Saturday, May 2, 2009

கொடிவேரியில் காவேரியா?


நாங்க ஒரு குரூப்பா கொடிவேரி போறோம். நீயும் வர்ரயா? நு கேட்டு எங்க மாமா ஒரு பத்து நாட்களுக்கு முன்பு போன் செய்தார். குளிப்பதென்றால், எனக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி! மாட்டேன் என்பேனா?

எங்க மாமா ரிடயர்டு சூப்பிரெண்டெண்டெண்ட் ஆஃப் பி.டபிள்.யூ.டி. அதனால், இந்த ஆற்றுக்கெல்லாம் போனால், அவருக்கு நல்ல மரியாதை கிடைக்கும். ஐ.பி. பங்களா சாவி தந்துவிடுவார்கள். பொருட்களையெல்லாம் கவலையில்லாமல் அங்கு வைத்துவிட்டு, ஒரே ஜாலி தான்.

“ஏங்க, பையனை அம்மாட்ட விட்டுட்டுப் போய்விடலாமா?” மகள் ஊருக்குப் போயிருப்பதால், மகனையும் விட்டுச் சென்றால் நாம் கொஞ்சம் ஃப்ரீயா தண்ணீரில் ஆட்டம் போடலாமே என்ற எண்ணம் எனக்கு.

இதைக் கேட்ட என் பையன், இப்பவே கொடிவேரி போயாகணும்னு அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டான். ஒரு வழியா சமாதானம் செய்து, அடுத்த நாள் அவனையும் அழைத்து போவதென்று முடிவு செய்தோம்.

மொத்தம் 20 பேர். நாங்கள் பைக்கில் வருவதாக சொல்லி விட்டோம். அவர்கள் இரண்டு பைக்குகளிலும் மீதி பஸ்ஸிலுமாக வந்தார்கள். நான் கொத்து முட்டைப் புரோட்டா செய்து பார்சல் பண்ணிக் கொண்டேன் மதியத்துக்கு.

எங்க ஊரிலிருந்து சுமார் 50 கி.மீ தூரத்தில் இருக்கிறது கொடிவேரி. சூப்பரான இடம். காலை எட்டு மணிக்குக் கிளம்பினோம், வீட்டிலிருந்து. வழியில் சித்தோட்டில், முறுக்கு, மாங்காய், வெத்தலை பாக்கு மற்றும் தீனிகள் வாங்கிக் கொண்டோம். தண்ணீரில் குளித்தபடி சாப்பிடுவதென்றால், ரொம்ப குஷி. அதுவும், சிந்துவதை சாப்பிட வரும் மீன்கள் காலைக் கடிக்க, அதற்கு போக்குக் காட்டிக் கொண்டே சாப்பிட வேண்டும்.

வழியில் கோபியில், டிபன் சாப்பிட்டுக் கொண்டோம். சுமார் பத்து மணிக்கு கொடிவேரியை அடைந்தோம். அக்கரைக் கொடிவேரி, இக்கரைக் கொடிவேரி என்று இருகரைகள் இருக்கிறது. அக்கரை கொடிவேரியில், சுற்றுலாத் தளம் என்று பெரிய ஆர்ச் வைத்திருக்கிறார்கள். ஆனால் பஸ்ஸில் வருபவர்கள், உள்ளே ஒரு இரண்டு கி.மீ. நடந்து செல்ல வேண்டும். இல்லாவிட்டால், இக்கரைக் கொடிவேரியில் பஸ் நிற்கும் அங்கே இறங்கினால், ஒரு இரண்டு பர்லாங் தூரம் நடந்து உள்ளே பரிசல் கிடைக்கும். மூன்று ருபாய் கட்டணத்தில், அக்கரைக்கு கொண்டு விட்டு விடுகிறார்கள்.
காலை நேர, சிலு சிலு காற்றில், டூ வீலர் பயணம் மிக இனிமையாக இருந்தது. பத்து மணிக்கு போய் சேர்ந்தோம். நுழைந்ததும் ஒரு சிறு பாலம். அதைத் தாண்டினால் பூங்கா. பூங்காவில், நிறைய ஊஞ்சல்கள், சிறுவர்களுக்கு மட்டும் என்ற அறிவிப்புப் பலகையுடன். அங்கே நிறைய சிறுவர்கள் சேலை கட்டியிருந்தார்கள். (அட! பொம்பளைங்க தாங்க; ஊஞ்சல் ஆடிட்டிருந்தாங்க). இந்தப்புறம் ஆறும் அந்தப்புறம் கால்வாயுமாக சூப்பர் இடம்.

பூங்காவிலிருந்து ஒரு சில படிகள் இறங்கினால், டேம் தண்ணீர். அந்தத் தண்ணீர் வழிந்து அருவியாக கீழே கொட்டுகிறது. நாங்கள் முதலில் இங்கே குளித்து விட்டு, பிறகு அருவிக்குப் போகலாம் என்று முடிவு செய்தோம். அங்கே எங்க மாமாவுக்கு ரூம் சாவி கிடைத்தது. அதில் பொருட்களை பத்திரப்படுத்தி விட்டு, படி வழியாக இறங்கினோம்.

அப்பா! தண்ணி அப்படியே சில்லுனு, பட்டவுடன் குளிரில் உடல் சிலிர்த்தது. ஆழம் இடுப்பு வரை தான், சற்று உள்ளே சென்றால் கழுத்து வரை இருக்கிறது. தண்ணீர் வழிந்து போகும் இடத்தில் பாதுகாப்பாக திட்டு கட்டி உள்ளார்கள். அங்கே போய் மச்சானும் பையனும் உட்கார்ந்து கொண்டார்கள். நானும் உறவுக்காரப் பிள்ளைகளும் ஒரே ஆட்டம் தான்.

ஆற்றுக்குப் போய் விட்டால், நான் சிறு பிள்ளையாகி விடுவேன். தண்ணீருக்கென்றே சில விளையாட்டுகள் நாங்கள் வழக்கமாக விளையாடுவோம். நிறைய பேர் கைகோர்த்துக் கொண்டு, ரிங்கா ரிங்கா ரோஸஸ் என்று கோரஸாக பாடிக் கொண்டு அப்படியே சுற்றுவோம். அஸ்ஸா புஸ்ஸா என்று சொல்லும் போது, கைகளால், நீரை அப்படியே தப்புதப்பென்று தப்பி, ஒரே கலாட்டா தான் போங்க! அப்புறம். தண்ணீருக்குள் மூச்சுப் பிடித்துக் கொண்டு ஒன்னு ரெண்டு எண்ணுவது, கை கோர்த்துக் கொண்டு மிதப்பது, தாவணியை விரித்து, அப்படியே காற்று உள்ளே இருக்கும் வகையில், நீரினுள் வைத்துப் பிழிந்து பூந்தி சுடுவது, இப்படியே நேரம் போவதே தெரியாது.

உள்ளே இறங்கியதும் கொஞ்ச தூரத்துக்கு நிலத்துக்கு காரை போட்டுள்ளார்கள். அதற்கும் மேல், பாதத்துக்கு இதமாக கொழித்த மணல். தண்ணீர் அப்படியே சேறு சகதி இல்லாம, சுத்தமா கண்ணாடி மாதிரி, அவ்வளவு அருமை.

நாங்க இறங்கிய போது யாருமே இல்லை. நேரம் ஆக ஆக, ஞாயிற்று கிழமையானதால் நல்ல கூட்டம். வேறு குரூப்பில் இருந்த குழந்தைகளையும் எங்க விளையாட்டில் சேர்த்துக் கொண்டோம்.

தண்ணீரில் இறங்கி விட்டால் மட்டும், ஏன் தான் அப்படி பசி எடுக்கிறதோ? 12 மணிக்கெல்லாம் பசி எடுத்து விட்டது. தீனிப் பை வேறு ரூமில். ஒரு மணிக்கு சாப்பிட எழுந்தோம். வழக்கமாக நீரில் தான் சாப்பிடுவோம். ஆனால், இங்கு பை வைக்க, பாறை எதுவும் இல்லாததால், பூங்காவில் சாப்பிட்டோம். மாமா ஃபேமிலி, அவங்க தங்கை மற்றும் அண்ணன் ஃபேமிலி எல்லாம், தயிர் சாதம், தக்காளி சாதம், புளி சாதம், கருவாடு, உருளைக் கிழங்கென்று கொண்டு வந்திருந்தார்கள். வெரைட்டி ரைஸ் எனக்கு பிடிக்காது, அதனால நாங்க மட்டும் ஸ்பெஷலா முட்டை பரோட்டா. எல்லாரும் ஷேர் பண்ணி சாப்பிட்டு விட்டு, இப்போ, அருவிக்குக் கிளம்பினோம்.

கண்ணில் கண்ட எழில் காட்சிகளையெல்லாம் க்ளிக்கிக் கொண்டேன். தூரத்தில் போகும் பரிசலை கேமராவில் சுட்டேன். பக்கத்தில், கால்வாயில் நிறுத்தி வைத்திருந்த படகையும் பதித்தேன்.

பக்கத்து படகும் தூரத்து பரிசலும்:


அருவிக்குப் போகும் பாதையெங்கும், பலப் பல கடைகள். மாங்காய், கோணப்புளியாங்கா, பஞ்சுமிட்டாய், சோளக்கருது, நுங்கு, தர்பூசணி என நாட்டுப் புற ஐட்டங்கள் விற்பனை படு ஜோராக நடந்து கொண்டு இருந்தது. அங்கே, கல்லால் அடுப்பு கூட்டி, குண்டாவில், சோளக்கருது போட்டு, துணியால் மூடி வேகவைத்து, சுடச்சுட தருகிறார்கள். நான் போட்டோ எடுப்பதைப் பார்த்ததும், சோளக்கருதுக்காரன், மூடியிருந்த துணியை விலக்கி, சந்தோஷமாக போஸ் கொடுத்தான்.
கீழே இறங்கினால், வரிசையாக மீன் கடைகள். பெரிய பெரிய மீன்களை முழுதாக மசாலா பூசி அடுக்கி இருக்கிறார்கள். சுடச்சுட பொரித்து பரிமாறுகிறார்கள். எங்க கடைக்கு வாங்க உங்க கடைக்கு வாங்கன்னு மீன்காரப் பெண்களுக்குள் ஒரே போட்டி.
சிறிது தூரம் மணலில் நடந்தால், அருவி. அருவியில் போய் நின்று கொண்டால், இந்த உலகமே மறந்து விடும். நான் பள்ளி நாட்களில் பயின்ற ஒரு பாடல் நினைவுக்கு வந்து விட்டது.

“வானவில்லின் ஏழுவண்ணம் காணக்காண இன்பமே;
வானம்பாடி கானம் பாட கேட்கக் கேட்க இன்பமே!
கொட்டுகின்ற அருவி நீரில் குளிக்கக் குளிக்க இன்பமே
......................................................................................................................”

எவ்வளவு சரியாக எழுதியிருக்கிறார்கள். சட சட வென்று கொட்டும் நீர் அப்படியே நம் உடலை மஸாஜ் செய்து விடுவது போல ஒரு சுகம். ஒரு திட்டின் மீது அமர்ந்தபடி மிகவும் ரசித்து அனுபவித்தேன்.

என் மகனும் அவங்க டாடியும் ஆண்கள் பக்கமாக போய்விட்டனர். மகன், அடுத்தவர் மேல் தண்ணிரை அடித்து விளையாடி, வம்பிழுத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ஆசை இருந்தாலும் ரொம்ப பயம். அப்படியே உடும்பு மாதிரி நம்மைப் பிடித்துக் கொள்வான்.

நான் உட்கார்ந்து இருந்த இடத்தில், சற்று உள்ளே சாய்ந்து கொண்டால், விழுகின்ற நீருக்கும் பாறைக்கும் இடையிலான வெற்றிடம் வரும். நாம் இருப்பதே அடுத்தவர் கண்ணுக்குத் தெரியாது. ஏகாந்தமான இனிமை. கவிதை தோன்றும் இடம்.

சிறிது நேரம் குளித்த பிறகு மீண்டும் முன்பு குளித்த டேம் பகுதிக்கு வந்தோம். அங்கு வந்து மீன்குட்டிகள் போல நீந்தி விளையாடினோம். உடன் வந்த உறவுப் பிள்ளைகளின் பாட்டுக்குப் பாட்டு விளையாட்டில் அந்த இடமே களைகட்டியது. கிளம்பவே மனம் வரவில்லை.

ஒரு வழியாக நான்கு மணிக்கு எல்லாரும் வெளியே வந்தோம். ரூமுக்கு வருவதற்குள் உடை காய்ந்தே போய்விட்டது வெய்யிலில். மகனும் மச்சானும் மட்டும் உடை மாற்றினார்கள். மிச்சம் மீதி இருந்த தின்பண்டங்கள், மாம்பழம் எல்லாம் சாப்பிட்டு விட்டு கிளம்பினோம்.

மூன்று பைக்குகளில் வந்தவர் போக, மீதிபேர் பஸ்ஸில் வந்ததால், அவர்களை பஸ் ஸ்டாப்புக்கு ட்ரிப் அடித்தார்கள். அதிகம் செலவில்லாத இனிமையான பிக்னிக்காக அமைந்தது.

சரி, தலைப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? சொல்கிறேன்.

மாமா ஒரு பைக்கிலும், நாங்க ஒரு பைக்கிலுமாக ஒன்றாக திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போ மச்சானிடம் கேட்டேன், ஏங்க, கொடிவேரியில் ஓடுற ஆறு பேரு என்னங்கன்னு. மச்சானுக்கு சரியாக தெரியவில்லை. ஒரு நாள் முழுதும் விட்டு விட்டு, இப்போ, முன்னாடி போய்க் கொண்டிருந்த மாமா பைக்கை ஓவர் டேக் செய்ய சொல்லி, அருகே வந்ததும் கத்தினேன்,

“மாமா........! கொடிவேரியில் காவேரியா?....” என்று

மாமா, “இல்லை, பவானி” என்றார். அட, ‘கொடிவேரியில் காவேரியா’ கேட்க ரைமிங்கா இருக்கேனு இதையே இந்த கட்டுரைக்கு தலைப்பா வைத்து விட்டேன். எப்படி?

-சுமஜ்லா.

9 comments:

பழமைபேசி said...

நல்லா இருக்குங்க.... நான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அடிக்கடி செல்கிற இடம் அது. Unuted Bleachersனு ஒரு நிறுவனம்... அடிக்கடி மாமா பசங்க, நாங்க சகோதரர்கள்னு நிறைய விடுமுறைக்கு அங்க வந்து ரெண்டு மூனு நாள் தங்கியிருந்துட்டு வருவோம்... அப்பெல்லாம், பக்கத்துல இருக்குற புங்கமரத்தடிக்கு காலைல ஒரு பதினொரு மணி வாக்குல, ஒரு Ice Cream விக்கிறவரு மட்டும் ஈருளியில வருவாரு....

கடைசியா, தளபதி முருகேசன் அண்ணாவோட, ஒரு பத்து பதினஞ்சு பேர் வந்து, சோறாக்கி, குதூகலமா இருந்துட்டு வந்தோம்.... நல்ல இடம்!

Biruntha said...

இனிமேல் இந்தியா வருமுன் உங்களிடம் எந்தெந்த இடங்களுக்குப் போகலாம் என்று கேட்டுத்தான் வருவேன். எனக்கும் கொடிவேரிக்குப் போகும் ஆசையைத் தூண்டி விட்டீர்கள். நுங்கு, இளநீர், பொரித்த மீன் சாப்பிட ஆசையாக உள்ளது. இந்தியா வந்திருந்த பொழுது இவை எல்லாவற்றையும் நன்கு அனுபவித்தேன். மீண்டும் எப்போ கிடைக்கும் என்று பார்ப்போம்.

அன்புடன்
பிருந்தா

SUMAZLA/சுமஜ்லா said...

ஒரு சில வருடங்களுக்கு முன்பு இருந்ததற்கும் இப்போதைய கொடுவேரிக்கும், நிறைய வித்தியாசங்கள். நல்ல டெவலப் மெண்ட். ஆனால், அருவி, ஆறு மட்டும் அதே தான்.

வெல்கம் பிருந்தா, வாங்க எங்க ஊருக்கு எல்லாரும் சேர்ந்தே போகலாம். எப்போ வரீங்க சொல்லுங்க.

Anonymous said...

It was our favorite place during my college days in Bannari Amman Institute of tech (near to bannari amman sugars) . i was taken to my older days after see your post. thank you. Still so many things are remain same (the old house in ikakrai kodiveri).

Anonymous said...

காவேரிதான் கொடிவேரி
கொடிவேரிதான் காவேரி
கண்ணால் கண்டது கொடிவேரி
பேசிக் கொண்டது காவேரி
ஹை காவேரிதான்.......

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா
இன்று இந்த சிக்கன் மசாலாவை மட்டனில் செய்தேன்.

ஆகா அந்த அருவிய பார்க்கும் போது இப்பவே போய் குளிக்கனும் போல் உள்ளது. இங்கு இருந்து கொண்டு பெருமூச்சு தான் விட முடியும்.
கடைசியா குற்றாலத்தில் போய் குளித்து மசால் வடை சுட சுட சாப்பிட்டது 18 வருடம் முன் அதற்கு பிற்கு போகவே இல்லை. சரியான சந்தர்பபம் அமையல, இந்த இடத்தை பற்றி சொன்னதே அப்படியே போய் வந்த மாதிரி குளு குளுன்னு இருக்கு.
முழு மீனை பார்த்ததும் இங்கு ஜுமேரா பீச்சில் வித விதமாக முழு மீன் மசாலா போட்டு வைத்து இருப்பார்கள், நாம் எதை சொல்கிறோமோ அதை நம் கண் பொரித்து கொடுப்பார்கள், குபூஸுடன் சாப்பிட குளிர் காலத்தில் ரொம்ப அருமையாக இருக்கும்.


இந்த‌ மீனுக்காவே அங்கு குளிர் கால‌த்தில் அர‌பிக‌ளும், இந்திய‌ர்க‌ளும் கூட்ட‌ம் கூட்ட‌மாய் வ‌ருவார்க‌ள் சின்ன் பெட்டி க‌டை மாதிரி தான் இருக்கும்.

Jaleela Kamal said...

சுஹைனா மேலே உள்ள இரண்டு லைன் அருசுவையில் ஸதிகாஅக்காவிற்கு போட்ட பதில் அதுவும் இங்கு பதிவாகி விட்டது இபப் தான் பார்த்தேன். அடுத்து உங்கள் ஹஜ் பகுதி 36 ரில் டைப் பண்ண மெசேஜ் அங்கு பதிவாகமாட்டுங்கிறது.

Unknown said...

மூன்று நாட்கள் முன் அங்கிருந்தேன்.ஆனால் அருவி தண்ணீர் அவ்வளவாக இல்லை.போய்விட்டு வந்து படித்ததும்(முன்னும் படித்தேன்) உங்கள் கட்டுரை சற்று சுவராஸ்யம் கூடுகிற்து.

சுஹைனா said...

சம்மர் வெகேஷன் முடிவதற்குள் மீண்டும் ஒரு முறை அங்கு சென்று வரவேண்டும் என்றிருக்கிறேன். ஆனால் அருவியில் தண்ணீர் இல்லை என்பதை படிக்க கவலையாக உள்ளது. முன்னும் பின்னுமாக இருமுறை இக்கட்டுரையைப் படித்த ரவி சார் வாழ்க!

ஜலீலாக்கா, என்னடா இங்கே உங்க ரெஸிப்பி என்று பார்த்தேன். ஹா ஹா ஹி ஹி (இது உங்க ஸ்டைல்)