Thursday, April 9, 2009

அரபு சீமையிலே... - 1


மனிதரிலே புனிதரான
மாநபியின் சரித்திரத்தை
இனிய குணம் கொண்ட எங்கள்
முஹமதவர் முழுக்கதையை
மாண்போடு எடுத்தோத
இறையாசி தனைவேண்டி
இதமாக துவங்குகிறேன்
பதமாக எழுதுகிறேன்.
ஆதரவு தந்திடுவீர்
சோதரர்கள் யாவருமே!!

கண்டத்திலே பெரும்கண்டம்
ஆசியாக் கண்டமதில்,
செழிப்பால் வறண்ட நாட்டில்
அழியாச் சரித்திரமே!

முக்கண்டம் ஏகியொரு
தொழில் செய்யும் வசதியுடன்
அரபென்னும் துணைக் கண்டம்
அமைந்ததன் தனிச்சிறப்பே!

வளமில்லை செழிப்பில்லை
வகை வகையாய் மரமில்லை
அண்டை நாட்டு அரசர்களின்
மண்டை உருட்டும் வகையில்லை.
தொண்டை காய்ந்தால் நீரில்லை
அதனால் அங்கு போரில்லை.
பாலை நில வெளிதனிலே
பெட்ரோலும் அன்றில்லை.
தன்னிச்சையாய் ஒரு வாழ்க்கை
பண்ணிசைக்க வாழ்ந்தனரே!

நபிகளான நூஹ் அவரின்
பெருமகனார் ஷாமின் வழி
தோன்றி வாழும் பழங்குடிகள்,
பாலைவன அராபியர்கள்,
குடியேறிய அந்நியர்கள் -
என்று மூன்று பெரும் பிரிவார்
அன்று வாழ்ந்து வந்தனரே!
அகமகிழ்ந்து நின்றனரே!!

குடியேறி வாழ்ந்த மக்கள்
குதூகலமாய் வாழும் காலம்
படியேறி வந்தவர்தான்
இப்ராஹிம் நபியாவார்.

ஈராக்கு நாடதனின்
கல்தூனியா ராச்சியத்தின்
இடம் விட்டு புலம் பெயர்ந்தார்
இஸ்மாயில் மகனுடையார்!

இவர் இறைவனுடைய நேசர் - என
வெறுத்தார் சிறிய தந்தை ஆஸர்.
விக்கிரக சிற்பி ஆஸர்தன்
தமையன் மகனுக்கு
அக்கிரமம் பலவும் செய்தார்.

சிலை வணக்கம் ஒழித்து, - ஏக
இறை வணக்கம் கொள்வீர் -என
மறை மொழியின் போதனையை
மக்களுக்கு எடுத்தோத,
இப்ராஹிம் நபியவரின்
இந்த செயல் இனிதன்று
என ஆஸருடன் அரசரான
நம்ரூதும் உடன் சேர,

கறந்த பாலைப் போன்ற
சிறந்த மார்க்கம் பரப்ப
திறந்த மனதோடு இப்ராஹிம்,
பிறந்த மண்ணை விட்டு,

சாலச்சிறந்த இடம் தேடி
பாலஸ்தீன பூமியதன்
கன்ஆனில் சிறிது காலம்
சன்மார்க்கம் பரப்பலானார்.

(வளரும்)

இந்த வசன கவிதை உங்களுக்குப் பிடித்திருந்தால், கீழே VOTE என்று இருப்பதை க்ளிக் பண்ணவும்.

-சுமஜ்லா.

14 comments:

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும்
உங்கள் அரபு சீமையிலே .. கவிதை மிகவும் அருமையாக இருக்கு.. தொடர்ந்து எழுதுங்க படிக்க ஆவலாக உள்ளேன்.

சுஹைனா said...

வ அலைக்கும் சலாம். ஃபாயிஜா, நன்றிப்பா! உங்க திறமையையும் அறிவையும் கண்டு நான் மிகவும் வியந்து போகிறேன்.

கவின் said...

சிலை வணக்கம் ஒழித்து, - ஏக
இறை வணக்கம் கொள்வீர் -என
மறை மொழியின் போதனையை
மக்களுக்கு எடுத்தோத,


சுஹைனா..நல்ல கவிதை. இஸ்லாமின் நோக்கம் ஞான மார்கம் போல் தெரிகிறது. இருப்பினும் மக்கள்(இஸ்லாம்) சிலை வணக்கம் இல்லாவிடினும் பக்தி மார்க்கதிலேயே இருப்பது போல் தான் தெரிகிறது. உங்கள் கருத்து?

சுஹைனா said...

கவின், நான் எழுதுவது வரலாறு. என் சொந்த கருத்து அல்லப்பா. ஆனந்த விகடனின் வெளிவந்த ராம காவியம், பாஞ்சாலி சபதம் போல ஒரு வசன கவிதை எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக எனக்கு ஆசை. அதற்கு நான் எடுத்துக் கொண்டது இத்தலைப்பு.

இது யார் மதத்தையும், மனத்தையும் புண்படுத்த எழுதப்படுவது அல்ல. இந்த வசன கவிதையும் முழுவதுமாக எழுதி முடிக்க முடியுமா என்று தெரியவில்லை எனக்கு.

இதில் நான் வெளிப்படுத்த நினைப்பது, என் கவிதை நடை தான்; மதவெறி அல்ல.

எனினும், நீங்கள் பல நல்ல கேள்விகள் எழுப்பி, என் சிந்தனையை தூண்டுகிறீர்கள். இஸ்லாம் ஒரு இயற்கை மார்க்கம். ஏக இறை வணக்கத்தை எப்போதும் போதிக்கும் சன்மார்க்கம்.

எப்பொழுது ஒருவர் ஏக இறைவனை ஏற்றுக் கொள்கிறாரோ, அப்பொழுதே அவர் முஸ்லிம் ஆகி விடுகிறார். ‘ அல்லாஹ்’ என்ற பதத்துக்கு அரபியில் அல் - THE, லாஹ் - GOD, அதாவது THE GOD என்று தான் பொருள்.

ஒருவர் இஸ்லாமியராய் மாறும் போது சொல்லும் கலிமாவான ‘லாயிலாஹா இல்லல்லாஹ்’ வுக்குக் கூட ‘வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ் வைத் தவிர யாருமில்லை’ என்று தான் பொருள்.

நன்றி.

கவின் said...

சுஹைனா,

நான் உண்மையிலே எனக்குள் எழுந்த கேள்வியைத் தான் கேட்டேன். நீங்கள் தவறாக புண்படுத்துவதாக எண்ணவில்லை. நான் வேண்டுமானால் உன்களுக்கு தனி மெயிலில் கேள்விகள் கேட்கிறேன். நீங்கள் மேற்கண்ட 3 பின்னூட்டங்களை அழித்து விடுங்கள்.

இது வரை அழகாக எழுதிக் கொண்டிருக்கும் உங்களை தவறாக நான் ஏன் நினைக்கப் போகிறேன்.

Thamiz Priyan said...

நல்ல முயற்சி! இணை வைப்போ, இட்டுக் கட்டுவதோ இல்லாமல் இருந்தால் ஒரு சிறப்பான வரலாற்றுக் கவிதைத் தொகுப்பாக அமையும். வாழ்த்துக்கல்!

SUMAZLA/சுமஜ்லா said...

கவின், நான் பதிவு போட்டவுடன், உங்க பின்னூட்டம் வந்துவிட்டதா என்று பார்ப்பேன். அதனால் நீங்கள் இங்கேயே கேள்விகள் தாராளமாக கேட்கலாம். உங்கள் மனம் புண்பட்டதாக நான் எழுதவில்லை. மாறாக, இது எல்லாருக்கும் பொதுவாக எழுதப்பட்டதாகும்.

நம் உரையாடலை, பல பேர் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். என்னிடம் சொல்லியும் இருக்கிறார்கள். உங்கள் கேள்வி மூலம், மாற்று மத சகோதரர்களும் நிறைய விஷயங்களை அறிந்து கொள்கிறார்கள்.

தமிழ் பிரியரே, மிக்க நன்றி. இதை ஜமால் என்பவர் எழுதிய மறுவிலா முழுமதி என்னும் நபிகளாரின் வாழ்க்கை வரலாற்று நூலைத் தழுவி எழுதுகிறேன். தொடர்ந்து எழுதி முடிக்க இறைவன் அருள் புரிய வேண்டும்.

கவின் said...

ஆஹா சுஹைனா...மகிழ்ச்சி! மகிழ்ச்சி!

Unknown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) அருமையான கவிதைத்தொடர்; இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தில் புது முத்து!

//இந்த வசன கவிதையும் முழுவதுமாக எழுதி முடிக்க முடியுமா என்று தெரியவில்லை எனக்கு//

ஏன் முடியாது? முடியும் உங்களால்...!

Unknown said...

//ஜமால் என்பவர் எழுதிய மறுவிலா முழுமதி என்னும் நபிகளாரின் வாழ்க்கை வரலாற்று நூலைத் தழுவி எழுதுகிறேன்.//

சரியான தேர்வு!

சகோதரர் தமிழ் பிரியர் நல்ல எழுத்தாளர் அவருடைய கருத்தும் வரவேற்க தக்கது!

சுஹைனா said...

அதிரை சகோதரரே,

உங்கள் ஊக்கம் என்னை உற்சாகப்படுத்துகிறது. நன்றி!

ஆசியா உமர் said...

இதுவும் அருமையாக இருக்கு.தொடர்ந்து எழுதுங்கள்.

சுஹைனா said...

எங்கே நம்ம அக்காவை காணோமேனு பார்த்தேன். தேங்க்ஸ் அக்கா.

இப்னு அப்துல் ரஜாக் said...

நல்ல கவி நயம்.இன்னும் எழுதுங்கள்.இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் வெளியிட்டுள்ள நபிகள் நாயகம் ஸல் அவர்கள் வரலாறு எனும் நூலையும் நீங்கள் பார்வை இட்டால்,இன்னும் நிறைய செய்திகள் கிடைக்கும்.வாழ்த்துக்கள்.