Tuesday, April 28, 2009

பிளவுஸ் படுத்திய பாடு


பாருங்க இதுக்கு நான் ‘பிளவுஸ் தைப்பது எப்படி’ன்னு தான் தலைப்பு வைக்கலாம்னு நினைத்தேன். அப்புறம், பார்த்தா, ‘தண்ணீரில் மிதப்பது எப்படி?’ ‘பிளவுஸ் தைப்பது எப்படி’ என்று ehow.com ரேஞ்சுக்கு ப்ளாக் போயிட்டே இருக்கும். அதான் இப்படி மாற்றி வைத்து விட்டேன் தலைப்பை.

எனக்கு 16 வயசு இருக்கப்ப, சரோஜினினு ஒரு டீச்சர் வீட்டுக்கே வந்து ஸ்டிச்சிங் சொல்லிக் கொடுத்தாங்க. ஜஸ்ட் ஒரு மாசம் தான் பழகினேன். ஸ்டிச்சிங் கூட வேற என்னலாமோ, சொல்லித் தந்தாங்க. எனக்குள் இருந்த எழுத்தாளரை(!) எப்படி கண்டு பிடிச்சாங்களோ தெரியாது, ஒரு நாள் சொன்னாங்க, பைபிளையும் குர்ஆனையும் கம்பேர் பண்ணி ஒரு புக் எழுதுன்னு. அப்புறம் அவ்வளவு தான். இனி நான் படிச்சிக்க மாட்டேன்னு அம்மாட்ட சொல்லி டீச்சரை நிறுத்தியாச்சு.

ஆனா, பாருங்க ஈஸியா பிளவுஸ் தைக்கலாம். கஷ்டப்பட்டு, டைலரிடம் கொடுத்து தைத்த பிளவுஸ் ஒன்னை பிரிச்சிக்கோங்க. அதை அப்படியே, பேப்பரில் வரைந்து கட் பண்ணிக் கொள்ளுங்கள். அப்புறம், அந்த பிளவுஸை மீண்டும், பழையபடி மிஷினில் ஜாயிண்ட் பண்ணிக் கொள்ளுங்கள். இப்ப பேப்பரில் ப்ளூ பிரிண்ட் இருக்கும் பாருங்க. அதை அப்படியே வைத்து, இன்னொரு துணியில் வரைந்து கட் பண்ணி(இங்கு கொஞ்சம் மூளையை உபயோகிக்கணும்) ஜாயிண்ட் பண்ணினால் பிளவுஸ் ரெடி.

சரி, தலைப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்கிறீங்களா? அது சொந்த கதை சோகக் கதை. 2 வருஷமா, நான் தையல் மிஷினை தொடவே இல்லை. இப்ப தான் ஒரு 7 பிளவுஸ் வாங்கி நானே தைத்துக் கொள்ளலாம்னு முடிவு செய்தேன். நான் முன்பு சொன்னது போல, புக் பைண்டிங் செய்யும் அட்டையில் என் பிளவுஸின் அச்சை வெட்டி வைத்துள்ளேன். குண்டாக குண்டாக, புதுப் புது அட்டையில் ப்ரொப்போஷனேட்டாக பெரிது படுத்திக் கொள்வேன்.

அம்மாவிடம் கொடுத்து, எல்லா பிளவுஸும் வெட்டி வாங்கி ஒரு மாதம் ஆகி விட்டது. நூல்கண்டுக்கு பாபின் கூட அம்மாவே சுற்றிக் கொடுத்திட்டாங்க. இன்னைக்கு தான் தைக்க ஆரம்பித்தேன். முதலில ஒழுங்கா தைத்தது. அப்புறம் கடமுடானு பயங்கர சத்தம். உடனே ஒரு போன் அடித்தேன் அம்மாவுக்கு. எண்ணெய் விடுன்னாங்க அம்மா. விட்டேன். அப்புறமும் சத்தம். ஒரு வழியா துப்பறிந்து, பாபின் கேஸ் ஹோல்டர் ஸ்குரூ லூஸாகி இருந்ததை டைட் வைத்தேன்.

அப்புறம் பார்த்தா, மேலே லூப் அடிக்குது. மறுபடியும் ஒரு போன் அம்மாவுக்கு. பாபின் கேஸ் நெட்டை கொஞ்சம் டைட் வைய்யுன்னாங்க. அது துருப்பிடித்து ஜாம் ஆகி இருந்தது. நீடில் வேற மழுங்கி இருந்தது. இது வேலைக்கு ஆகாதுன்னு கடை வீதிக்குப் போய், புது பாபின் கேஸ், ஊசி, நூல் கோர்ப்பது எல்லாம் 25 ருபாய்க்கு வாங்கி வந்தேன்.

வந்து, எல்லாம் மாற்றி, தைத்தால், நூல் போய் போய் சிக்கிக் கொள்ளுது. நூலைப் பிடித்து இழுத்துப் பார்த்ததில் ஊசி வளைந்து விட்டது. சரினு இன்னொரு ஊசி மாற்றினேன். உயரத்தை கூட்டி வைத்து விட்டேன் போலுள்ளது ஊசிக்கு. அழுத்தியதும் பட்டென்று உடைந்து விட்டது. கடைசியாக மூன்றாவது ஊசி மாற்றியுள்ளேன் இப்போது. மொத்தம் ஒன்னரை பிளவுஸ் தைத்துள்ளேன், இதுவரை. இன்னும் மீதி இருக்கும் ஐந்தரை பிளவுஸ் தைப்பதற்குள், குண்டாகி, அட்டையின் அளவு மாறிவிட்டால் என்ன செய்வது என்ற கவலை எனக்கு.

நூல் போய் போய் சிக்குவது தான் முக்கிய பிரச்சினை. சிக்கும் இல்லாட்டி கட்டாகும். சிங்கிள் சிட்டிங்ல முழு பிளவுஸும் தைக்கணும்ங்கற ஆசை, இன்னமும் கனவா தான் இருக்கு.

ஊசி வாங்கும்போது பத்து கொண்ட பாக்கெட் கொடுத்தான் கடைக்காரன். நான் ஒரு ஊசி இருந்தால் போதுமே என்று சொல்ல, அவன் ஒன்று தனியாக தர முடியாது என்று சொன்னதால், அப்படியே வாங்கி வந்து விட்டேன். அது எவ்வளவு நல்லதாகப் போய் விட்டது பாருங்கள். ஒன்னரை பிளவுஸுக்கு மூன்று ஊசினா, இன்னும் இருக்க ஐந்தரை பிளவுஸுக்கு எத்துணை வேண்டும், கணக்குப் போட்டுக்கோங்க.

இப்ப சொல்லுங்க, யாருக்காவது பிளவுஸ் தைக்கிற ஆசை இருக்கா? நாளைக்கு இந்த பதிவை எங்கம்மா படிச்சிட்டு, விழுந்து விழுந்து சிரிக்க போறாங்க.

5 comments:

தமிழ் பிரியன் said...

பாவம்... அந்த மெஷினுக்கு வாய் இருந்திருக்கும் போல..அதான் கதறி அழுது இருக்கு.. பாவம்னு விட வேண்டியது தானே..விடாம ஊசியால் குத்தி கொடுமை பண்ணி இருக்கீங்களேக்கா.. ;-)

Biruntha said...

தையலா..... ஐயோ வேண்டாம். என்ன இது தைக்க ஆசைப்படுறவங்க எல்லாருமே ஒரேமாதிரியான பிரச்சனைகளைத் தான் சந்திப்பார்களா? முன்பெல்லாம் அம்மாவுக்குத்தான் நச்சரிப்புக் கூட. அவாவும் பொறுமையா தைச்சுத் தருவா. இப்ப கடவுள் காத்தாப் போல என்னவருக்கு நல்லாத் தைக்கத் தெரியும். அதால தப்பிச்சுக் கொண்டேன். கலியாணத்துக்கு முன்னாடி அம்மா எவ்வளவோ கத்தினா, நானும் தொந்தரவு தாங்க முடியாம தைக்கிறேன் என்ட பேரில எல்லாத்தையும் உடைச்சுத் தான் வைச்சன். ஏனோ தெரியல்ல இந்த விசயத்தில மட்டும் எனக்குப் பொறுமை இல்லை. இத வாசிச்சா என்ட அம்மா சொல்லுவா "ஆமா உனக்கு மத்த விசயத்தில எல்லாம் பொறுமை இருக்கிற மாதிரிப் பேசுற என்டு".

அன்புடன்
பிருந்தா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பெரும்பாடு தான் பட்டிருக்கீங்க.. நான் சாதாமிசினில் தான் தைக்க பழகினேன்.. இப்ப எங்க தங்கமச்சானை மிரட்டி ஒரு பேஷன் மிசின் வாங்கிப் போட்டேன் போட்டதோட சரி.. ரெண்டு குட்டீஸும் இருக்கும்போது தைக்கமுடியாதுன்னு அதெல்லாம் நிறுத்தி உள்ள போட்டு எட்டு வருசமாகுது.. அவுட்புட்டே இல்லன்னு புலம்பிட்டிருக்காங்க அவங்க. இனி தான் ஒரு ஆளைக் கூப்பிட்டு செர்வீஸ் செய்து பயன்படுத்த ஆரம்பிக்கனும் ஜோஸியம் பாத்துட்டிருக்கேன்..:)

SUMAZLA said...

அட, இது யூனிவர்சல் சமாச்சாரமா இருக்கே?! எல்லாரும் இப்படித்தான் பாடுபட்டிருக்காங்கங்கறதக் கேக்கறப்ப, “யான் பெற்ற துன்பம் பெறுதே இவ்வையகம்” நு தோணுது! ஹா! ஹா!
ஆனா இன்னியவரைக்கும் ஸ்கோர் அதே ஒன்னரை தான்.

ஜெகநாதன் said...

ஹை! ப்ளவுஸ் ​தைக்க நீங்க ​கொடுத்த ஐடியா பிரமாதம்! இ​தைத்தான் சுருக்கமா Reverse Engineering-ன்னு ​சொல்வாங்க! எவ்வளவு எளிமையா இதை விளக்கீட்டிங்க! மனைவிகிட்ட இந்த ஐடியாவ சொல்லி அசத்தப் போறேன்! தாங்க்ஸ் சுமா!