Friday, April 24, 2009

அரபு சீமையிலே... - 5


ஆதி பிதா ஆதம் நபி
இறைவனிட்ட ஆணைப்படி
பூவுலகில் நிர்மானித்த
புனிதஸ்தலம் காபத்துல்லாஹ்.

நூஹ் காலத்தில் வந்த பெரு வெள்ளம்
அதனால் மறைந்து போனது இறையில்லம்
ஆதம் கட்டிய காபா
சேதம் அடைந்து போனதனால்
மீதம் இருக்கும் இடத்தினிலே
இப்ராஹிம்தன்
பாதம் பட கட்டலானார்.

இறையோனின் பேரருளால்
இல்லத்தை வடித்திட்டார்.
இஸ்மாயில் துணையுடனே
திருப்பணியை முடித்திட்டார்.

கட்டும் போது ஏற்பட்ட
சிரமங்களை தாண்டி சென்றார்.
கட்டிய பின் இறைவனுடைய
திருவருளை வேண்டி நின்றார்.

தந்தை மகனும்
அந்த இடத்தில்
நியமமாக வணங்கி வர
இந்த காட்சி கண்ட மக்கள்
காபத்துல்லாஹ்வை தாங்களுமே
வணக்கஸ்தலமாக்கிக் கொள்ள,
பெருங்கூட்டம் வந்ததிங்கே!
திருவிழாவும் நடந்ததங்கே!!

நூற்றி முப்பத்தாறு ஆண்டுகள்
இறைபணி
ஆற்றி மறைந்தார்
இஸ்மாயில் - அவர் பெயர்
போற்றி வாழ
பன்னிரு புதல்வர்.
அதில் முதல்வர்,
நாபித் என்னும் பெயருடையார்.

இவ்வாறிருக்க,
மக்கள் பெருகிட,
மக்கா விரிந்தது!
சிக்கல் விடுபட,
சிந்தனை தெளிந்தது!!

வேற்றிடந்தேடி
வெளியேறிய ஒவ்வொருவரும்
புனிதமாய்
போற்றிட கல்லொன்றை
எடுத்துச் செல்ல,
காபாவைப் போல் அதை பற்றி
வலம் வரலாயினர் சுற்றி சுற்றி!

காலப்போக்கில்,
உள்ளங்கவர் கற்களையெல்லாம்
மெல்ல வணங்கலானார்கள்.
வல்ல இறைவன் தனைமறந்து
கல்லை கடவுளென கொண்டார்கள்.

நாபிதின் கிளையில்
நாற்பதாம் தலைமுறையில்
பிறந்தார் அத்னான் -ஆவரின்
பதினோராம் சந்ததியில்
பிஹ்ர் என்னும் பெயரினிலே
உதித்தார் வீரமறவர்!
குறைஷ் என்னும் பெருவணிகர்!

கடலின்,
பலமிக்க மீனுக்கு
‘குறைஷ்’ என்று பெயராகும்!
உடலில்,
திடமிக்க வீரருக்கு
இந்த பெயர் சரியாகும்!!

பிஹ்ரின் ஏழாம் பௌத்திரராய்
கி.பி.398ல்
குன்றா புகழோடு
குஸையி தோன்றினார்.

காபாவின் நிர்வாகம்
மீண்டும் கைமாறியது
குறைஷிக்கு!
‘தாருன் நத்வா’ நகரமன்றம்
துவங்கும் ஆர்வம் வந்தது
குஸையிக்கு!!

ஆண்டுதோறும் மக்காவரும்
யாத்ரிகர் கூட்டம்.
அவர்தம் தேவையறிந்து சேவைபுரிந்து
போக்கினார் வாட்டம்.

மொத்த புதல்வர் அறுவர் - சங்கை
இரண்டாமவர் பெறுவர்.
அப்துல் மனாப் சிறுவர் - மற்றும்
ஹாஷிம் என்பாரும் ஒருவர்.

அந்த ஹாஷிம் என்ற புத்திரர்
அனைவரிலும் உத்தமர்.

குறைஷிகளுல் சொல்வாக்கு
குஸையி போன்ற செல்வாக்கு!
நாடி வந்த நல்லோர்க்கு - என்றும்
சொல்லி நின்றார் நல்வாக்கு!

தொழில்வணிகம் செழிக்க
எழில்வழிகள் கண்டார்!
விழியசைவில் குறைஷிகளை
வழிநடத்தி சென்றார்!!

எடுத்தார் பலபல நடவடிக்கை.
செய்தார் பலருடன் உடன்படிக்கை!

வழிமுறை பலவும் வகுத்தளித்தார்,
வழிப்பறி தடுக்க வழியமைத்தார்.

அசதியென்ற யாத்ரீகர்க்கு
வசதி செய்து தந்தார்!!
தகுதியுள்ள யாவருக்கும்
மிகுதியாக ஈந்தார்!!

(வளரும்)

-சுமஜ்லா

3 comments:

இப்னு அப்துல் ரஜாக் said...

உண்மை சரித்திரம் அதை
உவகையோடு-உண்மையோடு
கவிதையாய்,கனிவாக
அள்ளித்தரும் சகோதரிக்கு
வாழ்த்துக்கள் பல!

இப்னு அப்துல் ரஜாக் said...

சகோதரி அவர்களே,யூசுப் இஸ்லாம் அவர்களின் ஆங்கில கவிதைகளை தமிழில் மொழி பெயர்க்கலமே!

http://www.yusufislam.com/

மேற்கண்ட அவர் தளம் சென்று பாருங்கள்,அவரிடம் அனுமதி பெற்று தமிழில் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி சகோதரரே,
என்னுடைய பல நூறு கவிதைகளே இன்னும் வெளியிடாமல் இருக்கிறேன். அதில் ஆங்கில கவிதைகளும் அடங்கும். வெறும் கவிதைகளாக போட்டால், போரடிக்கும் என்பதால், அவ்வப்போது, கவிதைகள், பின் கதைகள், கட்டுரைகள், டெக்னிக்கல் என்று நான் ஒரு ஃபார்முலாவே வைத்திருக்கிறேன்.