Friday, May 8, 2009

அரபு சீமையிலே... - 7


அப்துல் முத்தலிப்
கிணறு தோண்டும் பணியில்
ஈடுபட்டார்.
எப்படியாவது அதை
கண்டுபிடித்துவிட வேண்டுமென்று
பாடுபட்டார்.

அண்டங்காக்கையும்
எறும்புப் புற்றும்
இருந்தது.
கண்ட முத்தலிப்
களப்பணி தொடங்க
நடந்தது.
தண்டப்பணியென
குறைஷிகள் ஏச - மனம்
நொந்தது.
பண்ட உதவி
யாரும் தராமல்
சோர்ந்தது.
கொண்ட கொள்கையில்
ஜெயம் பெற மனது
நினைத்தது.
அண்டம் காக்கும்
ஆண்டவனை நோக்கி
கரம் விரிந்தது.

“இறைவா எனக்கு
அருள் கூர்வாய்;
நிறைவாய் புத்திர
பொருள் சேர்ப்பாய்!

புனிதப்பணியது
இனிதாய் நடக்க
மனிதப் பதர்கள்
முன்வரவில்லை.
தனியா ஆர்வம்
கொண்டிட்ட எனக்கு
மணியாய் பத்து
பிள்ளைகள் தருவாய்.

துயரின்றி இப்பணி
வெற்றிகள் பெற்றால்
பெயர்பெற பத்து
புத்திரர் பெற்றால்
உயிர் பலி ஒருவனை
உனக்கென தருவேன்”
உயர்வாய் நேர்ச்சை
மனதினில் கொண்டார்.

ப்ரார்த்தனை பலித்தது.
வேதனை தணிந்தது-
கேட்டது கிடைத்தது
நினைத்தது நடந்தது.

மூவிரண்டு புதல்வர்களும்
மூவிரண்டு புதல்வியரும்
ஆவியில் கலந்து உதித்தனர்
மேவிய பெரும்புகழ் செழித்தனர்.

பிள்ளைகள் பிறந்தபின்
பிரதிக்ஞை நினைவு வந்தது.
சொல்லியபடி நிறைவேற்ற
சொந்தங்களுடன் காபா சென்றார்.

திருப்பலி நிறைவேற்ற
திருவுள சீட்டு போட்டு,
ஒருவனை தேர்ந்தெடுக்க
ஒருமனதாய் ஒப்பினர்.

அன்பு மனைவி பாத்திமாவின்
பண்பு மைந்தர் அப்துல்லாஹ்!
எத்துணை பிள்ளைகள்
இருந்தாலும், இவர்தான்
முத்தலிபின் செல்ல பிள்ளை
இவரைக்காட்டிலும் யாரிடமும்
அவ்வளவு பாசம் யாருக்கும் இல்லை.

இவர்தம் பெயர் வந்தது கண்டு,
குடும்பத்தார் பதறியெழுந்தனர்;
கண்ணீர் விட்டு, கதறியழுதனர்.
மாறுதல் இல்லையா இதற்கு?
எவ்வாறு தேறுதல் கொள்வோம்
இறைவா?! என்று
புலம்பி துடித்தனர்!
அழுது வடிந்தனர்!!

நல்லோரும் - அறிவில்
வல்லோரும்
அப்துல் முத்தலிபிடம் சொன்னார்கள்,

“இதற்கு தேவை
ஒரு மாற்றம்
பதிலாய் ஒட்டகப்பலி
தான் ஏற்றம்!
இது வழக்கமானால்,
சமுதாயம் தூற்றும்.
இதை மாற்றினால்
பல மனங்கள் போற்றும்!”

ஆமோதித்து கேட்டார்;
ஆலோசனையை ஏற்றார்!

ஒரு சீட்டில்,
பத்து எண்ணிக்கையில்
ஒட்டகம்;
மறு சீட்டில்,
அப்துல்லாஹ் என்னும்
அழகு பெட்டகம்!

குலுக்கி எடுக்க வந்தது
அப்துல்லாஹ்வின்
பெயர்!
உலுக்கி எடுக்க
மனதில் நிறைந்தது
துயர்!!

(வளரும்)

-சுமஜ்லா.

4 comments:

இராஜகிரியார் said...

நன்றாக இருக்கிறது.
ஒவ்வொரு பதிவின் முடிவிலும் அதற்கான முந்தைய பதிவுகளின் இணைப்பை (பாகம் 1, பாகம் 2, ...) என்று ஏற்படுத்தினால் மிகவும் வசதியாக இருக்கும்.

கவி அழகன் said...

அருமை சகோதரி சுமஜ்லா

SUMAZLA/சுமஜ்லா said...

ராஜ கிரியார் மற்றும் கவி இளைஞரே(கிழவர் என்றால் என்னவோ போல் இருக்கு அதான்) நிறைய பேர் படித்தாலும், ஒரு சிலர் போடும் பதிவு என்னை மேலும், அதிகமாக எழுத உற்சாகப்படுத்துகிறது.

மீண்டும் என் கம்ப்யூட்டரில் ஃபால்ட். எப்படியாவது பதிவு போட வேண்டும் என்று என் தாய்வீடு(உள்ளூர் தான்) வந்து அங்கிருந்து பதிவு போட்டேன். ஓரிரு நாளில் சரியாகி விடும்.

சைடில் பாகம் 1, 2,3 எல்லாவற்றிற்கும் dropdown லிஸ்ட்டில் லின்க் கொடுத்துள்ளேன். பாருங்கள்.

Unknown said...

மிகவும் அருமையாக இருக்கு.சுமஜ்லா