Tuesday, May 19, 2009

சாயபு வீட்டு சரித்திரம் - 6


(உலவும் மனிதர்களின் உண்மை கதை)


வாசலில நெறஞ்ச நெல்லு, வாயிக்குள்ள மறைஞ்ச சொல்லு,
பாசத்துல கருப்புப்புள்ளி, குளத்துக்குள்ள விழுந்த கல்லு!
நேசத்துல நெறஞ்சவனும், மன்மதனாய் விட்ட வில்லு! - அந்த
தோஷத்தை நான் விலக்கும் வழி, நீயும் இப்போ சொல்லு! சொல்லு!!

அதிகாலைப் பொழுது. விடிஞ்சும் விடியாத கருக்கல். அந்த கருக்கல்லிலும், நெல்லு கொண்டாரும் பொதி மாடுங்களை வேடிக்கைப் பார்க்க, தெருவுல பசங்க கூடிட்டாங்க.

வரிசையா ஒன்னக்கண்ட மாதிரி பொதி மாடுங்க. கட்டையா குட்டையா, எப்படித்தான் எல்லாமே ஒரே அளவா இருக்குதுங்களோ?! மாடுங்களை ஓட்டிட்டு வந்தான் கிட்டான் பண்ணாடி. முத்தம்மா இருந்த ஆஜாரத்தப் பார்த்து குரல் கொடுத்தான்,

“அம்மா...! நெல் வந்திருக்குதுங்கோவ்!”

“எத்தினி சலவைடா வந்திருக்குது?!” முத்தம்மா பதிலுக்குக் குரல் கொடுத்தா.

“ஒம்பது சலவை வந்திருக்குதுங்கம்மா. பொதி மாடுங்க பின் கட்டுல நிக்குதுங்கோ!”

குஞ்சிக்கா எந்திருச்சு போச்சு பின் வாசல் கதவை தொறக்க. குஞ்சிக்காதான் அங்க எல்லா எடுபிடி வேலையும் செய்யும். நெல்லு வந்தா சொல்லி அனுப்பிருவாங்க. ரெண்டு மூணு நாள் அங்கயே வந்து தங்கியிருந்து நெல் வேவிச்சுக் கொடுத்திட்டுப் போகும்.

பின் வாசல் வழியா ஒவ்வொரு மாடா உள்ளாற வந்திச்சு. ஒரு சலவைங்கறது ரெண்டு மூட்டை. ஒவ்வொரு மாட்டு மேலயும் இந்தப்புறம் ஒன்னு, அந்தப்புறம் ஒன்னா, நடுவுல கவுத்த கட்டி, ரெவுண்டு மூட்டையா ஏத்தியிருப்பாங்க.

மாடுங்கள கொட்டாயி வாசலுக்குக் கொண்டு போனாங்க. குஞ்சிக்கா ஒரு பக்கமும், கிட்டான் ஒரு பக்கமும், மூட்டைங்கள பிடித்துக் கொள்ள, மூட்டைங்க நெலத்துல விழுகறாப்புல, மாடு ஒரு துள்ளு துள்ளிச்சு. இப்படியே எல்லா மூட்டைங்களையும் இறக்கிட்டாங்க. கூலிப்பணமும், பொதி மாட்டுக்கு வாடகையும் வாங்கிட்டு, கிளம்பினான் கிட்டான்.

கச்சாமா எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துக்கிட்டு நின்னுக்கிட்டிருந்தா. பொதிமாட்ட பாக்கற ஆசையில ராவுக்கே இங்க வந்து படுத்து, வெள்ளென நேரமா எந்திருச்சுக்கிட்டா. சாயபும் பாத்திமாவும் கொணாந்து விட்டுட்டு ஒரு நா பூரா இருந்திட்டு போயிட்டாங்க.

கொஞ்ச நேரத்துல, சைதாவும் எந்திருச்சு வந்தா. சைதா மூணாங்கிளாஸ் படிக்கிறா. இன்னிக்கு நெல்லு வரதுனால, ரெண்டு மூணு நாளைக்கு பள்ளிக்கோடத்துக்கு மட்டம் தான். எப்டியும் நாளஞ்சு நாளைக்கு ஜவாபு சொல்ல வாணாமுன்னு அக்கா கடையில் ஆச தீர பனங்கிழங்கு சேவா தின்னுட்டு கடன் வெச்சிட்டு வந்திட்டா.

கச்சாமாவும் வந்ததுல இருந்து சாதிக்கலிய தேடுறா. ஆளே தென்படல கண்ணுக்கு. அவன் இப்ப பி.யூ.ஸி படிக்கறதுனால, டவுனுல, அப்பா கூட தான் தங்கிப் படிக்கான். என்னிக்காவது லீவு நாளுல தான் இங்க வர்ரான். சாதிக்கலி தம்பி சித்திக்கு தான் எப்பவும் இங்கயே இருக்கறது. அவன், அவங்கம்மா மவுத்தப்ப, பச்சக் கொழந்த. அதனால் அப்பலயிருந்தே நன்னிமா முத்தம்மா ஊட்டுல தான் வளந்தான். இப்ப அஞ்சாப்பு படிக்கறான். அவங்கிட்ட மெதுவா கேட்டா கச்சாமா,

“அண்ணன் எப்ப வந்தான்?”

“முந்தா நேத்து வந்தாங்கா. மறுவுடியும் எப்ப வருவானு தெரீலக்கா”

“ஏண்டா நீ பள்ளியோடம் போவுலயா?”

“சைதா போவாதனால, நானும் போவுலக்கா”

அன்னிக்குப் பூராவும் சைதா கூடத் தான் பொழுது போக்கினா. சைதா ஒல்லிபிச்சானா இருந்தாலும், நல்லா வெள்ளையா மொழு மொழுனு இருப்பா. கண்ணு ரெண்டும் மொகத்துக்கு மேல பெரிசா, குண்டு குண்டா இருக்கும். அவ பேசினா, கண்ணும் பேசும். அதனால, கச்சாமாவுக்கு சைதா மேல கொள்ளை பிரியம். சைதாவ கூட்டிட்டுப் போயி, தலை சீவி, ரிப்பன் வெச்சுக் கட்டி, பவுடர் பூசி மை வெச்சு விட்டா. இப்ப பார்த்தா பொம்மையாட்டம் இருந்தா சைதா.

“கச்சக்கா, நீ இன்னிக்கு இங்கியே படுத்துத் தூங்கிக்குவியா?” பெரிய மனுஷியாட்டம் கேட்டா சைதா.

“ஆமாங்கண்ணு! நாளைக்கு நெல்லு வேவிக்கறாங்கல்ல; அதுக்கு தான் வந்தேன்”

“அக்கா எனக்கு ஒரு சின்ன சொப்பு கூடை பண்ணி தாக்கா! என்னோட கூடை ஓட்டையா ஆகிருச்சு”

“அத கொண்டா சைதா, நா ஓட்டைய அடைச்சு தரேன்”

சின்னதா ஒரு மஞ்சக்கெழங்க எடுத்து கல்லுல கொட்டி நுணுக்குனா. கொஞ்சம் காயிதமும் வெந்தயமும் அது கூட அந்த மஞ்ச கெழங்கும் ஊறவெச்சு, ஆட்டாங்கல்லுல போட்டு ஆட்டுனா. அப்பிடியே கொழ கொழனு பசையா பிசினு மாதிரி வந்தத ஒரு கொட்டரால வழிச்சு வெச்சுக்கிட்டா கச்சாமா.

“கொண்டா சைதா உன்னோட சொப்புக் கூடைய”

வாங்கி, ஒட்டைல பூசி, நெவுலொனத்தியா காய வெச்சா.

“தாதிமா, ஆட்டுன காயிதம் இருக்குது! கூட மொறம் இருந்தா குடுங்க வழிச்சு தரேன்”

“இந்தா கச்சாமா, இந்த ஒரு மொறத்துக்கு மட்டும் ஓட்டைய அடைச்சிரு! கூடையெல்லாம் நல்லாத்தான் இருக்குது”

முத்தம்மா கொடுத்த மொறத்தை வழிச்செடுத்தும், இன்னமும் நிறைய மிச்சம் இருந்துச்சு. சரி, சைதா கேட்டாப்புல சின்னதா ஒரு பொட்டிக் கூட செஞ்சு தரலாமின்னு, சோறாக்கூட்டுக்குப் போயி ஒரு சின்ன கொட்டரா எடுத்துட்டு வந்தா. அத கமுத்திப் போட்டு, அது மேல ஒரு பழைய துணிய பொத்துனா. அந்த துணி மேல, அப்படியே காயிதப் பிசின, சந்தனம் மாதிரி பூசுனா. கொஞ்சம் தண்ணிய தொட்டு தொட்டு, அப்படியே வட்டமா கொட்டரா வடிவத்துலயே தட்டி தட்டி, பலகை மேல தூக்கி வெச்சிட்டா காயறதுக்கு!

அன்னிக்கு சாயந்திரம் குஞ்சிக்கா வந்து, கெணத்துக்கு பக்கத்துல இருந்த மூணு தொட்டிங்கள்ள கெணத்தண்ணிய பக்கீட்டுல சேந்தி சேந்தி ஊத்துச்சு. அப்புறம் நெல்லு மூட்டைய இழுத்தாந்து, அப்படியே தண்ணியில தூக்கி கொட்டுச்சு. இது அப்படியே விடிய வரையிலும் ஊறணும். சைதா அந்த நெல்லுங்களை தொட்டியில போடுற ஆசையில, எல்லாப்பக்கமும் எறச்சு, முத்தம்மா கிட்ட திட்டு வாங்குனா.

காலங்காத்தால எல்லாரும் எந்திரிச்சு, நெல்லு வாசலுக்கு போயிட்டாங்க. குஞ்சிக்கா, தண்ணியில மேல மெதந்துகிட்டு இருந்த கறுக்கா நெல்லையெல்லாம், அரிகூடையில அரிஞ்சு அரிஞ்சு எடுத்துது. அப்புறம், தொட்டியோட ஜலதாரையில சொருவி இருந்த துணியில கொஞ்சமா வழி பண்ணுச்சு, நெல்லு வெளிய போகாம தண்ணி மட்டும் போகறா மாதிரி.

வெறகுகுச்சிங்க, தென்னை மட்டைங்க எல்லாத்தையும் வெச்சு, தீ உண்டாக்கி, மேல நெல்லு வேவிக்கற பெரிய அண்டாவ ஏத்தி, அதுல, நெல்ல கூடையில எடுத்து எடுத்து போட்டுச்சு. இப்ப தீய நல்லா பொகைய உட்டுச்சு. அப்படியே நெல்லு மலந்து, குபு குபுனு ஆவி வந்தொன்ன, அப்படியே வாசல்லயே, அத கமித்தி போடுச்சு. இப்படியே அஞ்சு சலவை நெல்ல அன்னிக்கு வேவிச்சாயிருச்சு.

கொஞ்ச நஞ்ச தண்ணி பூராம் வடிஞ்சிருச்சு. இனி வெய்யில் வாசல்ல போட்டா, நெல்லு பொடிஞ்சு எல்லாம் குருணையா போயிரும்ல. அதனால, குஞ்சிக்கா, அய்சாமா, கச்சாமா எல்லாரும் அதை கூடையில அள்ளி அள்ளி நெழல் வாசல்ல கொண்டாந்து கொட்டுனாங்க. சைதாவும் தன் பங்குக்கு சின்ன சொப்புல, கொஞ்சூண்டு நெல்ல ஓடி ஓடி கொண்டாந்து கொட்டுனா. அதுக்கு தான கச்சாமாகிட்ட சொல்லி ஓட்டைய அடைச்சி வாங்குனா!

குஞ்சிக்கா வந்து நெல்ல காலால, விசிறி  கால் துழாவ போட்டுச்சு. வாச முச்சூடும் நெல்லு நெறஞ்சு கடக்கு. கால் வெக்க எடமில்ல. அன்னிக்கும் சாதிக்கலி வரவே இல்ல.

அடுத்த நாளு குஞ்சிக்கா, நெல்ல, கை துழாவ போட்டுச்சு. அப்படியே ரெண்டு கையையும், “குதிரை குதிரை எங்கே போற?” வெளையாட்டுக்கு வெக்கறாப்புல வெரல விரிச்சு வெச்சு, குமிஞ்சு, துழாவி விடணும். இப்ப நெல்லு அப்படியே வரிவரியா பாக்கவே ரொம்ப அழகா இருக்கும். இப்படியே அது மூணு நாளு காஞ்சதும், கச்சிந்திப் பைய்யில அர மூட்ட கா மூட்டையா அத, புடிச்சு வெச்சிட்டு, இன்னொரு நாலு சலவையையும் வேவிச்சாங்க.

நெல்ல அரைச்சிட்டு வருரக்கு, ஆஸருக்கும் தண்ணிக்கார பாத்துமாவுக்கும் சொல்லி அனுப்பிச்சாங்க. ஆஸரு, பாத்துமா, குஞ்சிக்கா மூணு பேரும், அந்த அரை மூட்டைங்கள தலைச்சொமையா சொமந்துகிட்டுப் போயி, பாவுளி மிசினுல அரைச்சு, அரிசிய தனியா தவுட்ட தனியா உமிய தனியா கொண்டாந்தாங்க. கூலிப்பணத்துக்கு, முத்தம்மா அரிசிய படியில அளந்து போட்டா. குஞ்சிக்காவுக்கு வேவிச்ச கூலியும் சேர்த்து கொடுத்தா.

எல்லா அரிசியையும் முந்தி மீரான் சாயபு குடியிருந்த கொட்டாயி ரூமுல கொண்டு போயி அடுக்கிட்டாங்க. பொழங்க ரெண்டு மூட்டை நெல்ல மட்டும், கொட்டரைல இருந்த பீப்பாயிலயும், டின்னுங்கள்ளயும் கொட்டி வெச்சிட்டாங்க.

பலகையில கமுத்தி வெச்சிருந்த சொப்பு நல்லா காய்ஞ்சிருச்சு. அத எடுத்து, அலுங்காம, கொட்டராவ வெளிய எடுத்து, லேசா தண்ணிய துணிமேல தொளிச்சு, அப்படியே துணிய உரிச்சு எடுத்தா! இப்ப அழகான சொப்பு கெடச்சிருச்சு. அதப்பார்த்த சைதாவுக்கு மொகமெல்லாம் ஒரே சிரிப்பு. ஆசையா அத கையிலயே வெச்சுக்கிட்டிருந்தா.

அடுத்த நா தவுட்டுக்காரன் போனான், சந்துல.

“ஏம்மா தவுடிருக்கா தவுடு?! ஏம்ம்ம்மா தவுடிருக்கா தவுடு?!”

“ஏப்பா இங்க வாப்பா” போயி கூப்பிட்டா சைதா. எப்பவுமே தவுடு வித்தா அவளுக்குக் காசு கெடைக்கும். அப்ப தான பள்ளிக்கோடத்துக்குப் பக்கத்துல இருக்கற அக்கா கட பாக்கிய அடைக்க முடியும்.

“ஏப்பா தவுடு என்ன வெலைக்கு எடுக்கறப்பா?” பெரிய மனுஷியாட்டம் கேட்டா சைதா.

“ருவாயிக்கு இருபது படிமா”

“என்னது ருவாயிக்கு இருபதா. போன வாரம் வந்த தவுட்டுக்காரங்கிட்ட பத்து தான போட்டேன்”

அப்பிடி இப்பிடினு பேரம் பேசி ஒரு வழியா ருவாயிக்கு பதினாறு படி போட்டா. சைதா தான் எல்லாத்தையும் அளந்து அளந்து போடுவா வழக்கமா. மொத்தத் தவுட்டையும் பாஞ்சு ருவாய்க்கு வித்தா. முத்தம்மா சைதாவுக்கு ரெண்டு ருவா கொடுத்தா. அக்கா கடை பாக்கி முக்கால் ருவா போனாலும், இன்னும், ஒன்னே கால் ருவா இருக்கே! இது ஒரு மாசத்துக்கு தாங்குமே! தலை கால் புரியாத சந்தோஷம் சைதாவும்.

காசு கெடச்ச குசியில பள்ளிக்கோடத்துக்கு ஓடிட்டா; இந்த வாரமே மட்டம் போட்டாச்சு. ஆச்சு, இன்னிக்கு ஒரு நா போயிட்டா, அப்புறம் சனி, ஞாயிறு லீவு தான.

சைதாவும் இல்லாம, கச்சாமாவுக்கு பொழுதே போவுல. எப்படியும் ஞாயித்துக்கெழம சாதிக் மச்சான் வருவானு எதிர்பாத்துகிட்டிருந்தா. சாயங்காலம், பள்ளியோடம் விட்டொன்ன, அக்கா கடையில, கச்சாமாவுக்கும் சேர்த்து, பனங்கெழங்கு வாங்கிட்டு வந்தா சைதா. ரெண்டு பேரும், பனங்கெழங்க தின்னுக்கிட்டே, ஒருபட்டாம் திருப்பட்டாம் வெளையாடிக்கிட்டிருந்தாங்க.

“ஒருபட்டாந் திருப்பட்டான், ஓரியா மங்களா, சக்க திருப்பி செருப்பாலடிப்பான்! உங்கப்பம்பேரு என்ன?”

“முருங்கப்பூ”

“முருங்கப்பூவு தின்னவனே! முள்ளாங்கைய கடிச்சவனே! பாம்புக்கைய படக்குனு திருப்பிக்கோ!”

ரெண்டு பேரும் முசுவா வெளையாடிட்டு இருந்தப்ப தான், மீரான் சாயபு உள்ள வந்தாரு. வந்தவரு நேரா அம்மாகிட்ட போனாரு.

“வாடா! மீரான், புள்ளைய உட்டுட்டு போனியே, எடையில ஒரு தாட்டி வந்து பாக்கக்கூடாதா? ஏண்டா பாத்திமா வரலையா?”

“இல்லமா! நா கச்சாமாவ கூட்டிட்டுப் போகலாம்னு வந்தம்மா! நாளைக்கு டவுனுல இருந்து மாப்பிள்ள ஊட்டுக்காரங்க வராங்கம்மா!”

“யாருடா அது டவுனு மாப்பிள்ள? இப்ப என்னடா வயசாயிருச்சு கச்சாமாவுக்கு? இவ்ளோ அவசர படற?”

“இந்த காதரவுலியா பொறையோட, அவள தூக்கியாந்து பதினேழு வருஷம் முடியறதுமா! மாப்பிள்ளைக்கு முனிசிபாலிடி உத்தியோகமாம். கை நெறய சம்பாதிக்கிறானாம். நம்ம எண்ணைமண்டிகாதர்சா வகையறா தான். காதர்சாவுக்கு மக பையன். என் சேக்காலி சர்புக்கு மச்சான் பையன். அதனால ஒரே தலையா குடுத்தே ஆவணும்னு நிக்கறான். அதான் வரச்சொல்லிட்டன்.”

“என்னமோடா, பெக்காட்டியும் பாசமா வளத்துருக்க. பாத்து நல்ல எடமா கட்டிக் குடு”

“கச்சாமா கெளம்பு! அம்மா, நாளைக்கு காத்தாலயே எல்லாரும் ஊட்டுக்கு வந்திருங்க. அய்சாமா நீயும் வந்திரு! அவங்க நாலு பேரு வர்ரப்ப, நம்ம சனம் நாலு பேரு இருந்தாத்தான, நமக்கு மருவாத?!”

கச்சாமாவுக்குக் கேக்க கேக்க தலையே சுத்திருச்சு. மனசுக்குள்ள இருந்த என்னமோ ஒன்னு பொத்துனு கீழ விழுந்தாப்புல இருந்துச்சு. கண்ணுக்குள்ள நிக்கற சாதிக்கலி, அப்படியே பின்னாடியே நகர்ந்து நகர்ந்து, தூரத்துல புள்ளியா மறையறான். சாதிக்கலிக்கே கட்டி வெச்சறலாம்னு முத்தம்மா சொல்ல மாட்டாளானு, உன்னிப்பா அவங்க பேச்ச கேட்டுட்டு இருந்தவளுக்கு ஏமாத்தந்தான். ஞாயித்துக்கெழம எப்ப வரும்னு பாத்துக்கிட்டு இருந்ததுக்கு, இதான் பலனா?

கலைஞ்சு போன மனசோட, அப்பாகூட கெளம்புனா. நானும் வருவேனு, அடம் பிடிச்சு, சைதாவும் கூட ஒட்டிக்கிட்டது, அவளுக்குக் கொஞ்சம் ஆறுதலா இருந்திச்சு. எல்லாத்துகிட்டயும் சொல்லிட்டு, கண்ணுல தண்ணியோட மனசுல கனத்தோட பொறப்பட்டா கச்சாமா, விதியின் விளையாட்ட புரிஞ்சுக்காமயே?!

(வளரும்)

-சுமஜ்லா

5 comments:

SUMAZLA said...

அன்பு வாசகர் வட்டத்துக்கு,

ஒரு வழியாக மழை ஓய்ந்தது போல, என் கம்ப்யூட்டரும் சரியாகி விட்டது. இனி ஒரு சில நாட்களில், எல்லா ப்ளாகையும் அப்டேட் செய்து விடுவேன். இந்த முறை, மிக நீண்ட நாட்களாகி விட்டது, ப்ராப்ளமை சரி செய்ய. இனி வரும் நாட்களில் விட்டதற்கும் சேர்த்து நிறைய எழுத ஆசை.

நட்புடன்,
சுமஜ்லா.

கே.ரவிஷங்கர் said...

நன்றி. வாழ்த்துக்கள்.ஈமெயில் பார்த்தீர்களா.

எனக்கும் பிளாக்குகள் பற்றி சந்தேகங்கள் உண்டு.

பார்க்க என் பின்னூட்டத்தை:-

http://mytamilweb.blogspot.com/2009/05/3.html

இந்த பிளாக்காரர் பதிலே சொல்ல மாட்டேன் என்கிறார்.ஏன் தெரியவில்லை.

தீர்க்க முடியுமா?

SUMAZLA said...

உங்க சந்தேகத்துக்கு ஈமெயிலில் பதில் தந்துள்ளேன். மேலும் சந்தேகம் இருந்தால் கேட்கவும்.

Biruntha said...

அப்பாடா... என்னால ஒரு படியா பதிவு போட முடியுது:-) தாங்க்ஸ் சுஹைனா.

பாவம் கச்சாமா:-( அவ மனசப் புரிஞ்சுக்காம இப்பிடிப் பண்ணுறாங்களே..

அன்புடன்
பிருந்தா

PEACE TRAIN said...

பாவம் கச்சாமா? சாதிக் அலி,நீ எங்கப்பா போய்ட்டே?