Saturday, May 30, 2009

ஓர் இளம் விதவையின் இதயத்துடிப்பு


எண்ணத்தின் ஓசைகளை எழுத்தில் வடிக்க முடியலே
வண்ணத்திலே வந்த கனவை வார்த்தையாக்கத் தெரியலே
அந்த கனவில் எந்தன் மன்னன் குறும்பு பலவும் செய்குவார்;
பந்து மல்லிப் பூவை எந்தன் கூந்தலிலே சூடுவார்.
இடுப்பில் கோலம் போட்டு உதட்டில் வண்ணக் கவிதை தீட்டுவார்
அடுப்பில் வேலை செய்யும்போது மெல்ல அணைத்து மகிழுவார்
உணவை அவரும் ஊட்டும்போது உயிர் வரைக்கும் இனிக்குது
கனவில் தானே நினைவில் கிடைக்கா இன்பம் யாவும் கிடைக்குது!!!

எண்ணத்தின் ஓசைகளை எழுத்தில் வடிக்க முடியலே
வண்ணத்திலே வந்த கனவை வார்த்தையாக்கத் தெரியலே
படுக்கையறைக்கு சீக்கிரம்வா என்று காதில் சொல்லுவார்
அடுப்பில் துடுப்பில் இருக்கு என்றால் இடுப்பை மெல்ல கிள்ளுவார்
முத்தமொன்று கேட்டு எந்தன் உதட்டை இழுத்து மெல்லுவார்
சத்தமின்றி சிரிக்கும்போது சங்கீதமென்று சொல்லுவார்
அனைவரிலும் அழகி நீனு சொல்லும்போது இனிக்குது
கனவில் தானே நினைவில் கிடைக்கா இன்பம் யாவும் கிடைக்குது!!!

எண்ணத்தின் ஓசைகளை எழுத்தில் வடிக்க முடியலே
வண்ணத்திலே வந்த கனவை வார்த்தையாக்கத் தெரியலே
மல்லிசரத்தை பார்த்தபோது மனசு ஏனோ துடித்தது
மெல்ல உண்மை புரிந்தபோது எந்தன் மனது துவண்டது
கள்ளமின்றி அலங்கரித்து காத்திருப்பேன் இரவிலே
கிள்ளை நீனு சொல்ல இன்பம் அன்று கண்டேன் உறவிலே
காதலில்லை கருணையில்லை சுவையுமில்லை வாழ்விலே
ஆதலினால் இனிமையில்லை இதமுமில்லை மனதிலே!!!

எண்ணத்தின் ஓசைகளை எழுத்தில் வடிக்க முடியலே
வண்ணநிலா வானத்திலே விடியல் எப்போ தெரியலே
வெச்சமல்லி வாடிபோச்சு, கொண்ட ஆசை அணைஞ்சு போச்சு
இச்சையெல்லாம் இறுகிபோச்சு, இமையும் இப்போ மூடியாச்சு
காதலில்லா வாழ்க்கையிலே கனவு எல்லாம் கறுகிப் போச்சு
வேதனைகள் சேர்ந்ததனால் மனசு இப்போ மறுகிப் போச்சு
தினமும் தினமும் கனவில் தானே காதல் சுகத்தை காண்கிறேன்
மனமும் உடலும் சோரும் வகையில் எந்தன் உலகை ஆள்கிறேன்!!!

எண்ணத்தின் ஓசைகளை எழுத்தில் வடிக்க முடியலே
வண்ணமலரில் வண்டு தேனை உண்ட நாட்கள் மறக்கலே
காமமில்லா காதலெனக்கு கிடைக்க வேண்டும் கணவனே
ஜாமத்திலே கனியும் போது காமம் வேண்டும் தோழனே
தோளில் சாய்ந்து கவலை போக்கும் காதலெனக்கு வேண்டுமே
பாலின் வெண்மை போல ஒரு பாசம் எனக்கு வேண்டுமே
கனவில்கண்ட இன்பமெல்லாம் நினைவில் காண முடியுமா
மனதில் கொண்ட ஆசைக்கெல்லாம் முழுவடிவம் கிடைக்குமா???

சுமஜ்லா

2 comments:

லதானந்த் said...

இதயத்துடிப்பு என் காதிலும் விழுகிறது
www.lathananthpakkam.blogspot.com
முடிந்தால் பார்க்கவும்

"உழவன்" "Uzhavan" said...

இளம் விதவையின் இதயத்துடிப்புகளை ஒவ்வொரு வரிகளிலும் உணரமுடிகிறது. நல்லா சொல்லிருக்கீங்க மேடம். வாழ்த்துக்கள்!

அன்புடன்
உழவன்