Thursday, June 4, 2009

நியூ யார்க்கு! நீ யாருக்கு?!




போட்டோக்களை எடுத்தது, என் நியூ யார்க் தோழி ‘இலா’.

அழகான நகரத்தின் தீப்பெட்டி சிகரத்தின்
எழில் யாவும் தன்னுள்ளே சூழ்கொண்ட நியூ யார்க்கே!

தலையாணி சுகம்விட்டு தவிப்போடு உனைக்காண
ஓடோடி வந்தேன், சொல்! நீ யாருக்கே?

மஞ்சள் தீ வெய்யிலிலே அஞ்சனத்தால் சிலைவடித்து
செஞ்சிவப்பு குங்குமத்தை நெற்றியிலே இட்டுக் கொண்டாய்.

பூவின் தேனை உண்ணும்வண்டு மதிமயங்கி போவது போல்
தேவியுந்தன் கைச்சுடரைக் கண்டு மனம் சுதிபாட

சாவியின்றி மனக்குதிரை வான்வெளியில் பறந்து வர
தாவிவரும் பரியதனை அடக்குவதும் எப்படியோ?

'இலா' வென்ற நிலா உன்னை சிறைபிடிக்க புகைபடத்தில்
உலா வரும் கனாவுக்கு உறைபோட்டேன் தனியிடத்தில்.

நிலவொளியில் நியூ யார்க்கு நித்திரையை பறித்ததனால்
மனவெளியில் குதிபோட்டு முத்திரையும் பதித்தேனே!

பாய்மரத்தின் பிண்ணனியில் தேயும் இளம் பிறையங்கு,
ஓய்வெடுக்கா ஊர்கண்டு கவியூறும் சுவை இங்கு.

ஒளிப்புள்ளி ஆங்காங்கே வெச்சிட்டு போனவர் யார்?
நெளிக்கோலம் நான் போட நெடுநேரம் ஆகாது!

துளித்துளியாய் ஒளியெல்லாம் ஒன்றாக பார்சல் கட்டி
அளிப்பாயா, தமிழ்தேச மின்வெட்டுத் தொல்லைக்கு?

கட்டான கட்டிடங்கள் செட்டான பூமியிது
விட்டாலும் விலகாத வியன்கவிதை மாடமிது!

கிட்டாது எழிலான இப்படங்கள் எப்போதும், - யாரும்
சுட்டாலும் சாகாது இக்கவிதை எந்நாளும்!!

-சுமஜ்லா

8 comments:

மயாதி said...

எந்த போட்டோவிலயும்
சிக்க முடியாத
விசாலமான
அழகு
உங்கள் கவிதை...

கவிக்கிழவன் said...

பூவின் தேனை உண்ணும்வண்டு மதிமயங்கி போவது போல்
அழகான வரிகள்

"உழவன்" "Uzhavan" said...

//ஒளிப்புள்ளி ஆங்காங்கே வெச்சிட்டு போனவர் யார்?
நெளிக்கோலம் நான் போட நெடுநேரம் ஆகாது!

துளித்துளியாய் ஒளியெல்லாம் ஒன்றாக பார்சல் கட்டி
அளிப்பாயா, தமிழ்தேச மின்வெட்டுத் தொல்லைக்கு?

கட்டான கட்டிடங்கள் செட்டான பூமியிது
விட்டாலும் விலகாத வியன்கவிதை மாடமிது!

கிட்டாது எழிலான இப்படங்கள் எப்போதும், - யாரும்
சுட்டாலும் சாகாது இக்கவிதை எந்நாளும்!!//

மிக ரசித்த வரிகள். அருமை :-)

தேவன் மாயம் said...

தலையாணி சுகம்விட்டு தவிப்போடு உனைக்காண
ஓடோடி வந்தேன், சொல்! நீ யாருக்கே?

இந்தியனே!!
நியூயார்க்கை அமெரிக்கனுக்கு விடு!
நியூடெல்லிதான் நம்ம ஊரு!!
இந்தியனாய் இரு!!
( வருத்தம் வேண்டாம். மனதில் தோன்றியதை எழுதினேன்)..

SUMAZLA/சுமஜ்லா said...

அட, நான் நியூயார்க்கெல்லாம் போனதில்லீங்க!
போட்டோ அழகத்தாங்க தூக்கத்த விட்டுட்டு, ரசிச்சேன்!
இது தப்பாங்க?!

உலகமயமாக்கல் பரவலாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது,அந்நிய செலாவணி நாட்டுக்கு அவசியமாக இருக்கும் போது, இப்படி கூட ஒரு சிந்தனையா?

( வருத்தம் வேண்டாம். மனதில் தோன்றியதை எழுதினேன்)..

தேவன் மாயம் said...

நியூ யார்க்கே!

நீ யாருக்கே! என்ற

தலைப்புக்காக எழுதினேன்!!

வருத்தம் வேண்டாம்!!

இப்னு அப்துல் ரஜாக் said...

நியூ யார்க்கை பார்க்கும் போது,இனி உங்கள் கவிதைதான் ஞாபகம் வரும்,அப்படியே உலகின் நம்பர் ஒன் அழகு நகரம் சான் பிரான்சிஸ்கோவைப் பற்றியும் சில வரிகள் கவியலாமே!

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி, சான் ப்ரான்ஸிஸ்கோ பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதே,...