Thursday, May 21, 2009

வற்றாத கற்பனை


எனக்குள் ஏனோ பற்பல சிந்தனை
என்றும் வற்றாத ஊற்றாய் கற்பனை
சரம் சரமாக தொடுத்தேன் சொற்கணை
நனவினிலே என் கனவுகளின் விற்பனை.

ஊறிடும் தேனாய் கவிதரும் புலமை
மாறிடும் உலகில் மாறாத திறமை
போரிடும் மனதை பதிந்திட இனிமை
கூடிடும் அச்சுவை அருமை அருமை

கொண்டவன் தானே என் பாட்டிசைத் தலைவன்
பொன்மகள் தேடிய காவியக் கலைஞன்
என் மன வானில் ஒளிவிடும் சூரியன்
உணர்வும் உயிருமாய் என்னுடன் கலந்தவன்

பொன்னுடல் மேனி தழுவிடும் வேளை
உயிரொன்றாக கலந்திடும் போதை
பாட்டினில் அதையும் எழுதிடும் பேதை
கண்ணனை உயிராய் துதித்திடும் ராதை.

என்றோ தீரும் என் காதல் மயக்கம்
அன்று வற்றிடும் கவிதை எனக்கும்
டைரியும் பேனாவும் கொண்டிடும் கலக்கம்
அன்று தழுவியிருப்பேன் நான் நிரந்தர உறக்கம்.

சுமஜ்லா

No comments: