Tuesday, May 26, 2009

பலியாடு


“ரவி, உடனே கிளம்பி எங்க வீட்டுக்கு வாடா”

சைது போனில் சொல்ல, “ஏண்டா? என்னடா மேட்டரு? இவ்வளவு பதட்டமா பேசற?”

“எல்லாம் இந்த பாஷா திருட்டுபயல பற்றித் தான். நேர்ல வாடா சொல்லறேன்”

“தோ அரை மணி நேரத்துல அங்க இருப்பன்டா” செல்ல ஆஃப் பண்ணிட்டு, பாத்ரூம் போய் ஷவரை திருகினேன்.

‘என்னவா இருக்கும் பாஷாவைப் பற்றி? இவ்ளோ கோபமா பேசறானே’ எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது.

நாந்தான் பாஷாவை சைதோட மட்டை கம்பெனிக்கு வேலைக்கு சேர்த்து விட்டேன். பாஷா யாருமில்லாத அநாதை பயல். எங்க ஏரியா பசங்களோட சுத்திக்கிட்டு திரிஞ்சான், ஒரு மாசமா. அப்பத்தான் எங்க எதிர்வீட்டு சபுராக்கா அவனை கூப்பிட்டு விசாரிச்சு, தன்னோட வீட்டுலயே வெச்சிக்கிட்டாங்க. அவனை விசாரிச்சிட்டு இருந்தப்ப, நான் அவங்க வீட்டுல தான் இருந்தேன்.

“டேய், உன் பேர் என்னடா?”

“அம்மா வெச்ச பேரெல்லாம் தெரியாதுக்கா, ஆனா எல்லாரும் என்னிய பாஷானு தான் கூப்பிடுவாங்க” ஆள் குள்ளமா, கறுப்பா, பல்லு கொஞ்சம் எத்தி இருந்தாலும் பையன் பேச்சில் படு விவரமா இருந்தான்.

“அம்மா அப்பா இல்லையாடா உனக்கு?”

“அம்மா செத்துட்டாங்க அக்கா. சித்தி எப்பப் பாரு அடிச்சுக்கிட்டே இருந்தாங்க. அவங்க என்னை பனங்காட்டு மில்லுல கொண்டுப் போய் வேலைக்கு சேர்த்துட்டாங்க. அங்கயே எனக்கு சோறு போட்டுருவாங்க. வாரம் ஒரு வாட்டி, சித்தி வந்து காசு வாங்கிட்டு போவாங்கக்கா” கடகடனு ஒப்பித்தான்.

“ஏண்டா அங்க இருந்து வந்திட்ட?”

“நைட் ஷிஃப்ட் போடறாங்க. தூங்கி வழிஞ்சா சூப்பர் வைஸர் அடிக்கிறாங்க. அதான் ஓடி வந்து, பட்டறைல வேல பார்த்தேன்”

“அப்புறம் ஏண்டா அங்க இருந்து வந்திட்ட?” இந்த கேள்விக்கு அவன் பதில் சொல்றக்குள்ள, அவன் சேக்காளிப்பய சேகர் ஓடியாந்து சொன்னான்.

“அக்கா, அக்கா, இவன் காச திருடிட்டானு துரத்தி விட்டுட்டாங்க அக்கா”

நான் அவனைப் பார்த்து முறைக்க, “இல்லண்ணே! முதலாளி சோறு போட்டு நல்லாத்தான் வெச்சிருந்தாரு, வந்து.....”

“காசு எடுத்தியா இல்லையா? அத மட்டும் சொல்லு!”

“ஒரே ஒரு லெக்கு பத்தவெச்ச காசு பதினஞ்சு ருபா தாண்ணே எடுத்தேன்”

“ஒரு ருபா எடுத்தாலும் திருட்டு தானடா! எதுக்குடா எடுத்த?”

“இல்லண்ணே, காச எடுத்து பிரியாணி தான் வாங்கி சாப்பிட்டேன். முதலாளி அதுக்கு போய் அடிச்சு துரத்திட்டார்ணே”

பார்க்க எனக்கு பாவமா இருந்தது. ஒரு பதிமூணு அல்லது பதினாலு வயசு மதிக்கலாம். ஆனா குட்டையா இருந்தான். சபுராக்கா அவனுக்கு சாப்பாடு போட, பல நாள் பசியா இருந்தவன் மாதிரி சாப்பிட்டான்.

சபுராக்கா பசங்கல்லாம் பெரியாளா வளர்ந்துட்டாங்க. அதனால, தானே அவனை வெச்சு வளர்த்துக்கறேனு சொல்லிட்டாங்க. பாவம் அவங்களுக்கும் வசதி கம்மி தான்; இருந்தாலும், ஆம்பளைப் புள்ள, நாளைக்கு நமக்கு சம்பாதித்துப் போடுவான்னு நப்பாசை அவங்களுக்கு.

மாற்றுடுப்பு இல்லாம, சபுராக்கா பசங்களோட பெரிய சட்டைங்களை எடுத்து மாட்டிட்டு திரிஞ்சான். அப்புறம், நான் என் அக்கா பசங்களோட பழைய சட்டை பேண்ட்டுங்க நாலு வாங்கிக் கொடுத்தேன். சந்தோஷமா வாங்கிக்கிட்டான்.

ஆளாளுக்கு ஒரு மாதிரி சொன்னாங்க அவனைப் பற்றி. வீட்டு வாசல்ல இரும்பு துண்டு, குழாய் கிடந்தா, திருடிட்டு போய் விற்று சாப்பிடுவானு சில பேர் சொன்னாங்க. அவனை வீட்டுல சேர்த்தா, உண்ட வீட்டுலயே கைய வெச்சிருவானு சிலர் சொன்னாங்க. யார் என்ன சொன்னாலும், அவனை திருத்தி நல்ல வழிக்கு கொண்டு வர முடியும்னு சபுராக்கா நம்பினாங்க. அதனால, அதை பற்றியெல்லாம் கவலைப்படாம, ஒரு நாள் என்னைக் கூப்பிட்டு அனுப்பினாங்க,

“டேய் ரவி, இவனை எங்காவது வேலைக்கு சேர்த்து விடுறா. சம்பளம் கம்மியா இருந்தாலும் பரவாயில்லை” சபுராக்கா சொல்ல, தலையசைத்தேன் நான்.

ஒரு வாரம் நல்லா சாப்பிட்டு, சொன்ன வீட்டு வேலையெல்லாம் செஞ்சுக்கிட்டு இருந்தான், நல்ல பையனா. அப்பத்தான் நான் அவனை சைதோட மட்டைக் கம்பெனியில வேலைக்கு சேர்த்து விட்டேன்.

சைது பாக்கு மட்டை தட்டு தயாரிக்கிறான். அவன் குடும்பம் ஊர்ல இருக்கு. இங்க தொழில் செட்டானதுனால, ரூம் எடுத்து தங்கி, சமைத்து சாப்பிட்டுட்டு இருக்கான். பரிச்சை லீவுல, மொத்த குடும்பமும் இங்க வந்து விடுவதாக ஏற்பாடு. கூட படிச்சவன், அதனால, எதொன்னுனாலும் எங்க வீட்டுக்குத் தான் வருவான்.

மட்டைக் கம்பெனியில, ரெண்டு மூன்று பேர் வேலை செய்யறாங்க என்றாலும், அதிகாலைல தொட்டி தண்ணியில மட்டையை ஊற வெச்சு கழுவ ஒரு ஆளு தேவை என்று, பாஷாவை சேர்த்துக்கிட்டான். முதல்ல வாரம் நூறு ருவா தான் சம்பளம் கொடுத்தான். போக போக பையனோட சூட்டிப்பப் பார்த்து நூத்தம்பது போட்டு கொடுத்தான். வாங்கித் திங்க பத்து ருபா எடுத்துக்கிட்டு, சம்பளத்தை அப்படியே வீட்டுல கொண்டு வந்து கொடுத்திருவான் பாஷா.

பாஷா, எதிர்பார்த்ததை விட நல்ல சுறுசுறுப்பா வேலை செஞ்சான். அன்புனா என்னன்னு தெரியாம வளர்ந்ததனால, சபுராக்காவும், பசங்களும் அவனிடம் பாசமா இருக்க, சீக்கிரம் குடும்பத்தோட ஒட்டிக்கிட்டான். அம்மா அம்மானு வாய் நிறைய கூப்பிட்டுட்டு, சபுராக்கா என்ன சொன்னாலும் கேட்பான்.

காலங்காத்தால, வந்து சைது வீட்டுல சாவி வாங்கிக்கிட்டு, மட்டைய ஊற வெச்சு, கழுவி நீர் வடிய விட்டுட்டு, வீட்டுக்கு வந்திருவான். அப்புறம் சாப்பிட்டுட்டு, போய், பெரியாளுங்க மிஷினில அழுத்தி எடுத்துப் போடற தட்டுல இருக்க பிசிற வெட்டுவான். எல்லாம் காயவெச்சு, எண்ணி கட்டுப் போடுவான். முதல்ல நைலான் கயிறுல கட்டுப் போடவே வரல அவனுக்கு. அப்புறம் சணல் கயிறு வாங்கித் தர, ஜோரா கட்டுப் போட்டு பழகிட்டான். வேலைக்கு சேர்ந்து ஒரு மாசத்துலயே பக்ரீத் பண்டிகை வந்தது. அநாதைப்பய பாவம், போட்டுக்க சரியா துணிங்க இல்லைனு, சைது பக்ரீத்துக்கு புது சட்டை பேண்ட்டு எடுத்துக் கொடுத்தான் அவனுக்கு.

சைது அப்பப்ப, மிஷின ரிப்பேர் பண்ணி ஆயில் விடுவான். அழுத்த அழுத்த, லூஸாயிடும். அப்பப்ப, டைட் வெச்சிட்டே இருக்கணும். இத டைட் வெக்கறதுக்காகவே, இருநூறு ருபாய்க்கு ஒரு மங்கி ஸ்பேனர் வாங்கினான் சைது. அதை பார்த்து பார்த்து அந்த வேலையும் பழகிக்கிட்டான் பாஷா.

ஆறு மாசமா ஒழுங்காத் தான் வேலை செஞ்சிக்கிட்டு இருந்தான். ஒரு நாள் நான் சபுராக்கா வீட்டுக்கு போனப்ப, ஒரு ஓரமா உட்கார்ந்து அழுதுக்கிட்டு இருந்தான். என்ன விஷயம்னு கேட்டேன். வேறொன்னுமில்ல, காலங்காத்தால, மட்டை ஊறவெக்கப் போனப்ப, தொட்டிக்குள்ள இறங்கி குளிச்சுக்கிட்டு இருந்திருக்கான். மிஷினுக்கு ஆயில் விட்டு, டைட் பண்ண எதேச்சையா அங்க போன சைது, இதப்பார்த்து, ரெண்டு அடி வெச்சு, சபுராக்காட்ட விஷயத்தை சொல்ல, அவங்களும் திட்ட, பையன் சோர்ந்து போயிட்டான். நாந்தான் அவனை சமாதானப்படுத்தி, அடுத்த நாள் வேலைக்கு அனுப்பிச்சேன்.

இது நடந்து ஒரு மாசமிருக்கும். மறுபடியும் என்ன பிரச்சினையோனு, நினைச்சுக்கிட்டே, நான் சைது வீட்டுக்குப் போனேன்.

“வாடா ரவி! எங்க இன்னும் காணோமேனு நினைச்சுக்கிட்டு இருந்தேன்” சைது சொல்ல, உள்ளே போய் சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்தேன்.

“என்னடா, என்னமோ பாஷானால பிரச்சினைனு சொன்னியே?”

“ஆமாண்டா, நான் நேத்து, மிஷினெல்லாம் டைட் வெச்சிட்டு, கிளம்ப நேரமாயிருச்சு. மங்கி ஸ்பேனரை அங்கயே வெச்சிட்டு வந்திட்டேன். இன்னிக்குப் போய் எடுத்துட்டு வரலாம்னு பார்த்தா, காணோம்டா”

“நல்லா தேடிப் பார்த்தியா? பாஷாகிட்ட கேட்டயா?”

“கேட்டண்டா! அவன் தான காலங்காத்தால போறான். அவன் தான் எடுத்திருக்காண்டா! என்னடா பண்ணறது இப்ப?”

“சரி வா, சபுராக்காட்ட கேட்டுப் பார்க்கலாம். வீட்டுல கொண்டு வந்து வெச்சிருந்தா தெரிஞ்சிரும்”

ரெண்டு பேரும் சபுராக்கா வீட்டுக்குப் போனோம். பையன் இன்னும் மட்டைக் கம்பெனியில இருந்து வரல. இங்கயெல்லாம் எதுவுமே கொண்டு வரலைனு சபுராக்கா சொன்னாங்க. இருந்தாலும் எங்கியாவது ஒளிச்சு வெச்சிருப்பான்னு, மூலை முடுக்கு சந்து பொந்தெல்லாம் தேடிப் பார்த்தோம். கிடைக்கவில்லை. அப்ப, அவன் கூட்டாளிப் பய சேகர் அங்க வந்தான். அவனிடம் கேட்டுப் பார்க்கலாம்னு தூண்டி துருவி விசாரிச்சோம்.

“இரும்பெல்லாம் கொண்டுப் போயி விற்பாண்ணே! போன வாரம் கூட ஸ்குரு நெட்டெல்லாம் நிறைய சேர்த்து வெச்சு, கொண்டுப் போயி எடைக்குப் போட்டான். ஆனா, மங்கி ஸ்பேனர்னா, எனக்கு என்னன்னு தெரியாதுண்ணே!” சேகர் சொல்ல, எங்களுக்கு சந்தேகம் அதிகமாயிருச்சு.

“சந்தேகமேயில்லை, இவன் தான் எடுத்திருக்கான். ஏந்தம்பி, எந்தக் கடையில கொண்டுப் போய் போடுவான்?”

“ரோட்டுக்கடையிலயும் போடுவாண்ணே! சில சமயம் யாராவது பார்த்திருவாங்கன்னு, மூலப்பட்டறைக் கடையிலயும் போடுவான்”

“சரிடா! நீ போ! நாங்க பார்த்துக்கிறோம்”

என்ன செய்யலாம்னு இருவரும் ஆலோசனை செய்தோம். போலீஸுன்னா உண்மைய சொல்லிருவான்; அதுனால ஒரு சின்ன நாடகம் ஆடலாம்னு, ரெண்டு பேரும் முடிவு செய்தோம். அதன்படி, சைது, போலீஸுக்கு போன் செய்வதாக அவனிடம் சொல்லி, எனக்கு போன் செய்ய வேண்டியது. நானும் குரலை மாற்றி, அவனை கொஞ்சம் மிரட்ட வேண்டியது என்று முடிவு செய்தோம்.

சைது மட்டைக் கம்பெனியில் இருந்து செல்லில் என்னைக் கூப்பிட்டான்.

“ஹலோ போலிஸ் ஸ்டேஷனா?”

“இங்க எங்ககிட்ட வேலை செய்யற பையன், ஸ்பேனரை எடுத்து வித்துட்டான். எங்கேனு கேட்டா சொல்ல மாட்டீங்கறான். கொஞ்சம் நீங்களே விசாரணை பண்ணுங்க” சொல்லியபடி, பாஷாகிட்ட போனை கொடுத்தான்.

“டேய்! ஸ்பேனரை எடுத்தியாடா? எத்துணை வாட்டி இந்த மாதிரி திருடியிருக்கற?”

“அண்ணே! இப்பல்லாம் திருடறது இல்லண்ணே! ஸ்பேனரை நான் எடுக்கலண்ணே!”

“டேய்! உன் ஃபிரண்டு சேகர் எல்லா விஷயத்தையும் சொல்லிட்டாண்டா. பேசாம உண்மைய ஒத்துக்கோ! உன்னை ஒன்னும் பண்ண மாட்டோம்” நான் சொன்னதுக்கு அவனிடம் இருந்து பதிலே வரல.

“டேய்! பாஷா, பேசாம அந்த ஸ்பேனரை கொண்டு வந்து கொடுத்துருடா! வித்திருந்தா கடைக்கு எங்களை கூட்டிட்டுப் போடா, நாங்களே காசு கொடுத்து திருப்பி வாங்கிக்கிறோம்”
இதுக்கும் பதில் வரல.

“பாருடா! சாயந்திரத்துக்குள்ள ஸ்பேனர் கைக்கு வந்திரணும். இல்லாட்டி, உன்னை பிடித்து உள்ள வெச்சிருவோம். போலீஸு வீட்டுக்கு வந்தா, அவமானம் தான. பேசாம கொண்டு வந்து கொடுத்துரு, என்ன?!”

நல்லா அவனை மிரட்டிட்டு, சைதுக்கிட்டே சொன்னேன், “சைது! பையன் நல்லா மிரண்டுட்டாண்டா! கவலைப் படாத, சாயங்காலத்துக்குள்ள ஸ்பேனர் உன் கைக்கு வந்திரும்”

பொழுது சாய்ந்தொன்ன, சைது, கவலையோட எங்க வீட்டுக்கு வந்தான். “ரவி, பையனக் காணோம்டா. வீட்டுக்கே வரலையாம்டா”

நாங்க ரெண்டு பேரும், சபுராக்கா வீட்டுக்குப் போனோம். சபுராக்கா, எங்களை குற்றவாளிகளைப் போல பார்த்தாங்க. எங்கெங்கயோ தேடி இருக்காங்க. ஆளக் காணோம். சேகர் பயலையும் விசாரிச்சாங்க. அவனும் பார்க்கலைன்னுட்டான். மாற்றுத் துணிகூட எடுத்துக்காம, எங்க போயிட்டான் பையன்னு, பறவாபறந்து பக்கியா துடிச்சாங்க சபுராக்கா. சபுராக்கா பசங்க, சைக்கிளை எடுத்துக்கிட்டு, ஆளுக்கொரு பக்கம் தேட போயிட்டாங்க. சரி, பயந்துகிட்டு, எங்கியாவது ஒளிஞ்சிருப்பான், நாளைக்கு வந்திருவான்னு நாங்க ஆறுதல் சொல்லிட்டு, வீட்டுக்கு வந்திட்டோம்.

அடுத்த நாள் சபுராக்கா, ஊர் பூராவும் தேடிப் பார்த்துட்டு, மூலப்பட்டறையில எல்லாம் போயி தேடுனாங்க. பஸ் ஏறி, பனங்காட்டுக்கு போயி, அங்க இருந்த மில்லுல கூட விசாரிச்சாங்க. கிடைக்கவே இல்லை. அடுத்த மாசம், சபுராக்கா மகளோட கல்யாணத்துக்கு அவனுக்கு எடுத்து வெச்சிருந்த புதுத் துணிய பார்த்துப் பார்த்து அழுதாங்க. அவனை ஒரு போட்டோ கூட புடிச்சு வெக்கலையேனு புலம்புனாங்க. எனக்கு அதப் பார்க்க மனசுக்குள்ள ஒரே உறுத்தலா இருந்தது.

கடைசி வரைக்கும் அவன் திரும்பி வரவே இல்லை. அப்புறம், மகள் கல்யாண பிசியில, கொஞ்சம் கொஞ்சமா அவனை மறந்திட்டாங்க.

இது நடந்து, ரெண்டு மாசமிருக்கும். பரிச்சையெல்லாம் முடிந்து லீவு விட்டாச்சு, பசங்களுக்கு. சைது குடும்பமும், ஊர்ல வீட்ட காலி பண்ணிட்டு, இந்த வீடு பார்த்திட்டு வந்திட்டாங்க. இனி, ரூமு எதுக்குனு, காலி பண்ண ஒத்தாசைக்கு என்னைக் கூப்பிட்டான்.

நான் உள்ளே நுழைந்தேன். எல்லாம் ஒரே புழுதியா இருந்தது. வெளியே வண்டி நின்றிருந்தது. கட்டிலை ஒரு கைபிடித்து, வண்டியில் ஏற்றினேன். மூலையில் இருந்த அரை சைஸ் பீரோவை, நகர்த்தினேன். காணாமல் போன மங்கி ஸ்பேனர், மூலையில் இருந்து என்னைப் பார்த்து சிரித்தது. அதைப் பார்த்த சைது, குற்ற உணர்ச்சியில், அப்படியே உட்கார்ந்து விட்டான். மறந்து போய் தான் இங்கே வைத்து விட்டு, ஒரு அப்பாவி பையனோட வாழ்க்கையில் விளையாடி விட்டோமே, என்று அவன் மனசு துடிப்பது எனக்கு புரிந்தது.

ரூமைக் காலி பண்ணிட்டு, வீட்டோட போய் செட்டில் ஆயிட்டான் சைது. பாவம் பாஷா, வீட்டை விட்டுட்டு, எங்கே அநாதையா அலையிறானோ?! ஆனா, ஸ்பேனர் கிடைத்த ரகசியத்தை மட்டும் சபுராக்கா கிட்ட நாங்க சொல்லவே இல்லை. இன்று வரை இருவரும் அந்த ரகசியத்தை காப்பாற்றி வருகிறோம்.

-சுமஜ்லா

4 comments:

கடைக்குட்டி said...

நல்லா காப்பாத்துனீங்க ரகசியத்த ???

இப்ப எனக்கு தெரிஞ்சுப் போச்சே!!

நசரேயன் said...

நல்லா இருக்கு

கே.ரவிஷங்கர் said...

க்மெண்ட் ஆப்ஷன் சரியாடிச்சா?

கதை நல்லாருக்கு. முடிவெல்லாம்
யூகித்து விட்டேன்.வாசிப்பு அனுபவத்தால்.

யோசனை:-
சுருக்கமாக எழுதவும்.வள வள வேண்டாம்.இரண்டு அல்லது
மூன்று முடிவுகள் யோசித்து வைத்து
எழுதவும்.
சிறுகதைக்கு எடுப்பு,தொடுப்பு,
முடிப்பு தேவை

எடுப்பு-கேரக்டர் அறிமுகங்கள்

தொடுப்பு-முரண்பாடு,முடிச்சி போடுதல்
knot விழுதல்(கதைக்குள்ளே)

முடிப்பு--முரண்பாடு,முடிச்சி போடுதல்
knot விழுதல் இவற்றை தீடிர் திருப்பத்தில் சுவராஸ்யமாக அவிழ்த்தல்.

SUMAZLA/சுமஜ்லா said...

திடீரென்று கமெண்ட் ஆப்ஷன் வேலை செய்யவில்லை. அதான் இப்போ இப்படி பாப் அப் விண்டோவுக்கு மாற்றி விட்டேன்.

இது ஒரு உண்மை கதை தான்.

மற்றபடி நான் ஒரு கற்றுக்குட்டி! இன்னமும் எனக்கு கதை எழுதுவது-அதன் ஓட்டம் சரியாக வரவில்லை. எழுத எழுத வந்து விடும் என்று நினைக்கிறேன். ‘வள வள’ கொஞ்சமேனும் இல்லாமல், கதையை எப்படி வளர்ப்பது என்று இனி தான் கற்கணும்.

உங்க யோசனை பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி!