசுனாங்க. உங்க தாதி பார்த்தா நல்லா வைய்யுவாங்களே”

பாத்திமா சொன்ன மாதிரியே, ராத்திரி, முத்தம்மா சாயப கூப்பிட்டனுப்பிச்சா.

“டேய்! மீரான். நீ கொட்டாயி ரூமுல்ல, குடியிருக்கறது முடியாதுடா! நெல்லு வருது அடுத்த மாசம். மழகாலமா வேற இருக்குது. நெல்லு மூட்டைக்குள்ள குடியிருக்க முடியாதுடா! அதனால, லைனூட்ட உனக்கு எழுதித் தரேன். நீ அங்க குடுத்தனத்த மாத்திக்கடா”

“நீ சொன்னா சேரிமா”

“அதுமில்லாம, கச்சாமா வேற பச்சக் கொழந்தை இல்ல. ஒரு ரூம்பு எப்படி பத்தும் உனக்கு?”

சொன்னதோட நிக்காம, லைனூட்ட எழுதி வெக்க, வண்டியில ஏத்தி சாமானத்த மாத்த ஆரம்பிச்சாரு சாயபு.

குப்பி பையங்களோட சேந்துக்கிட்டு, ரயிலு வெளையாட்டு வெளையாடிட்டு இருந்த கச்சாமாவைக் கூட்டிட்டு கிளம்பினாங்க. லைனூடு ரெண்டு தெரு தாண்டி தான் இருக்குது. ஆனாலும், கச்சாமாவுக்கு அங்க போக மனசே இல்ல. இங்க இருந்தா, குப்பி பையன் சாதிக் அலி அடிக்கடி வருவான். அவங்கூட சேந்துக்கிட்டு ஆடி அளவு தெரிப்பா.

“ சாதிக் மச்சான், நாங்க வேற ஊட்டுக்கு போறோம். நீ என்னப் பாக்க அங்க வா!” சொன்னபடி, அம்மா கைய புடுச்சுக்கிட்டு, திரும்பி, திரும்பி பார்த்துக்கிட்டே ஏக்கத்தோட போனா ஏழு வயசு கச்சாமா.

(வளரும்)

-சுமஜ்லா

5 comments:

Thamiz Priyan said...

அக்கா, நல்லா வந்து கொண்டு இருக்கு! உரையாடல் வழி வரிகளை அதிகமா பயன்படுத்துங்க..:)

Biruntha said...

அவர்களின் பேச்சு வழக்கு ரொம்ப நல்லாயிருக்கு. சில சொற்களை பலதடவை படித்துப் பார்த்துத் தான் புரிந்து கொள்கின்றேன்.

அன்புடன்
பிருந்தா

சுஹைனா said...

இந்த உண்மைக் கதையை ஒரு காவியமாக எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக எனக்கு ஆசை.

புரியாவிட்டால் கேளுங்கள் பிருந்தா; நான் அர்த்தம் தருகிறேன். கொங்கு நாட்டு பேச்சு வழக்கு என்றாலும், இந்த வார சம்பவம் 1950-56 ல் நடந்ததாக எழுதியுள்ளேன். அதனால், அக்கால மக்களின் பேச்சு வழக்கை, என்னால் முடிந்தவரை கற்பனை செய்தும், ஒரு சிலரிடம் கேட்டும் எழுதியுள்ளேன்.

இராஜகிரியார் said...

அருமையோ அருமை சகோதரி சுமஜ்லா...
அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்...
வாழ்த்துக்கள்...

இப்னு அப்துல் ரஜாக் said...

//தூங்குற கொழந்தைய எடுத்து, நெஞ்சோட அணச்சு ஒரு முத்தங்குடுத்துட்டு, அவர் கையில ஒப்படச்சான் தச்சன்.//

மனச பெசையுதுங்க