Saturday, May 30, 2009

சாயபு வீட்டு சரித்திரம் - 7


(
உலவும் மனிதர்களின் உண்மை கதை)


அன்னநடை அழகி இவ சின்ன மனம் கண்ட கனா!
மன்னன் யாரு என்று உளம், நிதமும் இங்கு கொண்ட வினா!!
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வெச்சது தப்பாது!
தன்னுடைய ஆளை அவள் தெரிந்து கொண்டாள் இப்போது!!”

ராத்திரி பூரா, மனசு பக்கு பக்குனு அடிச்சுக்கிட்டே கெடந்துச்சு கச்சாமாவுக்கு! பொழுது பொலர்ந்தா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வாராங்களே, அவங்க யாரு? எப்படி இருப்பாங்க? சாதிக் மச்சான நாம கண்ணாலம் மூச்சிக்க முடியாதா? பல பல கேள்வியினால தூக்கமே வர்ல அவளுக்கு.

விடிய விடிய மனசு கொழப்பத்துனால, விடிஞ்சொன்ன அடிச்சுப் போட்டாப்புல தூங்கிட்டு இருந்தா. திண்ணைல கசமுசானு பேச்சுக் குரல் கேட்க எந்திரிச்சு வந்தா. அப்பத்தான் டவுனு குப்பி, சல்மா பிளஷருல வந்து இறங்கினா.

சல்மாவுக்கு, ஆறும் பசங்க. புருஷன் வீட்டுல ஆஸ்திக்கு ஒன்னும் குறைச்சலில்ல. மச்சான் அய்யூபு கோவக்காரரா இருந்தாலும், பொண்டாட்டி மேல அம்புட்டு பாசம். சல்மாவுக்கு பத்தாப்பு படிக்கிற கடைக்குட்டி, அஹமது மேல தான் தனி பிரியம். மூணாவது மகன், உஸ்மான் தான், பிளஷருல அம்மாவையும் அஹமதுவையும் கூட்டியாந்து எறக்கி உட்டுட்டு போனான். அவங்கல்லாம் ரொம்ப வசதிப்பட்டவங்க. அதனால, அந்த மச்சான்மாருங்கல்லாம் கச்சாமாவ கட்டுவாங்கன்னு, யாரும் நெனைச்சுக் கூட பார்க்கல.

வாங்க குப்பிமா! எங்க மாமு வர்லையா?” ஓடிப் போயி வாய் நெறக்க கூப்ட்டா கச்சாமா. அதுக்குள்ளாற, பாத்திமாவும் வந்துவானு கேட்டா.

என்ன கச்சாமா, புருஷங்காரன நெனைச்சுக்கிட்டு, ராத்திரி பூரா தூங்குலியா? கண்ணு இப்படி செவந்து கடக்குதே?!” கச்சாமாவ கேலி செஞ்சுக்கிட்டே உள்ளாற போனா சல்மா.

அப்பத்தான் எந்திரிச்ச சைதாவும், அஹமதைப் பார்த்தொன்ன துள்ளிக்கிட்டு அவங்கிட்ட ஓடிட்டா. போய் ஒட்டிக்கிட்டா, ரோட்டுக்குக் கூட்டிட்டுப் போய் எதாவது வாங்கித் தருவான்ல.

மத்தியானம் சோறு தின்னுட்டு அய்சாமாவும் சாதிக்கலியும் வந்தாங்க.

யான் அய்சாமா, இவ்ளோ நேரங்கழிச்சு வந்திருக்கற? காத்தாலயே வந்திருக்கலாம்ல?”

இல்ல வாவுசு! சாதிக்கலி வந்திருக்கான். அதான் அவனுக்கு புடிக்குமேனு, கருவாட்டு கொழம்பு வெச்சேன். சாப்புட்டுட்டு வர்ரதுக்கு நேரமாயிருச்சு.

அக்கமா, நீ எப்ப வந்த? அஹமதூ.. இன்னிக்கு பள்ளிக்கோடம் இல்லியா?” பேசிக்கிட்டே போனா அய்சாமா.

கச்சாமாவுக்கு காதுல சுருக்குனு உழுந்துச்சு. கதவோரமா நின்னுக்கிட்டு, என்ன பேசுறாங்கன்னு பார்த்துக்கிட்டே இருந்தா. சாதிக்கலி அஹமது கூட, பேசி ஒரே சிரிப்பா சிரிச்சுக்கிட்டு இருந்தான்.

சைதா! இங்க வாகச்சாமா கூப்டா.

யா கச்சக்கா

நான் ஒன்னு சொல்லுவேன். நீ யார்ட்டயும் சொல்லக்கூடாது, என்ன?”

என்னான்னு மொதோ சொல்லு நீயு

வந்து, சாதிக் மச்சாங்கிட்ட ஒருத்தரும் இல்லாதப்ப, பேசாம, நீயே கச்சாமாவ கட்டிக்கலாம்லனு கேளு?

பெரியண்ணாஆஜாரத்த தாண்டி பொறக்கடைக்கே கேக்குறாப்புல கூப்பாடு போட்டா சைதா.

ஏய்! இரு இரு கத்தாத. பக்கத்துல போயி, யாரும் இல்லாதப்ப கேளு! நான் கேட்டேனு சொல்லாதடி. நீயே கேக்கறாப்புல கேளு! என்ன?!”

கேட்டா எனக்கு என்ன தருவ?”

தோ, புது சொப்பு உண்டியலு, எங்கப்பா போன வாரம் சந்தையில வாங்கியாந்தாரு எனக்கு. அத தர்ரன் ஒனக்கு

சைதா மெதுவா சாதிக்கலி பக்கத்துல போயி, சொன்னபடியே கேட்டா. கச்சாமா, மனசு படபடக்க கதவு பக்கத்தால நின்னுக்கிட்டு இருக்கா, அவன் சொல்லப் போற பதிலுக்காக.

சாதிக்கலி, சைதாவோட ரிப்பனை புடுச்சு திருகுனான், “ஏய் என்ன இது பெரிய மனசியாட்டம் கேள்வி கேக்கற?”

சொல்லு பெரியண்ணா!” உண்டியல் வேணுமே அவளுக்கு.

நான் எங்க இப்ப போயி?! இப்பத்தான் பி.யூ.ஸி படிக்கிறன். இன்னோம் காலேஜ் படிக்கணும். அப்புறம் வேல தேடணும். அதுக்குள்ள கச்சாமா கெழவி ஆயிருவாளே?! நடக்கற காரியமா இது?”

சொன்னது ரெண்டு வரிதான். ஆனா, கச்சாமாவுக்கு ஒலகமே, தலகீழா சுத்துறாப்புல இருந்துச்சு. விதி உட்ட வழினு அப்படியே உக்காந்துக்கிட்டா.

கச்சாமா, சீக்கிரம் எந்திரிச்சு, மூஞ்சிய கழுவிக்கிட்டு, துணிய மாத்து. இன்னும் அரமன்னேரத்துல வந்துருவாங்க, எல்லாரும்சொல்லிட்டு போனா பாத்திமா.

துல்லியும் கேசரியும் கெளர்ர வாசம் மூக்க தொளைக்குது.

கச்சாமா அவசர அவசரமா போயி பனாரஸ் சீலைய கட்டுனா. மொவத்துல கொஞ்சம் பவுடர அப்பி, கீக்கண்ணு மேக்கண்ணுக்கெல்லாம் மையை பூசிக்கிட்டா. கழுத்துல டீக்கா பதக்கமும் கவர்னர் மாலையும், கையில கெண்டியும் வளவியும், காதுல ஜிமிக்கியும் மாட்டலும். இது போக ஒட்டியாணம், நாகமுறி, போச்சாமணி, ஜிம்க்கா மாலை, கைச்சரம், நத்து, புல்லாக்கு எல்லாம் போட்டு அம்புட்டு லச்சணமா இருந்தா.

மாப்பிள்ளை ஊட்டுக்காரங்க எல்லாரும் வந்துட்டாங்க. எண்ணமண்டிகாதர்சா மக கூள ருகையாவோட மகன் தஸ்தீரு தான் மாப்பிள்ளை. ஊட்டுக்கு மூத்த மகன். மூணு தம்பி ரெண்டு தங்கச்சிங்கனு பெரிய குடும்பம். பொண்ணுங்களுக்கு கண்ணாலம் ஆயிருச்சு.

கச்சாமா போயி உட்கார்ந்தா. எல்லாருக்கு புடிச்சுப் போச்சு. ருகையா தான் நோண்டி நோண்டி கேள்வி கேட்டா. கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்திட்டு உள்ள போயிட்டா கச்சாமா. மாப்பிள்ளை பேரு என்னாண்டு தெரிஞ்சுக்க அவளுக்கு ஆசையா இருந்திச்சு. சைதாகிட்ட, குசுகுசுனு என்னமோ சொன்னா. அவளும் போயி, யார்கிட்டயோ கேட்டுட்டு வந்தா.

கச்சக்கா, மச்சான் பேரு தஸ்தீரு! அதென்னக்கா பேரு, எச்சி துப்புற தஸ்த்தாட்டம்?!”

சைதா! அப்படியெல்லாம் சொல்லக்கூடாது மரியாத இல்லாம. வயசுல பெரியவுங்க இல்ல அவுங்க?”

அய்ய அக்காவுக்கு அதுக்குள்ள மச்சான் மேல பாசத்தப் பாரு!” கெக்கேபிக்கேனு சிரிச்சா சைதா.

பொண்ண எங்க எல்லாத்துக்கும் புடுச்சு போச்சு. நீங்களும் வந்து எங்க பையன பாருங்க.” சொல்லிட்டு போயிட்டாங்க மாப்ள வீட்டுக்காரவங்க.

அக்கா, எனக்கு உண்டியலு வேணும் குடுங்கக்கா!”

சின்ன சொப்பு உண்டியல எடுத்து சைதா கிட்ட குடுத்தா!

அங்க வந்தான் அஹமது, “என்ன சைதா, உண்டீலு அழகா இருக்குதே, எனக்கு குடுத்துரு!”

போங்கண்ணா, எனக்கே கச்சக்கா தான் குடுத்துச்சு. எனக்கு வேணும்

உனக்கு ஒர்ருவா தரன். நீ அடுத்தவாரம் சந்தையில வாங்கிக்க. அங்க டவுனுல, இந்த மாதிரி சின்னதா அழகா கெடைக்க மாட்டேங்குது

ஒரு ருவாய வாங்கிக்கிட்டு உண்டீல குடுத்துட்டா சைதா. அவளுக்கு பெருமா மகன் தான் அஹமது. இருந்தாலும், அவளுக்கு அஹமதைத்தான் பேசி வெச்சிருக்காங்கன்னு எல்லாரும் சொல்லுவாங்க. அதுனாலயோ என்னமோ தெரியல, அவளுக்கு அஹமது மேல ஒரு இனம் புரியாத பாசம்.

என்னோட புது உண்டீலுக்குக் காசு போடுங்க! காசு போடுங்க!”னு புது உண்டியல தூக்கிக்கிட்டு, நன்னிமா, மம்மாணி, காலாமா எல்லார்கிட்டயும் வசூல் பண்ணினான் அஹமது. கொஞ்ச நேரத்துல பத்து ருவாய்க்கும் மேல சேர்ந்திருச்சு.

இவனுக்கு இதே பொழப்பு தான்! எப்பப்பாரு, புது உண்டீலு வாங்கிக்கிட்டு, காசு போடு, காசு போடுனு வசூல் பண்ணறதுநொடிச்சுக்கிட்டா, சல்மா.

இந்த வேடிக்கையிலயும் கலகலப்புலயும் சகலத்தையும் மறந்துட்டா கச்சாமா. ஒவ்வொருத்தரா எல்லாரும் போனொன்ன தான் மனசுக்குள்ள வெறுமயா இருந்துச்சு. சைதாவும் வேற போயிட்டா. அடுத்த நாள், நாள் நல்லதா இருக்கறதுனால, மாப்பிள்ளை பார்க்க போறாங்க எல்லாரும். அவளுக்கு எதுவுமே புரியல. நடக்கறது கனவா, எல்லாமே உண்மையானு ஒரே கொழப்பமா இருந்துச்சு.

தஸ்தீருபேர ஒரு தடவ சொல்லிப்பாத்துக்கிட்டா. என்னமோ, புதுசா இருந்துச்சு. அது என்ன பேரு இப்படி கேள்வி படாத பேரா இருக்குதே! ஆளும் புதுதினுசா இருப்பாரோ?

ஆள் எப்படி இருப்பாரு? சாதிக் மச்சான் மாதிரி, வளத்தியா வாட்டசாட்டமா இருப்பாரா? பாரு சாதிக் மச்சான் எப்படி சொல்லிருச்சு. எத்தினி வருஷமா இருந்தாலும் எனக்காக காத்துக்கிட்டு இருந்தா, நாங்கட்டிக்கிறேனு சொல்லி இருக்கலாம்ல?!

சாதிக் மச்சான் உருவத்தை மனசுல இருந்து இனி அழிச்சிரனும்னு நினைச்சா. ஆனால், அப்படி நினைக்க நினைக்க தான், வேதனை ஜாஸ்தியா ஆவுராப்புல இருக்கு. தஸ்தீர பார்த்துட்டா அவுரு உருவம் மனசுக்குள்ள வந்திரும்னு நம்புனா.

ஆள் செவப்பா இருப்பாரா? அவங்கம்மா கருப்பு தான, அப்ப அவரும் கறுப்பா? முனிசிபாலிடி உத்தியோகம்னு சொல்லுறாங்க, அப்ப இங்கிலீசு நல்லா பேசுவாரா? நாம்புளும் நாலு வார்த்த இங்கிலீசு பழகிக்கிட்டா, அவர்ட்ட பேசிக்காட்டி அசத்தலாமுல்ல? எனக்கு ஒன்னுமே தெரியாதே, என்ன பண்ணறது?!

மோட்டார்ல வருவாரா? இல்ல, சைக்கிளா? சைக்கிளா, இருந்தா மொதல்ல, ஒரு மோட்டார் வாங்க சொல்லணும்.

அட! நான் ஒரு மடச்சி! இன்னும் மாப்பிள்ளைய கூட பார்க்கல. உறுதியும் ஆவல. அதுக்குள்ள, எங்கெங்கயோ போயிட்டனே! ஆனாலும், சாதிக் மச்சானுக்கு, மனசுல ஒன்னுமே இல்லையா?”

எங்கெங்க நெனப்பு சுத்துனாலும், கடசியா, சாதிக்கிட்ட வந்து நின்னொன்ன, அப்படியே தலைபாரமா அமுத்துச்சு. யோசன பண்ணிட்டே படுத்திருந்தவ, எந்நேரம் தூங்குனானு அவளுக்கே தெரியல.

அடுத்த நா எல்லாரும் மாப்பிள்ளை பார்க்க போனாங்க. சொந்த ஊடு, கவர்ன்மெண்ட் உத்தியோகம், எல்லாருக்கும் ரொம்ப புடிச்சுப் போச்சு. பொண்ணு வீட்டுல எழுபது பவுன் நகையும் மாப்பிள்ளை வீட்டுல பதினஞ்சு பவுனும் போடறதா பேச்சு. ஒரு நல்ல நாள் பார்த்து, வெத்தல பாக்கு மாத்திக்கிட்டாங்க.

ஆச்சு, பத்திரிக்கையும் அடிச்சு வந்திருச்சு. கச்சாமா மனசுக்குள்ளயும் பரபரப்பு தொத்திக்கிச்சு. சாதிக்கலி மேல இருந்த கன்னுக்குட்டி காதல் போன எடம் தெரியல.

எடப்பாடி, சின்ன தாராவரம், ஜம்பை, ஒலகடம்னு ஊர் ஊரா போயி பத்திரிக்கை கொடுத்திட்டிருந்தாங்க. கச்சாமா ஒருத்தருக்கும் தெரியாம, பத்திரிக்கையை கையில வெச்சு பாத்துக்கிட்டிருந்தா. ரோஸ் கலரும் மஞ்ச கலருமா, வழுவழுப்பா இருந்த பத்திரிக்கை, அவ வாழ்க்கையையே மாத்தப் போறது அவளுக்கு அப்ப தெரியல.

தஸ்தகீர்என்று அச்சடிச்சிருந்த மாப்பிள்ளை பேரை ஆசயா விரலால தடவி பார்த்தா. எங்க வேகமா தடவினா அவருக்கு வலிச்சிருமோனு மயிலிறகால வருடற மாதிரி அப்படி ஒரு மென்மையா தடவி பார்த்தா.

என்ற மச்சான்; தஸ்தீர் மச்சான்

மனசுக்குள்ள ஒரு வாட்டி சொல்லிப் பார்த்துக்கிட்டா. மனசெல்லாம் இனிக்கிறாப்புல இருந்துச்சு... 

(
தொடரும்…)


 சுமஜ்லா

6 comments:

Biruntha said...

மனசுக்கு ரொம்ப இனிமையாக இருக்கு இந்தப் பதிவைப் பார்க்கிறப்ப.

ம்... என்னையும் கொஞ்சம் பிளாஸ் பாக்கிற்கு போட்டு வர வச்சீங்க. தாங்க்ஸ்பா..

அன்புடன்
பிருந்தா

இப்னு அப்துல் ரஜாக் said...

//“இவனுக்கு இதே பொழப்பு தான்! அடிக்கடி, புது உண்டியல் வாங்கி, காசு போடு, காசு போடுனு வசூல் பண்ணறது” நொடிச்சுக்கிட்டா, சல்மா.//


அரசியல்வாதியா வருவானோ?

SUMAZLA/சுமஜ்லா said...

பீஸ் ட்ரைன், உண்மையில் இது யார் தெரியுமோ? எங்கள் அப்பா!

2 ஹஜ் செய்திருக்கிறார். மஞ்சள் மண்டி வைத்திருக்கிறார். சென்னை நியூ காலேஜில் பி.எஸ்ஸி படித்தவர், ஆனாலும், செர்வானி, தாடி என்று சுன்னத்தான தோற்றம்! 30 வருடங்களாக இறை பணியாற்றி வருபவர்! தற்சமயம் வயது, 57 ஆகிறது.

இப்னு அப்துல் ரஜாக் said...

அய்யய்யோ சாரி,அக்கா

SUMAZLA/சுமஜ்லா said...

சாரியெல்லாம் தேவையில்லை. ஜஸ்ட் உங்களுக்கு ஒரு ஜெர்க் தர வேண்டும் என்று தான் சொன்னேன்.

கதைப்படி ஒரு சிறு பையன். அவ்ளோதான். பாருங்கள் நானே கதையில் அவன் இவன் என்று சொல்லியிருக்கிறேன். இது எங்கள் உறவுகளின் கதை! வரும் வாரங்களில் நானும் வருவேன்.

லப்பைக்குடிக்காட்டான் said...

"சாதிக் மச்சான்" நெனப்பு இப்படி பொசுக்குன்டு போய்டுச்சே இந்த கச்சாமா மனசுலேந்து



அருமை, அருமை ,,, வட்டார மொழி,,,,

பெரும்பாலான வார்த்தைகள் எங்க பகுதி வழக்கதோட பின்னுது

இன்னும் அடுத்த பகுதி படிக்கவில்லை,, இனிமேல்தான்